இலங்கைச் செய்திகள்




‘இந்திய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை நேர்காணல் நடத்தினார்கள்’ என்கிறார் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்

கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு

யாழ். இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைப்பு

நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது

யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயம்: ஸர்மிளா செய்யித்

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்










‘இந்திய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை நேர்காணல் நடத்தினார்கள்’ என்கிறார் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்
                 டி.பி.எஸ்.ஜெயராஜ்
Kp-kilinochi-2ரு உயர்மட்ட புலித் தலைவரின் மாற்றம் - 1
கேபி என்கிற மாற்றுப் பெயருடைய செல்வராசா பத்மநாதன் புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் என்கிற கவசத்தை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் இந்த நாட்களில் செய்திகளில் அதிகம் அடிபடும் ஒரு விடயமாகும்.
கொழும்பில் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கேபி கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று இந்த எழுத்தாளர் டெய்லி மிரரில் எழுதிய கதைக்குப் பின்னர், கேபி விடயமாக அதிகளவு ஆர்வம் மேலெழுந்துள்ளது. கேபியின் புதிய வதிவிடம் கிளிநொச்சி தெற்கில் உள்ள திருவையாறு பிரதேசத்தில்,இரணைமடு சந்தியிலிருந்து ஏறக்குறைய ஒரு கிலோ மீற்;றர் தூரத்தில் அமைந்துள்ளது.
அந்த வீடு  ஏ - 9 என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 100 - 150 மீற்றர் உட்புறமாக தொண்டமான் குறுக்கு வீதியில்,சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வளாகத்துள் அமைந்துள்ளது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் இந்த வளாகத்தைத்தான் தனது வதிவிடமாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், வான்வெளி குண்டுத் தாக்குதல் மூலமாக தனது மரணத்தையும் அவர் இங்குதான் சந்தித்தார்.
கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு தனது இருப்பிடத்தை அவர் மாற்றியது ஏற்படுத்திய சலசலப்புக்கு அப்பால், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் அவர் வகித்த பாத்திரத்தை பற்றிய குற்றச்சாட்டின் மைய வெளிச்சமும் கேபி மீது பாய்ச்சப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் கொலையில் அவருக்குள்ள தொடர்புகள் பற்றி, இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர்(சி.பி.ஐ) அவரை விசாரணை செய்தார்கள், என்கிற செய்தி அறிக்கை, இந்திய ஊடகங்களில் வெளியானதிலிருந்து, ஸ்ரீலங்கா ஊடகங்கள் சிலவற்றிலும் அதேபோல வெளிநாட்டிலுள்ள பல வண்ண செய்தி அமைப்புகளும் கேபி பற்றிய அநேக செய்தி அறிக்கைகளை வெளியிட்டவாறு உள்ளன. இவற்றில் அநேகமான செய்திகள் இந்திய அதிகாரிகளால் கேபி விசாரணை செய்யப்பட்டார் என்பதை பற்றியே உள்ளன.
யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த 57 வயதான கேபி, இந்தியாவுடன் நேருக்கு நேரான அவரது நிலைப்பாடு தொடர்பான ஊகங்கள் நிறைந்த பல செய்தி அறிக்கைகளுக்கு இலக்காகியுள்ளார். ஸ்ரீலங்காவிலுள்ள சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூட கேபியைப் பற்றி பேசியுள்ளார்கள். அரசாங்க அமைச்சர்கள் அந்தக் கேள்விகள் சிலவற்றுக்கு பதிலும் சொல்லியுள்ளார்கள். பல ஊடகப் பிரிவுகளில் கேபியின் தற்போதைய அந்தஸ்து மற்றும் பங்கு பற்றி பல ஊக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் பெரியதொரு அரசியல் பங்களிப்பை வழங்குவதற்கு அவர் தயாராகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளன. வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பு செயற்பாடுகளுடன் மோதலை ஏற்படுத்த அரசாங்கம் நடத்தும் நடவடிக்கைகளில் அவர் ஒரு இரகசிய பங்கை ஆற்றிவருகிறார் என மற்றும் சில அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன.
தீபாவளி
தற்போது கிளிநொச்சியை தளமாக கொண்டியங்கும் கேபியை பற்றிய சர்ச்சைகள் பெரிதாக எழுந்து கொண்டிருந்தாலும், அவர் தீவின் வடபகுதியில் தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான அநேக விடயங்களை தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாள் கேபி என்கிற மாற்றுப் பெயருடைய செல்வராசா பத்மநாதனிடம் இந்த எழுத்தாளர் விரிவான பேச்சுக்களை நடத்தினார். தனது வழக்கம் போல முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் புத்துணர்ச்சியுடன் மனம் திறந்து சுதந்திரமாகவும் மற்றும் வெளிப்படையாகவும் பேசினார்.
தமிழில் நடைபெற்ற அந்த கலந்துரையாடல் கேள்வி - பதில்; வடிவத்தில் டெய்லி மிரருக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.
கேள்வி: தீபாவளி வாழ்த்துக்கள்! உங்களது கடந்த மூன்று தீபாவளியும் தடுப்புக் காவலில் கொழும்பில்தான் இடம்பெற்றது. இந்த தீபாவளி வித்தியாசமான ஒன்று. இந்தமுறை தீபாவளியை நீங்கள் எப்படிக் கொண்டாடினீர்கள்?
பதில்: உங்களது தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆம்! கடந்த மூன்று வருடங்களைப் போலில்லாமல், அதனுடன் ஒப்பிடும்போது நான் சுதந்திரமாக இருப்பதால் இந்த தீபாவளி வித்தியாசமான ஒன்றுதான். மிக நீண்ட காலங்களுக்குப் பின்னர் தீபாவளிக்கு வடக்கிலிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தீபாவளி சமயத்தில் நான் வடக்கில் இருக்கும் ஒரு சம்பவம் பலப் பல வருடங்களுக்கு பின்னர் இடம் பெறுகிறது. அநேக நினைவுகளை நான் மீண்டும் மீட்டிப் பார்க்கிறேன்.
வடக்கில் இருப்பதைக் காட்டிலும் இந்த வருட தீபாவளி மிக மிக மகிழ்ச்சிகரமான ஒன்று ஏனெனில் அந்த முழு நாளையும் நான், முல்லைத்தீவு மாவட்டத்தில் நேர்டோவினால் (வடக்கு - கிழக்கு மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனம்) நடத்தப்படும் இரண்டு சிறுவர் விடுதிகளில் கழித்தேன்.
கேள்வி: அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாள் kp-kilinochi-1எப்படியிருந்தது?
பதில்: அது அற்புதமானதாகவும் மிகவும் உணர்ச்சி பூர்வமானதாகவும் இருந்தது. எனது குடும்பத்தினர் தாய்லாந்தில் இருக்கும் அதேவேளை இங்கே ஸ்ரீலங்காவில் நான் தனியாக இருக்கிறேன். இந்தச் சிறுவர்களும்கூட குடும்பங்களின் கவனிப்புகள் இன்றி தனியாக உள்ளனர். அவர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போலவே மற்றும் அவர்களில் பலர் என்னை அப்பா என்றுதான் அழைக்கிறார்கள். எல்லாப் பிள்ளைகளுக்கும் தீபாவளிப் பரிசாக நான் புத்தாடைகளை வழங்கினேன். நாங்கள் அனைவரும் குளித்து புத்தாடைகளை அணிந்து கொண்டோம். அன்பு இல்லத்தில் இருந்த சிறுவர்களுடன் நான் மதிய போசனம் அருந்தினேன். அன்று எங்களுக்கு ஆட்டிறைச்சி கறி கிடைத்தது. அவர்கள் பட்டாசுகளை கொளுத்த விரும்பினார்கள். எனவே நாங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தோம். பின்னா நான் பாரதி இல்லத்திலிருந்த சிறுமிகளுடன் தீபாவளி பலகாரங்களும் தேனீரும் அருந்தினேன். அவர்கள் இசை, நடன.பாட்டு.மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பின்னர் நான் அந்த சிறுமிகளுடன் கோழி இறைச்சி கறியுடன் கூடிய இராப்போசனத்தை சற்று நேரத்துடனேயே உட்கொண்டுவிட்டு கிளிநொச்சியிலுள்ள வீட்டுக்கு திரும்பினேன்.
அந்த சிறுவர்களுக்கும் எனக்கும் அது ஒரு மறக்க முடியாத தீபாவளி.
கேள்வி: தீபாவளி சமயத்தில் இந்த பிள்ளைகளின் வாழ்வில் சிறிதளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டுவர உங்களால் முடிந்ததையும் அதேசமயம் இந்த நடவடிக்கை மூலம் நீங்களும்கூட திருப்தியையும் மற்றும் மனநிறைவையும்; பெற்றீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாயுள்ளது. நேர்டோவின் பங்கினையும் மற்றும் நீங்கள் ஆற்றிவரும் பணிகளைப்பற்றியும் இன்னும் அதிகமாக அறிந்து கொள்வதில் வாசகர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள் என்பது உறுதி,ஆனால் அதற்கு முன்னால் உங்களைப்பற்றி சமீபத்தில் எழுந்துள்ள ஒரு விடயம்பற்றி நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். இது ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பானது, மற்றும் உங்களை கைது செய்வதற்காக இந்தியா இன்ரபோலின் உதவியை நாடுகிறது. இப்போது நீங்கள் அதுபற்றி பேச விரும்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக! மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல ;லை. உய்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
கொலை
கேள்வி: அது நல்லது. நன்றி. நான் உங்களிடம் நேரிடையாகவே கேட்க விரும்புகிறேன். ராஜீவ் காந்தியின் கொலையில் உங்கள் பங்கு என்ன? நீங்கள் அதில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?
பதில்: இல்லை! ஆணித்தரமாக கூறுகிறேன் இல்லை! ராஜீவ் காந்தியின் கொலையில் நான் எந்த வழியிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
கேள்வி: அதை நீங்கள் விபரமாக விளக்கமுடியுமா?
பதில்: அப்போதைய எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்த பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு கடமைப் பிரிவகள் இருந்தன. ஒரு துறையில் மற்றொன்று தலையிட முடியாது. தமிழ் நாட்டு விவகாரங்கள் மற்றொரு பகுதியினரின் கீழ் இருந்தன. எனக்கு அதில் எந்த பங்கும் இருக்கவில்லை,மேலும் மற்றொரு துறையுடன் தொடர்பு கொள்வதை தலைவர் பிரபாகரன் அனுமதிக்க மாட்டார். தலைவரின் அனுமதியோ அல்லது கட்டளையோ இன்றி எங்களில் எவருக்கும் அப்படிச் செய்ய முடியாது.
கேள்வி: இருந்த போதிலும் உங்கள் கடமைகள் வித்தியாசமானது,பிரபாகரன் அப்படிச் செய்யும்படி கட்டளையிட்டிருந்தால் உங்களால் அதில் ஈடுபட்டிருக்க முடியும். அவர் Kp-kilinochi-3அப்படிச் செய்தாரா?
பதில்: இல்லை. பிரபாகரன் அப்படி ஒருபோதும் எனக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைப் போலவே எனக்கும் இவைகளைப்பற்றிய எந்த அறிவும் இல்லை. அப்போது லண்டனிலிருந்த கிட்டுவுக்குகூட இதுபற்றி எந்த அறிவும் கிடையாது. இந்தியாவுடனும் மற்றும் ராஜீவ் காந்தியுடனும் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தும்படி கிட்டுவிடம் பிரபாகரன் சொல்லியிருந்தார். எனவே கிட்டுவும் கவிஞர் காசி ஆனந்தன், மற்றும் பொருளாதார நிபுணர் அர்ஜூனா சிற்றம்பலம் போன்றவர்களை இந்தியாவுக்கு சென்;று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இவைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் திட்டமிட்டு இந்தக் கொலையை நடத்தியிருக்க வேண்டும். பிரபாகரன் தனது இரகசிய வழிகளில் கை தேர்ந்தவர் மற்றும் இப்படியான ஒரு விடயத்தில் கண்டிப்பாக அவர் அநேகரை ஈடுபடுத்தியோ அல்லது தகவல்களை பரிமாறியோ இருக்க முடியாது. எனவே என்னிடத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கேள்வி: அப்போது நீங்கள் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபாட்டிருந்தீர்கள். உங்கள் வெளிநாட்டு கொள்வனவுத் துறை அப்போது ‘கேபியின் துறை’ என பெயர் பெற்றிருந்தது. அந்த துறையின் முக்கியத்துவத்தை கருதும்போது நீங்கள் அதில் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்க முடியாது அல்லது குறைந்த பட்சம் அந்த வளையத்துக்குள்ளாவது இருந்திருக்க வேண்டும்?
பதில்: இப்படியான ஒரு நடவடிக்கைக்கு என்னுடையதும் மற்றும் என்னுடைய துறையினதும் ஈடுபாடு அவசியமற்ற ஒன்று. கொலைகள் யாவும் பொட்டனின் தலைமையின் கீழுள்ள உளவுத்துறையினரின் கீழ் வருகிறது. மேலும் ஆயுத வினியோகத்தை உறுதிபடுத்தும் எனது பங்கு இயக்கத்துக்கு அப்போது மிகவும் இன்றிமையாத ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் எனது துறைக்கும் எனக்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தும் விதத்தில் என்னை தொடர்பு படுத்தி ஆபத்;தை உருவாக்கும் முயற்சியில் பிரபாகரன் இறங்கியிருக்க மாட்டார்.
கேள்வி: கொலை நடந்த சமயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
பதில்: அந்தச் சயத்தில் நான் இந்;தியாவுக்கும் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே பறந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய செயற்பாடு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொள்வனவு செய்து இயக்கத்துக்கு வினியோகிப்பதற்கு வேண்டிய வழிவகைகளை கண்டு பிடிப்பதாக இருந்தது. நான் இந்தியாவில் இருந்தபோதும்கூட எனது நேரத்தில் பெரும்பகுதியை பம்பாயிலேயே (இப்போது மும்பை) செலவழிப்பது வழக்கம். இந்தச் சம்பவத்துக்கு சில நாட்கள் முன்புதான் நான் இந்தியாவைவிட்;டு மலேசியாவுக்கு சென்றிருந்தேன்.
கேள்வி: ஏனெனில் இப்படியான ஒரு பாரிய சம்பவம் நடைபெறப்போகிறது என்பதை நீங்கள் அறிந்து அல்லது சந்தேகித்தபடியால்தான் அது நடைபெறுவதற்கு முன்னரே இந்தியாவை விட்டு  தப்பி ஓடினீர்களா?
பதில்: இல்லை! அப்படியான எதுவும் இல்லை. பல வாரங்களுக்கு முன்னரே நான் செல்ல வேண்டிய திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டது, மற்றும் நான் இந்தக் கொலையுடன் நான் தொடர்பு அற்றிருந்தேன்.
சர்வதேச குற்ற ஒழிப்பு காவல்துறை (இன்ரபோல்)
கேள்வி: ஆனால் இந்தியா உங்களை சர்வதேசக் குற்ற ஒழிப்பு காவல்துறையான இன்ரபோலுக்கு வேண்டப்பட்டவர்களின் பட்டியலில் ஏன் இட்டது? உங்கள்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள், வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்,பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் ஆயுதங்கள் வெடிமருந்துகள் என்பனவற்றைக் கொண்டு செய்யப்படும் குற்றங்களில் ஈடுபடுட்டது - பின்னர் அது ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒன்றிலைலையா?
பதில்: இதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை என்பதேயாகும். ஆம் என்பது ஏனெனில் அது ராஜீவ் சம்பவத்துடன் தொடர்புபட்டதுதான், இல்லை என்பது ஏனெனில் அந்தக் கொலையில் எனக்கு தொடர்பு இருப்பதானால் அல்ல அது இடப்பட்டது.
கேள்வி: உண்மையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதை மேலும் விளக்க முடியுமா?
பதில்:  அந்தக் கொலையில் எனக்கு பங்கில்லை என்று இந்திய சி.பி.ஐ யினருக்குத் தெரியும். அதனால்தான் ராஜீவ் காந்தியின் கொலை சம்பந்தமாக இந்திய நீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் எனது பெயர் இடம்பெறவில்லை. அதனால்தான் அவரைக் கொலை செய்ய மேற்கொண்ட சதி முயற்சியில்கூட ஒரு குற்றவாளியாக என்னை அறிவிக்கவில்லை.
கேள்வி: அப்படியானால் ஏன் இந்தியா உங்கள்மீது ஒரு இன்ரபோல் குற்ற அறிக்கையை வெளியிட்டது? அது ராஜீவ் காந்தியின் கொலை சம்பவம் தொடர்பானது என நீங்கள் சொன்னீர்கள் சரிதானே?
பதில்: சரி. இந்தக் கொலையை சி.பி.ஐ விசாரித்தபோது சில குறிப்புகளுக்கு என்னிடம் விளக்கம் கேட்பது அவசியம் என அவர்கள் நினைத்தார்கள். கொலை சம்பந்தமான ஜெயின் ஆணைக்குழுவின் விசாரணைகளிலும் இது பிரதானப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் நான் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இடத்துக்கு இடம் நகர்ந்து கொண்டிருந்தபடியால் அவர்களால் என்னை அணுக முடியவில்லை. என்னுடைய இருப்பிடங்கள் யாருக்கும் தெரியாதவைகளாகவே இரந்தன. அதனால்தான் அவர்கள் ஒரு இன்ரபோல் அறிவிப்பை வெளியிட்டார்கள். அவர்கள் என்னை விசாரிக்க விரும்பினார்கள்.
கேள்வி: இந்தியா உங்களை விசாரிக்க விரும்புகிறது என்கிற கேள்வி எழும்போது, சில இந்திய அதிகாரிகள் உண்மையில் ராஜீவ் காந்தியின் கொலை சம்பந்தமாக உங்களை விசாரித்ததாக சமீபத்தில் இந்திய ஊடகங்களில் ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அப்படி ஏதாவது நடந்ததா?
பதில்: ஆம் அப்படி நடைபெற்றது.இந்திய ஊடகங்கள் சொல்வதுபோல அது சமீபத்தில் நடைபெறவில்லை.மேலும் ஒரு தடவையல்ல அது இரண்டுமுறை இடம்பெற்றது.
கேள்வி: எப்போது அது நடைபெற்றது? எப்போது நீங்கள் இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு உள்ளானீர்கள்?
பதில்: அது 2010 பிற்பகுதியில் ஒரு முறையும் மற்றும் திரும்பவும் 2011 முற்பகுதியில் ஒரு முறையும் நடைபெற்றது. அது இடம்பெற்ற மாதங்கள் எனக்கு சரியாக நினைவில்லை.
கேள்வி: எப்படி மற்றும் ஏன் இது நடந்தது?
பதில்: ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பான சில சம்பவங்கள் பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் ஸ்ரீலங்கா அதிகாரிகளிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அந்த வேண்டுதலை மரியாதை நிமித்தம் ஸ்ரீலங்கா ஏற்றுக் கொண்டது. இந்தச் சம்பவத்தில் நான் முற்றிலும் ஒரு அப்பாவியாக இருந்தபடியால் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. எனவே நான் ஒத்துழைக்க தயாரானேன்.
சந்திப்புகள்
கேள்வி: அந்தச் சந்திப்புகள் எங்கே நடைபெற்றன,மற்றும் ஸ்ரீலங்கா அதிகாரிகளும் அதில் தொடர்பு பட்டிருந்தார்களா?
பதில்: இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்திலேயே நடைபெற்றது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீலங்கா அதிகாரிகள் பார்வையாளர்களாக அங்கு சமூகமளித்திருந்தார்கள். பேச்சில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை ஆனால் அந்த சந்திப்பில் நடந்தவற்றை குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
கேள்வி: இந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
பதில்: முதலில் 2010ல் சி.பி.ஐ அதிகாரிகள் குழுவொன்று என்னை சந்தித்தது. அது ஒரு நேர்காணல், ஒரு விசாரணை அல்ல. பின்னர் 2011ல் மற்றொரு இந்திய அதிகாரிகள் குழுவொன்று என்னைச் சந்தித்தது. இது அநேகமாக ஒரு கலந்துரையாடலைப் போன்றிருந்தது. முதலாவது சந்திப்பு விசேடமாக ராஜீவ் கொலை சம்பந்தமாக இருந்தது, மற்றும் இரண்டாவது எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்பான அரசியல் முனனேற்றங்கள் பற்றிய பொதுவான ஒரு கலந்துரையாடலாக இருந்தது.
கேள்வி: முதலாவது  சந்திப்பில் என்ன நடந்தது என்பதை உங்களால் நினைவுபடுத்த முடிகிறதா? சி.பி.ஐ உKp-kilinochi-4ங்களிடம் என்ன கேட்டது?
பதில்: ராஜீவ் காந்தியின் கொலையை விசாரிக்கும் சி.பி.ஐ, என்னிடம் சில நேரடிக் கேள்விகளைக் கேட்டார்கள். முதலில் இந்தக் கொலையை பற்றி எனக்கு ஏதாவது முன்கூட்டியே nதிந்திருந்ததா என அவர்கள் அறிய விரும்பினார்கள். எனக்கு எந்த அறிவும் கிடையாது என உண்மையாகப் பதிலளித்ததோடு, சம்பவம் நடைபெற்ற சமயம் நான் இந்தியாவுக்கு வெளியே இருந்தேன் என்பதை அவர்களிடம் தெரிவித்தேன். இரண்டாவதாக இந்த நடவடிக்கைகளுக்காக நான் ஏதாவது நிதியுதவி வழங்கினேனா என அடுத்து அவாகள் என்னிடம் கேட்டபோது, இல்லை என்று நான் பதிலளித்தேன். இப்படியான நடவடிக்கைகள் எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினராலேயே திட்டமிடப்படுகின்றன, அவர்களுக்கு சொந்தமாக ஒரு வரவு செலவு திட்டம் உள்ளது மற்றும் அவர்கள் என்னில் தங்கியிருப்பதில்லை என்று அவர்களிடம் நான் விளக்கி கூறினேன்.பின்னர் அவர்கள் குண்டு பொருத்திய இடைப்பட்டி மற்றும் சிவராசனின் துப்பாக்கி என்பனவற்றை பற்றி என்னிடம் கேட்டார்கள்.
கேள்வி: அந்தக் கேள்விகள் சரியாக எதைப்பற்றி அமைந்திருந்தன?
பதில்: நல்லது குண்டு பொருத்திய இடைப்பட்டியை பற்றிச் சொல்வதானால், ராஜீவ் காந்தியை கொன்று தன்னையும் வெடிக்க வைத்த அந்தப் பெண் அணிந்திருந்த இடைப்பட்டியில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த இடைப்பட்டி மற்றும் வெடிபொருட்களை நான்தான் வழங்கினேனா என அவர்கள் என்னிடம் வினாவினார்கள். அதற்கு இல்லையென்று நான் பதிலளித்தேன். அந்த ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளை இந்தியாவிலேயே வாங்க முடியும், வெடிமருந்துகளை வெளிநாட்டில் கொள்வனவு செய்து அதில் ஒரு சிறுபகுதியை இடைப் பட்டியில் பொருத்துவதற்காக அவர்களுக்கு வழங்குவதற்கு நான்தான அவசியம் என்கிற தேவை கிடையாது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். எனது அறிவுக்கு எட்டியவரை அந்த வெடி மருந்து பொருத்திய இடைப்பட்டி வெளிநாட்டில் வாங்கப்பட்டதல்ல, உள்ளுரிலேயே எல்.ரீ.ரீ.ஈ யினால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டது போலத் தோன்றியது.


ஒரு உயர்மட்ட புலித் தலைவரின் மாற்றம் - 1
சிவராசன்
kp-6கேள்வி: சிவராசனின் துப்பாக்கி என்பது என்ன? சிவராசன் என்று நீங்கள் குறிப்பிடுவர் இந்தக் கொலையின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டு பின்னர் பெங்களுர் அல்லது பெங்களுருவில் தற்கொலை செய்து கொண்ட அந்த ஒற்றைக் கண் மனிதரைத்தானே?
பதில்: ஆம். அவரைத்தான் இந்தியர்கள் ஒற்றைக்கண் சிவராசன் என்று குறிப்பிடுவார்கள். வெளிப்படையாக அவர் தன்வசம் ஒரு 9 மி.மீ கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். எனவே அந்த துப்பாக்கியை நான் தனிப்பட்ட முறையில் சிவராசனுக்கு வழங்கியிருந்தேனா என சி.பி.ஐ யினருக்கு அறிந்து கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் நான் அதை வழங்கவில்லை எனவே அதை நான் கொடுக்கவில்லை என்று சி.பி.ஐடம் தெரிவித்தேன் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது.
கேள்வி: இரண்டாவது சந்திப்பை பற்றி, அதில் என்ன நடந்தது?
பதில்: நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியதுபோல இந்தச் சந்திப்பு முற்றிலும் ஒரு கலந்துரையாடiலை போலவே இருந்தது. முதலாவது கூட்டத்தில் சி.பி.ஐ உத்தியோகத்தர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு சி.பி.ஐ அல்லாத மற்றுமொரு நபரும் வந்திருந்தார்.
கேள்வி: ரோ? அல்லது வெளிவிவகார அமைச்சு?
பதில்: இருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியாது. எப்படியாயினும் அது ஒரு சாதாரண கலந்துரையாடல். மறுவாழ்வளிக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எதிர்காலம், புலம்பெயர் சமூகம், மற்றும் புலம் பெயர் சமூகத்திலுள்ள அமைப்புகள்,ஆயுதப் போராட்டத்தின் விளைவுகள், தமிழ் மக்களின் நிலை போன்ற அநேக விடயங்களைப்பற்றி நாங்கள் பேசினோம். நான் எனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்தேன். என்னுடைய நேர்மையான கருத்துக்களை கேட்டு அவர்கள் சிறிது ஆச்சரியமடைந்தது போலத் தெரிந்தது, ஆனால் அதை பாராட்டியது போலவும் தெரிந்தது.
கேள்வி: இந்திய அதிகாரிகளுடன் மூன்றாவதாக ஒரு சந்திப்பும் இடம்பெறுமா? உங்களுடன் ஒரு கலந்துரையாடல் அல்லது நேர்காணல்?
பதில்: எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்ரீலங்கா, இந்திய அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்த விரும்பினால்,கொழும்புடன் ஒத்துழைக்க நான் தயார். நான் இந்திய அதிகாரிகளைச் சந்தித்தது ஏனென்றால் நான் அப்படிச் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா விரும்பியது,மற்றும் ஸ்ரீலங்கா அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாக இருந்தார்கள். இல்லாவிட்டால் நான் அதற்கு சம்மதித்திருக்க மாட்டேன். முந்தைய இரண்டு சந்திப்புக்களையிட்டும் இந்தியா திருப்தியடையாவிட்டால், மற்றும் திரும்பவும் என்னிடம் கேள்வி கேட்கவோ அல்லது பேசவோ விரும்பினால், நான் அதற்குத் தயார், ஆனால் ஸ்ரீலங்காவும்கூட விரும்பினால் மட்டுமே அது நடக்கும்.
கேள்வி: நீங்கள் என்னிடம் சொல்லியதிலிருந்து,உங்களுடன் மேற்கொண்ட சந்திப்புக்களையிட்டு இந்தியா திருப்தி அடைகிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், என்கிற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஆனால் ஏன் உங்களைப்பற்றி இந்தியாவால் மேற்கொண்ட இன்ரபோல் அறிவிப்பு இன்னமும் இருக்கிறது?
பதில்: எனக்குத் தெரியாது. அவர்களிடம் அதற்கான அவர்களின் சொந்தக் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னால் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
தர்மலிங்கம்
கேள்வி: சர்ச்சைக்குரிய இன்ரபோல் அறிவிப்பில் தெரிவித்திருப்பதின்படி நீங்கள் உங்கள் குடும்ப பெயராக தர்மலிங்கம் என்பதையும் மற்றும் முதற் பெயர்களாக சண்முகம் மற்றும் குமரன் என்பதையும் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பெயர் செல்வராசா பத்மநாதன் என்பது இல்லையா?
பதில்: ஆம். செல்வராசா எனது தந்தை. அவர் எனக்கு பத்மநாதன் எனப் பெயரிட்டார். எனவே நான் செல்வராசா பத்மநாதன் தான்.
கேள்வி:அப்படியானால் ஏன் இன்ரபோல் அறிவிப்பு உங்களை சண்முகம் குமரன் தர்மலிங்கம் எனக் குறிப்பிடுகிறது,
பதில்: எனக்குத் தெரியாது. இதை நீங்கள் இந்தியாவிடமோ அல்லது இன்ரபோலிடமோதான் கேட்கவேண்டும். அது ஏனென்றால் நான் அந்த நாட்களில் வழக்கமாக போலிப் பெயர்களிலுள்ள சில கடவுச்சீட்டுகளை என்னுடன் கொண்டு செல்வது வழக்கம், மற்றும் இந்தப் பெயருடைய ஒன்றை அவர்கள் கண்டு பிடித்திருக்கலாம்.
கேள்வி: உங்களைப்பற்றிய தவறான பெயரில் ஒரு இன்ரபோல் அறிவிப்பு வழங்கப் பட்டிருக்குமானால்,அது இந்தியா மற்றும் இன்ரபோல் என்பனவற்றைப் பற்றி மோசமான ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்த மாட்டாதா?
பதில்: உண்மையில் எனக்குத் தெரியாது. நீங்கள் இன்ரபோல் அல்லது இந்தியாவிடம்தான் கேட்கவேண்டும்.(உரக்கச் சிரிக்கிறார்)
கேள்வி: ஸ்ரீலங்காவும் உங்கள்மீது ஒரு இன்ரபோல் அறிவிப்பை விடுத்திருந்ததே? இப்போது அதன் நிலை என்ன?
பதில்: நான் மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டேன். நான் இப்போது ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு காவலில் உள்ளேன். இந்த உண்மை இன்ரபோலுக்கு தெரியும் என்பது எனக்கு உறுதியாக தெரியும். இதைப்பற்றி சரியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் இன்ரபோலிடமோ அல்லது கொழும்பு அதிகாரிகளிடமோதான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு உண்மையில் அதைப்பற்றி அக்கறையில்லை, ஏனெனில் உலகளாவிய ரீதியில் இனிமேலும் போக நான் விரும்பவில்லை, நான் எனது சொந்த நாடான ஸ்ரீலங்காவில் இருக்கிறேன். இப்போதைய யதார்த்தம் அதுதான், மற்றும் அது போதும் எனக்கு.
கேள்வி: உங்களுக்கு ஒரு இன்ரபோல் பிடியாணை வழங்கப்பட்டிருக்கும் சில பெயர்களைப்பற்றி நாம் பேசினோம். பெயர்கள் என்கிற கேள்விக்கு வரும்பொழுது அநேகர் உங்களை குமரன் பத்மநாதன் என்று குறிப்பிடுகிறார்கள், கே.பி என்கிற முதலெழுத்துக்களும் உறுதிப்படுத்துவது அதைத்தான். இன்னும் சிலர் கேபி என்பது கண்ணாடி பத்மநாதன் என்பதைக் குறிக்கிறது என்கிறார்கள் இதில் எது சரி?
பதில்: அது உண்மைதான். அநேகம்பேர் கேபி என்பது குமரன் பத்மநாதன் என்பதை குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது நாலோ ஐந்து பேர்கள் பத்மநாதன் என்கிற ஒரே பெயரில் இருந்தார்கள்.எனவே சக பட்டதாரி மாணவர்கள் எங்களை வித்தியாசப் படுத்துவதற்காக  பட்டப்பெயர்களை இட்டு அழைத்தார்கள். நான் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டிருந்ததால் என்னை கண்ணாடி பத்மநாதன் அல்லது கண்ணாடிப்பத்தர் என அழைத்தார்கள்.
கண்ணாடிப்பத்தர்
கேள்வி: தமிழ் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் கண்ணாடிப்பத்தர் என்றழைக்கப்பட்ட மற்றொரு ஆளும் இருந்தார். ஆனால் அது நீங்கள் இல்லையா?
பதில்: இல்லை.இல்லை. அவர் மற்றொருவர். அந்த ஆள் நான் இல்லை. நீங்கள் குறிப்பிடும் அந்த ஆள்தான் தமிழ் போராளிக் குழுக்களிடையே ஏற்பட்ட உள்ளக மோதலில் பலியான முதல் ஆள். எழுபதுகளில் அனுராதபுர சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய சிலரில் அவரும் ஒருவர். வருந்தத் தக்க வகையில் அவருடன் தப்பி வந்தவர்கள் சந்தேகப்பட்டு அவரைக் கொன்று விட்டார்கள்.
கேள்வி: எனவே கேபி என்றழைக்கப்படுவது நீங்கள்தான் இல்லையா? கேபி என்பது கண்ணாடி பத்மநாதன் என்பதன் சுருக்கம் என்றா சொல்கிறீர்கள்?
பதில்: ஆம்.மேலும் உங்களுக்கு ஒன்று தெரியுமா? பிரபாகரன்தான் கண்ணாடி பத்மநாதன் என்பதற்கு பதிலாக என்னை முதலில் கேபி என அழைக்க ஆரம்பித்தவர். அது அப்படியே நிலைத்துவிட்டது.
கேள்வி: நான் நினைத்தேன் பிரபாகரன் உங்களை கழுதை என்றுதான் அழைத்தார் என்று, ஏனெனில் கழுதை தனது முதுகில் பொதி சுமப்பதுபோல நீங்களும் பொருட்களை அனுப்பி வந்தீர்கள் இல்லையா?
பதில்: ஆம் அவர் அப்படித்தான் அழைத்தார்;, ஆனால் அந்தப் பெயரை அவர் என்முன் நேரடியாக குறிப்பிட்டதில்லை. அது நான் அங்கு இல்லாத சமயத்தில் அதுவும் சில மூத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களிடம் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்ற அங்கத்தவர்கள் முன்பாக ஒருபோதும் அப்படிக் குறிப்பிட்டதில்லை. அவர்கள் முன்னால் எப்போதும் கேபி என்பதுதான்.
கேள்வி: எப்படியாயினும் கழுதை என்பது பாசமுள்ள ஒரு பதம்தான் அது இழிவான ஒன்றல்ல?
பதில்: ஆம். அவர் அதை மிகவும் அன்புடனேயே அழைத்தார்.
கேள்வி: ஆனால் தங்கத்துரை மற்றும் குட்டிமணி என்பவர்களின் தலைமையின் கீழிருந்த ரெலோ இயக்கத்தில் நீங்கள் இருந்தபோது உங்கள் இயக்கப் பெயராக இருந்த குமரன் என்பதை நிங்கள் பயன்படுத்தவில்லையா?
பதில்: இல்லை அது அப்படியல்ல. முதலில் கூறவேண்டியது நான் ரெலோவில் ஒரு போதுமே ஒரு அங்கத்தவனாக இருந்ததில்லை.kp-7
கேள்வி: ஆனால் நான் நினைத்தேன் நீங்கள் முதலில் ரெலோவில் இருந்து,பின்னர் 1981ல் தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதும் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தீர்கள் என்று?
பதில்: உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் நீங்கள் என்னைப்பற்றி அப்படி எழுதியிருந்தீர்கள் என்பது எனக்கும் தெரியும். போராட்டத்தில் என்னுடைய வரவு பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பனவற்றின் ஊடாகவே ஏற்பட்டது ரெலோ மூலம் அல்ல.
கேள்வி: அது எப்படி நடந்தது?
பதில்: நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் செயற்பாட்டாளராக இருந்தேன், என்னுடைய சொந்த ஊரான மயிலிட்டி,காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கு உட்பட்டது. எஸ்ஜேவி செல்வநாயகத்துக்குப் பின்னர் அமிர்தலிங்கம் காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினரானார்.நான் வழக்கமாக அவரோடு விவாதத்தில் ஈடுபடுவதுண்டு,தமிழீழத்தை ஆயுதப் போராட்டத்தால் மட்டுமே அடைய முடியும் என்று அப்போது நான் அவரிடம் சொல்வதுண்டு.
ஒருநாள் அமிர்தலிங்கம் எனக்கு பிரபாகரனை அறிமுகப்படுத்தி,நீங்கள் இருவரும் பேசவேண்டும் ஏனென்றால் நீங்கள் இருவரும் ஒரேமாதிரியாக சிந்திக்கிறீர்கள் என்று சொன்னார்.பின் மற்றொரு நாளில் இப்போது பாராளுமன்ற அங்கத்தவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டில் வைத்து நான் பிரபாகரனுடன் ஒரு நீண்ட பேச்சை நடத்தினேன். அந்தக் கலந்துரையாடலின் பின்னர் நான் எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு உதவியாளராக சேர்ந்து பின்னர் ஒரு அங்கத்தவனாக மாறினேன்.
தங்கத்துரை
கேள்வி: அப்படியானால் மக்கள் எப்படி உங்களை ரெலோவுடன் தொடர்பு படுத்தினார்கள்?
பதில்: இது எப்படியென்றால் 1980 ல் எல்.ரீ.ரீ.ஈ பிளவுபட்டதும், உமாமகேஸ்வரன் புளொட் அமைப்பை உருவாக்க போய்விட்டார். பிரபாகரனின் கீழ் எல்.ரீ.ரீ.ஈயில் எஞ்சியிருந்த சிலர் தங்கண்ணா என்கிற தங்கத்துரையின் கீழிருந்த ரெலோ படையினருடன் இணைந்து கொண்டோம். அப்போது எனக்குத் தங்கத்துரைமீது மிகவும் பற்றுதல் ஏற்பட்டு அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தேன். இது நான் ரெலோவிலிருந்து தங்கத்துரை கைது செய்யப்பட்டதும் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தவன் என்று மக்களை சிந்திக்க வைத்துள்ளது. ஆனால் நான் எப்போதுமே எல்.ரீ.ரீ.ஈயை சேர்ந்தவன்.
கேள்வி: ஆகவே நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தபோது எப்படி அழைக்கப்பட்டீர்கள்?
பதில்: மயிலிட்டியில் இருந்தபோது அழைக்கப்பட்ட எனது செல்லப் பெயரான குட்டி என்ற பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டேன். நான் இந்தியாவில் இருந்தபோது,எனது புனைபெயரான குமரன் என்பதை சில இடங்களில் நான் பயன்படுத்தினேன். ஆனால் வெகு சீக்கிரமே நான் கேபி ஆகிவிட்டேன்.
கேள்வி: எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு மூத்த தலைவர் என்பதிலிருந்து, போரினால் பாதிக்கப்பட்ட அதிர்ஷ்டம் கெட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதை இலக்காக கொண்ட சமூகசேவையில் ஈடுபடும் ஒருவராக உங்களை உருவாக்கியுள்ளீர்கள்.இது உணர்வு மீட்கும் பாதையில் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு தனிப்பட்ட பயணம். இந்த உருமாற்றம் உண்மையில் குறிப்பிடத்தக்க ஒன்று, ஆனால்  சிலர், புலி தன் மீதுள்ள வரைகளையோ அல்லது சிறுத்தை தன்மீதுள்ள புள்ளியையோ மாற்றமுடியும் என்பதை நம்ப முடியாதவர்களாக உள்ளனர்.
kp-8நீங்கள் அறிந்திருப்பதை போல ஊடகங்களில் உங்களைப்பற்றி ஏராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் தொடர்பு பட்டுள்ள செயற்பாடுகள் பற்றி சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன.தமிழ் புலம்பெயர் சமூகத்திலுள்ள ஒரு பிரிவினருடன் உங்களுக்குள்ள உறவுகளைப் பற்றி எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான ஊடகங்கள் உங்கள்மீது மாசு கற்பித்துள்ளன. யாழ்ப்பாண செய்திப் பத்திரிகைகள் நீங்கள் விரைவிலேயே தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறீhகள் என ஊகங்களை வெளியிட்டுள்ளன. பிறகு நீங்கள் உருவாக்கி நிருவகிக்கும் தொண்டு நிறுவனமான நேர்டோ வேறு இருக்கிறது. மேலும் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கான உங்கள் நகர்வினையும் சிலர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். இந்தக் கோணத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் உங்கள் பதில் என்ன? அவற்றுக்கு பதிலளிக்க விரும்புகிறீர்களா அல்லது வெறுமே அலட்சியம் செய்ய நினைக்கிறீர்களா?
பதில்: இந்தக் கருத்துக்களையும் மற்றும் குற்றச்சாட்டுகளையும் நான் அறிவேன். ஊடகமும் சில எதிர்கட்சி அரசியல்வாதிகளும் அவற்றில் ஈடுபட்டுள்ளார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றில் உண்மையில்லை,மற்றும் அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களும் கிடையாது. நான் ஒரு உதை பந்தினைப்போல ஒவ்வொருவராலும் உதை படுகிறேன். அரசாங்கத்தையும் மற்றும் பாதுகாப்புச் செயலாளரையும் விமர்சிக்க விரும்புவர்கள் என்னை தங்களுக்கு வசதியான ஒரு ஆயதமாக பயன்படுத்துகிறார்கள்.
உருமாற்றம்
நீங்கள் தெரிவிப்பதுபோல நான் பெற்றிருக்கும் உருமாற்றம் உண்மையானதும் மற்றும் பாசாங்கற்றதுமாகும். என்னைப்போன்ற ஒரு மனிதனில் ஏற்படும் இப்படியான மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்குகூட எமது சமூகத்திலுள்ள அநேகருக்கு இயலாமல் உள்ளது, என்பது எனக்குப் புரிகிறது. வன்முறைகளை முன்னேற்றுவதில் பல kp-9தசாப்தங்களாக ஈடுபட்டிருந்த நான், இப்போது பச்சாதாபப்பட்டு வருந்தி, மானிடத்துக்கு சேவையாற்றுவதன் மூலம் உள் அமைதியை தேட முயலுகிறேன். ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்துக்கும் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இப்படியான ஒரு உயர்வான வாய்ப்பை வழங்கியதற்காக நிரந்தர கடமைப்பட்டுள்ளேன். உண்மையில் நான் பாக்கியசாலி,மற்றும் இந்தக் கருணைக்கும் புதிய வாழ்வை தொடங்க ஒரு வாய்ப்பையும் தந்த கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன்.
ஆனால் நாங்கள் ஒரு ஜனநாயகத்தில் வாழ்கிறோம், மற்றும் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் எதிர்க்கட்சி மற்றும் ஊடகம் என்பனவற்றின் கடமை. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். சாத்தியமான வரை நிலமையை விளக்க நான் தயாராகவே உள்ளேன். அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது,சொல்லவும் விரும்பவில்லை,ஆனால் பொறுப்புள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.
நான் உங்கள் கேள்விகளை வரவேற்பதோடு என்னால் இயன்றவரை அவற்றுக்கு பதிலும் அளிப்பேன், அதனால் இந்த நாட்டிலுள்ள மக்கள் என்னைப்பற்றி,எனது பணிகளைப்பற்றி, எனது திட்டங்கள், எனது அரசியல் மற்றும் ஆர்வமுள்ள ஏனைய விடயங்கள் பற்றி அதிக தகவல்களை அறிய முடியும். என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை, மற்றும் நேர்டோவினால் பொறுப்பேற்றுள்ள பல்வேறு சேவைகளில் உதவுவதற்கு உண்மையில் இன்னும் அதிகமான மக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நியாயமான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதோடு மற்றும் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த நான் உதவினால் நிச்சயம் இது நடக்கும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி தேனீ







  கந்தரோடை அம்மன் ஆலயத்தில் மூன்று விக்கிரகங்கள் திருட்டு
By General
2012-11-20

கந்தரோடை வற்றாக்கை அம்பாள் ஆலயத்தில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் இரவோடிரவாக திருடப்பட்டுள்ளன.
இவ் ஆலயத்தில் அம்பாள் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல இலட்சம் ரூபா செலவில் நடைபெறும் திருப்பணி வேலைகளை முன்னிட்டு மண்டபத்திலிருந்த ஐம்பொன்னினாலான பிள்ளையார், அம்பாள், நடேசன் ஆகிய மூன்று விக்கிரகங்களும் மற்றும் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களும் பாதுகாப்பாக ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

நள்ளிரவு ஆலயத்திற்குள் புகுந்த திருடர்கள் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்களையும் எடுத்துச் சென்றுள்ளார்கள். இத் திருட்டு தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி










யாழ். இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைப்பு
slarmy-4யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத்தின் 513ஆம் படைப்பிரிவினால் அளவெட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் இராணுத்தினர் நிலைகொண்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்யவும் பாதுகாப்பு வழங்கவுமே படையினர் நிலைகொண்டு உள்ளனர். இப்பகுதியில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அவ்வாறு வதந்திகளை பரப்பி வருபவர்கள் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை ஒன்றும் செய்யப்போவதும் இல்லை. இராணுவத்தினர் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கென 1,780 வீடுகள் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி, வீடமைப்பு மற்றும் ஏனைய உதவிகள் என இராணுவத்தின் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை இராணுத்தில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வர வேண்டும். இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று பார்க்கக் கூடாது. இலங்கை இராணுவம் என்றே பார்க்கவேண்டும். அத்துடன் 1980ஆம் ஆண்டில் நான் இராணுவத்தில் இணைந்தபோது தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் இராணுத்தில் இருந்தனர். விடுதலைப் புலிகள் அவர்களை அச்சுறுத்தி அவர்களை இராணுத்தில் இருந்து விலக்கினர். இப்போது அந்த நிலமை மாறிவிட்டது. எனவே இப்பகுதியில் இருக்கின்ற இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதற்கு முன்வர வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுள்கொள்கின்றேன்' என்றார். நன்றி தேனீ









நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது
By Kapila
2012-11-21
ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவின் விசேட விமானமொன்றின் மூலம் விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் பொரும்பாலும் தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களாவர். இவர்களை தேசிய குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு கடந்த ஒன்பது தடவைகளாக 526 புகலிடக்கோரிக்கையாளர்கள் தாய்நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி





 யாழில் போலிச் சாமியாரின் கபட நாடகம்: நம்பியோருக்கு ஆறரை இலட்சம் ரூபா இழப்பு
By Priyarasa
2012-11-21

அப்பாவிக் குடும்பமொன்று போலிச் சாமியாரின் விசித்திரமான ஏமாற்று வித்தையை நம்பி ஆறரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இழந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார்.

இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் கூறியுள்ளனர். அந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்குவதாக சாமியார் உறுதியளித்துள்ளதுடன் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருக்கு தோஷம் இருப்பதாகவும் அதனை நீக்குவதற்கு 20 ஆயிரம் ரூபா பணம் வேண்டும் எனக் கோரியுள்ளார்.

கஷ்டம் நீங்கினால் போதும் என நம்பிய குடும்பத்தினர் பரிகாரம் செய்வதற்கு சம்மதித்தனர்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு தனது சீடருடன் வந்த சாமியார் பூஜைகளை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டிலுள்ளவர்கள் தங்களது தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி செம்பில் வைக்குமாறு கூறியுள்ளார்.

குடும்பத்தினரும் சாமியாரின் சொற்படி தங்க நகைகளைக் கழற்றி செம்பில் வைத்துள்ளனர்.

பூஜை செய்த தண்ணீரை வீட்டுக்கு வெளியே குடும்பத்தினருடன் சென்று தெளித்து விட்டு வருமாறு சீடரைப் பணித்த சாமியார், அந்தச் சந்தர்ப்பத்தில் செம்பிலிருந்த நகைகளை எடுத்துவிட்டு அதற்குள் கற்களைப் போட்டு துணியால் மூடியிருக்கிறார்.

அதனை அறிந்திராத குடும்பத்தினரிடம்
“செம்பில் நகைகளைப் போட்டு மூடியிருக்கிறேன். பத்து நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் இங்கே வருவேன். அதுவரை செம்பை யாரும் திறந்து பார்க்க வேண்டாம்” எனக் கூறிச் சென்றுள்ளார்.

பத்து நாட்கள் கழித்தும் சாமியார் வராததைத் தொடர்ந்து வீட்டார் செம்பைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமது நகைகள் எதுவும் இல்லாததையும் போலிச் சாமியாரின் கபட நாடகத்துக்கு தாம் ஏமாந்துவிட்டதையும் உணர்ந்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சாமியார் பற்றி அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் கிடைத்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.   
நன்றி வீரகேசரி








 பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயம்: ஸர்மிளா செய்யித்
By General
2012-11-21
பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதேவேளை இவருடைய கருத்துக்கு எதிராக பலர் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனது முகப்புத்தகத்தில் கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியுமென தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னா என்பவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இது தொடர்பாக பி.பி.சி.தமிழோசை, ஸர்மிளாவை தொர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

(ஒலிப்பதிவு: நன்றி பி.பி.சி)
இது தொடர்பாக ஸர்மிளா தொடர்ந்து கூறுகையில், பாலியல் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் உல்லாசத்துறையை மேம்படுத்த முடியும்.

உல்லாசத் துறையை ஊக்குவிப்பதற்காக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதென்பது நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன். வேறு சில நாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. பொதுவான அடிப்படையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க அந்த மாகாண சபை கூறியுள்ள காரணங்கள் சரியானவை என நான் பார்க்கின்றேன்.

இலங்கை பாரம்பரிய கலாசார நாடு என்று கூறப்பட்டாலும் கூட இலங்கையில் பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது. சட்டபூர்வமாக்காமலேயே பாலியல் தொழில் அதிகரித்துள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் அது எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாது. அது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதுகின்றேன். இலங்கையில் சுனாமிக்குப்பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நடைபெறும் அபிவிருத்தியினால் வெளிநாட்டு பிரஜைகளின் வருகை இவைகளின் மூலமும் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது என்று ஸர்மிளா செய்யித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸர்மிளா தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிரப்புகளை தெரிவித்துள்ளனர்.
அவர் தனது முகப்புத்தகத்தில் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

'பிபிசி செய்திச் சேவையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள், கருத்துக்களுக்கான எனது கவலையினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் விபச்சாரம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இஸ்லாமிய பெண்ணாக எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசிக்கு தெரிவித்திருந்தேன். நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது என்ற அடிப்படையில் பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது என்றும், அது சட்டபூர்வமாக்கப்படும்போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறவும் பாதுகாப்புப் பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே என் கருத்து.
பாலியல் தொழில் அங்கீகரிப்பட்டது என்றோ. அதில் யாவரும் ஈடுபடலாம் என்றோ நான் பிரச்சாரம் செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தில் தடைசெய்யப்பட்ட விபசாரம், பாலியல் தொழில் என்ற அங்கீகாரத்துடன் ஏனைய சமூகத்தில் நடைபெறுவது அப்பட்டமான உண்மை. அந்த உண்மையையும் அதன் பாதிப்பையும், சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பையும் கவனத்திற் கொண்டுதான் எனது கருத்தை நான் வெளியிட்டிருந்தேன்.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலை, பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதை வன்மையாககக் கண்டிப்பதாகக்கூடக் குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களை காயப்படுத்துவதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
 நன்றி வீரகேசரி





 நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்

By Farhan
2012-11-21
நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,

இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது.

விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.

இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கருத்தைக் கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் வரிசையில் இவரும் ஆகிவிட துடிப்பதாகவே தெரிகிறது.

ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.        நன்றி வீரகேசரி











No comments: