தாய்மை -சிட்னி சொக்கன்-

நமக்கு குழந்தை பிறந்துடுச்சு, அதுவும் ஆண் குழந்தை. பாருங்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா.
அருகில் படுத்திருந்த அவள் கணவன் முருகன், அவளை எழுப்பி, “என்னம்மா கனவா” என்று கேட்டான்.
அவளும், “வெறும் கனவு தானா, நான் கூட நமக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சுன்னு நினைச்சுட்டேன்” என்றாள்.
“இப்ப மணி நாலு. விடியற்காலைல காண்கிற கனவு பலிச்சிடும்னு சொல்லுவாங்க. கவலைப்படாதே, சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும்” என்றான் முருகன்.
“நமக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் முடிஞ்சுடுச்சு, ஒரு தடவை கூட எனக்கு நாள் தள்ளிப் போகலை. எனக்கு தெரிஞ்சு எத்தனை பேருக்கு தெரியுமா கல்யாணம் ஆன அடுத்த மாசமே தள்ளிப் போயி, முத வருஷ கல்யாண நாளையே, குழந்தையோடு கொண்டாடி இருக்காங்க. எனக்கு மட்டும் ஏங்க இப்படி! அந்த ஆண்டவனுக்கு ஏங்க நம்ம மேல கருணையே இல்லை. நான் என்ன காரு, பங்களாவா கேக்குறேன், ஒரு குழந்தையை தானே கேக்குறேன்” என்று அவன் மார்பில் தலை சாய்த்து விசும்பினாள் தேவசேனா.


ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே, ஆண்டவனுக்கு தெரியும், நமக்கு எப்ப குழந்தையை கொடுக்கணும்னு. நாம தான் இங்க மதுரைல இருக்கிற கைராசி டாக்டரை பார்த்துட்டோமே,நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும். நீ எதையும் நினைக்காம தூங்கு” என்றான் முருகன்.
காலையில், தேவசேனா எழுந்து தலை குளித்து, காப்பி போட்டுக்கொண்டிருக்கும்போது,  
“என்னடி! இந்த மாசமும் தலை முழுகிட்டியா” என்று கேட்டபடி அங்கு வந்தாள் மாமியார் மரகதம்.
“ஆ! ஆ! ஆமாம் அத்தை” என்று மென்று முழுங்கியபடி பதிலுரைத்தாள் தேவசேனா.
“நீ, இப்படி, ஒவ்வொரு மாசமும், தலை முழுகிக்கிட்டு இருந்தா, ஒரு நாள் நாங்க உன்னைய ஒரேடியா தலை முழுக வேண்டி வரும், இந்தா, இந்த காபியை மாமா கிட்ட கொடு” என்று கூறிவிட்டு, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
மனசுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொண்டு, கண்களிலிருந்து வெளியேறத் துடிக்கும் கண்ணீரை அடக்கியபடியே, மாமனார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் தேவசேனா.
வராண்டாவில் பேப்பரை மேய்ந்துக் கொண்டிருந்த வெங்கடாச்சலத்தின் காதுகளுக்குள் அந்த உரையாடல் விழுந்தது.
“இந்தாங்க மாமா காபி” என்றாள் தேவசேனா.
“என்னம்மா, இன்னைக்கும் அர்ச்சனையா?, அவளால தினமும் காலைல உன்னைய அர்ச்சனை பண்ணாம இருக்க முடியாது. இதை நினைச்சு கவலைப்படாதேம்மா” என்றார்.
“நான் ஒண்ணும் நினைச்சுக்கலை மாமா” என்றாள்.
என்ன,அங்க ஒரு பஞ்சாயத்து நடக்குது. ஏண்டி, நான் உன்னைய காபி தானே கொடுத்துட்டு வர சொன்னேன், எவ்வளவு வேலை இருக்கு, இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்டபடியே அங்கு வந்தாள் மரகதம். 
“ஏன் மரகதம், அவளை ஒண்ணும் சொல்லாம இருக்க முடியாதா உன்னால” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“எனக்கு மட்டும் அவளை எதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்னு ஆசையா என்ன! இந்த மாசமாவது அவளுக்கு நாள் தள்ளிப் போகும்னு ஒரு நப்பாசைல இருந்தேன். நான் கண்ணு மூடுறதுக்குள்ள ஒரு பேரப் பிள்ளைய பார்த்துடலாம்னு பார்த்தா, அதை நடக்க விடமாட்டா போலிருக்கே” என்றாள் மரகதம்.
“நீ அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போய் சேர மாட்ட, நம்ம வீட்டில சீக்கிரம் ஒரு குழந்தையோட சத்தம் கேக்கத்தான் போகுது. சும்மா, அவ மனசை நோகடிச்சுக்கிட்டு இருக்காதே” என்று கோபமாக சொன்னார் வெங்கடாச்சலம்.
“உக்கும், மருமகளை ஒண்ணு சொல்லிடக் கூடாதே, உடனே என்னைய அடக்கிடுவீங்களே!, இந்த வீட்டில எல்லாருக்கும் நான் புலம்புறது தான் கஷ்டமா இருக்குது என்று முனங்கியபடி சென்றாள் மரகதம்.
தேவசேனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை பார்க்கிறார் வெங்கடாச்சலம்.
“முதல்ல கண்ணைத் துடைம்மா, அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமில்ல. சரிம்மா, உன் புருஷன் எந்திரிச்சுட்டானா” என்று கேட்டார்.
“கண்ணைத் துடைத்துக் கொண்டே, இந்நேரம் எந்திரிச்சிருக்கணும் மாமா” என்றாள் தேவசேனா.
அப்போது அங்கு வந்து சேர்ந்த முருகனிடம், வெங்கடாச்சலம், “முருகா, இன்னைக்கு நீ போய் கடையைத் திற, நான் கடை விஷயமா திருச்சி வரைக்கும் போயிட்டு, நாளைக்கு காலைல வரேன்” என்றார்.
“சரிப்பா என்று அப்பாவிடம் கூறிவிட்டு, தேவ்ஸ், நீ போய் டிபனை ரெடி பண்ணு, நான் குளிச்சிட்டு வரேன்” என்றான் முருகன்.
“சரிங்க, நான் இட்லியை சூடா அவிச்சு எடுக்கிறேன். நீங்க அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடுங்க” என்றபடி சமையலறைக்கு போனாள்.
கணவனும் மாமனாரும் சென்ற பிறகு, மதிய சமையலை முடித்து, கடைப் பையனிடம் கணவனுக்கு சாப்பாட்டை அனுப்பிவிட்டு,மாமியார் சாப்பிட்டு தூங்க போனபின் தானும் சாப்பிட்டு, டி‌வியை போட்டதில், பாட்டு சேனலில், கல்கி திரைப்படத்திலிருந்து ஒரு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தேவசேனாவோ,அதில் நடித்த கீதாவின் இடத்தில் தன்னை பொருத்திப் பார்த்து, தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள். அழுதழுது, அப்படியே தூங்கிப் போனாள்.

அன்றிரவு எட்டு மணிக்கு, முருகன் வீட்டிற்கு திரும்பியபொழுது, வீடே இருளில் மூழ்கியிருந்தது. கதவைத் திறந்து, “தேவ்ஸ்,தேவ்ஸ்” என்று அழைத்தபடியே வரவேற்பறையில் இருந்த ஸ்விட்சைப் போட்டான்.
வரவேற்பறையில் இருந்த ஸ்விட்சைப் போட்டவுடன், அங்கே ஒரு ஓரத்தில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை புதைத்து உட்கார்ந்திருந்தாள் தேவசேனா. முருகன் அவள் அருகில் சென்று, அவளை தொட்டுத் தூக்கியவுடன்,அவனுடைய ஸ்பரிசத்துக்காக காத்திருந்தவள் மாதிரி, அவன் நெஞ்சில் முகம் புதைத்து, ஓ! வென்று அழுதாள்.
முருகன், என்ன நடந்தது, ஏன் இப்படி அழுற?, அம்மா எங்கே” என்று கேட்டான்.
அதற்கு அவள், அவனை நிமிர்ந்து பார்த்து, “மூணாவது வீட்டில இருக்கிற சீதாவிற்கு வளைக்காப்பாம், அதுக்கு போயிருக்காங்க” என்றாள்.
இப்போது, அவள் அழுகின்ற காரணத்தை ஓரளவு புரிந்து கொண்டான் முருகன். இருந்தாலும் முழுமையாக தெரிந்துக் கொள்வதற்காக,
“நீ போகலையா” என்று கேட்டான்
அவனிடமிருந்து விலகி, நன்றாக கண்களைத் துடைத்துக் கொண்டு, 
“எனக்கும் போகணும்னு ஆசை தான், ஆனா, என்னைய தான் அவ மாமியார் கூப்பிடவேயில்லையே! என்னமோ நான் தீண்டத்தகாதவ மாதிரி, அத்தை கிட்ட நீங்க மட்டும் வாங்கன்னு சொல்லிட்டு போறாங்க. இதைக் கேட்டா, நான் மலடி, நான் சீதாவைப் பார்த்து பொறாமைப் படுவேன், கண்ணுப் போட்டுறுவேன்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி என்கிட்ட மத்தவுங்க நடக்கும் போது என்னால தாங்க முடியலைங்க. அதான் லைட்டு கூட போடாம மனசு உடைந்து போய் உட்கார்ந்திருக்கேன்” என்று தன் மணக்குமறல்களை கொட்டித்தீர்த்தாள்.
“இதை எல்லாம் பெருசா நினைச்சு கவலைப் படாதேடா” என்றான் முருகன்.    
“எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும். ஒரு பெண் தாய்மை என்ற பாக்கியத்தை அடையும்போது தாங்க அவ பெண்ணா பிறந்ததுக்கான முழுமையை அடையிறா. என்னதான் அவளுக்கு மனைவின்னு  அந்தஸ்த்து கிடைச்சாலும், அவ தாய்மை அடையலைன்னா, அவளுக்கு இந்த சமுகத்துல மலடின்னு தாங்க பேரு. ஒரு குழந்தையை பத்து மாசம் வயித்துல சுமந்து, அது தன்னோட பிஞ்சுக் காலால உதைக்கும்போதும், அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு நகரும்போதும் கிடைக்கிற உணர்வே ஒரு தனி சுகம்னு எல்லோரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அந்த மாதிரியான ஒரு உணர்வு, ஒரு சுகம் இதெல்லாம் எனக்கு கிடைக்காமா போயிடுமாங்க? நான் ஒரு பெண்ணுக்கான முழுமையை அடையாமப் போயிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்குங்க” என்று தன் ஆதங்கத்தை எல்லாம் வெளிப்படுத்தினாள் தேவசேனா.
“உனக்கு மட்டும் தான் அம்மாவாகணும்னு ஆசை இருக்கா என்னா, எனக்கும், எப்ப அப்பாவாக போறேன், ஒரு குழந்தை எப்ப நம்மளை அப்பான்னு கூப்பிடப் போகுதுன்னு நானும் தான் ஏங்கிக்கிட்டு இருக்கேன். அதுக்காக, நான் உன்னைய மாதிரி புலம்பிக்கிட்டா இருக்கேன். அதனால இந்த புலம்புறதை நிறுத்திட்டு சாதாரணமா இருக்கப் பாரு” என்றான்.
“நீங்க ஆம்பிளை, நாலு இடத்துக்கு போறீங்க, நாலு பேரை பார்க்குறீங்க, அதனால உங்களுக்கு குழந்தை இல்லைங்கிற கவலை ரொம்ப தெரியாது. ஆனா, எனக்கு இந்த வீடு தானேங்க உலகம். அப்புறம் எனக்கு குழந்தை இல்லைங்கிற நினைப்பு வராம என்னங்க பண்ணும்” என்றாள்.
அதற்கு முருகன், “உன் கஷ்டம் எனக்கு புரியுதும்மா. முடிஞ்சவரைக்கும் உன் மனசை வேற வேலைல திருப்பப் பாரு. முடியலையா, என்கிட்ட இப்ப உன் கவலையை சொன்ன மாதிரி சொல்லு” என்றான்.
“உங்க கிட்ட, என் கஷ்டங்களை சொன்னதுக்கு அப்புறம் தான், என் மனசு லேசான மாதிரி இருக்கு. சரி, சாப்பிட வாங்க” என்று முருகனை அழைத்தாள் தேவசேனா.
“நீ சாப்பிட்டியா” என்று கேட்டான் முருகன்.
“நான் எப்பாங்க உங்களை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கேன்” என்று பதிலுரைத்தாள்.
“சரி வா, இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம், ஆமா அம்மா?” என்று கேட்டான் முருகன்.
“அவுங்க அங்கேயே சாப்பிட்டுட்டு, லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு போனாங்க” என்றாள் தேவசேனா.
மறு நாள் காலை, வெங்கடாசலமும் ஊரிலிருந்து திரும்பியிருந்தார். அப்போது அங்கே வரவேற்பறையில் ஒரு பெரிய பிரளயமே நடந்துக் கொண்டிருந்தது.  
மறு நாள் காலை, வரவேற்பறையில் வெங்கடாச்சலம் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். மரகதமும், தேவசேனாவும்,நின்றுக் கொண்டிருந்தார்கள்.
மரகதம், “நானும் ஆறு வருஷம் பொறுத்துப் பார்த்துட்டேன், இவ, இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை கொடுக்கிற மாதிரி தெரியலை. இவளை தள்ளி வச்சுட்டு,என்னோட ஒண்ணுவிட்ட அண்ணன் கிட்ட உன்னோட இரண்டாவது பொண்ணை, என் வீட்டுக்கு மருமகளா அனுப்புறியான்னு கேக்கப்போறேன்” என்றாள்.
அங்கே வந்த முருகன், “அம்மா, என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியான்னு” கேட்டான்.
“நான் நல்லா புரிஞ்சு தான் பேசுறேன். பின்ன என்னடா, நேத்து அந்த வளைக்காப்புல, நான் பட்ட கஷ்டம் இருக்கே, அப்பப்பா, என்னமோ எனக்கு தான் குழந்தையே இல்லாத மாதிரி, ஒவ்வொருத்தியும் என்னைய பார்க்குறதும், குசு,குசுன்னு அவளுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுமா, ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு” என்றாள்.
உடனே வெங்கடாச்சலம், “அப்புறம் ஏன் போனே?” என்று கேட்டார்.
“ஆ! இது நல்லாயிருக்கே கதை, புது செருப்பு கடிக்குதுன்னு, போட்டுக்காமா வெறு காலோட நடக்க முடியுமா. எனக்கு இனிமே இவளுக்கு குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை இல்லை. அதனால தான், இவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்”. என்றாள் மரகதம்.
இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தேவசேனாவுக்கோ, கண்களிலிருந்து கண்ணீர், தாரை தாரையாக வழிந்துக் கொண்டிருந்தது.
ஏம்மா, அவ நம்பளை நம்பி வந்திருக்கா, அவளுக்கு எப்படிம்மா துரோகம் பண்றது. ஏற்கனவே அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. அவ அண்ணன் தான் அவளுக்கு கல்யாணத்தையே பண்ணிவச்சாரு. இப்ப அவளை அவ அண்ணன் வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்ப பாவம்மா. என்ன ஆனாலும் சரி இவ தான் எனக்கு கடைசி வரைக்கும் பொண்டாட்டி.என்னால வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியாது” என்று குரலை உயர்த்தி பேசினான் முருகன்.
“சரியா சொன்னடா என் சிங்கக்குட்டி. இங்க பாரு, மரகதம் நீ சொன்ன பாயிண்ட்க்கே வரேன். புது செருப்பு காலை கடிக்குதுன்னா, காலுக்கு எண்ணையை தடவிக்கிட்டு, அந்த செருப்பையே மாட்டிக்கிட்டு போவமே ஒழிய, அந்த செருப்பை தூக்கிப் போட்டுட்டு, வேற ஒரு செருப்பை வாங்க மாட்டோம். இந்த காலத்துல குழந்தை இல்லைங்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு. அப்படியும், அவனுக்கு குழந்தை பிறக்கலையா, ஒரு அநாதை குழந்தையை தத்து எடுத்துக்குவோம்.” என்றார் வெங்கடாச்சலம்.
“என்னது! தத்து எடுக்கிறதா. அதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என்று முரண்டு பிடித்தாள் மரகதம்.
வெங்கடாச்சலம் மரகதத்திடம், “சரி, இதுக்கு வேற ஒரு வழி சொல்றேன். ஏண்டி, அவ வீட்டுக்கு விலக்காயி எத்தனை நாள் ஆச்சு” என்று கேட்டார்.
மரகதமும், இன்னைக்கு இரண்டாவது நாள்” என்று கூறினாள்.
வெங்கடாச்சலம் உடனே மகனிடம் திரும்பி, “அடுத்த வாரத்திலிருந்து, பத்து நாளைக்கு நீ கடைக்கு வர வேண்டாம். நீங்க இரண்டு பேரும் எங்கையாவது, ஒரு மலைப் பிரதேசத்துக்கோ, இல்ல பெங்களூர், மைசூர்ன்னு எங்கேயாவது போய் சந்தோஷமா இருந்துட்டு வாங்க. இது உங்களுக்கு இரண்டாவது தேனிலவுன்னு நினைச்சுக்கிட்டு போங்க. நமக்கு குழந்தை இல்லையே அப்படிங்கிற கவலை கொஞ்சம் கூட இருக்க கூடாது. என்ன புரிஞ்சுதா. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம், திரும்பி வீட்டுக்கு வர்ற வழியில, தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற கற்பரட்சாம்பிகை கோவிலுக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க” என்று கூறினார்.
அதற்கு முருகன், “இல்லப்பா, இந்த தடவை போய் டாக்டரை பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றான்.
“இந்த தடவை அவ உண்டாகலைன்னா, அடுத்த தடவை கண்டிப்பா போய் டாக்டரை பாருங்க. எனக்கென்னமோ, இந்த தடவை அவ கண்டிப்பா உண்டாயிடுவான்னு மனசுக்கு படுது. அப்புறம் உங்கள் இஷ்டம்” என்றார்.
சரிப்பா, “நீங்க இவ்வளவு நம்பிக்கையா சொல்லும்போது, நாங்க ஊட்டிக்கு போயிட்டு வரோம்பா” என்றான் முருகன்.
ஒரு வாரம் கழித்து, முருகனும், தேவசேனாவும் ஊட்டிக்கு இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றார்கள். பத்து நாள் கழித்து, வீட்டுக்கு திரும்பியவுடன், தேவசேனா, தன் மாமியாரிடம்,
“இந்தாங்க அத்தை, கற்பரட்சாம்பிகை கோவிலோட பிரசாதம்” என்று கொடுத்தாள்.
“என்னம்மா, நல்லா சந்தோஷமா இருந்தீங்களா” என்று கேட்டாள் மரகதம்.
“நல்லா சந்தோஷமா இருந்தோம் அத்தை” என்று கூறியபொழுது அவளுடைய பட்டுக் கன்னம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அதனை மறைப்பதற்காக, அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள் தேவசேனா,
மரகதமும், அதனை புரிந்துக் கொண்டு, பூஜை அறைக்கு சென்று,
கடவுளே!, இந்த தடவையாவது, அவ கண்டிப்பா உண்டாகிடனும்னு , மனமுருக வேண்டிக்கொண்டாள்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு ஒரு நாள் மதிய வேளை. மரகதம், தேவசேனாவிடம், “ஏண்டி போன வாரமே உனக்கு தூரம் வந்திருக்கணுமே, இன்னும் வரலையா” என்று கேட்டாள்
“இன்னும் வரலை அத்தை. சரியா ஏழு நாள் தள்ளி போயிருக்கு” என்று கூறினாள்.
“கடவுளே! இது நல்லதுக்காகத்தான் தள்ளிப் போயிருக்கணும். உம். அந்த காலத்துல என்னோட மாமியாரே, எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கும்போது, நாடி பிடிச்சு பார்த்து சொன்னாங்க. எனக்கு அப்படியெல்லாம் பார்க்க தெரியாதே. சரி, வா அடுத்த தெருவுல இருக்கிற டாக்டர் கவிதா கிட்ட போய் பார்ப்போம்” என்று மரகதம் தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள்.
டாக்டர் கவிதாவும், மரகதத்திடம், “பெரியம்மா, நீங்க பாட்டியாக போறீங்க. உங்க மருமகளுக்கு நாற்பத்தைந்து நாள் ஆயிருக்கு. நீங்க டாக்டர் மணிமேகலையிடமே இனிமே செக்கப் பண்ணிக்கிங்க. அப்புறம் ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால உங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க” என்று கூறினார்.
“ரொம்ப சந்தோஷம் டாக்டர். நல்ல செய்தியை சொன்ன உங்க வாயிக்கு சர்க்கரையை தான் போடணும். கண்டிப்பா, என் பொண்ணு மாதிரி நான் நல்லா பார்த்துப்பேன் டாக்டர்” என்று கூறி தேவசேனாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள் மரகதம்.
தேவசேனாவிடம், “முதல்ல அந்த முனைல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போவோம்” என்று கூறியபடியே அந்த பிள்ளையார் கோவிலுக்கு தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள் மரகதம்.
வீட்டிற்கு திரும்பியவுடன், மரகதம், “தேவசேனா, நீ போயி ரெஸ்ட் எடுத்துக்க. நான் ராத்திரிக்கு சேமியா பாயாசம் பண்ணி வைக்கிறேன். அப்புறம், இப்பவே உன் புருஷனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடாதே. அவன் ராத்திரி வந்தவுடனே, நேர்லேயே சொல்லு. அப்பத்தான் அவன் சந்தோசப்படுறதை நீ பார்க்க முடியும்” என்றாள்.
இரவு, வெங்கடாச்சலமும், முருகனும் கடையை சாத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
முருகன் அவர்களுடைய அறைக்கு சென்றவுடன், பின்னாடியே சென்ற தேவசேனா, அந்த அறை கதவை மூடிவிட்டு, அவனை கட்டிப்பிடித்து, அவன் முகம் முழுவதும், முத்தம் மழை பொழிந்தாள். இந்த திடீர் முத்தமழையில், முருகன் திக்குமுக்காடிப் போனான். பிறகு சுதாரித்து அவளிடமிருந்து விலகி,
“என்ன தேவ்ஸ், இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கே. அப்புறம்  சேலை வேற கட்டியிருக்கே. எப்பவும் நைட்டி தானே போட்டிருப்பே, என்ன விஷயம்” என்று கேட்டான்.
தேவசேனா, தன் சேலையை சற்று விலக்கி, அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து, தன் கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டாள்.
அந்த வெட்கப் பார்வையும், தன் கையை எடுத்து அவள் வையிற்றில் வைத்துக் கொண்டிருப்பதையும், முருகனுக்கு விஷயத்தை புரியவைத்தது. இருந்தாலும், அவள் வாயிலிருந்து அந்த விஷயத்தை கேட்க ஆசைப்பட்டவன் போல,
“என்னம்மா, நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலை” என்றான்.
“அதான், பதில் சொல்லிட்டேனே” என்றாள் அவளும்.
“எங்க சொன்ன? ஒண்ணுமே சொல்லாம என் கையை எடுத்து உன் வயித்தில வச்சுக்கிட்டு இருக்கே. வயித்தை வலிக்குதா” என்று எதுவும் புரியாத மாதிரி கேட்டான் முருகன்.
“ச்சீ சுத்த மோசம்பா நீங்க. எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு, இப்ப ஒண்ணும் புரியாத மாதிரி நடிக்கிறீங்க. சரி, என் வாயல சொல்லணும் அவ்வளவுதானே. நீங்க அப்பாவாக போறீங்க” என்று வெட்கத்தோடு சொன்னாள் தேவசேனா.
அவன் அவளை, அப்படியே தூக்கி ஒரு சுத்து சுத்தி, இறக்கி விட்டு, “பாரு இப்ப நீயும் அம்மாவாக போறே. என்ன நமக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இதுக்கு போய் மனசை கஷ்டபடுத்திக்கிட்டு.... சரி, இப்ப நீ வாயும்  வயிறுமா இருக்க. உனக்கு என்ன வேணும்” என்று கேட்டான். 
“இந்த சந்தோஷமே, எனக்கு பெரிய சந்தோஷம். இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம். அதோடு, நீங்க எனக்காக உங்கம்மாக்கிட்ட எதிர்த்து பேசுனீங்க பாருங்க, அது போதும். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்,நீங்க தாங்க எனக்கு புருஷனா வரணும்” என்று தொண்டை அடைக்க கூறினாள்.
“ஏய், என்ன திடீர்னு செண்டிமெண்டா பேசுற” என்று கேட்டான்.
அதற்கு தேவசேனா, “எல்லா பெண்களும், தன்னைப் பத்தி மாமியார் ஏதாவது அநியாயமாக பேசுனா, தன் கணவன் தன் சார்பா பேசணும்னு நினைப்பாங்க. எனக்கு, உங்கம்மா, உங்களை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு சொல்லும்போது, நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா அழகா அவுங்க வாயை அடைச்சு, என் மனசுல பாலை வார்த்தீங்க. இந்த குழந்தையை பெத்துக்கொடுத்துட்டு, நான் செத்துப்போனா கூட, உங்களோடு நூறு வருஷம் சேர்ந்து வாழ்ந்த திருப்தி இருக்குமுங்க” என்று கூறினாள்.
“என்னது இது, ஒரு நல்ல விஷயத்தை சொல்லிட்டு, சாவு,கீவுன்னு பேசிக்கிட்டு. இன்னொரு தடவை, உன் வாயிலிருந்து இந்த மாதிரி வார்த்தை வர கூட புரிஞ்சுதா” என்று அதட்டினான் முருகன்.
அங்கே, வரவேற்பறையில், மரகதம் தன் கணவனிடம், தேவசேனா உண்டாகியிருப்பதை பத்தி பேசிக்கொண்டிருந்தாள்.
அதற்கு பிறகு வந்த நாட்களில், மரகதம், தேவசேனாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. மரகதமே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
மரகதமும், முருகனும், தேவசேனாவும் செக்கப்புக்கு சென்றபோது, டாக்டர் தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, எல்லோரிடமும்,
“தேவசேனாவுக்கு பிரஷர் இருக்குது. அதனால அவ பெட் ரெஸ்ட்லேயே இருக்கட்டும் என்று சொல்லி, தேவசேனாவிடம், இங்க பாரும்மா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் முத பிரசவம் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனா நீ ரொம்பவே பயப்பிடுற. நார்மலா இரு. மனசுக்கு இதமான நல்லா இசையை கேளு. எல்லாம் நல்ல படியா நடக்கும் என்றார்.
உடனே மரகதம், “ஏன் டாக்டர், பெருசா பிரச்சனை எதுவும் இல்லையேன்னு” தன் சந்தேகத்தை கேட்டாள்.
டாக்டரும், “ஒண்ணும் பயப்பிடுறதுக்கு இல்லை. ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால, குழந்தை நல்லபடியா பிறக்குமான்னு ரொம்ப பயப்பிடுறாங்க”, வேற ஒண்ணும் இல்லை. என்றார்.
வீட்டுக்கு திரும்பும் வழி எல்லாம், மரகதமும், முருகனும் அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை வெங்கடாச்சலம், மரகதத்திடம்,
“என்ன! மரகதம், மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லா வேலையும் நீ தான் செய்யுற போல” என்று கேட்டார்.
அதற்கு மரகதமும், அவ பிள்ளத்தாச்சியா இருக்கா, போதாக்குறைக்கு அவளுக்கு பிரஷர் வேற. அவளைப் போய் எப்படிங்க எல்லா வேலையும் செய்யச் சொல்றது. பாவம், அவளுக்கு அவ ஆத்தா இருந்தா, இந்நேரம் அங்க போய் சவுகரியமா இருப்பா. அதான், அவ அங்க இருக்கிற மாதிரியே, இங்க இருக்கணும்னு தான், அவளை ஒரு வேலை செய்ய சொல்றதில்லை” என்றாள்.
“சரி, அவளுக்கு இப்ப ஆறு மாசம் நடக்குது. அவளை அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறியா, இல்ல, நம்மலே இங்க பிரசவம் பார்த்துடுவோமா?” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“எனக்கு, அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறதுக்கு இஷ்டமே இல்லை. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, நாம பிரசவம் பார்ப்போம் இல்ல. இவளும் நம்ம பொண்ணு தான். பேசாம நாமளே இங்கேயே பிரசவம் பார்த்துடுவோம். எதுக்கும் அவளையும் ஒரு வார்த்தை கேப்போம்” என்றாள் மரகதம்.
“அட!மருமக என்னையிலிருந்து உன் பொண்ணா ஆனா? உன் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, அன்னைக்கு உம் மவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதை பத்தி பேசுவியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் வெங்கடாச்சலம்.
அதற்கு மரகதம், “நான் தான் இப்ப மாறிட்டேன் இல்ல!,சும்மா அதையே சொல்லாதீங்க. இந்த குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடுமோன்னு பயத்துல தான் அன்னைக்கு அப்படி பேசுனேன். இப்ப, நான் அவளை என் பொண்ணாதான் பார்க்குறேன்” என்றாள்.
“சரி, சரி, நீ மாறினது ரொம்ப சந்தோஷம். உன் பொண்ணை கூப்பிடு, அவக் கிட்டயே அண்ணன் வீட்டுக்கு போறியான்னு கேப்போம்” என்றார்.
உடனே மரகதமும், “தேவசேனா, முருகா இரண்டு பேரும் சத்த இங்க வந்துட்டு போங்கப்பா” என்றாள்.
முருகனும், தேவசேனாவும் அவர்கள் அறையை விட்டு வந்தார்கள்.
வெங்கடாச்சலம், தேவசேனாவிடம், “ஏம்மா, பிரசவத்தை இங்கேயே வச்சுக்கலாமா, இல்ல உங்க அண்ணன் வீட்டுக்கு போறியாம்மா” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.
தேவசேனாவும்,”நான் இங்கேயே இருக்கத்தான் மாமா விரும்புறேன். என்னைய அத்தை தங்கத் தட்டுல வச்சு தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. எங்க அண்ணி கூட இந்த அளவுக்கு என்னைய பார்த்துக்க மாட்டாங்க. நான் இங்கேயே இருந்துடுறேனே மாமா. இல்ல, முத பிரசவம் தாய் வீட்டில தான் நடக்கணும்னு நினைச்சிங்கன்னா, நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“அம்மாடி, பேசாம நீ இங்கேயே இருந்துடு. டேய் முருகா, நீ அவுங்க அண்ணன் வீட்டுக்கு போனை போட்டுக்கொடு, நான் பேசி சொல்லிடுறேன்” என்றார் வெங்கடாச்சலம்.
தேவசேனா, பிரசவத்துக்கான நாளை நெருங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு, பிரசவ வலி எடுத்து, எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று, தேவசேனாவை அட்மிட் பண்ணி வெளியே காத்திருந்தார்கள்.
“முருகா, உன் மச்சினனுக்கு, போன் செஞ்சு தேவசேனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்னு சொல்லிடு” என்றார் வெங்கடாச்சலம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு, தேவசேனாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர் வெளியே வந்து முருகனிடம்,”உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்றார். பிறகு, எங்களால சின்ன உசுரைத்தான் காப்பாத்த முடிஞ்சுது. பெரிய உசுரை காப்பாத்த முடியலை. இந்த மாதிரி சூழ்நிலைல, நாங்க பெரிய உசுரைத் தான் முதல்ல காப்பாத்த பார்போம். ஆனா இவுங்க விஷயத்துல, எங்களால அவுங்களை காப்பாத்த முடியலை” என்றார்.
முருகன் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துவிட்டான்.
உடனே, மரகதம், “என் மருமக குழந்தையை கொடுத்துட்டு, போய் சேர்ந்துட்டாளா. ஐயோ, நானே என் மருமகளே கொன்னுட்டானே. இவரு அப்பவே சொன்னாரு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு. நான் கேட்டிருந்தா, இந்நேரம் என் மருமக உயிரோடு இருந்திருப்பாளேன்னு” ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.
வெங்கடாச்சலம் தான், மரகதத்தையும், முருகனையும் சமாதானப்படுத்தி, பிரசவ அறைக்கு கூட்டிக்கிட்டு போனார்.
அங்கே, தேவசேனா, தான் பெண்ணாய் பிறந்ததுக்கான முழுமையை அடைந்து விட்டோம், இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் என்ற எண்ணத்தில், தான் பெற்றெடுத்த செல்வத்தையும், தன் காதல் கணவனையும், தந்தையாக இருந்த மாமனாரையும், கடைசிக் காலத்தில் தாயாக மாறிய மாமியாரையும் என்று எல்லோரையும் தவிக்கவிட்டுட்டு மறைந்து விட்டாள்.
பக்கத்தில் இருந்த அவள் பெற்ற செல்வமோ, “அம்மா, என்னை இந்த உலகத்துக்கு காட்டுவதற்காக, நீ இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாயே” என்று சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தது.
[முற்றும்]
   

1 comment:

Anonymous said...

The story is very good.