உலகச் செய்திகள்

.
தென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா

லெபனானிய சிரிய ௭திர்ப்பு புலனாய்வு தலைவர் கார் குண்டுத் தாக்குதலில் பலி: பிராந்தியத்தில் பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட விவாதத்தில் ஒபாமா வெற்றி

பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறத்தவறியமைக்கு சிறை!

அமெரிக்காவில் 'சான்டி' : 6 கோடி பேர் பாதிப்பு, 60 பேர் பலி

கனடாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம்


தென் கொரியா மீது எதிர்வரும் வாரம் இராணுவ தாக்குதல் நடத்தப்படும்: வட கொரியா


தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது.

மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ முகவர் நிலையத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.வட கொரிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு பஜு நகருக்கு அண்மையிலுள்ள எல்லைப் பிராந்தியத்தில் தமது துண்டுப் பிரசரங்களை பலூன்களிலிருந்து விழ விடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கொரிய கடல் எல்லைக்கு அருகிலுள்ள இரு வருடங்களக்கு முன் வட கொரியாவால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட தீவொன்றுக்கு தென் கொரிய ஜனாதிபதி லீ மயுங் பாக் திடீர் விஜயம் மேற்கொண்டமைக்கு மறுநாள் வட கொரியாவால் இந்த தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி


 லெபனானிய சிரிய ௭திர்ப்பு புலனாய்வு தலைவர் கார் குண்டுத் தாக்குதலில் பலி: பிராந்தியத்தில் பதற்றம்
By General
2012-10-22
லெபனானிய உயர் மட்ட புலனாய்வு தலைவர் விஸ்ஸாம் அல் ஹஸன் கார் குண்டுத் தாக்குதலில் பலியானமை பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு சிரியாவே காரணம் ௭ன குற்றஞ்சாட்டப்படுகிறது. லெபனானிய உள்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் ௭திர்ப்பாளரான ஜெனரல் விஸ்ஸாம் அல்–ஹஸன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் லெபனானிய ௭திர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான சாத் ஹரிரி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஸ்ஸாம் அல்–ஹஸனின் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். மேற்படி கார்க் குண்டுத் தாக்குதலில் விஸாம் அல்–ஹஸன் (47 வயது) உட்பட 3 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் லெபனானின் பல பகுதிகளில் அரசாங்க ௭திர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விஸ்ஸாம் அல்–ஹஸான் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரிக்கு நெருக்கமான ஒருவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
சாத் ஹரிரியின் தந்தையான முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரியின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் விஸ்ஸாம் அல்–ஹஸனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


2005 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் ரபீக் ஹரிரி கொல்லப்பட்டுள்ளார். ரபீக் ஹரிரியின் படுகொலையுடன் சிரியாவுக்கு தொடர்பு இருப்பதாக மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விஸாம் அல்–ஹஸன் தலைமையிலான குழுவினர் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் சிரியாவின் ஏற்பாதரவுடன் லெபனானில் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டில் அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் விஸ்ஸாம் அல்–ஹஸன் முக்கிய வகிபாகம் வகித்திருந்தார்.
இந்நிலையில் ரபீக் ஹரிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ௭திராக மேற்படி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் ௭ன பிரதமர் நஜிப் மிகதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
விஸ்ஸாம் அல்–ஹஸனின் மரணத்தையொட்டி லெபனானில் சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த படுகொலை விவகாரம் குறித்து மிகதி சனிக்கிழமை தனது இராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்த போதும் தேசிய அக்கறையைக் கருத்திற்கொண்டு பதவியில் தொடர்ந்து நீடித்திருக்க ஜனாதிபதி மைக்கல் சுலைமான் அவரை கோரியுள்ளார். இந்நிலையில் ௭திர்க்கட்சி ஆதரவாளர்கள் பெய்ரூட் நகரில் ௭திர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் வீதிகளில் டயர்களை கொளுத்தியதால் நகரமெங்கும் புகைமூட்டமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையொத்த ஆர்ப்பாட்டங்கள் சிடொ, திரிபோலி, பெகா பள்ளத்தாக்கு ஆகிய பிராந்தியங்களிலும் இடம்பெற்றன.            நன்றி வீரகேசரி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட விவாதத்தில் ஒபாமா வெற்றி
By General
2012-10-23
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று நடைபெற்ற மூன்றாவது இறுதிக் கட்ட விவாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரொம்னியை விஞ்சும் வகையில் விவாதத்தில் ஈடுபட்டார்.


அடுத்தமாதம் 6 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே தேர்தலுக்கு எஞ்சியுள்ல நிலையில் இடம்பெற்ற இந்த விவாதத்தில் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.


அரபு நாடுகளிலான மக்கள் எழுச்சி, ஈரான், இஸ்ரேல் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்பான பிரச்சினைகள் என்பன சம்பந்தமாக இரு வேட்பாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

மிட்ரொம்னி வெளிநாட்டு கொள்கை தொடர்பில் மேலெழுந்த வாரியான வரைபடமொன்றையே கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்த நிலையில் மத்திய கிழக்கில் பதற்ற நிலை ஏற்படுவதற்கான சூழ்நிலையை பராக் ஒபாமா அனுமதித்துள்ளதாக மிட் ரொம்னி தெரிவித்தார்.

இந்த விவாதத்தையொட்டி உடனடியாக நடத்தப்பட்ட இரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் ஒபாமா முன்னிலையில் உள்ளார்.

எனினும் பராக் ஒபாமா, மேற்படி விவாதத்தில் மிட் ரொம்னியை வெற்றி கொண்டுள்ள போதும் அவரை எதிர்வரும் தேர்தலில் வீழ்ச்சியடையச் செய்வதற்கான தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என அரசியல் அவதானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

தேர்தலுக்கு இரு வாரங்களேயுள்ள நிலையில் பராக் ஒபாமாவுக்கும் மிட் ரொம்னிக்குமிடையிலான போட்டி கடுமையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி


பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறத்தவறியமைக்கு சிறை!
By Kavinthan Shanmugarajah
2012-10-23 13:35:02

இத்தாலியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு  உலுக்கிய பூமியதிர்ச்சியை எதிர்வுகூறத்தவறிய விஞ்ஞானி உட்பட 7பேருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இவர்களில் 6 பேர் விஞ்ஞானிகள் என்பதுடன் ஒருவர் ஓய்வு பெற்ற அரச அதிகாரியாவார். அனைவருக்கும் 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் லகியூலா நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு  மார்ச் 31 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அந்நாட்டின்  வானிலை எதிர்வுகூறல் மற்றும் பாரிய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான  தேசிய ஆணைக்குழுவைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பூமி அதிர்ச்சியை எதிர்வுகூறத் தவறியமை, பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தமை, அனர்த்தம் தொடர்பில் உடனடியாக அறிவிப்பினை மேற்கொள்ளாமை, கடமையை சரிவரச் செய்யாமல் கவனயீனமாக இருந்தமை என பல குற்றச்சாட்டுக்கள்ன் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டது.
மேலும் 2009 ஆம் ஆண்டு  மார்ச் 31 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய பூமி அதிர்ச்சிக்கு முன்னதாக ஏற்பட்ட பல சிறிய நடுக்கங்களை குறித்த விஞ்ஞானிகள் குறைத்து மதிப்பிட்டதாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வழக்கானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.  
அமெரிக்க  புவிப்பெளதிகவியல் ஒன்றியம் உட்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன் பூமி அதிர்ச்சியை எவராலும் எதிர்வுகூற முடியாதெனவும் , இதுவரை எவரும் அவ்வாறு கூறியதில்லை எனவும் தெரிவித்திருந்தது.
உலகம் பூராகவும் உள்ள பல நில நடுக்க ஆய்வாளர்கள் இவ்வழக்கை உன்னிப்பாக அவதானித்து வந்ததுடன் இத்தாலிய விஞ்ஞானிகளுக்கு தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர்.
இத்தீர்ப்புக்கு எதிராக விஞ்ஞானிகள் மேன்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இவ்வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோர்.
Franco Barberi, head of Serious Risks Commission
Enzo Boschi, former president of the National Institute of Geophysics
Giulio Selvaggi, director of National Earthquake Centre
Gian Michele Calvi, director of European Centre for Earthquake Engineering
Claudio Eva, physicist
Mauro Dolce, director of the the Civil Protection Agency's earthquake risk office
Bernardo De Bernardinis, former vice-president of Civil Protection Agency's technical department
நன்றி வீரகேசரி
அமெரிக்காவில் 'சான்டி' : 6 கோடி பேர் பாதிப்பு, 60 பேர் பலி
By V.Priyatharshan
2012-10-28
அமெரிக்காவில் நிலைகொண்டுள்ள 'சான்டி' சூறாவளி மணிக்கு 183 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கியுள்ளதாகவும் இதுவரையில் 60 இற்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 6 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்காவை தாக்கிய இச்சூறாவளி கரீபியன்; கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியிலுள்ள ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகளையும் தாக்கியுள்ளது.

இச்சூறாவளியால் அமெரிக்காவில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களின் மேல் மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்துகளும் பதிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் போட்டியிடவுள்ள பிரதான இரு வேட்பளர்களும் தேர்தலுக்கான முன்னாயத்தங்களை மாற்றியமைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா, மேரிலாண்ட் மாகாணங்களை தாக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வேறு சில மாநிலங்களையும் தாக்கக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இம்மாகாணங்களில் முன்னேற்பாடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சான்டி சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்வதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிப்பதுடன் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டு அவசரகால நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.    நன்றி வீரகேசரி

 கனடாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம்
 
By V.Priyatharshan
2012-10-28
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியிலுள்ள குயின் சார்லோட்டி தீவில் இன்று அதிகாலை 7.7 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் ஓடியுள்ளனர். இந்நிலையில் அந்த தீவுப் பகுதியில் சில நிமிடங்கள் கழித்து 5.8 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் குயின் சார்லோட்டி தீவில் ஏற்பட்ட பாதிப்புகளின் விபரம் உடனடியாக தெரியவரவில்லை.

இதற்கிடையே 7.7 ரிச்டரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக கோலரடோவில் உள்ள அமெரிக்க புவியியல் துறை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதுடன் தெற்கு அலஸ்கா, வடக்கு கலிபோர்னியா, ஏரேகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலுள்ள கடலோரங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி

No comments: