திரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி

.
அளவெட்டி   ஆசிரமக்குடிலில்    சந்தித்த  அ.செ.முருகானந்தன்
தமது    மரணச்செய்தியை  பத்திரிகையில்    பார்த்த  பாக்கியவான்
                                                                                                                            
      
                                                                                          அளவெட்டியில்    அந்த    இனிய    மாலைப்பொழுதில்     அவரைப்பார்ப்பதற்காக     புறப்பட்டபொழுது  மகாகவியின்   மூன்றாவது புதல்வர்   கவிஞர் சேரன்   தம்பி   சோழன்  -   அண்ணா  -  நீங்கள்   கற்பனை  செய்துவைத்துள்ள  தோற்றத்திலோ    நிலைமையிலோ   அவர்    இருக்கமாட்டார். - என்றார்.
 தம்பி  -  அவரது    எழுத்துக்களைப்படித்திருக்கிறேன்.   சக இலக்கியவாதிகளிடமிருந்து    அவரைப்பற்றி   அறிந்திருக்கின்றேன்.  ஆனால் அவரை  இன்று வரையில்  நான்   நேரில்    பார்த்தது    கிடையாது.  ஒரு மூத்ததலைமுறை    இலக்கியவாதியை  பார்க்கப்போகிறோம்   என்ற உணர்வைத்தவிர   வேறு     எந்தக்கற்பனையும்   என்னிடம்  இல்லை. என்றேன்.
 இன்றைய   தலைமுறை   வாசகர்கள்   கேட்கலாம் ---அது   என்ன    சேரன் - சோழன்?  என்று.
சங்ககாலத்தில்  வாழ்ந்த   மூவேந்தர்கள்    பாண்டியன்  -   சேரன்  - சோழன்.
ஆனால்    நவீன    உலகத்தில்  ஈழத்தில்  அளவெட்டியில்    வாழ்ந்த   கவிஞர் மகாகவி    உருத்திரமூர்த்திக்கு    ஐந்து    பிள்ளைகள்.     மூன்று    ஆண்கள். அவர்களின்     பெயர்     சேரன்  -    சோழன்  -  பாண்டியன்.     இரண்டு  பெண்பிள்ளைகள்.     அவர்கள்    அவ்வை   -   இனியாள்.    மகாகவியின் ஆண்பிள்ளைகள்   மூவரும் (மூவேந்தர்களும்)    தற்பொழுது    கனடாவில்.  அவ்வை    இலங்கையில்.    இனியாள்   மருத்துவராக   அவுஸ்திரேலியாவில்.


இதில்   மற்றுமொரு   தகவலும்   இருக்கிறது.     தற்காலத்தில்    பேசுபொருளாக     இருக்கும்    சோவியத்தின்     உக்ரேயினைச்சேர்ந்த பெண்ணைத்தான்     பாண்டியன்     மணம்   முடித்தார்.    அவர்களின்   மூத்த புதல்வன்    பெயர்    எல்லாளன்.   எல்லாளனும்   பெற்றோர்களுடன் கனடாவில்.
மகாகவியை    நான்    நேரில்   சந்திக்கும்    சந்தர்ப்பம்    எனக்கு   கிட்டவில்லை.  நான்   இலக்கியப்பிரவேசம்    செய்த   காலப்பகுதியில்    அவர்    மறைந்தார். எனினும்     மகாகவியின்      பிள்ளைகளுடன்    எனக்கு    உறவும்    உரையாடலும்     இருக்கிறது.
1986   இன்    இறுதியில்     யாழ்ப்பாணத்தில்   நல்லூர்    நாவலர்    மண்டபத்தில் நடந்த    இ.மு.எ.ச.வின்    மாநாட்டில்     கலந்துகொள்ளச்சென்ற     வேளையில் அளவெட்டியில்     மகாகவியின்    இல்லத்தில்    ஒரு  நாள்    தங்கியிருந்தேன். என்னை   கவர்ந்த    கிராமங்களில்   ஒன்று   அளவெட்டி.
 குளிர்மையான   சூழல்.   தென்னை     பனை   மரங்கள்.
அந்தப்பயணத்தில்தான்   நான்  அ.செ.முருகானந்தனை    சந்திப்பதற்கு பெரிதும்   விரும்பினேன்.
ஈழத்து   இலக்கிய    உலகிலும்    புகலிடத்திலும்    நன்கு    அறியப்பட்ட   கவிஞர்  சேரன்    எனது     விருப்பத்தை   நிறைவேற்ற   அ.செ.மு. வின் வீட்டுக்கு    அழைத்துச்சென்றார்.    அதனை  வீடு  என்று   சொல்வதிலும்  பார்க்க சிறிய   குடில்   என்று   சொல்வதுதான்   பொருத்தம்.  ஆசிரமம்  போன்ற தோற்றத்துடன்   தென்னோலைகளினால்   வேயப்பட்ட   அச்சிறிய குடிலிலிருந்து  - இடுப்பில்   சாரமும்   தோளில்  சிறு  துண்டும்  அணிந்தவாறு அந்த  மெல்லிய  உருவம்  முகம்  மலர்ந்து  வரவேற்கின்றது.
  வணக்கம்.  நான்   முருகபூபதி  -  என்றேன்.
 விழியுயர்த்திப்பார்க்கின்றார்.
 மாமா  --  உங்களைப்பார்க்கவேண்டும்   என்றார்.   அழைத்து வந்திருக்கின்றேன்.  - சேரனின்   அறிமுகப்படலம்   முடிய   பேசினோம்.   அங்கு   நானும்  சேரனும்தான்  அதிகம்  பேசியிருப்போம்.  அவர்  சில வார்த்தைகள்   மாத்திரம்   உதிர்த்தார்.
 கொழும்பு   நிலைமைகளைக்கேட்டறிந்தார்.   அவரிடமிருந்த   ஆழ்ந்த   அமைதி   என்னை   பிரமிப்படையச்செய்தது.
 அவர்   வாழ்ந்த   அந்தக்குடில்   அவரது   எளிமையை   பிரகடனப்படுத்தியது. மறுமலர்ச்சி   காலத்துக்கு   முந்திய   படைப்பாளி.  ஈழகேசரி  -   சுதந்திரன் - வீரகேசரி  - ஈழநாடு  -  என   வெகுஜனப்பத்திரிகைகளில்   பணியாற்றியவர். மறுமலர்ச்சி  -    எரிமலை   முதலான   இதழ்களில்   இணை   ஆசிரியராக விளங்கியவர்.  இவ்வளவு   பின்புலமும் - பலமும்   நிரம்பிய   அவர்  -  வெகு அமைதியாக   ஆர்ப்பாட்டம்   எதுவுமின்றி   எளிமையாக    வாழ்கிறாரென்றால் அந்த   வாழ்வில்   நாமெல்லாம்   பிரமிக்கத்தக்க   நிறைவைத்தான்   கண்டேன்.
 அந்தக்குடிலில்   எனது   கடைக்கண்   பார்வை  மேய்கிறது.  ஒரு  கட்டில். தலைமாட்டில்   அவரது   அருமைத்தாயாரின்   படம்.  பழைய  ஈழகேசரி - ஈழநாடு    உட்பட   பல   பத்திரிகைகள்  -   இதழ்கள்    அடுக்கப்பட்டிருக்கின்றன.
 வாழ்நாள்   பூராவுமே   பிரம்மச்சாரியாக   வாழ்ந்துவிட்ட   அவரின்   சொந்த பந்தங்களாக   அந்தக்குடிலில்    இருந்தவை   அவரது    சேகரிப்புகளான நூல்களும்   இதழ்களும்    பத்திரிகைகளும்தான்.
 எட்டயபுரத்தில்   பாரதி   பிறந்து   தவழ்ந்து   வாழ்ந்த  இல்லத்தை   தேசிய உடைமையாக்கி   பாதுகாக்கின்றார்கள்.  1984  இல்   தமிழகம்   சென்றபோது பார்த்திருக்கிறேன்.   எங்கள்   மண்ணில்   தமிழ்   இலக்கியத்திற்கு வளம்சேர்த்த   அ.செ.மு.வின்   அந்தக்குடிலுக்கு.?
 மக்களுக்கே   பாதுகாப்பில்லை.   குடிலுக்காகவா   தேசிய   உடைமை   உணர்வு    வரப்போகின்றது?
 எம்முடன்   பேசிக்கொண்டிருந்தவர்   திடீரென்று   எழுந்து   வெளியே செல்கிறார்.   சில   நிமிடங்களில்   திரும்பினார்.   கையில்   சிறிய  பொட்டலம். பத்திரிகைத்தாளினால்   சுற்றப்பட்டிருந்தது.
 பொட்டலத்தைப்பிரித்து   -  சாப்பிடுங்க  -  எனத்தந்தார்.
 மெலிபன்  மாரி  பிஸ்கட்டுகள்.
நெகிழ்ந்தே   போனேன்.    மூக்குப்பேணியில்     தேநீர் தந்தார்.     நான்    குற்ற உணர்வோடு     நெளிந்தேன்.       எவ்வளவு    தூரத்திலிருந்து   வந்திருக்கின் றேன்.    அவருக்கென்று     ஏதும்    கொண்டுவராமல்     வெறும்    கை வீசி வந்திருக்கின்றேனே.    வெட்கத்தால்   சில   கணங்கள்    தலைகுனிந்தேன்.
 அந்த    ஏழ்மையிலும்    வந்தவரை    அன்போடு     உபசரிக்கும்    பண்பு முன்மாதிரியானது.
 மகாகவியின்    துணைவியாரும்    பிள்ளைகளும்   அருகிலிருந்தமையால் அவரைக்கவனித்துக்கொள்வார்கள்    என்ற    ஆறுதலுடன்    விடைபெற்றேன். அதுவே   முதலும்   இறுதியுமான   சந்திப்பு.
 1987   இல்   அவுஸ்திரேலியாவுக்கு   வந்தபின்னர்   தொடர்ச்சியாக   ஏதும் மார்க்கத்தில்   மல்லிகை   இதழ்களைப்பெற்றுக்கொள்வேன்.   ஒரு   மல்லிகை இதழ்   எனக்கு   அதிர்ச்சியைத்தந்தது.   அ.செ.மு.   ஒரு   முதியோர்  இல்லத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும்   மல்லிகை   ஜீவாவும்   வேறும்   சில    நண்பர்களும்   அவரைப்பார்க்கச்சென்றதாகவும்   தகவல்    பதிவாகியிருந்தது. என்னைப்போன்ற   தூரதேசங்களில்   வாழும்    இலக்கியவாதிகளுக்கு மல்லிகை   தகவல்கள்   பயன்மிக்கதாயிருந்த   காலம்.   மல்லிகை இலக்கியப்படைப்புகளுக்கு   மாத்திரமின்றி   படைப்பாளிகள்   பற்றிய தகவல்களையும்   பதிவு  செய்துவந்த   காலம். 
 எமது   இலக்கியவாதிகளின்   தனிப்பட்ட வாழ்வு  -  அவர்களின்  பணிகள் -அவர்களுக்கு   நேர்ந்த  இழப்பு  அவர்களின்  மறைவு  முதலான  தகவல்கள் மட்டுமன்றி   அவர்களின்   பிள்ளைகளின்   திருமணம்   நடந்தாலும்   மல்லிகை   மூலம்    அறிந்துகொள்ள முடியும்.   இலக்கியத்தகவல் ஊடகமாகவே   காட்சி   அளிக்கும்   மல்லிகையில்    அ.செ.மு. வின் நிலைமையை   அறிந்து   மிகவும்   கவலைப்பட்டேன்.
 வடபகுதியில்   யுத்த   நெருக்கடி    அதிகரித்திருந்த    வேளையில்  -  கவிஞர் சேரன்   கொழும்பிலிருந்து   15-07-1987   இல்    எனக்கு   அனுப்பியிருந்த சுருக்கமான   கடிதம்   அளவெட்டியின்   நிலைமையையும்   குறிப்பிட்டிருந்தது.   ஒவ்வொருவரும்     வேறு   வேறு    திசைகளுக்குச்செல்ல திசை   மாறிய   பறவையாக   அந்த   ஓலைக்குடிலில்   வாழ்ந்த    எங்கள் அ.செ.மு.    வயோதிபர்    இல்லத்திற்கு    இடம்பெயர்ந்திருக்கிறார்.
  1940    களில்   எழுத்துலகில்    பிரவேசித்தவர்.   இறுதிவரையில் பிரம்மச்சாரியாகவே   வாழ்ந்து    மறைந்துபோனவர்.
 யுத்தத்தினால்    உயிர்   அழிவுகளுக்கு   மத்தியில்   எத்தனையோ உடைமைகளை   விட்டுவிட்டு   ஆயிரக்கணக்கில்   மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது - அ.செ.மு.   அந்தக்குடிலில்   சேகரித்து    வைத்திருந்த இலக்கியப்பொக்கிஷங்களையும்   இழந்துதானிருப்பார்.    அவரிடம் எஞ்சியிருந்தது   அவரது   உயிரும்    அந்த   இலக்கிய    பொக்கிஷங்களும்தான்.
 உயிரை    மாத்திரம்   தக்கவைத்துக்கொண்டு   முதியோர்   இல்லம் செல்கிறார்.   அங்கிருந்தும்    இடப்பெயர்வு.   அவருக்கு    ஆரோக்கியம் துணையாயிருந்திருந்தால்    இடப்பெயர்வு   இலக்கியமும்    படைத்திருப்பார்.
 மரணம்    எப்போது   வரும்   என்று   சொல்லும்   தீர்க்கதரிசனம்   யாருக்குண்டு?
 தனக்கு   மரணம்   வந்தால்   அதன்   பின்னர்   என்ன   நடக்கும்   என்பதை மரணத்துக்கு   முன்பே   அறிந்துகொண்ட      பாக்கியவான்தான்    அ.செ.மு.
 யாரோ   ஒரு   முருகானந்தன்   மறைந்துவிட     எங்கள்     அ.செ.முருகானந்தன்   மறைந்துவிட்டார்   என்ற   செய்தி   பத்திரிகைகளிலும் பரவி   தகவல்   பரிமாரி   அவருக்கு   அஞ்சலிக்கூட்டம்    நடத்துவதற்கான ஏற்பாடுகளை    மேற்கோள்ளும் வரை   சென்றுவிட்டார்கள்   சில   இலக்கிய ஆர்வலர்கள்.
 இச்செய்தியைப்படித்த   அ.செ.மு  . என்ன   நினைத்திருப்பார்?   கற்பனை செய்துதான்   பார்க்கவேண்டும்.
 நாம்   இன்று   கணினி    யுகத்தில்    வாழ்கின்றோம்.   தமிழில்    புத்தகங்களும் இதழ்களும்   புற்றீசல்கள்    போன்று   வந்துகொண்டிருக்கின்றன.    எவரும் எப்படியும்   புத்தகம்   வெளியிடும்    காலம்.   அதற்கான   வாய்ப்பு    வசதிகள் பெருகியுள்ளன.   ஆனால்   அ.செ.மு.   எழுதத்தொடங்கிய   காலத்தில் நிலைமை   வேறு.
 எந்தவொரு   எழுத்தாளனுக்கும்   தனது   படைப்புகள்   இடம்பெற்ற தொகுப்பை   பார்த்து   பூரிக்கவேண்டும்   என்ற   ஆவல்    இயல்பானதுதான். அ.செ.மு.வுக்கு   அந்த   விருப்பம்    இருந்திருக்கலாம்.   புகழைத்தேடி   ஓடாத இந்த   மனிதரின்   ஒரு   தொகுதியும்   எனக்கு   பார்க்கக்கிடைக்கவில்லை. தெளிவத்தை   ஜோசப்   தொகுத்திருந்த   நூலில்தான்   அ.செ.மு.வின் காளிமுத்துவின்   பிரஜாவுரிமை   கதையைப்படித்தேன்.   ஈழத்து   இலக்கிய உலகின்   முன்னோடிகளில்   ஒருவரான   அ.செ.மு.வின்    மனிதமாடு   என்ற ஒரே   ஒரு   கதைத்தொகுதி   மாத்திரம்    யாழ்ப்பாணம் கலாசாரப்பேரவையின்   இலக்கியக்குழு   வெளியிட்டதாக   தகவல்   வந்தது.
 எனினும்   அந்த   ஒரே  ஒரு  தொகுதிக்கும்   நிகழ்ந்த   சோகம்  குறித்து செங்கை ஆழியான்    இவ்வாறு    பதிவுசெய்கிறார்:-
  அன்னாரின்     (அ.செ.மு)    கதை   சிலவற்றினைத்தொகுத்து யாழ்ப்பாணம் கலாசாரப்பேரவை    மனிதமாடுகள்    சிறுகதைத்தொகுதியை வெளியிட்டுள்ளது.    யாழ்ப்பாணம்     கச்சேரி     நிர்வாகம் இச்சிறுகதைத்தொகுதியை   வெளியிட்டமையால்    வழமைபோல விற்பனைக்கு   வருவதற்குப்    பல    நிதி    பிரமாணங்களைக்கூறி கணக்காளர்கள்     தடைசெய்தமையால்    வெளியீட்டுவிழாவில்    விற்ற பிரதிகள்     தவிர     ஏனைய    அனைத்தும்   களஞ்சியத்தில்   பக்குவமாகக் கட்டிவைக்கப்பட்டு     யுத்தத்திற்கு     பலியாகின. -  (மல்லிகை - ஜூன் 2006)
 இந்தச்சோகம்     ஒருபுறமிருக்க     இன்னுமொரு   அதிர்ச்சியான    தகவலையும் அறிந்தேன்.
 பிரான்ஸில்   மகாஜனா   கல்லூரி   பழைய   மாணவர்   சங்கம்  -  பல ஆக்கபூர்வமான    பணிகளை   மேற்கொண்டு  வருகிறது.    இச்சங்கத்தின்    மகாஜனன்   மலர்   அரியதொரு   இலக்கிய   வெளியீடு.
 இலங்கையில்   யாழ். மகாஜனா   கல்லூரி   மிகவும்   பிரபலமானது.   பல புகழ்பூத்த   எழுத்தாளர்கள்  -   ஊடகவியலாளர்கள்   இக்கல்லூரியின் முன்னாள்   மாணவர்கள்.   இவர்களில்   பலர்   வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த   பின்னரும்   அக்கல்லூரியின்    வளர்ச்சிக்காக   பல   பயனுள்ள பணிகளைத்  தொடருகின்றனர்.
 பிரான்ஸ்   பழையமாணவர்   சங்கம்  -   அ.செ.மு.    வின்    கதைத்தொகுதியை வெளியிடுவதற்கு    முயற்சித்தது.   அ.செ.மு.   அக்கல்லூரியில்   கல்வி பயிலும்   காலத்திலே   ஈழகேசரிக்கு   எழுதியவர்.   பிரான்ஸ்    சங்கம்  -  இலங்கையில்   ஒரு   எழுத்தாளருடன்   தொடர்புகொண்டு   பணமும் அனுப்பி   தொகுதியை   வெளியிட   முயன்றது.
 ஆனால்   அந்தப்பணத்திற்கு   என்ன  நடந்தது?   என்பது    தெரியவில்லை. நூலும்    வெளியாகவில்லை.
 ஒரு   எழுத்தாளர்   அவர்   வாழும்   காலத்திலேயே   இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறார்   என்பதும்   எனக்கு   அதிர்ச்சியானதுதான்.      பிரான்ஸ் நண்பர்கள்   பணம்   அனுப்பிய   நபர்   குறித்து   இங்கு    நான் குறிப்பிடவிரும்பவில்லை.    இப்படியும்   மனிதர்கள்   இலக்கிய   உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்   என்பதை    எச்சரிக்கையாகவே   இங்கு பதிவுசெய்கின்றேன்.
 அ.செ.மு.   வின்   அந்திமநாட்கள்   இடப்பெயர்விலேயே    கழிந்துவிட்டது. கொழும்புத்துறை  -   கரவெட்டி  -   மாங்குளம்  -  வவுனியா  -   திருகோணமலை - உப்புவெளி -   என்று   அ.செ.மு.    ஏனைய    முதியவர்களுடன் இடம்பெயர்ந்திருக்கிறார்.
 இந்த   இடப்பெயர்வுக்கு    மத்தியில்   அவர்    மறைந்துவிட்டார்   என   செய்தி கசிய – அவரது   இலக்கிய   வாழ்வை   நன்கு   அறிந்த   சிலர் அஞ்சலிக்கட்டுரையும்    எழுதிவிட்டனர்.
 ஆகா -  இப்படி    ஒரு   பாக்கியம்   யாருக்குக்கிடைக்கும்? அக்கட்டுரைகளைப்படித்து   சில   மாதங்களின்   பின்பே   அவர்   மறைந்தார்.
 குரும்பசிட்டியில்   இரசிகமணி  கனக செந்திநாதனை   நேரில்   பார்த்தபோது எப்படி   நெகிழ்ந்துபோனேனோ   அதனைவிட   பல   மடங்கு  அ.செ.மு.வை அளவெட்டியில்   பார்த்தபோது    உருகிப்போனேன்.
 கனகசெந்தியை   பராமரிக்க   மனைவி  -  மக்கள்  -  மருமக்கள்    அருகிலேயே இருந்தனர்.   ஆனால்  -    இந்த   பிரம்மச்சாரியை    அந்திமகாலத்தில் பராமரிக்க  ----?
 இப்பொழுதும்   பிஸ்கட்டை   கடிக்க   எடுக்கும்போதெல்லாம்   அன்று அளவெட்டி   குடிலில்   அ.செ.மு.   தந்த   மாரிபிஸ்கட்தான்   குற்ற உணர்வோடு   நினைவுக்கு    வருகிறது.

                          ---0---




No comments: