" நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்”
உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை பேராசிரியர் சிவத்தம்பி
முருகபூபதி
ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் பின்னர் அதே பெயரில் சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் தமிழ்க்குரல் பதிப்பகத்தினால் (1995 இல்) வெளியானது.
மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை இத்தொடரில் எழுதும் பொழுது குறிப்பிட்ட மேற்கண்ட வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
சிவத்தம்பி பற்றி நான் எழுதத்தொடங்கியதும் எனது மனைவி அருகில் வந்து சிவத்தம்பி சேரைப்பற்றி எழுதுவதாயிருந்தால் நன்கு யோசித்து நிதானமாக எழுதுங்கள் என்று எனக்கு கடிவாளமும் போட்டார்.
காரணம் மனைவியும் - அவளுடைய தங்கை முன்னாள் வீரகேசரி இ சுடரொளி பத்திரிகையாளருமான சூரியகுமாரியும் பேராசிரியர் சிவத்தம்பியின் மாணவர்கள். அத்துடன் இவர்களின் குடும்ப நண்பராகவும் பேராசிரியர் விளங்கினார்.
அவர் குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகளின்பொழுது மிகவும் கவலைப்பட்டவர்களின் வரிசையில் இந்தச்சகோதரிகளும் இணைந்துள்ளனர்.
ஆனால் - சிவத்தம்பி எனக்கு குடும்ப நண்பர் இல்லை. இலக்கிய நண்பர். அதனால் அவருக்கும் எனக்குமிடையே 1976 முதல் அவர் மறையும் வரையிலிருந்த இலக்கிய நட்புணர்வுதான் இந்தப்பத்தியின் ரிஷிமூலம்.
பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்த நிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார்.
அதே வீதியில்தான் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமைக்காரியாலயமும் கட்சியின் பத்திரிகைகளான அத்த (சிங்களம்) தேசாபிமானி - புதுயுகம் (தமிழ்) குழசறயசன ( ஆங்கிலம்) என்பனவும் வெளியாகின. தமிழ் இதழ்களில் பணியாற்றிய நண்பர் கனகராஜனை சந்திப்பதற்கு அங்கு அடிக்கடி செல்வேன். எனது கதைகள் கட்டுரைகளும் குறிப்பிட்ட தமிழ் இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
தமிழ் இதழ்கள் வெளியானதும் முதல் பிரதியை சிவத்தம்பியிடம் சேர்ப்பித்துவிடுவார் கனகராஜன். ஒரு நாள் அவருடன் சிவத்தம்பியின் இல்லத்திற்கு சென்றபோதும் அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் அவர் கொழும்பில் வாழ்ந்த அக்காலப்பகுதியில் அவருடன் எனக்கு நெருக்கமான நட்புறவு இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் உருவானதும் அதற்குத்தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி 1976 இல் தமிழ்நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். அச்சமயம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் என்ற நூல் வெளியீட்டு அமைப்பையும் தொடக்கியிருந்தது.
செ.யோகநாதன்இ காவலூர் ராஜதுரைஇ மேமன் கவி ஆகியோரின் நூல்களையும் வெளியிட்டிருந்தது. சங்கத்திலும் கூட்டுறவுப்பதிப்பகத்திலும் இணைந்து கிட்டத்தட்ட முழுநேர ஊழியனாகவே இயங்கிக்கொண்டிருந்தேன்.
குறிப்பிட்ட கூட்டுறவுப்பதிப்பகத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட எழுத்தாளர்களையும் இணைப்பதற்காக சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடைபெற்ற தருணத்தில் என்னை அங்கு அனுப்பிவைத்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்களும் பல படைப்பாளிகளையும் விரிவுரையாளர்களையும் சந்தித்து உரையாடினேன். அச்சமயம் அங்கு விரிவுரையாளராகவிருந்த எனது இனிய நண்பர் நுஃமான் அவர்களின் அறையில் தங்கியிருந்து ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்குச்சென்றேன்.
சிவத்தம்பியுடன் கலந்துரையாடுவதற்கு அந்த சந்தர்ப்பம் உதவியாகவிருந்தது. அவரும் மல்லிகையில் எனது எழுத்துக்களை பார்த்திருந்ததுடன் அவர் தலைமைக்குழுவிலிருக்கும் சங்கத்தில் நானும் இணைந்திருப்பதறிந்து பாசத்துடன் பழகினார்.
ஆய்வரங்குகள் முடிந்த பின்னரும் நான் யாழ்ப்பாணத்தில் நிற்கநேர்ந்தது. ஒருநாள் மாலை யாழ். பஸ்நிலையத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்பாக நின்றபொழுது - சிவத்தம்பி வல்வெட்டித்துறையிலிருந்து வந்த பஸ்ஸில் வந்திறங்கினார். அவர் அன்று வேட்டி அணிந்து மெதுவாக நடந்து புத்தகக்கடைப்பக்கம் வந்தவர் - அங்கு நின்ற என்னைக்கண்டுவிட்டு ' என்னடாப்பா இன்னும் ஊருக்குத்திரும்பவில்லையா?" எனக்கேட்டார். அவரது அந்த என்னடாப்பா என்ற உரிமையும் உறவும் கலந்த குரலை 2011 இல் அவர் மறையும் வரையில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கேட்கமுடிந்தது.
அன்று அவர் இரவில் புறப்படும் கொழும்பு மெயிலில் செல்வதற்காக யாழ்நகருக்கு வந்திருந்தார். ' நீ... இப்பொழுது ஃபிரீயா இருந்தால் நடந்துபோவோம். ' - என ரயில் நிலையத்துக்கு அழைத்தார்.
'அதற்கென்னசார் வருகிறேன்" என்றேன்.
பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு எதிர்ப்புறம் இருந்த ஒரு தேநீர் கடைக்கு அழைத்துச்சென்றார். ' மனுஷி இரவுச்சாப்பாடு தந்துவிட்டிருக்கிறா? உந்தக்கடையிலிருந்து சாப்பிட்டுவிட்டு போவோம். நீயும் ஏதும் சாப்பிடுறியா? "
' இல்லை சேர். இன்று இரவு எனக்கு ஜீவாவுடன் சாப்பாடு. நீங்கள் சாப்பிடுங்கள்." எனச்சொல்லிக்கொண்டு அவர் முன்னால் அமர்ந்தேன். அந்தக் கடையின் பணியாளருக்கும் அவரை முன்பே தெரிந்திருக்க வேண்டும்.
' சேர்... பிளேய்ன்ரீதானே..." என்றான் அந்தப்பணியாள்.
' ஓம்....இவருக்கும் பிளேய்ன்ரீ கொண்டுவாரும்" எனச்சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கொண்டுவந்த இடியப்பபார்சலை திறந்தார்.
' எனக்குடாப்பா ரயில்ல ஏறினவுடன நித்திரை வந்துவிடும். சாப்பிட மறந்துபோவன். அதுதான் பயணத்துக்கு முந்தியே சாப்பிட்டு விடுவேன். மற்றது இந்த பிளேயின் ரீ இருக்கெல்லோ. இது நல்ல பானம். இதற்கு ஆங்கிலத்தில் பிளக்ரீ என்பார்கள். சாப்பிட்ட பிறகு ஒரு பிளக்ரீ குடித்தால் செமிபாடாகிவிடும்." என்று சுவாரஸ்யமாக உரையாடினார்.
இந்தச்சம்பவம் சாதாரண நிகழ்வுதான். ஆனால் அதனை இங்கு நான் விபரிப்பதற்கு காரணம் இருக்கிறது.
போராசிரியர் மறைந்த பின்னர் அவரைப்பற்றி எழுதிய அவரது நீண்ட நாள் நண்பர் தோழர் அ.மார்க்ஸ் தமது கட்டுரையொன்றில் தனக்கு பிளக்ரீயை அறிமுகப்படுத்தியது சிவத்தம்பிதான் என்று பதிவுசெய்கிறார்.
பேராசிரியர் மறைந்த பின்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் அவருக்காக ஒரு இரங்கல் நிகழ்வு நடத்தினேன். அதில் அவரது நீண்ட கால நண்பரும் குடும்பஸ்தர்களாகும் முன்னர் கொழும்பில் அவருடன் அறையெடுத்து தங்கியிருந்தவருமான (பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மைத்துனர் - தங்கையின் கணவர்) கதிர்காமநாதன் உரையாற்றியபொழுது சிவத்தம்பியின் நித்திரை பற்றியும் குறிப்பிட்டார்.
ஒரு நாள் இவர்கள் இருவரும் கைலாசபதியுடன் கொழும்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்க்கப்போயிருக்கிறார்கள். படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவத்தம்பி நித்திராதேவியுடன் சங்கமித்து குறட்டை விடத்தொடங்கிவிட்டாராம். படம் முடிந்து அவர்கள் இருவரும் மௌனமாக எழுந்து புறப்படத்தயாராகியபொழுது - பேசாமல் போவோம். சிவத்தம்பி என்ன செய்கிறார் என்று பார்ப்போம். என எழுந்துசென்றனராம்.
படம் முடிந்து ரசிகர்கள் எழுந்து செல்லும் அரவம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சிவத்தம்பி நண்பர்களைக்காணாமல் - கைலாஸ் - கதிர் என்னை விட்டிட்டு போகவேண்டாம் - என்று ஒரு குழந்தையைப்போன்று பதறியடித்துக்கொண்டு வந்தாராம்.
இந்தச்சம்பவத்தை கதிர்காமநாதன் சொன்னபொழுது அதனைக்கேட்டு நாம் சிரித்தாலும் - கதிர்காமநாதன் நெஞ்சடைக்க கண்ணீருடனேயே அந்தக்காட்சியை ஆங்கிலத்தில் விபரித்தார்.
இனி ... யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு வரும் காட்சியை சொல்கிறேன். அந்தத் தேநீர் கடையில் உணவு - தேநீர் பற்றி மாத்திரமே என்னுடன் உரையாடிய சிவத்தம்பி அந்தக்கடையைவிட்டு படியால் இறங்கியதுமே இலக்கியம் பேசத்தொடங்கினார்.
எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் அச்சமயம் சாகித்திய விருதினைப்பெற்றிருந்தது. அத்தொகுதியை அவரும் படித்திருக்கிறார்.
' தம்பி - உன்ர கதைகளின் முடிவில் ஏன் சோகரசம் தொனிக்குது. நீ - உன்ர ஊர் மீனவ மக்களைப்பற்றி எழுதுவது நல்ல விஷயம். ஆனால் அந்த வர்க்கம் பற்றிய உனது கதைகளில் சோஷலிஸ யதார்த்த வாதத்தை காணயில்லை. நிறைய வாசி. பிறகு உன்ர கதைகளையும் மீண்டும் வாசி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். " என்றார்.
அவர் குறிப்பிட்ட சோஷலிஸ யதார்த்தவாதம் எனக்கு அப்பொழுது புரியவில்லை. வீரசிங்கம் மண்டபத்தில் 1975 இல் சுமையின் பங்காளிகள் அறிமுகநிகழ்வில் பேசிய நண்பர் மௌனகுருவும் - தினகரனில் எனது தொகுதி வெளிவருமுன்னரே எழுத்துலக இளம் பங்காளி என எழுதிய எம். ஸ்ரீபதியும் இந்த சோஷலிஸ யதார்த்தவாதம் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தார்கள்.
சிவத்தம்பியும் அவ்வாறு சொன்னதும் எனது கனவுகள் ஆயிரம் என்ற முதலாவது சிறுகதையை மாத்திரம் இதுவரையில் நூறு தடவை மீண்டும் மீண்டும் வாசித்திருப்பேன். அவரது தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் நூலையும் படித்திருக்கின்றேன்.
எனினும் சோஷலிஸ யதார்த்தவாதம் என்ற சிமிழுக்குள் நான் அடைபடவில்லை. இலக்கியத்தில் எத்தனையோ இஸங்கள் வந்துவிட்டன. சில இஸங்கள் காலாவதியாகி விட்டன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில் இணைந்திருந்தவாறு சங்கத்தின் வரலாறு பற்றி நீண்ட கட்டுரையை தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு மலர் புதுமை இலக்கியத்தில் எழுதியிருந்தார்.
அந்தக்கட்டுரைக்கான உசாத்துணை நூல்களை அவருக்கு தந்திருந்தவர்களின் பட்டியலும் அக்கட்டுரையின் இறுதியில் பதிவாகியிருந்தது.
மலரை அச்சிட்டவர் யாழ்ப்பாணத்தில் அச்சகம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் வரதர்.
மலரின் பிரதிகள் கொழும்புக்கு வந்தவேளையில் மாநாட்டை குழப்பும் செயல்களில் சிலர் மறைமுகமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் சிவத்தம்பிக்கும் நட்புறவு இருந்திருக்கிறது என்ற சந்தேகத்தில் குறிப்பிட்ட பெயர் பட்டியலில் ஒருவரது பெயர் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது.
செயலாளர் பிரேம்ஜிக்குத் தெரியாமல் சிலர் இரவோடு இரவாக இந்தக்கைங்கரியத்தில் ஈடுபட்டுவிட்டனர். சிவத்தம்பியும் அச்சமயம் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவர் வெளிநாடு சென்றிருந்தார்.
அந்த மலர் கனதியான ஆக்கங்களுடன் வந்திருந்த போதிலும் அந்தக் கறுப்பு மை அழிப்பு பலரை உறுத்திக்கொண்டுதானிருந்தது.
இலக்கிய உலகில் பிரவேசித்திருந்த இக்காலப்பகுதியில் ஈழத்து இலக்கிய உலகம் இவ்வாறு குழிபறிப்புகளுடனும் இருட்டடிப்புகளுடனும் நகரப்போகின்றதோ என்ற கவலை என்னை அரித்துக்கொண்டிருந்தது. எனினும் எனது வயது என்னை ஒரு பார்வையாளனாக வைத்திருந்தது. காலப்போக்கில் சிக்கல்களை எதிர்கொள்ள என்னைப்பக்குவப்படுத்தி தயாராக்கிக்கொண்டேன்.
இறுதியாக 1986 இல் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்த சங்கத்தின் ஒரு நாள் மாநாட்டில் கலந்துகொள்ள செயலாளர் பிரேம்ஜியுடன் கொழும்பிலிருந்து சென்றேன். விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை கோட்டைக்குள் முடக்கிவைத்திருந்த காலம்.
அந்த மாநாட்டிலும் சங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு யோசனைகளை சிறிய கைநூலாக வெளியிட்டிருந்தது. சிவத்தம்பி மற்றும் இலக்கிய விமர்சகர் கிருஷ்ணராஜா ஆகியோரின் பரிந்துரைகளையும் சங்கம் அதில் இணைத்திருந்தது. அந்த மாநாட்டின் பொழுதும் சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் இல்லை. வெளிநாடு சென்று விட்டார்.
மாநாட்டில் கலந்துகொண்ட புதுவை ரத்தினதுரை குறிப்பிட்ட யோசனைகளில் சில திருத்தங்களை கொண்டு வந்தார். பின்னர் அந்த யோசனைகள் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறெல்லாம் சங்கம் ஜனநாயக பண்போடு இயங்கிவந்திருக்கிறது. சிவத்தம்பி சங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து சற்று ஒதுங்குவதற்கு வடமாகாண யுத்த நெருக்கடியும் முக்கிய காரணம்.
அவரது யாழ். பல்கலைக்கழக மட்ட கல்விப்பணி மற்றும் இலக்கிய விமர்சனத்துறை சார்ந்த அயராத எழுத்துப்பணிகளுக்கு அப்பால்இ தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு மற்றும் வடபிரதேச பிரஜைகள் குழுஇ யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு முதலானவற்றில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கியதை 1983 - 1987 களில் அவதானித்திருக்கின்றேன்.
ஒரு புறம் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் இயக்கங்கள் மறுபுறம் அரசாங்கத்தின் ஆயுதப்படைகள். இவை இரண்டுக்கும் இடையே சிக்கித்துன்பங்களை அனுபவித்த - எதிர் நோக்கிய அப்பாவித்தமிழ் பொதுமக்கள்.
பேராசிரியர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். அதனால் இரண்டு தரப்பினதும் கண்காணிப்புக்கும் ஆளானார்.
ஓவ்வொரு செயலுக்கும் எதிரொலி இருப்பது போன்று தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களின்போது அதன் எதிரொலியாக இயக்கங்களின் செயல்களும் அமைந்த காலத்தில் - பொறுப்பான மக்கள் நலன் சார்ந்த பிரஜைகள் குழு பதவியிலிருந்துகொண்டு சாதுரியமாக இயங்கினார். அவரது சாதுரியங்கள் கடும் விமர்சனங்களுக்கும் உட்பட்டது.
குமுதினி படகில் நடந்த மனிதப்பேரவலம் - பொலிகண்டி நூலகத்துக்குள் பல அப்பாவி மக்கள் தடுத்துவைக்கப்பட்டு குண்டுவைத்து கொல்லப்பட்ட சம்பவம் - முல்லைத்தீவு ஓதிய மலை சம்பவம் உட்பட பல கொடுமைகளை பேராசிரியர் ஆவணப்படுத்தி ஊடகங்களுக்குத்தந்தார். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அரசுக்கும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் எடுத்துரைத்தார்.
சிவத்தம்பி அவர்கள் பேராசிரியராகவும் இருந்தமையால் அவருக்கு இரண்டு தரப்பிலும் ஒரு கனவானுக்குரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. பேராசிரியர் கூரிய கத்தியின் மேல் நடக்கும் நிலைக்கு ஆளானார்.
அக்காலப்பகுதியில் வீரகேசரியில் நான் ஆசிரிய பீடத்தில் பிரதம ஆசிரியர் - செய்தி ஆசிரியரின் பணிப்பின்பேரில் போர் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து எழுதிக்கொண்டிருந்தபோது யாழ். மாவட்ட நிருபர்கள் ஊடாக கிடைத்த பல செய்தி ஆவணங்களுக்குப்பின்னால் சிவத்தம்பி அவர்களே இயங்கியிருந்தார்கள்.
அநுராதபுரத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோது - அதனை அரச தரப்பு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியபோது - தமிழ்ப்பிரதேசங்களில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சியும் பலவீனமாக இருந்தது. சிவத்தம்பி அவர்களின் ஆதாரங்களுடனான ஆவணங்களே தமிழரின் துயரங்களை பாராளுமன்றத்தில் சொல்வதற்கு உதவின.
தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சிகண்ட போராட்டத்துக்குள் எங்கள் பேராசிரியர் விரக்தியோ சோர்வோ அடையாமல் இயங்கியதும் அவரது ஆளுமையின் ஒரு பரிமாணம்தான்.
அடுப்பில் கொதித்து நெருப்பில் தவறி விழுந்தது போன்று எமது தமிழ் மக்கள் இந்திய அமைதி காக்கும் படைக்கு (?) முகம் கொடுத்தவேளையில் மக்களின் பிரச்சினைகளை இந்திய அதிகாரிகள் கவனத்துக்கு சிவத்தம்பி கொண்டுவந்தார். அவரது கருத்துக்களை அதிகாரிகள் செவிமடுத்தமைக்கும் அவரது பேராசிரியர் என்ற கனவான் பாத்திரம் வழிகோலியது.
1986 இல் இடதுசாரி சிந்தனையுள்ள எனது இலக்கிய நண்பர் ஒருவரை ஜே.ஆரின் அரசின் புலனாய்வாளர்கள் கைது செய்து தென்னிலங்கையில் ஒரு பொலிஸ் நிலையத்தில் சில நாட்கள் தடுத்துவைத்திருந்தனர். அச்சமயம் சிவத்தம்பி யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவில் இருந்தார். கொழும்புக்கு வந்தால் சுதந்திர சதுக்கம் பிரதேசத்தில் அவ்வேளையில் வசித்த மனித உரிமை செயற்பாட்டாளர் குமாரி ஜயவர்தனாவின் இல்லத்திலேயே தங்குவார்.
ஒருநாள் பிரேம்ஜியையும் அழைத்துக்கொண்டு காலை வேளையிலேயே சிவத்தம்பியை சந்தித்து - குறிப்பிட்ட இலக்கிய நண்பரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி சில ஆவணங்களை அவரிடம் கையளித்தேன். அதுவே - இலங்கையில் நான் அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் முன்னர் அவரைச் சந்தித்த இறுதித்தருணம்.
அதன் பின்னர் சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 1997 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய முழு நாள் இலக்கிய ஆய்வரங்கிலேயே சந்தித்தேன். இலங்கையின் அனைத்துப்பிரதேச இலக்கியங்கள் (கவிதைஇ சிறுகதைஇ நாவல்) தொடர்பான விரிவான கனதியான அந்த அரங்கின் இறுதியில் சிவத்தம்பியின் தொகுப்புரை தனிநூலாக வெளிக்கொணரத்தக்க சிறப்பு மிக்கது.
இலக்கிய உலகில் விமர்சன ரீதியாக அவரை மறுதலிப்பவர்கள் கூட தங்கள் எழுத்துக்கள் - உரைகள் தொடர்பாக சிவத்தம்பியின் கருத்தை அறிவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
தனது கல்விப்புலமையையும் மற்றும் தமிழ் அறிவுலக ஆற்றலையும் தமிழர் நலன் சார்ந்தே அவர் தனது வாழ்நாள் பூராவும் கடும் விமர்சனங்களை தாங்கிக்கொண்டே இயங்கினார்.
இதுகுறித்தும் அவர்இ ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு வழங்கிய நீண்ட நேர்கணலின் இறுதியில் இவ்வாறு சொல்கிறார்:-
“ வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்பொழுதுஇ இவையெல்லாம் ஏற்படுத்திய ஒட்டுமொத்தமான தாக்கம்தான் நான். ஏன் நான் மாறினேன். அல்லது ஏன் மாறவில்லை என்றால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான் இதற்குக்காரணம். சில நண்பர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். சில நண்பர்கள் நான் முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டதாக சிலாகித்துச்சொல்வார்கள். நான் சொல்வது என்னவென்றால் மனிதனைப்புரிந்துகொள்ளப்பாருங்கள். அது இலக்கியக்காரனுக்குஇ கலைஞனுக்கு அடிப்படைத்தேவை. நான் மீண்டும் சொல்லுகிறேன். படைப்பாளியாகச் சொல்லுகிறேன். ஒரு சமூகப்பொது மனிதனாகச் சொல்லுகிறேன். நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்”
அவருக்கு 1992 ஆம் ஆண்டு மணிவிழா நடந்தபோது பாரிஸ் ஈழநாடு இதழில் அவரைப்பற்றி எழுதி அதன் பிரதியை பிறந்தநாள் வாழ்த்து மடலுடன் அவருக்கு அனுப்பியிருந்தேன். அதனைப்பார்த்து உள்ளம் பூரிக்க தனது நன்றியைச்சொன்னார்.
அவுஸ்திரேலியா தேசிய வானொலி ளுடீளு தமிழ் ஒலிபரப்பில் அவரது விரிவான நேர்காணல் இடம்பெறவேண்டும் என்று குறிப்பிட்ட வானொலி ஊடகவியலாளர் நண்பர் ரெய்சலிடம் நான் கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு விரும்பி ஏற்பாடு செய்து தந்தார். மெல்பன் ஒலிப்பதிவு கூடத்திலிருந்து சிவத்தம்பியை தெலைபேசி ஊடாக பேட்டிகண்டேன். இரண்டு வாரங்கள் அந்த நேர்காணல் ளுடீளு தமிழ் ஒலிபரப்பில் ஒலித்தது.
அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதனை செவிமடுத்த பேராசிரியரின் பல மாணவர்கள் அவருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துத்தெரிவித்தனர் என்ற தகவலை பின்னர் எனக்குச்சொல்லி அகம் மகிழ்ந்தார்.
சிவத்தம்பி கரவெட்டியில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். நீண்டகாலமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடினாலும் அவரது சிந்தனைகள் மிகவும் கூர்மையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. அந்திம காலத்தில் கண்பார்வை குறைந்தபோதிலும் எதுவித தடுமாற்றங்களும் இன்றி தனது கருத்துக்களை தெளிவாகச்சொல்லி மற்றவர்களைக்கொண்டு எழுத்தில் பதியவைத்தார். அந்தவகையில் அவரது சுறுசுறுப்பான இயக்கம் அனைவருக்கும் முன்னுதாரணமானது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை குறிப்பாகவும் தமிழ் இலக்கியத்தை பொதுவாகவும் நோக்குமிடத்து பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கும் பணியும் விரிவானது ஆழமானது. அவரது வாழ்வும் பணிகளும் தமிழர் நலன் சார்ந்தே விளங்கின. அவர் விமர்சனங்களுக்கும் ஆளானார். அதற்காக அவர் தமிழ் ஆய்வுத்துறைக்காக மேற்கொண்ட கடின உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
அவர் தனது விசேட ஆய்வுத்துறைகளை நான்காக வகைபிரித்து இயங்கியிருப்பதாக ஞானம் இதழில் வழங்கிய நேர்கணலில் தெரிவித்துள்ளார். தமிழரின் சமூக இலக்கிய வரலாறுஇ தமிழரிடையே பண்பாடும் தொடர்பாடலும்இ தமிழ் நாடகம்இ இலக்கிய விமர்சனம்.
அவரது வாழ்வு இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் தொடங்கி சர்வதேச ரீதியாக வியாபித்து வளர்ந்து படர்ந்திருந்தது.
தனது வாழ்வையும் பணியையும் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:-
“ எனக்குத்தமிழ் இலக்கியத்திலும் தமிழ் சமூகத்திலும் தமிழ் சமூக வரலாற்றிலும் - அதனால் அதனுடைய பண்பாட்டிலும் உள்ள ஈடுபாடுதான். ஒரு சமூகத்தைப்பார்க்கும்போது அதனுடைய பண்பாட்டினை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டுமென்பது என்னுடைய மார்க்ஸிய சிந்தனை காரணமாக மார்க்ஸியத்திலிருந்த ஆர்வம் காரணமாக அவ்வாறு பார்க்கின்ற ஒரு தன்மை ஏற்பட்டது. சமூக நிலை கொண்டு அதனுடைய அடித்தள நிலையிலிருந்து பார்க்கின்ற தன்மை வளர்ந்தது என்று கருதுகின்றேன். இதனால் உண்மையில் என்னுடைய ஆய்வு ஈடுபாடு என்று சொல்கிறவற்றில் இந்த நான்கையும் உள்ளடக்குவேன்”
சிவத்தம்பி கலைஇ இலக்கியத்துறையில் சிறந்த விமர்சகராக விளங்கியதுடன் தமிழ் சினிமா பற்றிய புலமையுடனும் இயங்கியவர். பாலு மகேந்திராவின் வீடு படம் வெளியானதும் சிவத்தம்பி எழுதிய விமர்சனத்தை பொம்மை இதழ் பிரசுரித்திருக்கிறது. சிவாஜிகணேசன் மறைந்ததும் - சிவாஜி கணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்ற கட்டுரையை எழுதினார். இதனைப்பார்த்த நண்பர் கனடா மூர்த்தி ( மூர்த்தி பற்றி ஜெயகாந்தன் கட்டுரையில் பதிவுசெய்துள்ளேன்.) சிவாஜிக்காக ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலும் சிவத்தம்பியே நரேட்டர். அந்த ஆவணப்படத்தை நண்பர் சுந்தரேசனின் மெல்பன் தமிழ்ச்சங்கத்தின் சர்வதேச குறும்பட விழாவில் காண்பித்தோம்.
மூர்த்தி தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படத்திலும் சிவத்தம்பியே நரேட்டர் என முன்பே சொல்லியிருக்கின்றேன். மூர்த்தியும் சிவத்தம்பியின் இனிய நண்பர். அவர் கனடாவில் சிவத்தம்பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதனை ஸ்காபரோ சிவிக் சென்டரில் காண்பித்தார்.
சிவாஜி - ஜெயகாந்தன் பற்றிய சிவத்தம்பியின் பார்வையை முற்றிலும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இவற்றில் நாம் காணமுடியும்.
சிவத்தம்பி அவர்களின் கல்விப்புலமைஇ இலக்கியத்திறனாய்வுஇ அவர் பங்குபற்றிய மாநாடுகள்இ பெற்ற விருதுகள்இ பேராசிரியராகவும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள் பற்றியெல்லாம் தற்போது பலரும் அவரைப்பற்றி நினைவு கூர்வதினால் நானும் அதனையே இங்கு மீள்பதிவு செய்யவில்லை.
அவரது மேற்குறித்த பின்புலம் மற்றும் இலங்கை முற்போக்கு இலக்கிய முகாம்இ முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அவரது பங்களிப்பு தொடர்பாகவெல்லாம் இனிவரும் காலத்தில் அவரது மாணாக்கர்இ அவருடன் இலக்கிய வாழ்வில் பயணித்த நண்பர்கள் எழுதுவார்கள் என நம்புகின்றேன்.
நாம் எமது முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நோக்கங்களை அவரிடம் 2010 ஜனவரியில் சொன்னபோது அதனை வரவேற்று முதலாவது ஆலோசனைக்கூட்டத்தில் பயனுள்ள யோசனைகளை வழங்கினார். பின்னர் பேரலையென எழுந்த எதிர்வினைகளையடுத்து தமது கருத்தை மாற்றிக்கொண்டு அறிக்கை விட்டார். ளுடீளு வானொலியிலும் கருத்துச்சொன்னார். ரெய்சல் எனது கருத்தையும் ஒலிபரப்பி ஊடக தர்மத்தை காப்பாற்றினார்.
மாநாட்டு குழுவிலிருந்த எவருமே எதிர்பார்க்காத சிவத்தம்பியின் தடாலடி எதிர்வினைக்கு பின்னணியிலிருந்த சக்திகளை புரிந்துகொள்ள முடிந்தது. அவரது எதிர்வினை எரிச்சலையும் கோபத்தையும் தந்தது. உடனே தொலைபேசியில்இ ' ஏன் சேர் இப்படிச் செய்கிறீர்கள்? " எனக்கேட்டேன்.
'எதனையும் தொலைபேசியில் சொல்ல முடியாது. யாரையாவது அனுப்பு விளக்குவேன். " என்றார்.
பின்னர் அவரது நீண்ட கால நண்பரும் மூத்த எழுத்தாளருமான தெணியானுடன் தொடர்புகொண்டு சிவத்தம்பியுடன் பேசுமாறு கேட்டுக்கொண்டேன். இந்தச்சம்பவங்கள் பற்றிய பூரண விபரத்தை தெணியான் - சிவத்தம்பியின் மறைவின் பின்னர் தினக்குரல் ஞாயிறு இதழில் எழுதிய நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற தொடர்கட்டுரையில் ( 19-02-2012) விரிவாக பதிவு செய்துள்ளார். இத் தொடர் பின்னர் குமரன் பதிப்பகத்தினால் நூலாக வெளியாகியிருக்கிறது.
மாநாட்டை திட்டமிட்டவாறு நடத்தியே முடிப்பது என்ற தீர்மானத்தில் நானும் அமைப்புக்குழுவினரும் உறுதியாக நின்றோம். கொழும்பில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாநாட்டின் நோக்கங்களையும் முன்னெடுக்கவுள்ள பணிகளையும் அமைப்புக்குழுவினர் தெளிவுபடுத்தியதையடுத்து அவர் மாநாட்டுக்கு வாழ்த்துச்செய்தி வழங்கியதுடன் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது நேரில் வந்து - வருகைதந்த பேராளர்களுடன் அகமும் முகமும் மலர உரையாடியதுடன் மாநாட்டின் தொடக்கவிழாவிலும் உரையாற்றினார். ( இதுபற்றி எனது உள்ளும் புறமும் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.)
நாம் நடத்திய அந்த மாநாடுதான் அவர் தேன்றிய இறுதிப் பொது நிகழ்வு என்பது தற்செயலானது. மாநாடு நிறைவுற்று சரியாக ஆறுமாதங்களில் அவர் எங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டார்.
அவரது மறைவுச்செய்தி அறிந்தவுடனே அவரது இல்லத்துக்கு தொடர்புகொண்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் நானும் மனைவியும் தெரிவித்தோம். அவரது உருவப்படத்தின் முன்னால் சில நாட்கள் விளக்கேற்றி மலர் வைத்து வணங்கினோம். எனதும் - மனைவியினதும் மறைந்த பெற்றவர்களுக்கு எவ்வாறு துக்கம் அனுட்டிப்போமோ அவ்வாறு வீட்டில் துயரத்தை பகிர்ந்துகொண்டோம்.
சிவத்தம்பி பற்றிய எனது கட்டுரையை அவுஸ்திரேலியா வானமுதம் வானொலி ஒலிபரப்பியது. தமிழ்முரசு இணையம்இ மற்றும் புதிய நூலகம் என்பன அதனை பதிவுசெய்தன.
ஏற்கனவே அவருடன் நான் நடத்திய நேர்காணலின் ஒரு பகுதியை ளுடீளு வானொலி மறு ஒலிபரப்பு செய்தது.
பேராசிரியர் நுஃமான் லண்டன் பி.பி.சிக்கு சொன்னது போன்று சிவத்தம்பியால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் நிரப்பப்படவேண்டியது. சிவத்தம்பியின் இழப்பும் ஈடுசெய்யப்படவேண்டியதே.
No comments:
Post a Comment