மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த கொடியேற்றத் திருவிழா


மெல்பேர்னில் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமை பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இறைவன் உடைய ஜந்து தொழில்களைக் குறித்து நிற்கின்ற இந்த மகோற்சவத்திருவிழாக்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. பதினொருநாட்கள் விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் பகல், இரவுத் திருவிழாக்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
இம்முறை மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று 19.01.2014 ஞாயிற்றுக்கிழமை வைரவர் பூசையுடன் நிறைவு பெறுகின்றது. எதிர்வரும் 16.01.2014 வியாழக்கிழமையன்று தேர்த்திருவிழாவும், 17.01.2014 வெள்ளிக்கிழமையன்று தைப்பூசத்திலன்று தீர்த்தத்திருவிழாவும், அன்று இரவு கொடியிறக்கமும், 18.01.2014 சனிக்கிழமையன்று ஸ்ரீ முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் பூங்காவனமும், மறுநாள் வைரவர் பூசையும் நடைபெறவுள்ளது.
இம்முறை சிட்னியிலிருந்து வருகைதந்துள்ள சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக்குருக்கள் அவர்கள் காப்புக் கட்டி ஸ்ரீ முருகன் கிருபையுடன் கொடியேற்றியிருந்தார். அவருடன் சிவஸ்ரீ.சிவரஞ்சன் குருக்களும், சிவஸ்ரீ.ஜானகிராமன் குருக்களும் இணைந்து வேதமுறைப்படி சகல கிரியைகள் அனைத்தையும் நிறைவாக நடாத்தியிருந்தார்கள்.

அன்றைய தினம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீ முருகப்பெருமான் குடும்ப சமேதரராய் விழாக் கோலம் பூண்டு உள்வீதி, வெளிவீதி வலம் வந்து யாவருக்கும் அருள்பாலித்தார். விஷேசமாக வருகை தந்துள்ள தவில், நாதஸ்வர இசைக்குழுவினர் மங்கள நாதஸ்வரம் இசைத்திருந்தனர். வழமைபோல் பக்த கோடிகளின் வருகை வரவேற்கத்தக்க வகையில் இருந்தது.
மெல்பேர்ன் சண்சயின் ஸ்ரீ வெற்றி வேல் முருகப் பெருமானுக்கு அரோகரா.

No comments: