தமிழ் சினிமா

சாட்டை 

தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.
நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.
இந்நிலையில் இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார்.
பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.
இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.
தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.
இதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான்.
இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.
ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.
உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்து விட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.
தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.
நாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.
இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’, ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.
அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.
மொத்தத்தில் சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...
நடிகர்: சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா.
நடிகை: மகிமா.
இயக்குனர்: அன்பழகன்.
இசை: டி.இமான்.
ஒளிப்பதிவு: ஜீவன்.
நன்றி விடுப்பு

No comments: