இலங்கைச் செய்திகள்


பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு

பிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவினர்கள்

கச்சதீவு, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 75 இந்திய மீனவர்கள் கைது

திருமலை நகர் ஹர்த்தாலால் ஸ்தம்பித்தது

இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை

வெள்ளவத்தை பகுதியில் புதிதாக குடியிருப்போருக்கு பொலிஸ் பதிவு

பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா

பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு
20/03/2014  அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மன்றாசி தோட்டத்தின் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமொன்றை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
இவர் இன்றுக்காலை தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கடமைக்காக சென்றுள்ளதாக தெரிய வருவதுடன் இவர் நச்சருந்தி இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. 
சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி 







பிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவினர்கள்

20/03/2014   காணாமல்போன தமது பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் இல்லை. எமது பிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர். எமது பிள்ளைகளை மீட்டுத்தர ஆவணசெய்யவேண்டும். எங்களுக்கு இறுதியாக இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை இந்த ஆணைக்குழுதான் என மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது கண்ணீர்மல்க உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது குடும்பத்தின் வறுமை காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற தமது பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளது தொடர்பிலும் இங்கு கண்ணீர்மல்க சாட்சியமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில், தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச,  பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் ஆணைக்குழுவில் அடங்குகின்றனர்.
மட்டக்களப்பில் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பட்டதன் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தன.
இன்று ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட காணாமல் போனவர்கள் தொரடர்பான விசாரனை நடைபெற்றதுடன் ஐனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பான சாட்சியங்களை அவர்களது உறவினர்கள் அளித்தனர்.
இதன் போது தவராஜா சந்திராவதி என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது தனது மகனை தேடி வந்ததாகவும் காணமால் போகும் போது தனது மகனுக்கு 15 வயது எனவும் தெரிவித்தார்.
பாடசாலை போகாமால் தனது மகன் குடும்ப கஸ்டம் காரணமாக கூலி வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்த குறித்த தாய் தனது மகனை மீட்டு தரும் படி கதறியழுது தனது மகனின் பிரிவை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்ததுடன் தனது மகனை இலங்கை இராணுவத்தினர்தான் கடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமது பிள்ளைகள் இருவர் விடுதலைப்புலிகள் இருந்தபோது கருணா அம்மான் தலைமையிலானவர்கள் வந்து வலுக்கட்டாயமாக போராட்டத்துக்கு அழைச்சென்றதாகவும் அவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் களுவன்கேணியை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கராசா என்பவர் தனது சாட்சியத்தில் பதிவுசெய்துள்ளார்.
12 மற்றும் 17வயதுகளை உடைய தமது பிள்ளைகளே இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டதாகவும் வீட்டுக்கு ஒரு பிள்ளை தேவையென்று கூறியே கொண்டுசென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது 18 வயது மகன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் தமது 2007ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சில தினங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்பட்டு சில தினங்களில் தனது மகன் மீண்டும் கடத்தப்பட்டதாக செங்கலடியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஜீவராணி என்ற பெண் தெரிவித்தார்.
இதே வேளை தவராஜா உத்திரை என்ற பெண் தனது கணவர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவித்தார்.
தனது கணவர் மாடு விற்பனை செய்யும் தொழிலில் ஈடு பட்டு வந்ததாகவும் மாடு பார்க்க சென்ற போதே விசேட அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும் பிடிக்க பட்ட பின்னர் படை முகாமிற்கு சென்று தனது கணவரை விடும் படி கோரியதாகவும் நாளை தன் கணவரை விட்டுவிடுவதாக அந்தபடை முகாமில் இருந்த அதிகாரி தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். பின்ன அடுத்த நாள் போய் விசாரித்த போது தன் கணவரை படையினர் பிடிக்கவில்லை என அதே அதிகாரி தெரிவித்தாகவும் அந்த பெண் கதறி அழுது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.
தமது பிள்ளைகள் காணாமல்போனது தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை தாங்கள் ,றுதியாக மலைபோல் நம்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
21ஆம்திகதி கோரளைப்பற்று வடக்கு- வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன், 22ஆம்திகதி மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1100 வரையான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ,வற்றில் ஒரு குறிப்பிட்டளவானவையே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே நேரம், குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் கூட ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு 1990 - 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகிறது.
இந்த கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை நேரடியாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இவை தொடர்பான அறிக்கையை இந்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் சமர்ப்பிக்கும்.

நன்றி வீரகேசரி 




கச்சதீவு, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 75 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்த 75 இந்திய மீனவர்களை நேற்று கைது செய்துள்ள கடற்படையினர் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்திய ஊடகமொன்று  தெரிவிக்கையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டோரில் 25 பேர் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சியோர் நாகபட்டினம், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் குறிப்பிட்டுள்ளது.
பாக்கு நீரிணையில் உள்ள கச்சதீவு மற்றும் நெடுந்தீவு ஆகியவற்றுக்கு அருகில் இலங்கையால் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாக்கு நீரிணையில் மீன்பிடித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள தகராறை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இரு  நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உத்தேச பேச்சுவார்த்தைக்கு வழிகோலும் வகையில் இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டைச் சேர்ந்த 140 மீனவர்களை விடுதலை செய்திருந்தமை தெரிந்ததே. 

நன்றி வீரகேசரி 







திருமலை நகர் ஹர்த்தாலால் ஸ்தம்பித்தது

20/03/2014    திருகோணமலை நகர் ஹர்த்தால் காரணமாக இன்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன் அதிகமான ஸ்தாபனங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதுடன் ஆங்காங்கே பல வன்முறைச்சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிப்புத் தெரிவித்து சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பு இந்த ஊரடங்குச் சட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதுடன் அனுராதபுர சந்தியில் இருந்து நகரின் மணிக்கூட்டு கோபுரம் வரையிலான எதிர்ப்புப் பேரணிக்கும் ஏற்பாடு செய்துள்ளது. 
இதனால் இன்று திருகோணமலை நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. எனினும் பேரணி ஆரம்பிக்க இருக்கும் அனுராதபுர சந்தியும் தற்போதுவரை வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
திருகோணமலையில் உள்ள கடைகள், பொதுச்சந்தை,  தபால் அலுவலகம் என்பன மூடப்பட்டுள்ளதுடன் பஸ்தரிப்பு நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், அலுவலகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன. இதனால் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்  ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பனிகளின் பல வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. நிலைமையை சீர்படுத்த பொலிசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாமென திருமலை தமிழ் மக்கள் அமைப்பு மக்களை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - வை.காந்தரூபன்)
 நன்றி வீரகேசரி 





இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை

19/03/2014  இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும். அத்துடன் கருத்து சுதந்திரத்தின் விதி முறைகளை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் வழக்கறிஞர்களும் குடும்பத்தினர்களும் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்றும் பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ்யூகோஸ்வைர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அவர்களது பேச்சுரிமைக்கும் கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும்.
இரண்டு மனித உரிமை செய்ற்பாட்டாளர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்தமைக்கு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரினதும் குடும்பங்களும் வழக்கறிஞர்களும் அவர்களை அணுக அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும்.
இதேவேளை, தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மனித உரிமை பேரவை ஏன் இலங்கை மீது அவதானம் செலுத்த வேண்டும் என்பதனை இந்த விடயங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன.

நன்றி வீரகேசரி 







வெள்ளவத்தை பகுதியில் புதிதாக குடியிருப்போருக்கு பொலிஸ் பதிவு
16/03/2014    வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புக்களில் புதிதாக வந்து குடியமர்ந்துள்ளோர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பாளர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரகோன் பண்டாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
வெள்ளவத்தை பகுதியில் ஏற்கனவே பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் ஏராளமான புதியவர்கள் வந்து குடியேறியுள்ளனர். அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் பொலிஸ் நிலையத்தில் இல்லை. ஆகையினாலேயே அவர்களிடம் நாம் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளோம்.
இந்த பொலிஸ் பதிவில் விசேட அம்சம் எதுவும் கிடையாது. வழமை போன்ற பொலிஸ் பதிவே இது. இவ்வாறான பொலிஸ் பதிவுகள் வெள்ளவத்தை பகுதியில் மாத்திரமல்ல, நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 


பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ்ஜின் (23) கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர் மொஹமட் ஞாயிற்றுக்கிழமை (16) உத்தரவிட்டார். மேற்படி நால்வரையும் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். மேற்படி கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நால்வரான சுந்தரலிங்கம் சிவகர் (22), சிவசங்கநாதன் மதுஷன் (20), இன்பசீலன் பிருந்தாமன் (21), ரமேஷ; கொன்ரன்கரன் (21) ஆகியோரை சனிக்கிழமை மாலை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்தனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குக்கும் இடையில் வருடாந்தம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. அதில், 26 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் ஆட்டம் நேற்று யாழ்ப்பாணக் கல்லூரியில் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது திடீரென இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்றப்பட்டது. இக் கைகலப்பில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான யாழ்ப்பாணம் செட்டியார்தெரு சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்பவரே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை தேடி வருவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.நன்றி தேனீ 



அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா
D.Varatharajah21/03/2014 இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்துவிட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்கள் பலரில் டாக்டர்  டி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட வைத்தியர்கள் ஐந்து பேர், அந்த நாட்களில் யுத்த களம் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்;ச்சியாக தகவல்களை வெளியிட்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர். அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது.

யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை என்றும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரமு; பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

எனினும் யுத்த காலத்தில் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை உண்மையானது அல்ல என்று இலங்கை அரசாங்கம் அடிக்கொருதடவை கூறிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி தேனீ 








No comments: