இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி

.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது விவசாயிகளின் ஏழ்மையும் பின் தங்கிய நிலையும், வானம் பார்த்த பூமியைப் பயிரிடும் அவலமும் இந்த ஆராய்ச்சிக்கு வெளியே உள்ளன என்றறிந்து ஆராய்சியையும் அரசுப் பணியையும் உதறினார்.
நோபல் பரிசு பெற்ற டோமினிக் பைர் என்னும் இயற்கை விஞ்ஞானியால் நிறுவப்பட்ட அமைதித் தீவு (Island of Peace) என்னும் நிறுவனத்தில் இணைந்து 10 ஆண்டுகள் பணி புரிந்தார். செயற்கை உரம் (ரசாயன உரம்) பயன்படுத்து விவசாயிகளுக்கு நட்டமும் மிகுந்த செலவுமே ஆகின்றன என்பதை இவர் கண்டறிந்தார். வினோபா பாவேவால் ஈர்க்கப் பட்ட இவர் 1979ல் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி இணைந்து காணும் முன்னேற்றம் என்னும் அடிப்படையில் விவசாயிகளுடன் இணைந்து உழைத்தார். உரம் இடும் தருணத்தில் கால் நடைகளை வயலிலேயே இரவு தங்க வைத்தார். இதனால் அவற்றின் கழிவுகள் மண்ணுடன் கலந்து இயற்கை உரமாயின. விவசாயிகளுடன் சேர்ந்து உழுவது களையெடுப்பது நாற்று நடுவது என்று எல்லாப் பணிகளும் செய்தார்.


பெல்ஜியத்தின் பெர்னார்டு என்னும் இயற்கை ஆர்வலர் அரபிந்தோ ஆசிரமத்தில் இயற்கை உரத்தை எவ்வளவு கால இடைவெளியில் இட வேண்டும் என்று இவருக்குப் பயிற்றுவித்தார். பெர்னார்டு கற்றுத்தந்த முறையைப் பின்பற்றிப் புதுக்கோட்டையில் புஞ்சையில் பயிரிட்டு அங்கிருந்த மக்களை மேலும் பயிரிட ஊக்குவித்தார்.
பவானிசாகர் முதல் கொடுமுடி வரை பாதயாத்திரை சென்று பல்வேறு கிராமங்களில் இயற்கை உரம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றி பிரசாரம் செய்தார். இயற்கை விவசாயத்தில் ஒரு வயலுக்குத் தேவையான அத்தனை மூலப்பொருளும் அந்த வயலை ஒட்டியே கிடைக்கும். மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒடிஷா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பல பயிலரங்கங்களை நடத்தினார். மரபணு விதைகளின் கெடுதி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
தம் வாழ்நாள் முழுவதும் விவசாயத்தில் பாரம்பரிய இயற்கை உரத்தின் நன்மை மற்றும் விவசாயத்தில் பல இயற்கை முறை நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வும் பயிற்சியும் விவசாயிகளுக்குக் கிடைக்கப் பாடுபட்ட நம்மாழ்வார் தம் கல்வியும் பட்டமும் மக்களுக்குப் பயன்படும் படி வாழ்ந்து காட்டினார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலி.

No comments: