உலகச் செய்திகள்


ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

காஸாவை அடித்து நொறுக்கி அதை மீளக் கைப்பற்ற வேண்டும்: கிலாட் செரோன்

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்!

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய பெண் மருத்துவரின் மரணம்

தூக்கிலிடப்பட்டார் கசாப்!

இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை!
 
எகிப்தில் ரயிலுடன் மோதிய பஸ்: 50 சிறுவர்கள் பலி















ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
By General
2012-11-19
ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம், அவர்களுக்கு, குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமை ஆகியவற்றை கண்டித்து, பிரான்ஸ் நாட்டில் கண்டன பேரணி நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டில், ஓரின சேர்க்கையாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், தங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி, நீண்ட காலமாக போராடி வந்தனர். இதையடுத்து, இவர்களது திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஓரின சேர்க்கையாளர்கள், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் அரசின், இந்த சலுகை திட்டங்களை கண்டித்து, தலைநகர் பாரிசில், 75 ஆயிரம் பேரும், லையோன் நகரில், 25 பேரும், நேற்று முன்தினம் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை கண்டித்து, ஓரின சேர்க்கையாளர்கள், போட்டி பேரணி நடத்த முயன்றனர். இதன் விளைவாக ஏற்பட்ட மோதலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்; சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பேரணிக்கு போட்டியாக, பிரான்சின், மார்சிலி நகரில், ஓரின சேர்க்கையாளர்கள், நேற்று பேரணி நடத்தினர்.

நன்றி வீரகேசரி 



 காஸாவை அடித்து நொறுக்கி அதை மீளக் கைப்பற்ற வேண்டும்: கிலாட் செரோன்
By Kavinthan Shanmugarajah
2012-11-19 13:45:25
காஸா மீதான தாக்குதலை அதிகரித்து அப்பகுதியை நொறுக்கவேண்டுமென இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரிய செரோனின் மகனான கிலாட் செரோன் தெரிவித்துள்ளார்.


இப் பிரச்சினைக்கு தீர்மானமிக்க முடிவொன்று அவசியமெனவும் காஸா வாசிகள் அப்பாவிகள் அல்லவெனவும் அவர்களே ஹமாஸை தேர்தடுத்ததாகவும் கிலாட் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செய்தியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காஸா வாசிகள் பணயக் கைதிகள் இல்லை, அவர்களே இதை சுதந்திரமாக தேர்தெடுத்துள்ளனர். எனவே இம்முடிவுடன் அவர்கள் வாழ வேண்டும்.


ஜப்பானியர்கள் விரைவாக சரணடையாத காரணத்தினால் அமெரிக்கா ஹிரோஷிமா மீதான தாக்குதலோடு நிறுத்தாமல் நாகசாகி மீதும் தாக்குதல் நடத்தியது.

காஸாவின் கீழ்க்கட்டுமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தி முற்றாக அவற்றை அழிக்க வேண்டும், எரிவாயு, சக்தி, நீர் என அனைத்து வசதிகளையும் அழிக்க வேண்டும். மேலும் அப்பகுதியை மீள ஆக்கிரமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஸா மீதான தாக்குதலை விஸ்தரிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடான்யாகு அறிவித்துள்ளார்.

தம்மீதான ரொக்கெட் தாக்குதலை ஹமாஸ் நிறுத்தினால் மட்டுமே தாமும் தாக்குதலை நிறுத்துவோம் என நெடான்யாகு தெரிவித்துள்ளார்.


வான்தாக்குதலுக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களிலிருந்தும் ஷெல் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேனான மோதல் உக்கிரமடைந்துள்ளதால் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸானது ஒரே நாளில் 150 ரொக்கட்களால் தம்மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இதுவரை இடம்பெற்றுள்ள மோதல்களில் 82 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தி வரும் ரொக்கட் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

காஸா மீதான அழுத்தங்களையும், முற்றுகையையும் இஸ்ரேல் கைவிடுவதுடன், அம் மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ்வதை ஹமாஸ் விரும்புவதாகவும் அதுவே அவர்களது கோரிக்கையாக இருப்பதாகவும் பலஸ்தீனிய சிரேஷ்ட இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள் காஸா வந்ததையடுத்து பொருளாதாரத்தடை உட்பட பல்வேற்று அழுத்தங்களுக்கு அப்பிரதேசம் முகங்கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான எல்லா உரிமையும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.


நன்றி வீரகேசரி 





சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்!
By Kavinthan Shanmugarajah
2012-11-20
மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஓர் அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின் வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

மேலும் அவரது விஜயத்தின் முக்கியமாக அமைந்தது ஆங் சான் சூ கிக்கு ஒபாமா வழங்கிய முத்தமாகும்.


தனது நட்பின் அடையாளமாக ஒபாமா வழங்கியதாக கருதப்படும் இம்முத்தமானது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தமானது ஊடகங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டமையானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகளில் அதுவும் மியன்மார் போன்றதொரு நாட்டில், ஆங் சான் சூ கி போன்ற திருமணமாகாதவொரு பெண்ணுக்கு முத்தமிடப்பட்ட சம்பவமானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
இதே போல 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெல்சன் மண்டேலா இந்திய நடிகை சபான ஆஷ்மிக்கு முத்தம் வழங்கிய சம்பவமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

பொது இடத்தில் தனது மனைவிக்கு முத்தம் வழங்கி ஊடகங்களை தன்பக்கம் ஈர்த்திருந்தவர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி



 பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய பெண் மருத்துவரின் மரணம்
By General
2012-11-16
அயர்லாந்தில் வயிற்றிலேயே இறந்த கருவை அகற்ற மறுத்ததால் இந்திய பெண் மருத்துவர் சவீதா மரணமடைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சவீதா பல் மருத்துவராக அயர்லாந்தில் பணியாற்றி வந்தார். அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்த போது திடீரென வயிற்றிலேயே கரு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று கருவை அகற்றுமாறு கோரினார். ஆனால் சவீதாவின் வயிற்றில் கரு உயிரோடு இருப்பதாகக் கூறி கருவைக் கலைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

அந்நாட்டின் கருக்கலைப்பு சட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் எனக் கூறியே வைத்தியர்கள் கருவை அகற்ற மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சவீதா கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனால் தாயின் உயிரையாவது காப்பாற்றியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் இந்தியாவுக்கான அயர்லாந்து தூதரை நேரில் அழைத்து விசாரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து டெல்லி செளத் ப்ளாக்கில் வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் எம். கணபதியை ஃபெலிம் மெக்கல்லன் இன்று சந்தித்தார். அப்போது இந்தியாவின் ஆட்சேபனையும் கவலையும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

சவீதாவின் மரணத்துக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டமே காரணம் என்பதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என்று டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அயர்லாந்து தூதரகத்துக்கு முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  நன்றி வீரகேசரி 



  தூக்கிலிடப்பட்டார் கசாப்!
By Kavinthan Shanmugarajah
2012-11-21
இந்தியாவின் மும்பை நகரம் மீது 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரேயொரு தீவிரவாதியான அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேயில் உள்ள யெரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்தமையை உறுதி செய்துள்ளனர்.

கசாப்பின் தண்டனை தொடர்பான விபரங்கள் அவர் தூக்குலிடப்படும் வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சட்டவியல் நியமங்களுக்கு அமைவாகவே அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவிக்கின்றது.

கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த இம் மாதம் 5 ஆம் திகதி நிராகரித்தார்.

கசாப்பின் ஜனாஸாவை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதற்கான முடிவெதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிகின்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 166 பேர் உயிரிழந்ததுடன் 300 பேர் காயமடைந்தனர்.      நன்றி வீரகேசரி







 இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை!
By Kavinthan Shanmugarajah
2012-11-21
இஸ்ரேலுக்கு உளவாளிகளாகச் செயற்பட்ட 6 பேர் காஸாவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஸாவின் வடபகுதியிலுள்ள இடமொன்றில் வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததுடன் ஹமாஸின் முக்கிய உறுப்பினர்களின் இருப்பிடங்கள் தொடர்பாகவும் அறியத்தந்தமை தொடர்பிலேயே இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் அதி நவீன சாதனங்களை உபயோகித்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ஹமாஸ் இலக்குகளை படமும் பிடித்துள்ளனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 6 பேரில் ஒருவரின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் செல்லும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 






 எகிப்தில் ரயிலுடன் மோதிய பஸ்: 50 சிறுவர்கள் பலி

By General
2012-11-18
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்று ரயிலுடன் மோதியதில் 50 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கெய்ரோவின் தென் பகுதியான அஷியுத் என்ற இடத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது பள்ளிப் பேருந்து ரயிலுடன் மோதியது. இதில் பஸ் வண்டி சுக்கு நூறாக நொறுங்கியது. பஸ்ஸினுள் இருந்த குழந்தைகள் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இதில் காயமடைந்த சிறுவர்கள் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ரயில் பாதையின் கதவை மூடாமல் ஊழியர்கள் கவனக் குறைவாக இருந்தமையே இந்த விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த குழநதைகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தை எகிப்து பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.     நன்றி வீரகேசரி








No comments: