இப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.

.


(காதலுக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை) 
   
    அன்றொரு நாள் மாலை சேன் நதிக்கரை ஓரத்தில் இருந்த பெஞ்சியில் அமர்ந்து கொண்டு வெயிலில் மினுமினுக்கும் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.

    அப்பொழுது ஐம்பது வயதுதிற்கு மேல் மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் என்னைப் பார்த்து சினேகிதமாக முறுவலித்தார். நானும் லைட்டாக சிரித்துவைத்தேன்.
    என்ன நினைத்தாரோ... என் அருகில் வந்து அமர்ந்தார். பின்பு திரும்பவும் என்னைப் பார்த்து சிரித்தார். வேறுவழியில்லாமல் நானும் கொஞ்சம் சங்கடமாக முறுவலித்தேன். உடனே அவர் சட்டென்று என்மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து உனக்கு அவரைத் தெரியும் தானே...என்றார்.
    எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திரும்பி அவரைப்பார்த்தேன். உண்மையில் அவரின் அதிகப்படியான மேக்கப் அவரின் வயதைக்கூட்டித் தான் காட்டியது. இவர்கள் யாரைக் கேட்கிறார்.... அவரின் மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் யார்... உங்கள் மகனைக் கேட்கிறீர்களா...?என்றேன்.


    அவர் உடனே செல்லமாக என் முகவாயில் இடித்துவிட்டு “எனக்கு இன்னும் குழந்தையெல்லாம் பிறக்கவில்லை.... இதை அவர்தான் என்னிடம் கேட்கச்சொன்னாரா...?“ என்றார்.
    நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். “எனக்கு குழந்தைகளும் கிடையாது. இன்னும் கல்யாணமும் ஆகவில்லை... நான் அவருக்காகவே காத்திருக்கிறேன் என்று நீ சொல்லு“ என்றார் சற்று வெட்கத்துடன்.
    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அவர் என்னை வேறுயாரோ ஒருவர் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பது புரிந்து. உடனே “நீங்கள் என்னைத் தவறாக நினைத்திருகிறீர்கள். என் பெயர் அருணா. “ என்றேன்.
    “ஓ... உன் பெயர் அருணாவா....? ஆமாம்... அவர் பெயர் என்ன?“ என்றார். எனக்கு புரிந்து போனது... ஏதோ ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத ஒருவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று...
    திரும்பி அவரைத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் இல்லை... நான் பார்ப்பதைப் பார்த்து, “யாரை தேடுகிறாய்... ஆக்நெசையா....? அவள் அந்தப் பிள்ளைகள் பார்க்கில் என்னைத் தேடிக்கொண்டிருப்பாள்..“ என்றார் சர்வசாதாரணமாக.
    அப்போ... இது அடிக்கடி நடக்கிற நிகழ்ச்சி என்று புரிந்து போனது. சரி அந்தப் பெண்ணை விட்டு மெல்ல நகர்ந்துவிடலாம் என்று எழுந்தேன். சட்டென்று என் கையைப் பற்றி “என்ன அவசரம்? உட்கார். உன்னிடம் நான் நிறைய பேசவேண்டும்“ என்று சொல்லி என்னைக் கட்டாயமாகத் தன் அருகில் அமர வைத்தார்.
    நானும் வேறு வழியில்லாமல் அமர்ந்தேன்.
    “அருணா... நான் அவரை அல்ஸாஸ் டூர் போனபோது தான் பார்த்தேன். என்னை மூன்று முறை பார்த்து சிரித்தார். அருகில் அவரின் மனைவி பிள்ளைகள் இருந்ததால் என்னிடம் அவர் ஒன்றுமே பேசவில்லை. நானே போய் பேசலாம் என்று நினைத்தால் அவரின் மனைவி அவருடனே இருந்ததால் அந்த டூர் முடியும் வரையிலும் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை... “
   பெறுமூச்சியுடன் நிறுத்தினார். பாட்டி ஏதோ பழைய காதலை நினைத்து சொல்கிறது என்ற சந்தோசத்தில் நானும் கதை கேட்க ஆவலானேன்.
   “அந்த முறை அவரிடம் நீங்கள் ஒன்றுமே பேச வில்லையா... ம்... அப்புறம் என்னவாச்சி...?“ கேட்டேன்.
    “அந்த முறை பேச சந்தர்ப்பம் கிடைக்காததால்... அடுத்த ஒரு டூருக்குப் பணம் கட்டினேன். ஆனால் இந்த முறை நான் பியுட்டி பாருக்குப் போய் அவரின் மனைவி போலவே முடியை கட் பண்ணினேன்.... நிறைய விலை உயர்ந்த மேக்கப் செட்டெல்லாம் வாங்கி என்னை அழகுப்படுத்தினேன். பழைய மாடல் டிரெஸ்சையெல்லாம் மாற்றி புது பேஸனாக உடுத்திக்கொண்டேன்.... ஆனால்... அந்த டூருக்கு அவர் வரவேயில்லை....“ என்றார். எனக்குக் கொஞ்சம் மனம் இடித்தது. நான் பேசாமலேயே அமர்ந்திருந்தேன்.
    “என்ன கேக்குறியா...?“ என்றார் சற்று அதிகாரமாக.
    “ம்... கேட்கிறேன் “ என்றேன். என்னத்தைக் கேட்பது...!! இருந்தாலும் “அவரைப்பற்றி உங்களுக்கு என்ன தான் தெரியும்...?“ என்று கேட்டேன்.
    “என்னைப் போலவே அவரும் என்னைக் காதலிக்கிறார் என்பதைத் தவிர அவரைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது...“ என்றார்.
    “ஒன்றுமே தெரியாது என்றால்...“
    “ஒன்றுமே தெரியாது... அவர் பெயர், எந்த ஊர், எந்த முகவரி, எங்கே வேலைசெய்கிறார் என்று எனக்கு எதுவுமே தெரியாது“ என்றார்.
    “அதற்காக ஏதாவது முயற்சி எடுத்தீர்களா...?“
    “ம்... மூன்று வருடமாக நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்... ஆறு மாதத்திற்கு முன் என் அம்மா இறந்துவிட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை... நிச்சயம் அவர் என்னைத் தேடி வருவார். காத்துக் கொண்டிருக்கிறேன்“ என்றார்.
    அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்கும் பொழுது அங்கே ஒர் இளம் வயது பெண் வந்தாள். இவரைக் கண்டுபிடித்ததில் திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.
    அவள் என்னைப் பார்த்து இலேசாக சிரித்துவிட்டு.. அவரிடம் திரும்பி “பொழுதாகிப் போயிடுச்சி... எழுந்திருங்க... வீட்டுக்குப் போகலாம்..” என்று அந்தப் பெண்ணின் கையைப்பிடித்து எழப்பினாள்.
    அவர், “இரு. நான் அருணாவிடம் பேசிவிட்டு வருகிறேன். நீ போ.“ என்றார் சற்று கோபமாக. எனக்கு ஒன்றும் புரியாமல் நான் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.
    அந்தப்பெண்... என்னிடம் “இவங்களை உங்களுக்குத் தெரியுமா...?“ என்று கேட்டாள்.
    நான் உடனே... “இல்லை தெரியாது. இன்று தான் முதல்முறையாகப் பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு...என்ன இவங்களுக்கு?“ என்று அவளுக்கு மட்டும் கேட்க்கும் விதத்தில் கேட்டேன்.
     அவள் லேசாக சிரித்துவிட்டு “இவங்களுக்கு தெளீர்என்ற வியாதி. இது ஒருவகை மனவியாதி.  இவர் யாரோ ஒருவர் ஒரே ஒரு நாள் தன்னைப்பார்த்துச் சிரித்ததை வைத்துக்கொண்டு அவர் தன்னைத் தான் காதலிப்பதாக கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரே நிச்சயம் தன்னைத் தேடிக்கொண்டு வருவார் என்றும்... அல்லது யாரிடமாவது தன் காதலைச் சொல்லி அனுப்புவார் என்றும் காத்துக்கொண்டே இருக்கிறார்.“ என்றாள்.
    எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “இது எப்போது குணமாகும்?“ என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
    “குணமாகாமல் இப்படியே இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கடந்த மூன்று வருடமாக இப்படி இருந்தவர் அவரின் தாய் இறந்தவுடன் யாருமே இல்லாத நிலைக்கு ஆளானதால் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி பண்ணிவிட்டார். நான் அவர் வீட்டில் பார்ட் டைம் வேலைசெய்வதால் அந்த நேரத்தில் உடனே காப்பாற்றி விட்டேன். இப்பொழுதும் அவருக்கு நேர்மாறாக யாராவது பதிலளித்து விட்டால் உடனே மூர்க்கமாகி விடுவார். அதனால் கிட்டேயே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்நேரமும் அவருடனே என்னாலும் இருக்க முடியாது“ என்றாள்.
    “ஏன்...?“
    “நான் காலேஜியில் படித்துக்கொண்டே இவர் வீட்டில் வேலை செய்கிறேன். இவருக்கு இன்னும் அறுபது வயது ஆகவில்லை. அதனால் முதியோர் இல்லத்திலும் சேர்க்க முடியவில்லை. அதனால் நான் கூடவே இருக்க வேண்டியுள்ளது“ என்றாள்.
     எனக்குக் கவலையாகத் தான் இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்...? நான் பேசாமல் எழுந்து கிளம்பத் தயாரானேன்.
      என் கையை உடனே அந்தப் பெண்மணி பிடித்துக்கொண்டார். “அருணா... நீயாவது அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து எனக்குச் சொல். நீ அவரின் முகவரியையாவது டெலிபோன் நம்பரையாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் அவர் மனைவிக்குத் தெரியாமல் அவருடன் பேசி என்னிடம் வரவழித்து விடுவேன். ப்ளீஸ்... அருணா... எனக்கு உதவி செய்....“ என்று கெஞ்சலாகச் சொன்னார். எனக்கும் பாவமாக இருந்தது.
     நானும் அவர் கையைப் பிடித்து “நான் நிச்சயம் உங்களுக்கு உதவுகிறேன்“ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு மனம் கனக்க நகர்ந்தேன்.
    காலம் கடந்து வந்த காதல்!!! இந்தப் பெண்மணிக்குள் தீயை வார்த்துவிட்டுச் சென்றுள்ளது.
     “ஆக்நெஸ்... நான் ஒங்கூட வரமாட்டேன்... நீ போ.... அவரைத் தேடித் தர்றேன்னு சொல்லிவிட்டு இன்னமும் தேடலை... நீ பொய் சொல்கிறாய்.... நீ இன்னைக்கே எல்லா டிராவல்ஸ் ஏஜென்சிக்கும் போய் விசாரிக்கனும்... நீ சரின்னு சொன்னால் தான் நான் உன் கூட வருவேன்.... நான் வரமாட்டேன்.. நீ போ...
    நான் வண்டியில் உடகார்ந்து ஸ்டார்ட் செய்யும் வரை அந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. இன்னமும் கேட்டுக்கொண்டே
தான் இருக்கிறது!

Nantri arouna-selvame.blogspot

No comments: