யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற் றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில்,
ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தும், மிக நெருக்கமான முறையில் தம்முடன் இருக்குமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) புங்கன்குளம் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்வில்லை. மறுநாள் திங்கட்கிழமை (14) மகளை காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் ஜெரோமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜெரோமி சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார்.
ஜெரோமியின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரு குருமார்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இரு தினங்களாகியும்,இரு குருமார்களுக்கும் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில், ஜெரோமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும் குறித்த இரு குருமார்களை கைது செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த யுவதியின் சடலம் இறுதி கிரிஜைகளுக்காக அவரது சொந்த ஊரான மண்டைதீவுக்கு இன்று (16) கொண்டு செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
|
No comments:
Post a Comment