திரும்பிப்பார்க்கின்றேன் - 21 -முருகபூபதி

.

மருத்துவக்கல்லூரிக்கு        தமது     உடலை                       தானமாக   வழங்கிய     மூத்த     பத்திரிகையாசிரியர்       பொன். ராஜகோபால்



ஒரு   நபர்    இறந்தவுடன்     பத்திரிகைகளில்     மரண    அறிவித்தல்   அல்லது நினைவு     அஞ்சலி   விளம்பரங்களில்   தவறாமல்    பதிவுசெய்யப்படுவது  அந்நபரின்   தோற்றம் - மறைவு    குறித்த   திகதிகள்தான்.
 இந்தத் திகதிகளைப்     பார்த்து     அவரின்     வாழ்நாளின்     தூரத்தை     அறிந்து கொள்கின்றோம்.     எத்தனை     ஆண்டுகள்     அவர்     எம்மத்தியில்    வாழ்ந்தார்    என்ற     தகவலையும்     தெரிந்துகொள்கின்றோம்.
ஆனால்இ     அந்த     நபர்    தமது     வாழ்நாளில் - என்ன   செய்தார்    எப்படி வாழ்ந்தார்    முதலான     விபரங்களை     அவருடன் நெருங்கிப்பழகியவர்களிடமிருந்துதான்     அறியமுடிகிறது.
அந்நபர்     இறந்தபின்னர்     எங்கே    இறுதிச்சடங்கு    நடக்கும்?   எங்கே தகனமாவார்?     அல்லது    எங்கே     அடக்கமாவார் ?  என்ற    தகவலும்   மரண அறிவித்தலில்     சொல்லப்பட்டுவிடும்.    ஆனால்   -    அவ்வாறெல்லாம் நிகழாமல்    மறைந்தவரின்     பூதவுடல்      மயானம்   செல்லாமல் மருத்துவக்கல்லூரிக்கு    -  அங்கு     மருத்துவம்    பயிலும்   மாணவர்களுக்காக   சென்றால்.....?





ஆம்....வீரகேசரி    வாரவெளியீட்டின்       முன்னாள்     ஆசிரியரும்  தினக்குரல்  பத்திரிகையின்     ஸ்தாபக     ஆசிரியருமான     பொன். ராஜகோபாலின்  பூதவுடல்     மருத்துவக்கல்லூரிக்குத்தான்    சென்றது.
பல    ஆண்டுகளுக்கு    முன்னர்     பகுத்தறிவு    மேதையும்     மூட நம்பிக்கைகளின்    எதிரியும்    மனோதத்துவ     நிபுணருமான     கொழும்பு பாமன்கடையில்     வசித்த     கலாநிதி    ஆபிரகாம் கோவூருடைய     மனைவி இறந்தபொழுது       அவரது     உடலையும்     கோவூர்  மருத்துவக்கல்லூரிக்குத்தான்      ஒப்படைத்தார்.      குறிப்பிட்ட     செய்தியை மரண    அறிவித்தலாக   -   அவர்      இலங்கை    வானொலிக்கு கொடுத்தபொழுது     அன்றைய    ஸ்ரீமாவோ   பண்டாரநாயக்காவின்   அரசின்    தகவல்    அமைச்சு     அதனை     நிராகரித்து     ஒலிபரப்புவதற்கு தடைசெய்தது.
ஆபிரகாம்    கோவூர்    தகவல்    அமைச்சிற்கு     எதிராகப்போராடினார்.    ஆனால்  அவரது கருத்துக்கள் - கொள்கைகளை    அடிப்படை   பௌத்த  மதக்கோட்பாட்டு     கண்ணோட்டத்தில்     அன்றைய     அரசு     நிராகரித்தது.  ஆபிராகம்     கோவூர் மறைந்தபின்னரும்      அவரது      விருப்பத்தின்   பிரகாரம்  அவரது     உடலும்      கொழும்பு      மருத்துவக்கல்லூரியிடம்தான் ஒப்படைக்கப்பட்டது.
பிறிதொரு      சந்தர்ப்பத்தில்      ஒரு     பத்திரிகையில்    வெளியான     மருத்துவ     விஞ்ஞானக்கட்டுரையுடன்       ஆபிரகாம் கோவூரின்  எலும்புக்கூட்டையும்     பார்த்து     வியந்திருக்கின்றேன்.     அவர்  தமது கண்களையும்      உடலையும்     தானம்செய்திருக்கிறார்.
அதுபோன்று     நான்     மிகவும்     நேசித்த      பத்திரிகையாளர்களில்    ஒருவரான     அன்பர்    பொன். ராஜகோபால்     அவர்களின்    உடலின் பாகங்களும்      மருத்துவம்      பயிலும்     மாணவர்களுக்கு      பயன் வழங்கிக்கொண்டிருக்கும்.     ராஜகோபாலின்      விருப்பத்தின்    பிரகாரம்  அவரது     உடல்    உரிய     இடத்திற்கு     ஒப்படைக்கப்பட்டது.
 பொன்.ராஜகோபாலுடன்      சுமார்    பத்து     ஆண்டுகள்    (1977-1987) பணியாற்றியிருந்த     போதிலும்    அதற்கு    முன்பே    1972    முதல்   நன்கு அறிவேன்.
 வீரகேசரி   வாரவெளியீட்டின்    இணை ஆசிரியராக    பதில் ஆசிரியராக பொறுப்பாசிரியராகவெல்லாம்    அவர்     பணியாற்றினார்.
 பின்னாளில்    தினக்குரலின்    வரவுக்கு    காரணமானார்.
 ஆற்றலும்      திறமையும்      மிக்க    பத்திரிகையாளன்    தான்   எங்கே பணியாற்ற     நேர்ந்தாலும்     தனது     ஆளுமையை     வெளிப்படுத்த பின்னிற்கமாட்டான்.
 ராஜகோபாலின்      ஆற்றலும்    திறமையும்     ஆளுமையும்     அவரது அமைதியான     செயற்பாடுகளில்தான்      பெரிதும்    தங்கியிருந்தன.
 அவர்     ஆக்க   இலக்கியவாதியாகவோ     செய்தியாளராகவோ இயங்காதபோதிலும்    ஒரு    பத்திரிகை  -   குறிப்பாக    ஆக்கங்கள் பலவற்றை     உள்ளடக்கிய    வார    இதழ்     எவ்விதம்    வெளியாகவேண்டும் என்பதில்    நுணுக்கமான      அறிவுடையவராகத்திகழ்ந்தார்.
 ஒரு     குறிப்பிட்ட    கால    கட்டத்தில்     தென்    கிழக்கு    ஆசியாவிலேயே    தரமான    தமிழ்    இதழ்    என்ற   புகழையும் பெருமையையும்    வீரகேசரி   வாரவெளியீடு   பெற்றமைக்கு ராஜகோபாலின்    பங்களிப்பு    மிக   முக்கியமானது.
 வார இதழை    அலங்கரிப்பதில்   முக்கிய    இடத்தை    வகிப்பது   சிறுகதை.    சிறுகதைகளைத்     தெரிவு    செய்வதிலும்    சிறுகதை எழுத்தாளர்களைத்     தரம்பிரித்து    பார்ப்பதிலும்   அவர்    சமர்த்தர்.
 இப்படியொரு   பின்னணி    அந்நாட்களில்    இருந்தமையாற்தான்இ    சில இலக்கிய   அமைப்புக்கள்    நடத்திய    தேர்வுகளில்    வீரகேசரி வாரவெளியீட்டில்      பிரசுரமான      பெரும்பாலான     கதைகள்    பரிசுகளையும் பாராட்டுகளையும்    பெற்றன.
 சிங்கப்பூர்இ     மலேசியப்பத்திரிகைகளில்     அவை    மறுபிரசுரம் செய்யப்பட்டன.
 பிரதேச    வேறுபாடுகளின்றி    அனைத்து     ஈழத்துப்படைப்பாளிகளையும் அணைத்துச்சென்றார்.     பரவலாகப்பேசப்பட்ட       பிரதேசமொழிவழக்கு  இலக்கியப்படைப்புகளுக்கும்     களம்     தந்தார்.
 பிரதேச     இலக்கியங்கள்     தேசிய – சர்வதேச தரத்திற்கு    உயர்ந்து   மக்களின்     கவனத்தை     ஈர்க்கின்றதாயின்இ     அவற்றை     தெரிவுசெய்யும் பத்திரிகை      இதழ்களின்      ஆசிரியர்களின்    பொறுப்புணர்வை   நாம் சாதாரணமாக      கணிப்பிடமுடியாது.
 ராஜகோபாலிடம்         இந்தப்பொறுப்புணர்வு      இருந்ததை அவதானித்திருக்கின்றேன்.
 பக்கம்     நிரப்புவதற்காக    எதனையும்    பிரசுரிக்கலாம்    என்ற நிலைக்கு    தன்னையும்     பத்திரிகையையும்    அவர் தாழ்த்திக்கொள்ளவில்லை.
 பத்திரிகை    காரியாலயத்தில்     உடன் பணியாற்றியவர்கள்    ஏதும் ஆக்கங்களை     எழுதும்     பட்சத்தில்இ     அவர்களுக்கு    புனைபெயர்களை வெகுபொருத்தமாகவே    சூட்டி     அகம் மகிழ்வார்.
 அவரால்    இவ்விதம்    சூட்டப்பட்ட     புனைபெயர்கள்    சில     இன்றும் நினைவில்     நிற்கின்றன.    வாசகரிடம்    நிலைத்துமிருக்கின்றன.
 பதார்த்த குணாஇ     அபிமன்யூஇ     சிகண்டியார்இ     அவதானிஇ    ரஸஞானிஇ சத்தியன்இ     உளியன்…    இப்படி     பட்டியலிடலாம்.
 அவருக்கும்     டொக்டர்    லலிதா      என்ற     புனைபெயர்    இருந்தது. மித்திரன்    வாரமலரில்    மனோதத்துவம்இ     மருத்துவம்இ     காதல்இ    குடும்ப விவகாரம்இ    அந்தரங்கம்      தொடர்பாக     வாசகர்கள்    கேட்கும் கேள்விகளுக்கு    அவர்    அளித்த      பதில்களைப்படிக்க      பெரிய    வாசகர் கூட்டமே      அந்நாட்களில்    இருந்தது.
 வேடிக்கையான     ஒரு    சம்பவமும்     நிகழ்ந்தது.     ஒரு     வாசகர்இ    டொக்டர்      லலிதாவைத்     தேடிக்கொண்டு    வீரகேசரி     அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.     குறிப்பிட்ட     வாசகருக்கு     ஏதோவெல்லாம் சொல்லப்பட்டு      அவர்     திருப்பியனுப்பப்பட்டார்.    அந்த    வாசகர்     மிகுந்த ஏமாற்றமடைந்ததைச்   சொன்னபோதுதான்இ     புனைபெயரில்    எழுதுபவர்கள்     தாம்     யார்      என்பதை     வெளியில்   தெரிந்துவிடாமல் மறைத்துக்கொள்ளவேண்டியதன்     அவசியத்தையும்    ராஜகோபால் வலியுறுத்தினார்.
 நான்    ஒப்புநோக்காளர்    இலாகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுதுஇ     ராஜகோபாலை     சந்திக்கவரும் எழுத்தாளர்கள்    என்னையும்     பார்க்கவிரும்பினார்கள்.   எனக்கும் எழுத்தாளர்களுக்கும்      இடையே     நட்புறவு     வளர    காரணமாக     இருந்தது மல்லிகை.     என்னை      எழுத்துலகிற்கு    அறிமுகப்படுத்தியவர்     மல்லிகை ஆசிரியர்     என்பதை    அறிந்திருந்த   ராஜகோபால்இ     ஒரு    நாள்     என்னை அழைத்துஇ     “ஐஸே… உமது    நண்பர்    டொமினிக்ஜீவா     தமிழகம்     சென்று வந்துள்ளார்.      அவரைச்சந்தித்து     ஒரு    நேர்காணல்    எழுதித்தாரும்” என்றார்.      நானும்    ஜீவாவைச்சந்தித்து      எழுதிக்கொடுத்தேன்.
 அந்த     ஆக்கம்    பிரசுரமானபொழுது       சந்திப்பு   ‘ரஸஞானி’  என்று குறிப்பிட்ட    பக்கத்தில்    இடம்பெறச்செய்து   என்னை ரஸஞானியாக்கினார்.
அதன்பிறகு    வாராந்தம்    வாரவெளியீட்டில்    இலக்கியப்பலகணி     என்ற    பத்தி   எழுத்தை     தொடர்ந்து    எழுதுவதற்கு    அவர்   களம் தந்தார்.    ரஸஞானி     என்ற     பெயரை   எனக்கு    அவர்     சூட்டும்பொழுது ‘ஐஸே…    இந்தப் புனைபெயரில்    நீர்தான்    எழுதுகிறீர்    என்பதை மறைத்துவைத்திருப்பது      உமது     கையில்தான்   தங்கியிருக்கிறது’-என்றும்     கட்டளையிட்டார்.
ஆனால்இ    அவரது    அன்புக்கட்டளை    காலப்போக்கில்    மீறப்பட்டதற்கு   நான்     மட்டும்    காரணம்    இல்லை.    இன்றைக்கும்     ராஜகோபாலின் நினைவாக    ‘ரஸஞானி’ யாக    எழுத்துலகில்    வலம்வருகிறேன்.
வீரகேசரியில்   அவரது    ஆற்றல்    மிக்க   பங்களிப்புகளை   இரண்டு சந்தர்ப்பங்களில்     அவதானித்திருக்கிறேன்.
 வீரகேசரிஇ     அதன்   50  ஆவது    ஆண்டு     நிறைவு     விசேட மலரை வெளியிட்ட      சமயத்திலும்     குறிப்பிட்ட     பொன்விழாவை    முன்னிட்டு நடத்தப்பட்ட    நாவல்     போட்டியின்    காலகட்டத்திலும்    அவர் மேற்கொண்ட     சிரத்தையான    பணி     விதந்து   போற்றுதலுக்குரியது.
 50    ஆண்டு     நிறைவு    மலராக      வீரகேசரி    வெளியானபொழுதுஇ    அதன் உள்ளடக்கச்சிறப்பு    முக்கியத்துவம்     பெற்றது.    இதழியல்    ஆய்வுகளை சாதாரண      வாசகனும்      புரிந்துகொள்ளத்தக்கதாக    தெரிவுசெய்து பிரசுரித்தார்.
 இலங்கை     செய்தி    ஏடுகளின்    தோற்றத்தின்     அரசியல்    சமூக பின்னணிகளை      விரிவாக     கூறிய    ஆய்வுகளும்    அம்மலரில் வெளியாகின.
 மலரை    விளம்பரங்களினால்     நிரப்பாமல்     தரமான    படைப்புகளையும் பிரசுரித்து     வாசகர்கள்      பத்திரப்படுத்தி     பாதுகாக்குமளவுக்கு   அதன் தரத்தை     உயர்த்தினார்.
 பொன்விழா    நாவல்    போட்டிக்கு    வந்து   குவிந்த     நாவல்களைத்  தேர்வுசெய்யும்     பணியில்   பல தரப்பு   வாசகர்களையும்   அவர் ஈடுபடுத்திக்கொண்டமை     தனிச்சிறப்பு.
 பல்கலைக்கழக மாணவர்கள்இ    குடும்பத்தலைவர்கள்இ     தலைவிகள்இ பத்திரிகாலய ஊழியர்கள்…    இப்படி     பலரையும்     அணுகி    முதல்கட்டஇ இரண்டாம்கட்டஇ      மூன்றாம்கட்ட    தேர்வுகளை    அவர்    நடத்தினார்.
 இப்போட்டியில்    பிரபல    எழுத்தாளர்     செம்பியன்    செல்வனின்  ‘நெருப்பு மல்லிகை’ முதல்   பரிசினைப்பெற்றது.
 அன்றைய     சில    நிருவாகப்பிரச்சினைகளினால்    பரிசளிப்பு    நிகழ்வு மிகவும்     எளிமையாக    அமைதியாக   வீரகேசரி   அலுவலகத்திலேயே நடைபெற்றது.     முடிந்தவரையில்    நாவல்    தேர்வில்    ஈடுபட்டவர்களையும்     நிர்வாகத்திடம்     சொல்லி    அழைத்திருந்தார்.    அந்த பரிசளிப்பு     நிகழ்வில்    அவர்   நிகழ்த்திய   உரை   ஆழமும்    விரிவும் கொண்டது.    அதுநாள்   வரையில்   அலுவலகத்தில்   அவருடன்    நேரடி சம்பாசனைகளை     நடத்தியிருந்த    நான்   -   அவரது   நாவல்    தெரிவுகளை எப்படி    நடத்தவேண்டும்    என்ற     தொனியில்    அமைந்த     அந்த விரிவுரையைக்கேட்டு      வியந்துபோனேன்.
  கொழும்பு     பல்கலைக்கழகத்தின்     வெளிவாரி      பட்டப்படிப்பு மாணவர்களுக்காக       நாவலர்     மண்டபத்தில்     இடம்பெற்ற விரிவுரைவகுப்புகளை     நடத்திய   அனுபவம்   அவருக்கு    ஏற்கனவே இருந்தமையால்இ     அன்று    அவரால்    நாவல்     இலக்கியப்போட்டி தொடர்பான     விரிவுரையை     சிறப்பாக     நிகழ்த்த    முடிந்திருக்கிறது.
 அன்றைய     நிகழ்ச்சி    முடிந்தபின்னர்    அவரிடம்   எனது பாராட்டைத்தெரிவித்தேன்.     “ நீங்கள்    இப்படியெல்லாம்   பேசுவீர்கள் என்பது     எனக்குத்தெரியாது.” –    என்று     எனது     வியப்பை    தெரிவித்தேன்.
 அந்த    வியப்புக்கு    முக்கிய   காரணம்.   அவர்   உரையாற்றும்பொழுது எந்தக்குறிப்புகளையும்   கையில்    வைத்துக்கொண்டு    பேசவில்லை. கொழும்பில்    நடந்த     பல   இலக்கியக்கூட்டங்களில் அவரைக்காணமுடியாது.    அழைப்பு    அனுப்பினாலும்     வரமாட்டார். பேசக்கேட்டாலும்     மறுத்துவிடுவார்.
 “ நீங்கள்   நன்றாக    இலக்கியவுரை   நிகழ்த்துகிறீர்கள்.     ஏன்   வரும் அழைப்புகளைத்          தட்டிக்கழிக்கிறீர்கள்?”       என்று       கேட்டதற்குஇ       “ ஐஸே… நான்   பத்திரிகை   ஆசிரியன்.     பேச்சாளன்   அல்ல. இந்தக்   கூட்டங்களுக்குச்சென்றால்     சில     எழுத்தாளர்கள்     தங்கள்     படைப்புகளை பிரசுரிப்பதற்கு     சிபரிசுக்கு    வந்துவிடுவார்கள்.   பல    சங்கடங்களை எதிர்நோக்கவேண்டி வரும்.     இன்னுமொரு     தனிப்பட்ட     காரணமும் எனக்குண்டு.    எனது    குடும்பம்    சிலாபத்தில்   இருக்கிறது.     நான்     இங்கே வத்தளையில்     அறை     எடுத்து    தங்கியிருக்கிறேன்.    பெரும்பாலும் இலக்கிய      கூட்டங்கள்    சனி – ஞாயிறு    தினங்களில்தான்    நடக்கும். ஞாயிறு    வீரகேசரி      வாரவெளியீட்டுக்காக     சனிக்கிழமை     வேலை   செய்துவிட்டுஇ    அன்று   மாலையே    சிலாபத்துக்கு   பஸ்   அல்லது   ரயில் ஏறிவிடுவேன்.     மீண்டும்     திங்கள்     நண்பகல்தான்    கொழும்பு    வந்து அலுவலகம்    வருவேன்.     இப்படி    வார   இறுதியில்    சிலாபத்துக்கு ஓடிக்கொண்டிருக்கும்     என்னால்    எப்படி   ஐஸே    கூட்டங்களுக்குச் செல்ல முடியும்.”
 இந்த   உரையாடலின்போதுதான்   தனது    காதல்   திருமணத்தையும் சொன்னார்.   நாவலர்    மண்டபத்தில்   விரிவுரையாற்றிய     சமயத்தில்தான் அங்கு    ஆன்மேரி லுமினா    என்ற    பெண்ணையும்      சந்தித்தார். அவரையே    காதலித்து      மணம்முடித்தார்.
 ராஜகோபாலுக்கு     சாதி-மத      நம்பிக்கைகள்     இல்லை     என்பதையும் அறிந்துகொண்டேன்.     அதனால்தான்    வடமாகாணம்    வட்டுக்கோட்டையில்      ஒரு     சைவக்குடும்பத்தில்    பிறந்த    அவரால்    ஒரு கத்தோலிக்க குடும்பத்துப்பெண்ணை      திருமணம்     செய்துகொள்ளமுடிந்தது.
  (திருமதி  ஆன்மேரி  லுமினா ராஜகோபல்   இங்கிலாந்தில்    காலமானார். அவருக்காக     அவுஸ்திரேலியா    மெல்பனில்    நடந்த    ஆத்மசாந்தி பிரார்த்தனையில்     கலந்துகொண்டேன்)
 ராஜகோபல்இ      இலக்கியக்கூட்டங்களை      எப்படித்தவிர்த்தாரோ     அதே போன்று     தனது     புகைப்படங்களையும்    எவருக்கும்    கொடுக்கமாட்டார். ஒரு   பத்திரிகை   ஆசிரியராக     வாழ்ந்துகொண்டே    தனது   படங்கள் எதுவும்     எந்தப்பத்திரிகையிலும்    இதழ்களிலும்    பிரசுரமாகிவிடக்கூடாது     என்பதிலும்     மிகுந்த     எச்சரிக்கையாக   இருந்த விந்தையான    மனிதர்தான்   அவர்.
 1983    இற்குப்பின்னர்    தனது      குடும்பத்தை     சென்னையில் குடியேற்றிவிட்டு    அடிக்கடி    இலங்கை    வந்து    இலக்கியப்புதினங்களை வீரகேசரி     வாரவெளியீட்டுக்கு    தந்துகொண்டிருந்தவன்    நண்பன் காவலூர்   ஜெகநாதன்.    ராஜகோபாலும்     என்னைப்போன்றே    அவனை உரிமையுடன்    ‘வாடா-போடா’    என்றுதான்    அழைப்பார். அந்தக்காலப்பகுதியில்    காவலூர்   ஜெகநாதன்   சென்னையில்    தொகுத்து      வெளியிட்ட    ஒரு    நூலில்     ராஜகோபாலின்   படத்தை பிரசுரிப்பதற்காக    கடும்    முயற்சியில்    ஈடுபட்டான்.    எனினும் -அவனுக்கு      அவர்      தனது       படத்தை தர மறுத்துவிட்டார்.
 பின்னர்இ    தமிழகத்தில்     ஒரு     ஓவியர்     மூலம்     ராஜகோபாலின் முகத்தை     வரைந்து    நூலில்     இடம்பெறச்செய்தான்.     அவன்    அத்துடன்    நின்றிருக்கவேண்டும்.    மீண்டும்    கொழும்புக்கு     வந்தசமயம் குறிப்பிட்ட    நூலை     அவருக்குக் காண்பித்து  -  ராஜகோபாலிடம்     நன்றாக   வாங்கிக்கட்டினான்.     அந்த     ஓவியப்படம்    ராஜகோபாலைப்போன்று இருக்கவில்லை     என்பது    மாத்திரம்     அதற்குக் காரணம்     இல்லை.
 நான்     அவுஸ்திரேலியாவுக்குப்புறப்படுவதற்கான ஆயத்தங்களைச்செய்தபோதுஇ     எனது    பயணத்தை    சில   காரணங்களினால்    அவருக்கும்    அச்சமயம்  பிரதம   ஆசிரியராகவிருந்த நண்பர்     ஆ.சிவனேசச்செல்வனுக்கும்     மற்றும்    நிருவாக – ஆசிரிய பீட நண்பர்கள்இ      சகோதரிகளுக்கும்       மறைத்துவிட்டுஇ     எனது     தம்பியுடன் வியாபரத்தில்     ஈடுபடப்போகின்றேன்.    என்று    அவருக்குச்சொன்னபோதுஇ ‘என்ன     விசர்க்கதை      சொல்லுறீர்…      உமக்கு     என்ன     வியாபரம்   தெரியும்?     பேசாமல்    இரும்.’-  என்றார்.
     நான்    விடைபெறும்      தருணத்தில்இ      பிரியாவிடைக்காக    அவரது கையைப்பற்றிக்குழுக்குவதற்காக      எனது      வலது     கரத்தை    நீட்டினேன்.
 அவர்     தனது     கையை      நீட்ட    மறுத்து       சற்றுக்கோபமாகஇ  ‘ ஐஸே  நான் கைகுழுக்க   கரம்    தர மாட்டேன்.    நீர்   மீண்டும்    திரும்பி   வரத்தான்    போகிறீர்.    சென்று    வாரும்.”-     என்று      முகத்தைத்    திருப்பிக்கொண்டு போய்விட்டார்.      எனக்கு    வந்த     கவலையை    நண்பர் தனபாலசிங்கத்திடம்     (தற்போதைய    தினக்குரல்   பிரதம   ஆசிரியர்)  பகிர்ந்துகொண்டேன்.
 அவுஸ்திரேலியா     வந்தபின்னர்     தொலைபேசியூடாகவும்     கடிதங்களிலும் எனது    நிலைமையை     விளங்கப்படுத்தியதும்.       ‘எங்கிருந்தாலும்     வாழ்க’என்று      வாழ்த்தியதுடன்       தொடர்ந்தும்      எழுதச்சொன்னார்.
 இலங்கையில்      யுத்தநெருக்கடி     தோன்றியிருந்த     1987    காலப்பகுதியில் அடிக்கடி     அவருடன்      தொலைபேசித்    தொடர்பில்    இருந்தேன்.
 அவரது     பத்திரிகைப்பணியைப்பாராட்டி     கொழும்பில்     கௌரவிப்பு   விழா நடந்த    செய்தி     அறிந்து      வாழ்த்தியபொழுது  -  அவரது    புகைப்படம் கேட்டேன்.      அச்சமயம்    நான்    பிரான்ஸில்    வெளியான பத்திரிகைகளில்      எழுதிக்கொண்டிருந்தேன்.      பல     தடவை கேட்டேன். அவரைப்பற்றிய      கட்டுரை    எழுதுவதற்காகத்தான்      அவரது     படம் கேட்டேன்.      அவருடன்     பணியாற்றுபவர்கள்    மூலமாகவும் தருவிப்பதற்கு      முயற்சித்தேன்.     ம்ஹ_ம்      -   அவரை     சம்மதிக்கவைக்க முடியவில்லை.     அவர்    மீண்டும்    மீண்டும்     சொன்ன   பதில்இ   தான் தனது     படத்தை     பிரசுரத்துக்கு      தரமாட்டேன்     என்பதுதான்.
 எனது     கரம்     தீண்டி      கைகுழுக்க மறுத்தவர்  -    தனது   படத்தைக்கூட தர      மறுத்தவர்      என்பதனால்      அவருக்கு     மனிதாபிமானமே    இல்லை     என்ற     முடிவுக்கு       வந்துவிடக்கூடாது.     அலுவலகத்தில் எல்லோரையும்      தனது      சகோதரர்களாகவே      நேசித்தார். எல்லோரிடத்திலும்      அன்பு    பாராட்டினார்.
அன்புதான்     அவரது    முதல்    எதிரி    என்பதையும்    பார்த்தவன்     நான். உதவி     கேட்டு     வருபவர்களை     கைவிடமாட்டார்.      அலுவலகத்தில் போதிய      சம்பளம்    இல்லாமல்    சிலர்   அன்றாடம்   பொருளாதார நெருக்கடியில்     சிக்கித்தவிக்கும்    தருணங்களிலெல்லாம்    கைகொடுத்து உதவுவார்.     ஐந்து   -    பத்து    என்று    மட்டுமல்ல    ஆயிரக்கணக்கில்  பண   உதவி   அவரிடம்   பெற்றவர்கள்    பலர்.
 அவற்றில்    எத்தனை   அவரிடம்   திரும்பின     எத்தனை   திரும்பவில்லை என்பது    அவருக்கும்    பெற்றவர்களுக்கும்    மாத்திரமே   வெளிச்சம்.
 பகுத்தறிவு      வாதியாகவும்    திகழ்ந்த   அவரிடம்   நான் கற்றுக்கொண்டவை     அநேகம்.
அதி தீவிரவாதிகள்   சந்தர்ப்பவாதிகளாக    மாறிவிடுவார்கள்    என்ற மாமேதை     லெனினின்    கருதுகோளுக்கு    எனக்கு   ஒரு    கதையே சொன்னார்.
 தனது     நண்பர்      ஒருவர்    படித்து -    பெரிய     உத்தியோகத்திலிருந்தாராம்.  பிள்ளையார்    பக்தராம்.    எதற்கெடுத்தாலும்    பிள்ளையாரின் அருளினால்தான்   தனக்கு    எதுவும்   நடக்கிறது    என்று    சொல்வாராம். வீட்டில்    அவரது   அலுவலக மேசையில்   ஒரு    பிள்ளையார்    சிலையை வைத்துக்கொண்டு     அடிக்கொரு தரம்     அதனைத்   தொட்டுக்கும்பிட்டுக்கொண்டே     பேசுவாராம்     எழுதுவாராம்.     அப்படி ஒருவகை     வெறித்தனமான    பிள்ளையார்     பக்தராம்.    ஒரு   நாள்   தான் அவரைப்பார்க்கச்சென்ற பொழுது      அந்த     மேசைப்பிள்ளையார்இ காகிதங்கள்     காற்றில்       பறக்காமல்     இருப்பதற்கான    ‘பேப்பர் வெயிட்டாக’ காணப்பட்டதைப்பார்த்துவிட்டு     ‘ என்ன    பிள்ளையார் இப்படி      ஆகிவிட்டாரே?     எனக்கேட்டிருக்கிறார்.     அதற்கு    அந்த    நண்பர்இ ‘இவர்     இதற்குத்தான்    பொருத்தமானவர்’-  என்றாராம்.
 இந்தக்கதையைச்சொன்ன    ராஜகோபாலின்      வாழ்வு     மாத்திரம்    அல்ல அவரது     மரணத்தின்     பின்னர்      நடந்த     நிகழ்வுகளும்  முன்மாதிரியானதுதான்.
' தான்    இறந்த     பின்னர்    தனது    உடலை    புதைக்கவோ   -  தகனம் செய்யவோ    கூடாது.     மருத்துவக்கல்லூரியில்      பயிலும் மாணவர்களுக்காக       ஒப்படைத்துவிடவேண்டும்."   என்று சொல்லிவைத்தவர்.
 அவர்     சொன்னபடியே    அவரது     உடல்    மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டது.
எவருக்கும்     தனது   படத்தை     தர     மறுத்தவர்    மறைந்த     செய்தி அறிந்துஇ      அவரைப்பற்றிய      விரிவான      கட்டுரையை     பாரிஸ்    ஈழநாடுவில்    அப்பொழுது     எழுதினேன்.
 அந்த    ஆக்கமும்    அவரது    படம்    இன்றித்தான்   பிரசுரமானது.
 1997    இல்   இலங்கை   வந்த    சமயம்    அவரது    வீடு தேடிச்சென்று   அவரது    மனைவியிடமும்    மூத்தமகன்      நாவலனிடத்தும்    எனது ஆழ்ந்த      அனுதாபங்களைத்   தெரிவித்தேன்.
 விடைபெறும்பொழுதுஇ     அமரர்.    பொன்.ராஜகோபாலின் ஒளிப்படத்தைப்பெற்றுக்கொண்டுதான்     திரும்பினேன்.
 அவர்      உயிருடன்     வாழ்ந்த    பொழுது      எனக்குக்    கிடைக்காதது அவரது       மறைவுக்குப்பின்தான்    கிடைத்தது.
                         --0--

No comments: