மெல்பேணில் நடைபெற்ற இலக்கிய அரங்கும் நூல்வெளியீட்டு நிகழ்வும்


 .


 அவுஸ்திரேலியாவில், மெல்பேணில் கடந்த 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வும், கேசி தமிழ் மன்றத்தின் இலக்கிய விழாவும் ஒரே மேடையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றன.
விக்ரோறிய பல்லினக்கலாசார ஆணையாளர் திரு. சிதம்பரம் ஸ்ரீனிவாசன், அவர்கள், முனைவர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், எழுத்தாளர்கள் திருமதி இராணி தங்கராசா அவர்கள், திருமதி. கனகமணி அம்பலவாணபிள்ளை(மெல்பேண் மணி) அவர்கள்,
கலைவளன் திரு.சிசு நாகேந்திரன் அவர்கள் ஆகியோ மங்கல விளக்கில் சுடர் ஏற்றிவைத்தார்கள். இராக மாளிகா இசைப்பள்ளி மாணவிகள் பாடிய அவுஸ்திரேலியத் தமிழ் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 



நூல் வெளியீட்டு நிகழ்விலே, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் “சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்” என்ற நூலும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான,
“Sangam Period and Sankam Literature” என்ற நூலும் மற்றும் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” உரைச்சித்திர இறுவெட்டும் வெளியிடப்பட்டன. நூல் வெளியீட்டு நிகழ்வினை கேசி தமிழ் மன்றத்தின் தலைவர் திரு கு.சிவசுதன் தொகுத்தளிதார். கலாநிதி க. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த அறிஞர் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டு வைத்தார். அத்துடன் நூல்களினதும், இறுவெட்டினதும் சிறப்பு முதற் பிரதிகளைப் பிரமுகர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.



 தமிழோசை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான மாத்தளை சோமு அவர்கள் நூல் அறிமுக உரையினைச் செய்தார். இந்த நூல் சங்க இலக்கியத்தைப் படிக்காதவர்கள் மட்டுமன்றி, சாதாரணமாக வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்களும்கூட சங்க இலக்கியங்களைப் பற்றி நன்கு அறிந்தகொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது என்றும், இதனை ஆங்கிலத்திலும் வெளியிட்டிருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கொரு வரப்பிரசாதமாக அமைகிறது என்றும் கூறினார்.



 நூலாசிரியர் தமது பதிலுரையில், சங்க இலக்கியங்களைத் தமிழர்கள்  எல்லோரும் படிக்கவேண்டும் என்றும், அவற்றைப் படிப்பதிலே சிரமம் எதுவும் இல்லை என்றும் ஆர்வமிருந்தால் மட்டுமே போதுமானது என்றும் கூறினார். சங்க இலக்கியங்களைத் தானாகவே படித்ததாகவும், அவ்வாறு படித்துச் சுவைத்தபோது, அவற்றைப் படிக்கும் ஆர்வத்தைத் தமிழர்களுக்கு உண்டாக்கவேண்டும் என்று தான் எண்ணியதாகவும், அதற்காகவே இந்த நூலை எழுதியதாகவும், தமிழை வாசித்தறியும் வாய்ப்பற்ற புலம்பெயர்ந்து வாழும் எதிர்காலததமிழ் சந்ததிகளுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் தமிழ்மொழியின் பெருமையை அறிமுகப்படுத்துவதற்காகவே ஆங்கிலத்திலும் இந்தநூலை வெளியிட்டதாகவும் எடுத்துரைத்தார்.


 அவரது உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற சிற்றுண்டி இடைவேளைக்குப்பின்னர் இலக்கிய அரங்கு இடம்பெற்றது. கேசி தமிழ் மன்றத் தலைவர், திரு கு.சிவசுதன் தலைமையில் நடைபெற்ற இலக்கிய அரங்கில் தமிழ் மொழியின் தொன்மைபற்றிய கேள்வி எழுப்பலும் அதற்கான விடை பகர்தலுமான நிகழ்ச்சி முதலில் இடம்பெற்றது.
திரு மதியழகன்  அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மெல்பேணில் பல்கலைக்கழகப் புகுமுகத் தோர்வுக்குத் தமிழை ஒருபாடமாக எடுத்துப் பரீட்சை எழுதிய மாணவி செல்வி கீர்த்தனா ஜெயரூபன் தகுந்த ஆதாரங்களுடன் பதிலுரைத்தார்.


 “சேரன் தந்த செந்தமிழ்” என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்த முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தமிழ் மொழியினதும், தமிழ் இனத்தினதும் தொன்மைபற்றிய கேள்விக்குப் பல்வேறு விரிவான ஆதாரங்களுடன் பதிலுரை செய்து தமிழே மூத்த மொழி என்பதனை எடுத்துரைத்தார். தொடர்ந்து சங்க இலக்கியங்களில் உள்ள சொற்சுவை பொருட்சுவை பற்றியும், அவற்றைப்பற்றி அங்கு வெளியிடப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றியும் விதந்துரைத்தார். அவரது உரையினைத் தொடர்ந்து கலாநிதி மணிவண்ணன் தொகுத்து வழங்கிய தேன்தமிழ் இசை நிகழ்ச்சி இடப்பெற்றது. மாணவர்கள் கலந்துகொண்ட “:இசையும் காட்சியும்” நிகழ்ச்சி பண்டைத்தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காட்சிப்படுத்திப் பார்வையாளர்களைக் கவர்ந்தது. மாணவர்களான துவாரகன் சந்திரன், அபிதாரணி சந்திரன், நித்தியா பத்மசிறி, அக்~யன் மணிவண்ணன், கீர்திகன் சீவராஜா, கிருசிகன் சீவராஜா, ஆரபி மதியழகன், ஆகியோர் இசையோடு கலந்த காட்சிகளைத் திறமையாக வழங்கினார்கள். தொடர்ந்து கலாநிதி மணிவண்ணன், இசை ஆசிரியை திருமதி தபினா வேந்தன், திருமதி சுகர்ணா சிவசுதன் திருமதி. தாட்சாயணி மயூரன் ஆகியோர் முத்தமிழ்ச் சுவைததும்பும் பாடல்களைப் பாடிச் சபையோரைக் கவர்ந்தார்கள்.


 மெல்பேணில் உள்ள பிரபல கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், உட்பட மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முத்தமிழ்ச் சுவையைப் பருகிய இந்த நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
யாழ் எஸ். பாஸ்கர்.


















No comments: