சொல்ல மறந்த கதைகள் - 18 மனிதம் முருகபூபதி

   .
போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
வெளிநாடுகளில் சுகபோகத்துடன் வாழ்ந்த ஆயுதத்தரகர்களும் ஆயுத வியாபாரிகளும் இலங்கையில் கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் சவப்பெட்டிகள் உற்பத்திசெய்த ஜயரட்ண ஃபுளோரிஸ்ட் உட்பட பல சவப்பெட்டி முதலாளிகளும் மாத்திரம்தான்  கவலையடைந்த காலப்பகுதி. வியாபாரம் வீழ்ச்சிகண்டால் முதலாளிமாருக்கு நட்டம்தானே. அது எந்த வியாபாரமாகவும் இருந்தால் சரி.
அந்த சமாதான காலத்தில் கொழும்பிலிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது முஸ்லிம்காங்கிரஸ் அங்கத்தவர்கள் சிலருடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கச்சென்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இருபத்திநான்கு மணிநேரத்தில், அங்கு நீண்ட காலம் வாழ்ந்த முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய கசப்பான கறைபடிந்த நிகழ்வுகளை மறந்து, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச்சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிராமல் புரிந்துணர்வை வளர்ப்பதற்காக பகை மறந்த இயக்கமாக முஸ்லிம் தலைவர்களின்  அந்தப்பயணத்தை அவதானித்தோம்.

சம்பவம் -1
வன்னியில் பிரபாகரனுக்கும் ரவூப்ஹக்கீம் மற்றும் மசூர் மௌலானா உட்பட சிலருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்தன. வருபவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் அவர்கள் தொழுகை நடத்துவதற்கும் ஒழுங்குகளை செய்திருந்த பிரபாகரன், அவர்களுக்கு மதிய உணவில் ஹலால் இறைச்சி சமைத்துக்கொடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் சமயற்காரரை ஏற்பாடு செய்திருந்தார்.
பிரபாகரனின் இந்த நடவடிக்கைகள் அவரிடமிருந்த சில பண்புகளையும் வெளிக்காட்டியிருந்தது. முஸ்லிம் தலைவர்கள் அதனால் வியப்படைந்தனர். மதிய உணவின் பின்னர் பிரபாகரனும் ரவூப்ஹக்கீமும் சாவகாசமாக அமர்ந்து தத்தம் சுகநலன் உட்பட குடும்ப சமாச்சாரங்களையும் உரையாடினார்கள்.
ஒரு கட்டத்தில் ரவூப்ஹக்கீம், பிரபாகரனிடம், “ இந்த சமாதான காலம் பற்றி உங்கள் பிள்ளைகள் என்ன கருதுகிறார்கள்?” என்று கேட்டுள்ளார்.
உடனே பிரபாகரன் சிரித்துக்கொண்டு, “ எனது இளைய மகன் பாலச்சந்திரன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனிடம் இந்த சமாதான காலம் பற்றி சொன்னபோது. அவனிடம் நீண்ட புன்னகை இருந்தது. அவனது மகிழ்ச்சிக்கு காரணம் கேட்டேன்.”
“ அப்பா போர் இல்லாத காலத்தில் நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள். அதுவே எனது மகிழ்ச்சியான தருணங்கள்.” என்றான்.
 இதனை பிரபாகரன், ரவூப்ஹக்கீமிடம் சொல்லும்போது அவரது முகம் எப்படி இருந்தது என்பது பற்றியோ அவரது உள்ளத்துணர்வுகள் எவ்வாறு அந்தக்குழந்தையின் உணர்வுகளை ஏற்றுக்கொண்டன என்பது பற்றியோ எனக்குத்தெரியாது.
 ஆனால், ஆயுதம் ஏந்திய அந்தத்தந்தையின் உள்ளத்துள் உறைந்திருந்த மனிதத்தை புரிந்துகொள்ள முடியும்.
 இதனைப் படிக்கும் எவருக்கும் சமாதான காலம் எத்தகையது என்பதை சொல்வதற்காகவே இதனை ஒரு பதச்சோறாக இங்கு பதிவுசெய்கின்றேன்.
 இனி இந்த சொல்ல மறந்த கதையின் தலைப்பிற்கு வருகின்றேன்.
இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் மறக்க முடியாதவை. குறிப்பிட்ட சம்பவங்களே பத்தி எழுத்துக்களாக, சிறுகதைகளாக, நாவல்களாக ஏன் திரைப்படங்களாகவும் வெளியாகியிருக்கின்றன. போர்கால இலக்கியம் பேசுபொருளானது. விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்பட்டது. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டபின்னரும் போர்க்காலச்சிறப்பிதழ்கள் போர்காலக்கதைகள் வெளியாவதிலிருந்து பல உண்மைகளை புரிந்துகொள்ள முடிகிறது.
“உண்பதற்கும் கொட்டாவி விடுவதற்கும் வாய்திறந்த காலம்தான் அந்த கொடிய போர்க்காலம்” என்றார்கள் ஒரு காலகட்டத்தில். போர்முடிந்தபின்னர் களத்தில் நின்றவர்கள், போர்க்காலத்தில் மௌனமாக அமைதிகாத்தவர்கள் எல்லோருமே தற்போது சுதந்திரமாக பேசும், எழுதும் காலத்தில் வாழ்கின்றோம்.
அவர்களின் உள்ளத்தின் மூலைகளில் மறைந்து வாழ்ந்தகதைகள் வெளியாகும் காலத்தில் இதழ் ஊடகங்களும் இணையத்தளங்களும் அவற்றுக்கு களம் தருகின்றன.

சம்பவம் -2
யாழ்ப்பாணத்தில் குப்பிளான் பிரதேசத்தில் ஒரு வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. உறவினர்களினால் அந்த வீடு நிரம்பிவிடுகிறது. வெளியே பந்தல் அமைத்து திருமணத்திற்காக பலகார பட்சணங்கள் தயாரிக்கப்படுகிறது. அதிரசம், முறுக்கு, பயித்தம் உருண்டை, சீனிப்பலகாரம் என்பனவற்றை சில பெண்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தகாலப்பகுதியில் தமிழ்- சிங்கள சித்திரை புதுவருடப்பிறப்பு வரவிருக்கிறது.
பலாலி முகாமிலிருந்து படையினர் குப்பிளான், குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கட்டுவன் பிரதேசங்களில் தேடுதல் வேட்டைக்காக வந்துவிடுகின்றனர். சில படையினர் குறிப்பிட்ட திருமண வீட்டுப்பக்கமும் வந்து விடுகின்றனர். பெண்கள் அதிரசம் செய்வதை கண்சிமிட்டாமல் பார்க்கின்றனர்.
அதிரசம் அரிசிமாவில் செய்யப்படும் தமிழ்ப்பட்சணம். தட்டையாக இருக்கும். பௌத்த சிங்கள மக்கள் அதற்கு ஒரு தென்னோiலைக்குச்சியை பயன்படுத்தி கொண்டை பணியாரம் (கொண்டை கெவுங்) தயாரிப்பார்கள். சிறிய வித்தியாசம்தான்.
அன்று அந்த ஊரில் எங்கள் தமிழ்ப்பெண்கள் தயாரிக்கும் அதிரசத்தை வாங்கி உண்டு ரசித்த படையினர் அத்துடன் அகன்றிருந்தால் சரி. அவர்களுக்கு தங்களது பிரசித்தமான கொண்டைப்பணியாரம் நினைவுக்கு வந்துவிட்டதுதான் பிரச்சினையாகிவிட்டது.
 சித்திரைப்புதுவருடத்தில் தத்தம் ஊருக்குச்சென்று தமது குடும்பத்தினருடன் புதுவருடம் கொண்டாட மேலிடத்தில் அனுமதி கேட்டும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சீருடையையும் துப்பாக்கியையும் சுமந்துகொண்டு அலையும் அவலம் அவர்களுக்கு, தமது பாலாலி முகாமிலேயே புதுவருடப்பண்டிகையை கொண்டாடினால் என்ன என்ற யோசனை பிறந்துவிட்டது.
மூன்று பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். திருமணவீடு அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு நாட்களில் திருமணம். வீட்டுக்காரர்கள் விதானையிடம் ஓடினார்கள். அவர் அவர்களை அழைத்துக்கொண்டு உதவி அரசாங்க அதிபரிடம் ஓடினார்.  அவர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு அரசாங்க அதிபரிடம் சென்றார். படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள் எந்த முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது தெரியாது. அப்பொழுது அங்கே பலாலி, நாவற்குழி, கோட்டை ஆகிய இடங்களில் இராணுவமுகாம்கள் இருந்தன.
அரசாங்க அதிபர் பஞ்சலிங்கம், கோட்டை முகாம் பொறுப்பதிகாரியிடம் நிலைமைகளை விளக்கினார். பொறுப்பதிகாரி துரிதமாக அனைத்து முகாம்களுடனும் தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட பெண்கள் பலாலி முகாமில் பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது.
அங்கிருந்த பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டபோது, “ சித்திரைப்புதுவருடத்திற்கு ஊருக்குச்செல்ல அனுமதி கிடைக்காத காரணத்தினால் சில படையினர், முகாமிலேயே அதனைக்கொண்டாட முடிவுசெய்துவிட்டதாகவும். ஆனால் பலகார பட்சணங்களை செய்வதற்கு அங்கு பெண்கள் இல்லாதமையினால் சிலரை அழத்துச்சென்றுள்ளார்கள். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். உங்களது திருமண நிகழ்வுக்கு முன்பே அவர்கள் வீடுதிரும்பிவிடுவார்கள்.” என்ற ஆறுதல் வார்த்தைகள் தரப்பட்டது.
அந்தப்பெண்களும் முகாமில் பலகாரம் செய்துகொடுத்ததற்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டே திருமண வீட்டுக்குத்திரும்பினார்கள். அவர்கள் அங்கு கொண்டை பணியாரம் தயாரிக்கும் பயிற்சியும் பெற்றார்கள். துப்பாக்கியுடன் நிற்கும் படையினர் அன்று தென்னோலைக்குச்சியுடன் அவர்கள் அருகில் நின்றிருக்கிறார்கள்.
கிட்டு, யாழ்.மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது கோட்டையிலிருந்து வெளியேற முடியாத படையினருக்கு மாம்பழம் பெட்டிகளில் கொடுத்தனுப்பிய சம்பவத்துடன் ஒப்பிடும்போது இந்தப்பணியார பலகாரம் விவகாரம் சாதாரணமானதுதான். 

சம்பவம் - 3
அரியாலையில் சில உயர்தர வகுப்பு தமிழ் மாணவர்கள் பரீட்சை முடிந்தபின்பு, மாம்பழம் சந்தியில் தெருவோரம் நின்றுகொண்டு, ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தனர். தெருவில் சைக்கிள்களில் செல்லும் யுவதிகள் அவர்களின் கனவுக்கன்னிகள். இந்தப்பருவத்தை கடந்து வந்தவர்கள் இப்போது தந்தையராகவும் தாத்தாக்களாகவும் மாறியிருக்கலாம். எனினும் அந்தப்பருவம் மறக்கமுடியாதது. பசுமை நிறைந்த, பாடிப்பறந்த பருவகாலங்கள்.
ஒருநாள் அந்த இளைஞர்கள் அவ்வாறு தெருவோரம் நின்று ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தபோது நாவற்குழி முகாமிலிருந்து வெளியே ரோந்து நடவடிக்கைக்கு வந்த படையினரிடம் சிக்கிவிட்டனர். அந்த இளைஞர்களின் சைக்கிள்கள் வீதியோரத்தில் அநாதரவாகக்கிடக்க, அவர்கள் ட்ரக்கில் ஏற்றப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர். ஒரு இராணுவ அதிகாரி, முகாமில் அவர்களை விசாரிக்கிறார்.
பரீட்சை முடிந்துவிட்டதனால் தாங்கள் தெருவோரம் நின்று பொழுதுபோக்கியதாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு இளைஞர் அழத்தொடங்கிவிட்டார். தாங்கள் அனைவரும் மாணவர்கள். எந்த இயக்கங்களுடனும் தொடர்பில்லாதவர்கள் என்று மன்றாடியிருக்கிறார்.
 “படிப்பு முடிந்துவிட்டால் வீட்டில் இருங்கள். அல்லது நூலகத்தில் இருங்கள். இப்படி வெளியே தெருவில் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தால், சும்மா இருக்கும் உங்களை இயக்கங்கள் அழைத்துச்சென்று இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பும். பிறகு நீங்கள் வந்து எங்களுடன் சண்டையிடுவீர்கள். எல்லோருக்கும் அழிவுதான். அதனால்தான் எச்சரிக்கிறோம்.” என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகும் அந்த இளைஞர் அழுதுகொண்டே நின்றார்.
“ ஏன்... அழுகிறாய்? உன்னை அடித்தோமா? சித்திரவதை செய்தோமா? ஏன் அழுகிறாய். எச்சரிப்பதற்காகத்தான் அழைத்து வந்தோம்” எனச்சொல்கிறார் அதிகாரி.
உடனே அந்த இளைஞர், “ இல்லை... வீட்டில் என்னைக்காணாமல் அம்மா அழுதுகொண்டிருப்பார்கள். அதனால் எங்களை விட்டுவிடுங்கள்” என்றார்.
“ அப்படியா... இங்கே உன்னை காணாமல் உனது அம்மா அழுகிறார்கள். ஆனால் குருநாகலையில் எனது அம்மா எனது பொடி எப்போது வரப்போகிறது என நினைத்து நினைத்து தினம்தினம் அழுதுகொண்டிருக்கிறாள்.” என்றார் அந்த பாதுகாப்புப்படை அதிகாரி.

சம்பவம் - 4
மானிப்பாயில் ஒரு ஓய்வுபெற்ற தபால் அதிபர். தனது ஓய்வூதியத்தை பெறுவதற்கு மாதாந்தம் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் அமைந்திருந்த வங்கிக்கு வருகிறார். யாழ்.மாவட்டத்தில் இயக்கங்களினால், வீடுகள், கோயில்கள், விற்பனை நிலையங்கள், கல்லூரிகள், வங்கிகள், நகை அடவுபிடிக்கும் நிலையங்கள் என்பன ஆயுத முனையில் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததைத்தொடர்ந்து வங்கிகளை கோட்டைக்குள் இயங்கவைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தது.
இதனால் சாதாரண பொதுமக்கள்தான் பெரிதும் பாதிப்புற்றனர். அரச ஊழியரின் மாதச்சம்பளப்பணம்,  ஓய்வூதியப்பணம் முதலானவற்றையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு படையினருக்கு வந்தது.
குறிப்பிட்ட ஓய்வூதியம் பெறும் தபால் அதிபர் மாதந்தோறும் கோட்டைக்கு வந்து வங்கியில் கியூவில் நின்று பெற்றுச்செல்வார். அவரை ஒரு பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்து தொலைவிலிருந்தே கவனித்துவந்துள்ளார். படித்த மனிதர் போன்று தோற்றம்கொண்ட அந்த முன்னாள் அரச ஊழியரை, ஒரு நாள் நேருக்கு நேர் சந்தித்து பேசுவதற்கு அந்த அதிகாரி விரும்பியிருக்கிறார்.
வங்கியின் முன்பாக காவலிருக்கும் ஒரு இராணுவசிப்பாயை அழைத்து, குறிப்பிட்ட முதியவரை தனது அலுவலக அறைக்கு அழைத்துவருமாறு பணித்துள்ளார்.
“ ஏன்... சேர்?”
“ அனுப்பிவை” என்று அதிகார தொனியில் சொல்கிறார் அதிகாரி.
அந்தச்சிப்பாயும் அந்த முதிய ஓய்வுபெற்ற தபால் அதிபரை, அவர் ஓய்வூதியம் பெற்றதும் அழைத்துவந்து அதிகாரியின் முன்னால் நிறுத்திவிட்டு, தனது கடமைக்குத்திரும்பிவிட்டார்.
இப்போது அந்த முதியவர் மிகுந்த பயத்துடன் அதிகாரியின் முன்னால் அமர்ந்திருக்கிறார். அதிகாரி ஆங்கிலத்தில் உரையாடலைத்தொடருகிறார்.
முதியவரின் பெயர், குடும்ப விபரங்களை ஒரு நண்பர்போன்று விசாரித்துவிட்டு தேநீரும் தருவித்து உபசரிக்கிறார். அதனால் அந்த முதியவரின் பயம், வெய்யிலைக்கண்ட பனிபோன்று மறைந்துவிடுகிறது.
அவரது பயத்தைப்போக்கிய அந்த அதிகாரி, அடுத்து கேட்ட கேள்வியினால் அந்த முதியவர் சற்று அதிர்ச்சி அடைகிறார்,
“ ஐயா... உங்கள் பிரதேசத்தில் இயக்கத்தின் நடமாட்டம் எப்படி? அவர்களின் முகாம்கள் ஏதும் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறதா? இருந்தால் அடுத்த முறை இங்கு ஓய்வூதியம் பெறவரும்போது என்னிடம் தனியாக வந்துசொல்லிவிடுங்கள்” என்றார்.
“ஐயோ.... ஐயா.... என்னை பிள்ளைகளும்;, மனைவியும் வெளியே கோயிலுக்குச்செல்வதற்கும் இப்படி ஓய்வூதியம் பெறுவதற்கும் மாத்திரம்தான் அனுப்புகிறார்கள். மற்றும்படி நான் வெளிநடமாட்டங்களில் ஈடுபடுவதில்லை.” என்கிறார் அந்த முதியவர்.
“ சரி.... எதற்கும் பயப்படவேண்டாம். உங்களுக்கு நாம் பாதுகாப்பு தருவோம். எங்களுக்கு அந்தப்பிரதேசத்தில் இயக்கத்தின் நடமாட்டம்பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் மாத்திரம் சொன்னால் போதும்” எனச்சொல்லிய அந்த அதிகாரி முதியவரை அனுப்பிவிடுகிறார்.
 அதுவரையில் அந்த அலுவலக அறையிலேயே கண்ணாக இருந்த, முதியவரை அதிகாரியிடம் அழைத்துவந்த குறிப்பிட்ட சிப்பாய், இப்போது விரைந்துவந்து, அந்த முதியவரிடம் இப்படி கேட்கிறார்.
“ ஐயா.... அந்தப்பெரிய அதிகாரி உங்களை எதற்கு அழைத்தார்? என்ன விசாரித்தார்? சொல்லுங்கள்.”
முதியவர் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு சன்னமான குரலில், “ எங்கள் பிரதேசத்தில் இயக்கத்தின் முகாம் நடமாட்டம் பற்றி விசாரித்தார்.” என்றார்.
உடனே அந்த சிப்பாய்,” அப்படியா,.. நீங்களும் சொன்னீர்களா?” எனக்கேட்கிறார்.
“ ஐயோ இல்லை. இல்லவே இல்லை.” என்கிறார் முதியவர்.
“ நல்லது. மிக்க நன்றி. தெரிந்தாலும் இங்கு வந்து சொல்லிவிடவேண்டாம். பிறகு அவர் வரமாட்டார். நாங்கள்தான் போய் அடிபட்டு சாவோம். உங்கள் உதவிக்கு நன்றி. போய்வாருங்கள்.” என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் அந்த சிப்பாய்.
ஆச்சரியமான முரண்நகையுடன் அந்த முதியவர் வீடுதிரும்புகிறார்.
 மேலே குறிப்பிட்ட நான்கு சம்பவங்களும் சொல்லும் செய்தி என்ன? ஒரு சொல்லில் பதில் இருக்கிறது.
மனிதம்.
              

No comments: