உலகச் செய்திகள்


இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்

ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து எரித்த கணவன்


ரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா

இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்

14/03/2014

இந்து சமுத்திரத்தில் தேடுதல்  நடவடிக்கை
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடும் நடவடிக்கையை இந்து சமுத்திரத்தில் முன்னெடுக்க அமெரிக்க கடற்படை தனது கப்பலொன்றுக்கு  உத்தரவிட்டுள்ளது. 
மேற்படி  விமானம்  ராடர்  கருவிகளிலிருந்து  மறைந்த தற்கு  பின் பல  மணித்தியாலங்களாக மேற்படி விமானம்  அது தொடர்பிலிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமிக்ஞை ஒன்றை செய்மதியொன்றுக்கு அனுப்பி வைத்திருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை  அடிப்படையாக வைத்தே மேற்படி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து பறந்து  கொண்டிருக்க வாய்ப்பு
மலேசிய எயார்லைன்ஸ் எம்எச் 370  விமானம் செய்மதிக்கு தரவுகளை அனுப்பாத  போதும் சமிக்ஞைகளை அனுப்பியிருப்பது  உண்மையாயின்  அந்த  விமானம்  காணாமல்  போன பின்னரும் தொடர்ந்து பறந்து  கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெகார்னி  விபரிக்கையில் புதிய விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 
புதிய தகவல்களின்  பிரகாரம் இந்து சமுத்திரத்தில்  புதிய  தேடுதல்  நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது  என அவர்  தெரிவித்தார். 
அதே சமயம்  அமெரிக்க கடற்படையானது  தனது  நாசகார   கப்பலான யு.எஸ்.எஸ். கிட்டை தாய்லாந்து வளைகுடாவிலான தனது தேடுதல் நிலையிலிருந்து மலேசிய மேற்கு  கடற்கரைக்கு நகர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 
இந்நிலையில் மலேசிய அரசாங்கத்தின்  வேண்டுகோளொன்றையடுத்து அந்நாட்டுக்கு தேடுதல்  நடவடிக்கையில்  உதவும் பணியில்  இந்திய கடற்படை  விமானப்படை மற்றும் கரையோர காவல்படை என்பன இணைந்துள்ளன. 
விமானம்  காணாமல்  போனதற்கு பின்  பல  மணித்தியாலங்களாக  அதன் இயந்திரங்களிலிருந்து  தரவுகள்  அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க  வோல் ஸ்றீட்  ஜோன்   ஊடகம்  செய்தி  வெளியிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 
காணாமல் போய் 4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞை
அத்துடன்  மேற்படி  போயிங்  777-  200  விமானத்தின்  இயந்திர முறைமைகளும்  விமானம்  காணாமல் போனதற்கு பின்  4 மணித்தியாலமாக செய்மதியொன்றுக்கு சமிக்ஞைகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஏபி ஊடகத்துக்கு  அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளனர். 
போயிங்  இயந்திரங்களானது  பறக்கும் போது  விமானம்  எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் செய்மதிக்கு தரவுகளை அனுப்பி வைக்கக்கூடியதாகும். இந்நிலையில் மேற்படி விமானம் காணாமல் போன பிற்பாடும் செய்மதிக்கு விமானம் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சமிக்ஞைகளை அனுப்பிய வண்ணம் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இதன் பிரகாரம் விமானம் இறுதியாக ராடர் கருவியிலிருந்து மறைந்த பின்னர் மேலும் 1600 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம்  பறந்துள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர். ஏனெனில் அந்த விமானம்  காணாமல் போன பிற்பாடு சுமார்  4 மணித்தியாலங்களுக்கு பறப்பதற்கு தேவையான எரிபொருளை கொண்டிருந்துள்ளது. 
இந்நிலையில்  இரு பெயரை  வெளியிட விரும்பாத  அமெரிக்க அதிகாரிகள் ஏ பி சி  செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் விமானத்திலிருந்த இரு தொலைத்தொடர்பாடல்  முறைமைகளும்  தரவுகளை பரிமாறிக் கொள்வதை வௌ;வேறு நேரத்தில் நிறுத்தியுள்ளதாகவும் இது  அந்த விமானம் இயந்திரங்கள் செயலிழப்புக்குள்ளாகி பெரும் அனர்த்தத்தை சந்தித்திருக்கவில்லை என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளதெனவும்  தெரிவித்துள்ளனர். 
மந்திரவாதியின் உதவியை நாடியது மலேசியா
மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கமந்திரவாதியின்  உதவியை நாடியுள்ளது மலேசியா.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7அம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.
இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல மந்திரவாதியான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.
அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செயற்கைகோள் படங்கள்! மலேசியா நிராகரிப்பு
239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
காணமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா மூன்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பின்னரும் விமானம் நான்கு மணித்தியாலங்கள் பறந்ததாகத் தெரிகிறதென அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இவையிரண்டும் தவறானவையென மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹ_சைன் தெரிவித்தார்.
சீனா தவறுதலாக படங்களை வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். விமானத்தின் எஞ்சினை உற்பத்தி செய்த ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, அமெரிக்காவின் தகவல் தவறானதென தெரியவந்ததாக அவர் கூறினார்.
 நன்றி வீரகேசரி 








ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து எரித்த கணவன்

19/03/2014   தான் தன்னினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்த வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியை நிலத்தை சுத்திகரிக்கப்படும் உபகரணத்தால் கழுத்தை நெரித்துக் கொன்று அவரது உடலை தோட்டத்தில் குப்பைகளை எரிக்க பயன்படும் உபகரணத்தில் எரித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. 
இது தொடர்பான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை வூல்வர்ஹம்டன் கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
வோல்சால் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இனத்தவரான ஜஸ்விர் ராம் கின்டே (30 வயது) என்பவரே தனது மனைவியான வர்கா ராணியை (24வயது) இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்துள்ளார். 
இந்தியாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடநெறியில் பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்த வர்கா ராணிக்கும் ஜஸ்விருக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. 
இதனையடுத்து வர்கா கடந்த ஆகஸ்ட் மாதம் விசா கிடைத்ததையடுத்து தனது கணவருடன் வாழ்வதற்காக பிரித்தானியா வந்தார். 
தொடர்ந்து ஒரு நாள் ஜஸ்விர் பொலிஸாரை தொடர்பு கொண்டு வர்கா ராணி தன்னை திருமணம் செய்வதற்காகவே பிரித்தானியா வந்ததாகவும் இங்கு வந்த பின் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது ஜஸ்விரின் வீட்டுத் தோட்டத்திலிருந்த குப்பைகளை எரிப்பதற்கு பயன்படும் 22 அங்குல ஆழமான உபகரணத்தில் இனங்கண்டறியப்படாத மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. 
இந்நிலையில் ஜஸ்விரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்திய போது தானே தனது மனைவியை கொன்றதை ஜஸ்விர் ஒப்புக் கொண்டுள்ளார். 
தனது தன்னினசேர்க்கை பழக்கத்தை பெற்றோரிடம் மறைத்திருந்த ஜஸ்விர் அவர்களை திருப்தி செய்யும் முகமாக திருமணம் செய்துள்ளார். 
இந்நிலையில் தனது தன்னினச் சேர்க்கை பழக்கத்திற்கு இடையூறாக இருந்த தனது மனைவியை படுகொலை செய்வதற்கு ஜஸ்விர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


 நன்றி வீரகேசரி 






ரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா
19/03/2014   ரஷியாவுடன் கிரீமியா பகுதி முறைப்படி இணைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து ரஷிய வரைபடத்தில் கிரீமியா சேர்க்கப்பட்டது.

பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ""மக்களின் இதயம் மற்றும் நினைவுகளில் கிரீமியா பகுதி ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்தது'' என்றார்.

இதன்மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய எல்லை வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவுள்ளது.

ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள கிரீமியாவை, நாட்டின் ஒரு பகுதியாக அங்கீரிகரிப்பதற்காக புதின் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று குறித்து ரஷிய நாடாளுமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து தலைநகர் கீவை விட்டு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறினார்.

அதையடுத்து கிரீமியாவை ரஷியப் படை கைப்பற்றியது. கிரிமீயாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 97 சதவீத கிரீமிய மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், இந்த வாக்கெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையும் விதித்துள்ளன.



ஜப்பான் பொருளாதாரத்தடை: இதனிடையே, ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா விடுத்துள்ள அறிக்கையில், "உக்ரைனில் இருந்து கிரீமியா பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அது அந்நாட்டின் இறையாண்மையை மீறிய செயல்.

படை பலத்தின் மூலம் ரஷியாவின் முயற்சியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. அந்த நாட்டின் மீது செவ்வாய்க்கிழமை முதல் சில வகை பொருளாதாரத்தடை விதிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான விசா தளர்வு, முதலீடுகள், விண் வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படுகிறது. ரஷியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றன''
ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

 ரஷ்யாவுடன் இணைவதற்கு கிரிமியாவில் உள்ள 97 சதவீதம் பேர் விரும்பியதையடுத்து விரைவில் ரஷ்யாவுடன் கிரிமியா இணைகிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி தேனீ 

No comments: