பீடுடைய தமிழ்த் தாத்தா ! - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்

.


      உள்ளமெலாம் தமிழுணர்வாய் ஊற்றெடுக்க
      ஊரூராய் அலைந்தாரே    உ வே சா
      தெள்ளுதமிழ் நூல்கள் தேடிநின்றவேளை
      செல்லரித்த சேதிகேட்டு திகைத்துநின்றார்

      ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார்
      காடுமேடு பாராமல் நடந்தலைந்தார்
      நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார்
      பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகிநின்றார்

     ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிப்பதற்கு
     காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தருவே ஐயா
     பூட்டியே வைத்தஏட்டை புத்தகமாக்கி வைத்த
     பாட்டனே எங்களையா பணிந்துனை நிற்கிறோமே

    ஏடெலாம் இடஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
    கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
    புதைகுழி வெட்டியேட்டை புதைத்தது கண்டபோது
    புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

   மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
   கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
   அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
   செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்

பைந்தமிழ் மொழியைக் கற்று
பலபேரும் வியக்க நின்றாய்
சொந்தமாய் சேர்த்த  சொத்து
சுந்தரத் தமிழே ஆச்சு


நந்தமிழ் சங்க நூல்கள்
நாளுமே கற்று நிற்க
வெந்தழல் புகுந்த ஏட்டை
வேகமாய் பற்றி நின்றாய்

நொந்திடச் செய்தார் தம்மை
வந்தனை செய்து நின்று
செந்தமிழ் மொழியைக் காக்க
சினமின்றிப் பணிகள் செய்தாய்

பல்பலைக் கழகம் செய்யும்
பணியினை தனியே நின்று
நல்மனம் கொண்டு செய்த
நாயகன் நீதான் ஐயா

தொல்லுல கெங்கும் தமிழை
துடிப்புடன் கொண்டு செல்ல
வல்லமை கொண்டு நின்ற
சுவாமி நாதனே வாழ்கவாழ்க

No comments: