மௌனம் கலைகிறது - 13


அவர்களை பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக் கொண்டிருந்தேன் அவ்வளவுதான்

.
அவர்களைப் பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக்கொண்டிருந்தேன்!அவ்வளவுதான்



எனது மெளனம் கலைகிறது தொடர் சிலகாலம் வெளிவராமல் இருந்தது குறித்துப் பல வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அக்கறையுடன் கேட்டிருந்தார்கள். குருபரன் மீண்டும் மௌனமாகி விட்டாரோ எனப்பலரும் எண்ணத் தலைப்பட்டிருந்தனர். இடையறாத வேலைப்பழுவும் மனிதர்களுக்கே உரிய இடையிட்டு வரும் மனச் சோர்வுகளும் நினைவுகளையும் உணர்வுகளையும் கோர்த்துக் கட்டுரையாக்குவதற்குரிய உழைப்பை செய்ய முடியாமலாக்கி விட்டன. இப்பொழுது சற்று இளைப்பாறிய பின் மீண்டும் கலைகிறது என் மௌனம்.



கடந்த 12 ஆவது தொடரில் ஒரு ஊடகவியலாளனாக ஊடக தர்மங்களைப்பேணுவதிலும் மாற்றுக்கருத்துக்களுக்கு களம் அளிப்பதிலும் கவனமுடனிருந்தேன் என்பதைக் கூறியிருந்தேன். அதே தொடரில் வடமராச்சியில் படையினரால் தீயிடப்பட்ட நலன்புரி முகாம் ஒன்று குறித்தும் அதனைச் செய்தியாக வெளிட்டதனால் நாம் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். அந்தச்செய்தியிடலைப் பிரதம செய்தி ஆசிரியன் என்ற வகையில் கையாண்ட விதம் குறித்து எமது நிறுவனத்தலைவர் பாராட்டியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். குறித்த எம்மால் வெளியிடப்பட்ட அந்தச் செய்தியின் பிரதியையும் அச்செய்தியினால் பாதுகாப்பு அமைச்சுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது எமது செய்தி சரியானது என்பதை நிரூபிக்கும் விதத்தில் நான் நிர்வாகத்திற்கு கொடுத்த ஆதாரங்களையும் இங்கே தருகிறேன்.



இது மட்டுமன்றி எனது தலைமையில் செயற்பட்ட சூரியன் செய்திப் பிரிவு எவ்வாறு ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தது என்பதற்கு இன்மொரு உதாரணத்தையும் தரமுடியும்.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகக்களமிறங்கிய போது இலங்கையின் அனைத்து முக்கிய ஊடகங்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட றணில் விக்கிரமசிங்கவுக்கே அதிகளவு பிரச்சார ஒலி ஒளிபரப்பு நேரங்களை ஒதுக்கி இருந்தன. ஆனால் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அன்றைய காலப் பகுதியில் மெல்லிதான ஐக்கியதேசியக் கட்சிசார்புத்தன்மையைக் கொண்டிருந்த போதும் அதன் சூரியன் எவ் எம் வானொலி ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் றணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய அதே அளவு நேரத்தை வழங்கியிருந்தது.







குறித்த தேர்தல் முடிந்திருந்த காலத்தில் ஒருநாள் எமது நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் செயலாளர் எனக்கு ஒரு டெய்லி மிரர் பத்திரிகைச் செய்தி ஒன்றை அனுப்பி அதில் குறிப்பு ஒன்றையும் அனுப்பி இருந்தார். அந்த செய்தியை பெற்றவுடன் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி. அந்த செய்தி பவ்ரல் அமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் அறிக்கையிட்ட செய்திகள் தொடர்பானதாக இருந்தது. செயலாளர் குறிப்பிட்டது போன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அதன்போது முகாமைத்துவப் பணிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியதாக சொன்னார். அவரைச் சந்தித்த போது அந்தச் செய்தியை வாசித்துக்காட்டி பாராட்டுக்குரிய முறையில் தொழிற்பட்டிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டு என்னை வாழ்த்தினார்.

அவர் என்னைப்பாராட்டுவதற்கு காரணமான செய்தியில் தேர்தல் காலங்களில் பவ்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றின் படிக்கு நடந்து முடிந்திருந்த ஜனாதிபதி தேர்தலில் எமது சூரியன் எவ் எம் வானொலியைத் தவிர ஏனைய அனைத்து ஆங்கில சிங்கள இலத்திரணியல் ஊடகங்களும் றணில் விக்கிரம சிங்கவுக்கே பிரச்சாரத்திற்கு அதிகளவு நேரத்தை வழங்கியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதே ராஜபக்ஸ அரசின் சகோதரரின் வழிகாட்டலில் இயங்கிய புலனாய்வுப் பிரிவினர் தான் என்னைக் கடத்தி கொலை செய்ய முயன்றனர்.



ஊடக தர்மம் பற்றிய நுண்ணுணர்வை நாங்கள் (அனேகமான பத்திரிகையாளர்கள்) கொண்டிருக்கிற போதும் ஆட்சியாளர்கள் சனநாயகம் பற்றிய குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு தாரை தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் அல்லது ஊடகவியலாளர்கள் மக்கள் நலன்கருதி தங்களை விமர்சித்தார்கள் என்றால் அவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க அல்லது கடத்திகொலை செய்ய நினைக்கிறார்கள்.





எமது சூரியன் செய்திப் பிரிவுபற்றியும் எமது அன்றைய நிலைப்பாடு குறித்தும் நான் இங்கே ஏன் அழுத்திக் கூறினேன் என்றால் நான் கடத்தப்பட்ட போது அரசாங்க தரப்பில் இருந்த பலரும் குறிப்பாக அரசாங்கத்தை அன்று ஆதரித்துக்கொண்டிருந்த தமிழ்த் தரப்புகள் பலவும் எமது வானொலியையும் என்னையும் புலிகளிற்கு சார்பானவர்களாகச் சித்தரித்து அதனால் தான் நான் கடத்தப்பட்டேன் என நிறுவ முற்பட்டிருந்தனர். இந்த நிறுவலைச் செய்யக்கூடிய சில தோற்றப்பாடுகளும் அக்காலத்தில் இருந்தனவென்பதைப் பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன்.

அத்தோற்றப்பாடுகளை பற்றியும் இங்கு பார்த்து விடுவோம்.

அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான அனைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் செய்தி சேகரிப்பாளராக நான் சென்று வந்தேன் என்பதை இத்தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் . சமாதான காலப் பகுதியில் வன்னியில் இடம்பெற்ற பல ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கும் நான் சென்று வந்திருக்கிறேன். அப்போது புலிகளின் உயர் மட்ட தலைவர்களுக்கும் எனக்கும் இடையில் ஊடகவியலாளர் என்ற வகையில் நல்ல உறவு இருந்திருக்கிறது.

புலிகளின் புலனாய்வு மட்டத்தில் இருந்த சில முக்கியஸ்த்தர்களில் தொடங்கி அரசியல் மட்டத்தில் இருந்த பலர் வரையும் வன்னிக்கு சென்ற பல சந்தர்ப்பங்களில் என்னுடன் வந்து உரையாடி இருக்கிறார்கள். அவ்வாறான உரையாடல்களின் போது அவர்களின் நோக்கம் என்னவாக இருந்த போதும் ஊடகவியலாளன் என்ற எல்லையைத் தாண்டி அல்லது ஊடக செயற்பாடுகளுக்கு அப்பால் எனது செயற்பாடுகள் அமைய மாட்டாது என்பதனை அவர்களுக்கு முற்று முழுதாகத் தெளிவுபடுத்தி இருந்தேன்.

புலிகளின் குரல் முக்கியஸ்த்தர்களாக இருந்த தவபாலன், யவான் என்ற தமிழன்பன் ஆகியோர் ஊடகத்தில் வெளிவரும் செய்திகள் குறித்து என்னுடன் பலமுறை பேசியிருக்கிறார்கள். புலிகளின் மாவட்ட தளபதிகளாக இருந்தவர்களுடனும் அரசியற் பொறுப்பாளர்களாக இருந்தவர்களுடனும் பலமுறை நாளாந்தச் செய்திகள் தொடர்பாகவும் விசேட செவ்விகள் பெறுவது தொடர்பாகவும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறேன். சமாதான காலத்தில் வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில்அப்போதைய ஊடகத் தொடர்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.

ஒரு தடவை முக்கிய ஊடகச் சந்திப்பிற்கு சென்ற போது அடுத்த நாளும் முக்கிய சந்திப்பு ஒன்று இருந்ததனால் கிளிநொச்சியில் தங்க வேண்டி ஏற்பட்டது. புலிகளின் ஊடகத்தொடர்பு மையமாக இருந்த மிகப்பெரிய அலுவலக அறை ஒன்றில் ஒருசில ஊடகவியலாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தயாமாஸ்ரர் செய்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அந்த அறைக்கதவைத் தட்டிக் காலையில் எங்களை எழுப்பிய போராளி ஒருவர் மிகவும் மரியாதையாக சேர் எனக் கூப்பிட்டுத் தேனீர் தந்தார். அந்தத் தேனீரைக் குடித்து விட்டு தயா மாஸ்ரரிடம் கூறினேன்: மாஸ்ரர் சற்று பின்னோக்கி 1986ஆம் ஆண்டின் பிற்பகுதியை நினைத்துப்பார்க்கிறேன். அப்பொழுது புலிப் போராளிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் ஒரு முகாம் ஒன்றில் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். கைகள் பின்னாற் கட்டப்பட்டு உள்ளாடை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்பொழுது “டேய் நாங்கள் வாறம் கதவுக்கு கிட்ட நிற்காதே!”எனக் கூறி கதைவைத் திறந்து ஒரு றப்பர் குவளையில் தேனீரை வைத்து “குடியடா தேனீரை” எனச் சொன்னது நினைவுக்கு வருகிறது எனக் கூறினேன். வழமை போலவே தனக்குரிய ஒரு சிரிப்புடன் “காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது குருபரன்” எனத் தயாமாஸ்ர்ர் சொன்னது ஞாபகம் வருகிறது.

உண்மைதான் காலம் ஒரே மாதிரிச் செல்லவில்லை.

சமாதான காலத்தில் தெற்கைச் சேர்ந்த பல ஊடகங்கள் வடக்கு கிழக்கிற்கு தமது சேவையை விஸ்தரிக்க முயற்சி செய்தன. சூரியனும் அதனை விஸ்தரிக்க முயன்றது. அப்போது வடக்கிற்கு சூரியனின் சேவையை விஸ்தரிக்க விரும்பினால் ஒரு தொகைப் பணத்தை தமக்கு செலுத்த வேண்டும் எனப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுச் சில நிறுவனங்கள் புலிகளுக்கு வரியை செலுத்தி இருந்தன.

இந்த நிலையில் எமது நிறுவனத்தின் நிர்வாகத்தினர் இதுபற்றி என்னுடன் உரையாடி மற்றைய நிறுவனங்களைப் போலல்லாமல் நாம் தமிழ்ப்பிரிவிற்கு அனைத்து சுதந்திரங்களையும் தந்திருக்கிறோம். இதனால் பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இவ்வாறு இருக்கையில் எமக்கு வரிவிதிப்பது என்றால் வடக்கிற்கு எமது சேவையை விஸ்தரிக்க நாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டார்கள்.

இந்த நிலையில் இந்த விடயத்தை நான் கையாள்வதாக எனது நிறுவனத்துக்குத் தெரிவித்து உடன் தயா மாஸ்ரருடன் பேசினேன். அவர் அப்போதைய அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் பேசி முடிவு சொல்வதாக தெரிவித்தார். எனினும் பல நீண்ட விவாதங்களின் பின் குறிப்பிட்ட தொகை செலுத்தாமல் வடக்கிற்கு சேவையை விஸ்த்தரிக்க முடியாது என கூறுகிறார்கள் என தயா மாஸ்ரர் தொலைபேசியில் சொன்னார்.


இந்த விடயம் அரசியல் துறைக்கு அப்பாற்பட்டது என்பதனை மாஸ்ரரின் கதையில் உணர்ந்து கொண்ட நான் வன்னி சென்ற போது என்னுடன் உரையாடிய புலனாய்வுத் துறை முக்கியஸ்த்தர் ஒருவருடன் சூரியன் சேவையை வடக்குக்கு விஸ்தரிப்பது பற்றி உரையாடினேன். சூரியன் எஃப் எம்மின் முழுச் செயற்பாடுகளையும் விபரித்து வடக்கிற்கான சேவை விஸ்த்தரிப்பிற்கு நீங்கள் பணம் கேட்டால் அது எமது தமிழ்ப் பிரிவின் செயற்பாட்டிற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவு படுத்தியிருந்தேன். இதுபற்றி உரிய இடத்தில் பேசி முடிவைச் சொல்வதாக கூறிய அவர் அன்று மாலையே கிளிநொச்சிக்கு வாருங்கள் வரிவிலக்குக் கடிதத்தை பெற்றுச் செல்லலாம் எனக் கூறினார். எமது நிறுவனம் தனியான வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்து கடிதத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னைக் கிளிநொச்சிக்கு அனுப்பியது. நான் புறப்பட்டு கொழும்பை தாண்டிப் புத்தளத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது தயா மாஸ்ரரிடம் இருந்து அழைப்பு வந்தது. நாம் கடிதத்தை தொலைநகலில் அனுப்பி விட்டோம். மூலப்பிரதியை வேண்டுமானால் கையில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்.

இங்கே இன்னும் ஒரு விடயத்தை சொல்லி ஆக வேண்டும். எந்த ஒரு நிறுவன அல்லது ஸ்தாபன அமைப்புகளுக்குள்ளும் அதன் அலகுகளுக்குள் இருக்கக்கூடிய போட்டிகள் குத்து வெட்டுக்கள் போலவே புலிகள் அமைப்பிற்குள்ளும் புலனாய்வுப் பிரிவு அரசியல் பிரிவு நிதிப்பிரிவு போன்ற பிரிவுகளிடையே போட்டியும் முரண்பாடுகளும் வலுவான நிலையில் இருந்தன. அதனை இந்தக் கடிதம் வாங்கும் விடயத்தில் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

விடவும் தராக்கி என்கிற அமரர் சிவராம் அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பும் அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதனை அவர்களது விசாரனைகளில் புரிந்து கொண்டேன். இலங்கை அரசாங்கத்தையும் அவர்களின் படைகளையும் புலனாய்வுப் பிரிவினரையும் பொறுத்த வரையில் தராக்கி என்ற சிவராம் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டவர் அவர்களின் அதி முக்கிய செயற்பாட்டாளர். சிவராம் ஆசிரியராக இருந்த தமிழ் நெற் சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு பலத்த தலையிடியை கொடுத்த ஊடகம். அதுவும் புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டிலேயே இயங்கியது என்ற மிக உறுதியான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்தமையினை அவர்களின் உரையாடல்கள் மூலம் என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

இந்த எண்ணப்பாடு புலிகளுடன் என்னை தொடர்புபடுத்த காரணமாக இருந்திருக்கலாம். ஊடகவியலாளன் என்ற வகையில் சிவராம் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு செய்திகள் தொடர்பாக உரையாடிச் சில விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வார். சிவராம் தமிழ்நெற் ஆசிரியர் என்பதும் சிவராமுடன் எனக்கு உறவு இருந்தது என்பதும் எமது நிறுவனத்தில் கடமையாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கும் தெரிந்தே இருந்தது.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு எதிராக அமைச்சர்கள் மங்களசமரவீர மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோர் கொடுத்த நெருக்குதல்கள் குறித்த செய்திகள் தமிழ் நெற்றில் வெளியாகியும் இருந்தன. அந்த செய்திகள் பலவற்றை என்னிடமே சிவராம் உறுதிப்படுத்திக் கொண்டார். இவையெல்லாவற்றையும் கணக்கிட்ட என்னுடன் பணியாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் சிலருக்கு தமிழ் நெற்றை கொழும்பில் இருந்து நானே இயக்குவதாகக் கடுமையான சந்தேகம் எழுந்திருந்தது. அவர்களது சந்தேகத்திற்கு வலுப்படுத்தக்கூடிய இன்னுமொரு சம்பவமும் நடந்தது.

3 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக நான் நோர்வே சென்ற போது 18 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்த எனது பாடசாலை கால நண்பனும் இற்றை வரையும் என் உற்ற நண்பனாக விளங்குகின்றவருமான சுரேஸ் எனக்கு ஒஸ்லோவில் வைத்து மிகத் தரமான மடிக்கண்ணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

என் போன்ற ஊடகவியலாளர்கள் விலை கொடுத்து வாங்க முடியாத கண்ணி ஒன்றை நான் என் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கு அது புலிகளால் வழங்கப்பட்டது போன்றே தோன்றியது. ஒருவருக்கும் தெரியாமல் மடிக்கணணியூடாக நான் தமிழ் நெற்றுக்கு செய்தி அனுப்புகிறேன் என்றே அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். என்னை எனது வாகனத்தில் இருந்து இழுத்து வெளியில் எடுத்த போது கையில் பிஸ்ரலுடன் நின்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரி வாகனத்துள் இருக்கும் இவரது லப்டொப்பை எடு என மற்றவருக்கு கூற அதனை அவர்கள் தேடிய போதும் அன்று அதனை நான் கொண்டு வரவில்லை. எனது தேவைக்காக நான் வைத்திருந்த லப்டொப் எந்தளவுக்கு பலனாய்வுப் பிரிவினரை குழப்பியது என்பதனை அந்த அதிகாலைப் பொழுதில் என் வாகனத்தில் அதனை தேடியதன் மூலம் புரிந்து கொண்டேன்.

ஆனால் சிவராமுடனும் அவரின் பின்னால் நண்பர் ஒருவர் மூலமாக தமிழ் நெற் ஜெயாவுடனும் எனக்கிருந்த ஒரு ஊடகவியலாளனுக்குரிய தொடர்பைத் தவிர தமிழ் நெற்றை நோக்கிச் செல்லவேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

இவை யாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை, அரசாங்கப் படையினரின் மனித உரிமை மீறல்களை, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகின்ற ஊடகங்களை, புலி முத்திரை குத்துவதன் மூலம் இலகுவாக தென்பகுதி மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் பலமான பாரம்பரியம் அன்று இலங்கையில் வேருன்றி இருந்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

நான் மேற்சொன்ன காரணங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய போர் தொடங்கும் போது கொல்லப்பட்ட வேண்டிய அல்லது இல்லாமல் செய்யப்பட வேண்டியோர் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுவிட்டது. அவர்களைப் பொறுத்த வரை நான் ஈழப் பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளுக் குடித்துக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்!!!

அதனால் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அதிகாலை கல்கிசையில் இருந்த எனது வீட்டு ஒழுங்கையில் நான் அலுவலகம் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டு ஒழுங்கை முகப்பைச் சென்றடைந்த போது துப்பாக்கி முனையில் எனது வாகனம் வழி மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழிறக்கப்பட்டு என் நெற்றியில் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு அவர்களது வாகனத்தில் தூக்கி ஏற்றப்பட்டேன்.

ஏற்றப்பட்டுச் சில நிமிடங்களுக்குள் என் மேலுடுப்பு கழட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு பின் கைகள் கட்டப்பட்டு வானின் தரையில் தலை வெளித்தெரியாது மடக்கி வைக்கப்பட்டேன்.

கிட்டத்தட்ட 1 மணிநேரமாக வாகனம் மேடு பள்ளங்கள் எனத்தாண்டி

ஓடிச் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தினுள் இருந்த தமிழ்ச் சகோதரர்கள் அவ்வப்போது அடிபோட்டு கழுத்தை அழுத்தி நெஞ்சை அழுத்தி கடைந்தெடுத்து வருத்தியதோடு கையில் அணிந்திருந்த 3 மோதிரங்களையும் உருவிக்கொண்டனர். அவற்றை உருவி எடுத்ததை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த தமது எஜமானர்களுக்கு சொல்லக் கூடாது என்றும் சொன்னால் அடித்தே கொல்லுவோம்என்றும் கூறினார்கள்.

நானும் அன்பே சிவம் கமலகாசன் போல் “பிழைத்துப்போங்கள்” என விட்டுவிட்டேன்( வேறு வழி உயிரா மோதிரமா?)

போகிற வழியில் இரண்டு இடங்களில் என்னைக் கடத்திச் செல்ல உதவிக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறக்கி விடப்பட்ட இடங்கள் துணை ஆயுதக் குழுக்களிற்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் என நினைக்கிறேன். இவர்கள் இலங்கைப் புலனாய்வாளர்களின் பிரதான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அவை அமைந்திருக்கும் இடங்கள் துணை ராணுவக்குழுக்களுக்கு காட்டப்படுவதும் இல்லை. இறுதியில் காலை 5:30 அல்லது 5:45 மணியிருக்கும் என நினைக்கிறேன். மிகவும் அமைதியான ஒரு பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு வாகனத்தை விட்டு இறக்கப்பட்ட நான் ஒரு வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டேன். கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட என்னை வரவேற்று வாசலில் நின்ற அதிகாரி தலையில் டமார் என்றொரு குத்து விட்டார் சிறிது நேரம் எடுத்தது என்னை சுதாகரித்து கொள்வதற்கு.

பின்னர் என்ன நடந்தது ? 14 ஆவது தொடரில்

நன்றி:globaltamilnews

No comments: