இலங்கைச் செய்திகள்

.
நாடு திரும்பிய 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி

600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்

இலங்கை பணிப்பெண்கள் 22 பேர் நாடு திரும்பினர்

மெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது

செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்

தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்
-தேவன் (கனடா)                                பகுதி 2

அறிவியல்நகர் பலகலைக்கழகம்‏

நாடு திரும்பிய 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவி
By General
2012-09-25
அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகச் சென்று தமது அசியல் அந்தஸ்து கோரிக்கையினை கைவிட்ட நிலையில், தாயகம் திரும்பியுள்ள 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

அவர்கள் இலங்கையில் தமது வாழ்வாதாரத்தை மீள ஸ்தாபிக்கும் நோக்கில் அவர்களுக்காக 60 ஆயிரம் டொலர்கள் வரையில் வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது. இதனை சர்வதேச குடிவரவு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

தாயகம் திரும்பியவர்களில் 14 சிங்களவர்கள், ஒரு முஸ்லிம் மற்றும் மூன்று தமிழர்கள் எனத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒவ்வொருவருக்கும் தலா மூன்றாயிரத்து 300 டொலர்கள் வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தற்போது, கிறிஸ்மஸ் தீவில் அகதி அந்தஸ்து கோரிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்பும் பட்சத்தில் நிதியுதவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்த இவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக சர்வதேச குடிவரவு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி 


  600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்
By General
2012-09-25
பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கõன ஏற்பாடுகளை பிரித்தானிய அரசு செய்து வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி 
இலங்கை பணிப்பெண்கள் 22 பேர் நாடு திரும்பினர்
By Kapila
2012-09-25
ஜோர்தான் நாட்டிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 22 பேர் இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஓமான் எயார் விமானத்திலே குறித்த பெண்கள் அழைத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 
மெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது
பி.பி.சி
மூடப்பட்ட மெனிக் பாம்-- மீள் குடியேற்றம் நல்ல முறையில் நடந்துள்ளதா ?
menikfarmலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மெனிக்பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்களும் முகாமை விட்டு வெளியேறிய நிலையில், அந்த முகாம் மூடப்பட்டாலும், இலங்கை அரசு, நாட்டில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் முறையாக மீள் குடியேற்றம் செய்யப்படாமல் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைக்கு தீர்வு காணுமாறு ஐநா மன்ற மனித நேய அலுவலகம் வலியுறுத்தியிருக்கிறது.
மெனிக் பாம் மூடப்பட்டதை வரவேற்றுள்ள ஐநா மன்ற மனித நேய அலுவல்களுக்கான இலங்கை ஒருங்கிணைப்பாளர் , சுபினாய் நந்தி, விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த சம்பவம், இலங்கையில் போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அங்கு போரின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு மைல் கல் போன்ற சம்பவம் என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், இன்னும் பலர் தத்தம் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நந்தி, அவர்களது பிரச்சினைக்கு ஒரு அவசர தீர்வு காணப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மெனிக்பாம் முகாமிலேயே எஞ்சியிருந்த கடைசித் தொகுதி மக்களான, கேப்பாபுலவு கிராமவாசிகள், அவர்களது கிராமம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு திரும்பிச்சென்று தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதைப்பற்றி கவலை தெரிவிக்கும் ஐ.நா அலுவலகம், அவர்கள் அரசுக்குச் சொந்தமான வேறிடங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அவர்களது சொந்த நிலங்களின் கதி என்ன என்பதைப் பற்றி இன்னும் அதிகாரபூர்வத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
மெனிக் பாம் மூடப்பட்டது என்பது மோதல் நிலையிலிருந்து, தொடர்ந்து நீடிக்கக்கூடிய ஒரு அமைதியான நிலைக்கு இலங்கை செல்வதைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சமிக்ஞைதான் என்று கூறும் ஐ.ந மன்ற மனிதநேய அலுவலகம், ஆனாலும், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும், இன்னும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு நீடித்து நிற்கக்கூடிய தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்று கூறியது.
இலங்கை அரசு, போரினால் இடம் பெயர்ந்த மக்களின் உரிமைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா மன்ற அலுவலகம், இந்த மக்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் மீண்டும் குடியேற அனுமதிப்பதும், தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, வேறிடங்களில் குடியேற நேர்ந்துள்ள மக்களுக்கு, அவர்கள் குடியேறியுள்ள காணிகளின் சட்டபூர்வ உரிமை குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதும் , நல்லிணக்க வழிமுறையின் முக்கியமான பகுதியாகும் என்று நந்தி கூறினார்.
இலங்கையில் போர் முடிந்த 2009ம் ஆண்டு மே மாதம், சுமார் 700 ஹெக்டேர் நிலப்பரப்பில் மெனிக்பாம் முகாம் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு கட்டத்தில் சுமார் 225,000 இடம்பெயர்ந்த மக்கள் இருந்தனர். அந்த முகாமுக்கு சர்வதேச நிறுவனங்கள் கூடாரம், உணவு, குடிநீர், சுகாதாரம், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்து வந்தன. நன்றி தேனீ 


செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்நலன்பரி நிலையமானது மக்களின் படிப்படியான மீள்குடியேற்றத்தின் பின்னர் இறுதியாக கேப்பாபிளவு மற்றும் மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 360 குடும்பங்களையும் முல்லைத்தீவில் மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறினார். இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர்களுக்கான மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அவ்விடங்களிலேயே அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியுடன் மீள்குடியேற்றத்திற்காக செல்லும் 360 குடும்பங்களிலும் 1186பேர் அடங்குவதாகவும் இவர்களில் சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை முல்லைத்தீவு, மந்துவில் பிரதேசத்தில் குடியேற்றுவதாகவும் ஏனையோரை வேறு சில இடங்களில் குடியேற்றுவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார். சொந்த இடங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மேற்படி மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர்களை சமாதானப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றப்படும் இம்மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இராணுவத்தினர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மேலும் தெரிவித்தார். நன்றி தேனீ தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்
-தேவன் (கனடா)
பகுதி 2
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டை அவதானித்த ஒரு வெள்ளை இனத்தவர் David Prater J.D (The University of Maryland School of Law) என்பவர் அண்மையில் எழுதிய The Transitional Justice Function of Multicultural Policies in Sri Lanka எனும் கட்டுரையில் அர்த்தமுள்ள ஆழமான பல விடயங்களை பதிவு செய்துள்ளார்.

அதாவது புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக அர்த்தமற்ற போருக்கும் சாத்தியமற்ற ஈழம் எனும் இலக்குக்கும், அழிவுக்கும் பல பில்லியன்களை பங்களிப்பு செய்தது போல, போர் முடிவின் பின்னரான காலத்தில் இலங்கைத் தீவில் ஜனநாயக துஸ்பிரயோகமற்ற, இனவாதமற்ற, சமூக நீதியை பேணக்கூடியதான, ஐக்கிய இலங்கைக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கும், தமிழ் சமூகத்தை பன்முகப்படுத்துவதற்கும் புலம்பெயர் வாழ்வு அனுபவங்களை பங்களிப்பு செய்வதுடன், கடந்தகால தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடுவதுடன், போருக்கு பின்பான தேசத்தையும், தமிழ் சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கு தார்மீகரீதியாக முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கிறார்.

ஆனால் யதார்த்தம் என்னவோ யுத்தம் முடிந்து 3 வருடம் ஆகியும் நல்லாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, பன்மைத்துவம், இனங்களுக்கிடையிலான சமத்துவம், நிரந்தர அமைதி, அரசியல் தீர்வு போன்ற உன்னத விடயங்கள் வெகு தொலைவில் கலங்கரை விளக்கு போல் தெரிகிறது.

சுதந்திரத்துக்கு பின்னாலான இலங்கையின் வரலாற்றுச் சுவடுகள் இனங்களுக்கிடையில் கொந்தளிப்பானதாகவே இருந்து வருகிறது.
இதற்கான காரணம், தேசத்தை ஆட்சி செய்த சிங்களத் தலைவர்களும் சரி, தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் தலைவர்களும் சரி, சிங்கள – தமிழ் சமூகத்தினரை இலங்கையர் எனும் ஒரு குடையின் கீழ் பன்முகத் தளத்தில் வழி நடத்துவதற்குப் பதிலாக, தமது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், இருப்பை உறுதி செய்வதற்காகவும் இனத்துவ அடையாளங்களையே மூலதனமாக இனவாதத் தளத்தில் பாவித்து வந்துள்ளார்கள்.

தமிழ் சமூகத்தின் பின்னடைவுக்கும், தோல்விக்கும், தொடாச்சியான அழிவுக்கும் தமிழர்களை இனவாத, போலி தேசியவாத தவறான பாதையில் வழி நடாத்திய தமிழரசுக்கட்சியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையிலான தலைமைகளே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் சமூகத்தின் 60 வருடங்களுக்கு மேலான பின்னடைவுக்கு பின்பு கூட, த.தே.கூ முரண்பாடான அரசியலையே நடத்தி வருகிறது. இதற்கு அண்மைய உதாரணங்களாக சம்பந்தர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். பின்பு தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் பிரிவினைக் கருத்தை விதைக்கிறார். அதே கட்சியில் இருக்கும் விநாயகமூர்த்தி என்பவர் தேசியக் கொடி ஏற்றியதை மறுக்கிறார். உள்நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் மகிந்தாவின் கொடும்பாவி, தேசியக் கொடி, அரசியல் யாப்பு போன்றவைகள் எரிக்கப்படுகின்றன. இவைகளை வுNயு கண்டிப்பதுமில்லை. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமில்லை இவைகள் தவிர தமிழ்நாட்டிலும் தி.மு.க, அ.தி.மு.க, பல சிறிய கட்சிகள் என்பன இலங்கைக்கு எதிராகவும், தமிழர் வாழ்வோடு விளையாடும் வகையிலும,; தமது இருப்புக்காக போட்டியாக அரசியல் செய்து வருவதை வுNயு மௌனமாக அங்கீகரிக்கிறது.

இவ்வாறான இனவாத, பிற்போக்குவாத அரசியல் போக்குகள் எந்த வகையிலும் யுத்தத்துக்கு பின்னரான தேசத்தை கட்டி எழுப்புவதற்கும், இனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நிரந்தர அமைதி, அரசியல் தீர்வு எட்டுவதற்கும் தடையாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தலைமைகள் கடந்த 60 வருட வரலாற்றில் தமிழ் சமூகத்துக்கு செய்தவை என்ன? சாதித்தவை என்ன? தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், தேசிய ஒடுக்குமுறைக்கு பிரிவினையை தீர்வாக விதைத்த, வன்முறை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என கொண்டாடினர்கள். அவரைத் தொடர்ந்து பிரிவினையை மேலும் உக்கிரமடையச் செய்து தனது பேச்சாற்றலால் தமிழர்களையும், இளைஞர்களையும் கவர்ந்து அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற அ.அமிர்தலிங்கத்தை ‘தளபதி’ என புகழ் பாடினார்கள்.

இவர்களின் வார்pசாக, தன்னை ஏகபோக தலைவனாக, தன்னைத்தானே தமிழர்களின் தலைவன் என்று கூறிக்கொண்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எண்ணற்ற கொலைகள் செய்த – சிறார்களின் வாழ்வை பாழடித்த, தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த வளங்களை சேதத்துக்கு உள்ளாக்கிய – வாழ்வை நிர்மூலமாக்கிய, தமிழர்களின் அவமானத்தின் சின்னமான பிரபாகரனை தமிழ்த் ‘தேசியத்தின் தலைவர்’, ‘கடவுள்’, ‘மேதகு’ என்றெல்லாம் 2009ம் ஆண்டு மே மாதம் வரை பெரும்பான்மையான தமிழர்களால் போற்றி புகழப்பட்டது.

இலங்கைத் தமிழருக்கு தேசிய ஒடுக்குமுறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அந்த ஒடுக்குமுறையை தீர்ப்பதற்கு தேர்வு செய்த அழிவுப்பாதைகளான “தமிழ் ஈழம்”, அதை அடைவதற்காக வன்முறைக் கலாச்சாரம், கொலைகள், மனித உரிமை மீறல்கள், சிறுவர்களை பலாத்காரமாக போரில் இணைத்தல், மாற்றுச் சிந்தனை, மாற்றுக் கோட்பாடு வெளிப்படுத்திய தலைவர்களை கொன்று ஒழித்தது, நம்மவர்களுக்கு சொல்லொணா துயரங்களை ஏற்படுத்தியது என, பல இரத்தக்கறை படிந்த சம்பவங்களை விமர்ச்சித்துக் கொண்டே போகலாம்.

இதில் உள்ள தார்மீகரீதியான கேள்வி என்னவென்றால், சிங்கள தேசியவாத ஒடுக்குமுறைக்கு தீர்வாக இரத்தமும் சதையும் பிணமுமாக ஆயுதக் கலாச்சாரத்தை தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டு, தேசமே கடந்த 30 வருடமாக எரியும்போது தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தமிழ் தேசியவாத ஊடகங்கள், ஆன்மீக நிறுவனங்கள், தேசியவாத கவிஞர்கள், இலக்கியவாதிகள், வியாபார நிறுவனங்கள் புலித் தேசியவாத பாசிச ரத்தம் தோய்ந்த அவதூறுக் கலாச்சாரத்தின் மீது யாரும் தார்மீக ரீதியாக (Moral) கேள்வியோ, விமர்சனமோ, எதிர்ப்போ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 வருட இருள் சூழ்ந்த வரலாற்றில் ஒரு சில குறிப்பிட்ட நல்ல முற்போக்கான மனித நேயம் உள்ள மனிதர்கள் தர்மத்தின் மீதும், தார்மீகத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள், புலிகளின் கொலை வெறிப் பாசிசத்தை நோக்கி கேள்வி, விமர்சனம் செய்தவர்களுக்கெல்லாம் துரோகிப் பட்டமும், அவர்களின் வாழ்வின் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டது. ஒருசிலர்தான் (புலிகளின் சிறை அனுபவங்களை எழுதும் இடதுசாரி நண்பர் மணியம்) போன்றோரே அபூர்வமாகத் தப்பி உயிர் வாழ்கிறார்கள்.

தமிழ் சமூகத்தின் தேசிய இன முரண்பாட்டிற்கான வரலாறு இரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது. முதலாவது வகையானது அகிம்சைப் போராட்டமாகவும், இரண்டாவது வகையானது ஆயுதப் போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

மொத்தமாக 60 வருடத்துக்கு மேற்பட்ட தேசிய இன முரண்பாட்டு வரலாற்றில் அகிம்சைப் போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி, குறைந்தபட்சம் சத்தியம், நேர்மை, தார்மீகம் வெளிப்படுத்தப்படவில்லை.
தார்மீக அறநெறிகளுக்குப் பதிலாக இனவாதம், தேச விசுவாசமின்மை, தேசப்பற்றற்ற துரோகம், இரத்தத்தை உறைய வைக்கும் கொலைகள், வன்முறைக் கலாச்சாரம், அரசியல் அதிகாரங்களை, இருப்புக்களை, பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இன அடையாளங்களை தேர்தல் காலத்தில் பரப்புரை செய்தல், தேசிய வாழ்விலும், தேசிய நீரோட்டத்தில் இருந்தும் தமிழ் சமூகத்தை தனிமைப்படுத்தல், அவலங்களை உருவாக்குதல், அவலங்களை செழுமையான வாழ்வுக்காக பயன்படுத்ததல் போன்றவைதான் தமிழரின் அரசியல் வரலாறாக இருக்கிறது.

மிதவாத, இனவாத, பிற்போக்குவாத தமிழரின் அரசியல் தலைமையான தமிழ் காங்கிரசில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை, தமிழ் மக்களை கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக இரத்த ஆற்றில் மிதக்கவிட்டது தான் அரை நூற்றாண்டுக்கு மேலான அரசியல் தலைமைத்துவ சாதனையாக இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் தேசிய ஒடுக்குமுறைக்கு “தீர்வு” – அதிகாரப் பகிர்வு தேவை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் தீர்வைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால் தமிழ் தரப்பில் பல மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு பற்றி சிந்திக்கும்போது ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது. புலிகள் வட கிழக்கில் சர்வாதிகார ஆட்சி நடாத்திய போது, ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கனடா வந்திருந்தார். அப்போது இனப்பிரச்சினை பற்றி, தீர்விவு பற்றி, பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் சமஸ்டி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் என பலவகையான தீர்வுகள் முன்மொழியப்பட்டிருந்தன. அனைவரது கருத்தையும் பொறுமையாக செவிமடுத்த அந்த ஐரோப்பிய நண்பர், தனது கருத்தை வெளிப்படுத்தும் போது, “புலிகள் அழிவதுதான் தமிழ் மக்களுக்கு பெரிய ஒரு தீர்வு” என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருந்தார்.

அந்த மனிதர் அப்படி ஒரு கருத்தை முன்வைக்கும் அளவுக்கு 2009க்கு முன்பு புலிகளின் அராஜகம் வட – கிழக்கில் தலைவிரித்தாடியது. ஆனால் 2009க்கு பின்பும,; 60 வருட வரலாற்றை கவனத்தில் எடுக்கும் போதும,; தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வாக அப்படி ஒரு கருத்தை இப்போது முன்வைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது, தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் கட்சிகள் ‘சோறா சுதந்திரமா?’, ‘தமிழ் ஈழத்துக்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்கமாட்டோம்’, ‘இலங்கை அரசியல் யாப்புக்கு கீழ் பேச்சுவார்த்தை நடாத்தமாட்டோம்’, ‘அபிவிருத்தி தேவையில்லை உரிமையே வேணும்’ என்று கூறி வந்த தமிழ்த் தலைமைகள், இறுதியாக ‘கிழக்கு மாகாணசபை தேர்தலானது கடவுளால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பம’; எனவும், ‘அனைத்து கிழக்கு தமிழ் மக்களும் TNA க்கு வாக்களித்து எங்களை நாங்களே ஆள வேண்டும்’ என்றும், மக்கள் தம்முடைய பக்கம் இருப்பதாகவும், உலகம் TNA க்கு பின்னால் நிற்பதாகவும், வரலாறு படைக்கும் படியும் மேடைக்கு மேடை முழங்கினார்கள்.

உலக வரலாற்றிலேயே பாராளுமன்ற பதவிகளை எந்தத் திட்டங்கள் இல்லாமலும், என்ன செய்தோம் என்று மக்களிடம் கூறாமலும், மக்கள் வரிப்பணத்தில் ஏப்பம் விட்டும், தேசத்துக்கு விசுவாசம் இல்லாமலும், எதிராகவும், சத்தியப் பிரமாணத்தை அரசியல் யாப்பை மீறும் வகையிலும் துரோகத்தனமான, சுயலாப, தேசத்துரோக, இனவாத அரசியல் செய்து வரும் அரசியல் தலைமைகள் தமிழ் காங்கிரஸ், தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழரின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் யாழ்ப்பாண மேட்டுக்குடி அப்புக்காத்து பாரம்பரியத்தாலும், அவர்களால் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பாசிச புலிகளின் பாரம்பரியத்தாலும் முழுத் தமிழ் சமூகமும் கோமா நிலையையே அடைந்தது.

முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களை பெரும் மானிடத் துயருக்கும், கோமா நிலைக்கும் அழைத்துச் சென்ற சம்பந்தன் தலைமையிலான TNAகட்சியினர், இறுதி யுத்தம் நடக்கும் போது தேசத்தை விட்டு தப்பியோடி இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தஞ்சம் புகுந்ததுடன், தேசத்துக்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடக்கும் போதும், அதற்கு முன்பும் பின்பும் போரால் அவதிப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஓடாமல் புலிகளால் இலக்கு வைத்து உயிர் தப்பிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களுக்கு அமைதியான முறையில், ஆர்ப்பாட்டம், பரபரப்பு இல்லாமல் விபரிக்க முடியாத பல சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பைபிள் கூறுகிறது, “பாவம் செய்தவர்களுக்கு மரணம் தான் முடிவு” என. ஆக கடந்த 30 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த பாவத்துக்கு புலிகளுக்கு 2009 வைகாசி மாதம் சரியான தண்டனை கிடைத்தது. ஆனால் பாவம் செய்ய தூண்டினவர்கள் இன்னும் தமிழ் மக்களுக்கு பல பாவங்களை செய்தபடி வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன் தமிழர்கள் தாங்களே ஆள வேண்டும் என்றும், தங்களிடம் வட – கிழக்கு அதிகாரங்களை கொடுக்கும்படியும் அரசாங்கத்தை வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையிலேயே போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கு ஆட்சி அதிகாரம் தேவையில்லை. இறுதி ஈழப் போருக்காக சேகரித்த பல மில்லியன் டொலர் பணம் புலம்பெயர் புலி பினாமிகளிடம் புதைந்து போயுள்ளது. அந்தப் பணத்தை வன்னி மக்களின் தேவைகளுக்கு கொடுத்து உதவும்படி யாரும் கேட்பதில்லை.

அதன் முன்னேற்பாடாக செப்ரெம்பர் 8ம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் முகமாக ஐ.தே.கட்சியிடமும், முஸ்லீம் காங்கிரசிடமும் ஆதரவு வேண்டி நிற்கிறார்கள். என்னே ஒரு தார்மீகம், என்னே ஒரு சமூக அக்கறை. தமிழ் மக்களுக்கு பெரும் மானிடத் துயரை ஏற்படுத்திய ஐ.தே.க. இடம் ஆதரவு தேடுவதும், புலிகளால் 48 மணித்தியாலத்தில் விரட்டி அடிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்திடம் ஆதரவு கேட்பதும், TNAக்கும் முஸ்லீம் காங்கிரசுக்கும் புரிந்துணர்வு இருப்பதாக கூறுவதும், என்னே ஒரு தார்மீகம், என்னே ஒரு தலைமைத்துவ லட்சணம்.

உண்மையிலேயே சம்பந்தன் தலைமையிலான TNA இல் உள்ள 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மைத்தாமே பெரிய கண்ணாடியின் முன் நின்று சுய விமர்சனம் செய்ய வேண்டும். தமிழ் சமூகத்தை ஆள்வதற்கு தமக்கு தகுதி இருக்கா என, அத்துடன் 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற தலைவர்களா தாம் எனக் கேட்டு அரசியலிலிருந்தும், பொது வாழ்வில் இருந்தும் விலக வேண்டும். அப்போது தான் தமிழ் சமூகத்திற்கு புதுயுகம் பிறக்கும்.

தொடரும் நன்றி தேனீ


அறிவியல்நகர் பலகலைக்கழகம்‏
chandrakumar-3கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ் பல்கலைகழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை கிளிநொச்சி வாழ் மக்கள் கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்

கிளிநொச்சி மாவட்டத்தினை பொறுத்தவரை இந்த இரண்டு பீடங்களும் ஒரு வரப்பிரசாதமே மாவட்டமே ஒன்று திரண்டு இந்த பீடங்களை வரவேற்க தயாராக உள்ளது

இந்த நிலையில் கடந்த 02-09-2012 அன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்  மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட பீடாதிபதி மிகுந்தன் விஞ்ஞர்ன பீட பீடாதிபதி கந்தசாமி கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிபாளரும் வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி விசேட ஆணையாளர் பத்மநாதன்கிளிநொச்சி மாவட்ட உளநலவைத்திய அதிகாரி வைத்தியர்ஜெயராசா பிரதேச செயலர்கள் மற்றும் கல்வியலாளர்கள் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த இரண்டு பீடங்கள் தொடர்பில்; மக்கள் மற்றும் கல்விச்சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது

அந்த வகையில் இன்று மேற்படி இரண்டு பீடங்களும் ஆரம்பிக்கபடவுள்ள வளாகத்தில் மாவட்ட மக்கள் மற்றும் உயர்தர மாணவர்களை கொண்டு ஒரு விழிப்புணர்வு சிரமதானத்தை மேற்கொள்ள அன்று (02)தீர்மானிக்கப்பட்டது

காலை ஓன்பது மணி தொடக்கம் பிற்பகல் இரண்டு மணி வரை சிரமதான பணிகளை மேற்கொள்ளவதற்கும் இந்த பணியில் பங்குபற்றுவோருக்கான போக்குவரத்து வசதிகளை கிளிநொச்சி மாவட்ட தனியார் போக்குவரத்து சங்த்தின் ஊடாக மேற்கொள்ளவும் மற்றும் குடிநீர் குளிர்காணங்கள் மதிய உணவு போன்றவற்றுடன் ஒரு கள மருத்துவ சேவை நிலையத்தினையும் அமைப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதாக பணிக்கு என விசேடமாக உருவாக்கப்பட்ட கீழ் குறிப்பிடபட்டவர்களை கொன்ட குழுவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த குழுவில் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல் மாவட்டச் செயலக திட்டப்பணிப்பாளர் மோகனபவன் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல் கலைச்சி கண்டாவளை பூநகரி பளை பிரதேச செயலாளர்கள்  நீர்ப்பாசன திணைக்கள பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் கூட்டுறவு உதவி ஆணையாளர் அதிபர்களான பங்கையற்செல்வன் மீனலோஜினி திருமதி மாணிக்கவாசகம் விசேட ஆணையாளர் பத்மநாதன் விவசாய பீட பீடாதிபதி மிகுந்தன் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தலைவர் சஜீவன் உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர்.

எனவே இவர்கள் அனைவரினதும் தீர்மானங்களுக்கு அமைவாகவே இன்றைய சிரமதான பணி முன்னெடுக்கப்படுகிறது இதனை தவிர இந்த இரண்டு பீடங்களையும் கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்காக கிளிநொச்சி கல்விச்சமூகம் உட்பட முழுச்சமூகமே தங்களது எல்லாவகையான ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக உள்ளனர்

தாங்கள் இன்னும் ஒரு சில வருடங்களி;ல் கல்வி கற்க போகும் பல்கலைகழகத்தில் இன்று சிரமதான பணியினை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட உயர்தர மாணவர்கள் முழு ஆர்வத்தோடு மகிழ்ச்சியுடன் தமது ஆதரவினை வழங்குகிறார்கள் ஆனால் நேற்றையதினம் (26) யாழ்ப்பாணத்திலி;ருந்து வெளியான     உதயன் பத்திரிகையில் குறிபிட்டது  போன்று இதில் எவ்வித அரசியல் நோக்கமோ உள்நோக்கமோ கிடையாது மாறாக இந்த பத்திரிகை கிளிநொச்சியில் இந்த பீடங்கள் ஆரம்பிப்தற்கு எதிராக செயற்படுகிறதோ என இந்த மாவட்ட மக்களும் கல்விச்சமூகமும் சந்தேகம் கொள்கின்றனர் எந்தவொருச்சந்தர்பத்திற்காக கிளிநொச்சி மக்கள் காத்திருந்தார்களோ அந்தச்சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ள நிலையில் உதயன் பத்திரிகை ஏன் இவ்வாறு எழுதுகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. உண்மையில் வழமையான சிரமதான பணிகள் போன்று அன்றி  ஒரு விழிப்புணர்வு சிரமதான செயற்பாடாக நடக்கவுள்ள இந்த செயற்பாட்டை வரவேற்க வேண்டிய பத்திரிகை வசைபாடுவது ஒரு நாகரீகமற்ற செயற்பாடே.அது மட்டுமன்றி அனைத்துச் சமூகங்களினதும் உள்ளங்களை புண்படுத்தும் செயற்பாடாக அடிநுனி தெரியாமல் செய்தி வெளியிட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது மேலும் கிளிநொச்சியில் மேற்படி இந்த இரண்டு பீடங்களும் வருகின்றமையினை இந்த பத்திரிகை எதிர்க்கிறதா என்ற சந்தேகமும் கிளிநொச்சி மக்களிடம் காணப்படுகிறது

அதே வேளை கடந்தகாலங்களில் மாணவர்கள் பாடசாலை சீரூடைகளுடன் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் அழைத்துச்செல்லப்பட்டபோதும், பாடசாலைகளில் கட்டாய ஆட்சேர்ப்புக்களும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டபோது போர்ப்முனைகளுக்கு மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்ட போதும் கேள்விகள் எழுப்பாமல் மௌனியாக இருந்த உதயன் பத்திரிகை எமது மண்ணில் ஆரம்பிக்கபடவுள்ள பொறியியல் மற்றும் விவசாயபீடங்களில் எமது மாவட்ட கல்விச்சமூகம் விரும்பி எதிர்பார்த்த ஒரு நிகழ்வினை மேற்கொள்ளகின்ற போது மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறது என கிளிநொச்சி மாவட்ட கல்விச்சமூகம் கேள்ளி எழுப்பியுள்ளது.
நன்றி தேனீ
கிழக்கு மாகாண தேர்தலும், கொழும்பு கொடுக்கல்வாங்கல்களும்.
-சஹாப்தீன் நாநா –
எப்போது உருப்படும் இந்த சமூகம். இனி என்ன செய்வதாய் உத்தேசம்.
கனாவுக்கும், கனவுக்கும் என்ன வித்தியாசம் என ஞானியிடம் கேட்டார்கள். ஒருவன் தூங்கிய பின் காண்பது கனா, எது ஒருவனை தூங்கவிடாமல் பண்ணுகின்றதோ அது கனவு என்றார் ஞானி. சொல்லிவிட்டு அனைவரும் சந்தோஷமாக கனவு காணுங்கள் என்றார் அந்த ஞானி. கடந்த பல நாட்களாக கிழக்கில் முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்களித்த ஒரு லட்சத்தி முப்பத்திரண்டாயிரத்து, தொளாயிரத்து இருபத்தேழு பேர்களும் கனவாக கண்டு கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் தூக்கம் கிடையாது. யார் கிழக்கின் முதலமைச்சர். ஹாபிஸ் நசீரா அல்லது வேறு யாராவது முஸ்லீம் காங்கிரசை சேர்ந்தவர்களா என்றுதான் அனைவரும் கனவு கண்டார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் எக்காரணம் கொண்டும் முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த ஒருத்தனுமே வந்துவிடக்கூடாது என தேர்தலுக்கு மூன்றுமாதம் முதல் இருந்தே கனவு கண்டார். அவர் யார் என்பது மூத்த போராளிகளுக்கும் தெரியும், எதிர்க்கட்சிக் காரனுக்கும் தெரியும், மகின்த அரச குடும்பத்துக்கும் நன்றாகவே தெரியும். ஆம் அவர்தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கடந்த இரண்டு மாதங்களாக மொத்த சிறிலங்கா முஸ்லீம்களின் தலைகளில் மொளகா அரைத்தவருமான திருவாளர் நீதிதேவன்.


1960 களில் தொடங்கி 1983வரை தமிழ் அரசியல் தரப்புகள் எவ்வாறு தமிழ் பேசும் தமிழர்களின் தலைகளில் அரைத்தார்களோ, அதைவிட ஒரு படி மேலே போய் அதாவது அரசில் இருந்து கொண்டு, அதுவும் அரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு, மகின்த அரசை வாங்கு வாங்கெனவாங்கிவிட்டு இறுதியில் முந்தா நாளுக்கு முதல்நாள், கழுவின மீனில நழுவின மீன் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். உலகப்பொலீஸ்காரர்களுக்கே சவால்விட்டுக் கொண்டிருந்த புலிகளை புஸ்வாணமாக்கிய மகின்த அரசையே திட்டுகின்றாரே இந்த மனுஷன், என்ன துணிச்சல்டா இது என்று ஏமாந்து வாக்குப் போட்டவர்களுக்கு, இப்போது கொழும்பில் இருந்து கொண்டு, அதுவும் ஊர் பேர்தெரியாத பத்திரிகையாளர்களை கூட்டி  வைத்துக்கொண்டு சோத்துக்கு உப்பு போடல, கறிக்கு வெள்ளப் பூடு பத்தல, அதனால நாங்க அரச ஆதரிச்சிருக்கம், சமயம் வரும்போது வறுத்தெடுப்பம் என்ற ஒப்புக்கு சப்பாணி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள்.


இந்த உத்தம புத்திரர்கள், இடுப்புல பலம் உள்ள கட்சியை வைத்திருப்பவர்கள் என்றால், முதல் அமைச்சர் அறிவிப்பு வந்த அடுத்த நிமிடம், கிழக்கு சென்று, அதே பழைய மேடைகளில் ஏறி, நியாயங்களை வீறாப்புடன் பேசி, அதே கிழக்கு மக்களிடம் கைதட்டு வாங்கியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கொழும்பு பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு, தலைவர் லண்டனுக்கும், அமேரிக்காவுக்கும் சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல்- ஓர் இலங்கை அனுபவம் பற்றி விளக்கம் அளிக்க கியாஹோகய. கிழக்கு முஸ்லீம்களே நீங்கள் சாக்கடை கொசுக்கள் அல்ல, சரித்திர சக்கரங்கள் என்பதை இவர்களுக்கு எப்போது புரிய வைக்கப் போகின்றீர்கள்.


முந்தா நாள் பெய்த மழைக்கு முளைத்த இந்த காளான்களுக்கு, கிழக்கின் வரலாறு தெரியாது சகோதரர்களே. இந்த கிழக்குக்கும் கிழக்கின் ஒவ்வொரு ரெத்தெத்தின் ரெத்தங்களுக்கும் பல கதைகளுண்டு சகோதரர்களே. யாழ் புத்தி ஜீ(சீ)விகள் 1970களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கொம்பு சீவி தேர்தலில் வாக்கு வேட்டையாடும் போது, துப்பாக்கி கலாசாரத்தை நடாத்திக்காட்டி தேர்தல் களேபரங்களை முதல் முதலில் ஆரம்பித்தது இந்த கிழக்கு மாகாணம்தான். அதுவும் முஸ்லீம் தரப்புதான். அதன் பின்னர்தான் வடக்கே துப்பாக்கி தூக்கத்தொடங்கியது. கிழக்கிலேயே முதலாவதாக தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்தவர்களும், இயக்கங்களை கிழக்குக்கு அழைத்து வந்தவர்களும் மூஸ்லீம் இளைஞர்கள்தான், அதன் பின்னர்தான் கிழக்கு தமிழ் இளைஞர்கள் முக்கி, முனகி யாழ் இளைஞர்களுடன் இணைந்தார்கள். ஆயுதப்பயிற்சிக்கென இந்திய உத்தர பிரதேசத்துக்கு சென்ற முதல் குரூப்பும் கிழக்கு மாகாணத்தவன்தான். அதில் முஸ்லீம்களும் அடக்கம். சிறிலங்காவிலேயே பெரிய வங்கி கொள்ளை ( காத்தான்குடி ) மட்டக்களப்பு சிறையுடைப்பு என ஆசியாவையே அதிரவைத்த நிகழ்வுகளுக்கு சூத்திரதாரிகள் கிழக்கு முஸ்லீம்களும், கிழக்கு தமிழர்களுமே. ஏன் உலகின் அதிபயங்கர, பயங்கரவாத அமைப்பான புலிகளிலேயே, முன்னணி வீரர்களாக இருந்தது கருணா அம்மானின் கீழ் இயங்கிய, கிழக்குமாகாண இளைஞர்கள்தான். அப்படி உணர்ச்சியும், உணர்வும் மனிதாபிமானமும் நிறைந்த கிழக்கு மக்களை கடந்த 8ம் திகதிவரை உசுப்பேத்தி, 8லிருந்து 18வரை முட்டாள்களாக்கிவிட்டு, இப்போது ரொம்ப சாவகாசமாக ரெண்டெரை வருடத்துக்கு பிறகு ஒத்தணம் போடுவோம் அதுவரை பொறுத்திருங்கள் என அம்புலிமாமா கதை சொல்லுகின்றார்கள் பில்லி சூனியக்காறர்கள். இதனால் இன்று மொத்த கிழக்கு மாகாணத்தவனும் சந்தை முடிந்த பின், சரக்கு விற்க வந்தவனைப் போல் ஏமாந்து நிற்கின்றான்.


85களில் இந்த முஸ்லீம் காங்கிரஸ்கட்சியினர் கிழக்குக்கு காலடி எடுத்து வைக்க முன்னர், முஸ்லீம் அமைப்பினரின் கைகளில்தான் கிழக்கு இருந்தது. கிழக்கு மட்டுமல்ல வடக்கு மற்றும் தென், மேற்கு பகுதிகளிலும் முஸ்லீம் குழுக்களின் செல்வாக்கு இருந்தது. இந்த முஸ்லீம் குழுக்கள் பல முஸ்லீம் பெரியார்களதும், கல்வியாளர்களதும், ஆலோசனையின் பேரில் அனைத்து ஆக்க பூர்வ நடவடிக்கைகளிலிருந்தும் 1987களில் பின் வாங்கியது. நாட்டை விட்டு முக்கிய உறுப்பினர்கள் வெளியேறினர். இந்த வெளியேற்றம் அடாவடி ஆட்சி செய்த புலிகளுக்கு பயந்து நடக்கவில்லை. எமது இளைஞர்களின் கைகளில் இருக்கும் பொருட்களை பாவித்து, சிங்கள அரசுகள் குளிரகாய்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், எமது சமூகத்தின் கல்வி முன்னேற்றம் மற்றும் வியாபாரவிருத்திகளில் எவ்வித தடங்கல்களும் வரக்கூடாது என்பதற்காகவுமே நடந்தது. அன்று இந்த முஸ்லீம் இளைஞர்கள் வெளியேறாமல் அல்லது அமைதிகாக்காது இருந்திருந்தால், இன்று கல்வியில், மற்றும் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றம் கண்டிருக்கும் முஸ்லீம்கள், தமிழ் மக்களைப் போல் மேற்குலக நாடுகளில் பெற்றோல் கராஜ்களிலும், சிக்கன் சொப்பிலும் சகலவற்றையும் தொலைத்துவிட்டு அலைய வேண்டியிருந்திருக்கும். இதற்குரிய முழு நன்றியையும் காத்தான்குடியைச்சேர்ந்த மறைந்த மர்ஹூம் அகமட்லெப்பைக்கும், மறைந்த மர்ஹும் மூதூர் மஜீத்துக்கும் முழு முஸ்லீம் சமூகமும் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றது.


இந்த விடயமெல்லாம் இப்போது முஸ்லீம்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்றோம் என புறப்பட்டு, முதுகெலும்புள்ள தலைவன் அஸ்ரப் இறந்த பின், ஒன்று ரெண்டாகி, ரெண்டு மூணாகி, இன்று மூணும் கோணலாகி மொத்த முஸ்லீம்களின் மானத்தையும் கழுவிலேற்றி விட்டு, வாக்குகளையும் வாங்கி, வாக்குத்தவறி ........... இப்போது மொத்த சிறிலங்கா முஸ்லீம்களையும் நோயாளி மடிந்த பின், மருந்து வாங்கி வந்த உறவுக்காரா்களைப் போல் நிற்க வைத்துள்ளார்கள்.


பொம்மை ஆட்சி ஒன்றில் கைகட்டி, வாய்பொத்தி, மௌனியாக இருந்துவர எமது கட்சி தயாரில்லை. முஸ்லீம் காங்கிரஸ் கட்சியான நாம் தனித்து கேட்பது பற்றி நாடே பெருமைப்படுகின்றது. எமது தனித்துவம் காக்கப்படும், என கிண்ணியா, மூதூர் தொடக்கம் பொத்துவில் வரை முழங்கி, இளைஞர்களையும், மொத்த முஸ்லீம் இனத்தையும் சூடாக்கி, சூடேற்றி, சூல்கொள்ள வைத்து, வாக்குகளை வாங்கி, தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து, இறுதியில் மகிந்த மகராசனின் காலில், தொபுக்கடீர் என விழுந்து. முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கிட்டம், ஹிஹி.......நாங்க கேட்ட மாதிரியே ரெண்டு அமைச்சும் பெற்று விட்டோம். ஹிஹி....ஹிஹி.......அதாவுல்லாவுக்கும் ஆப்பு, ரிசாட் பதியுதீனுக்கும் ஆப்பு வெச்சுட்டம் ஹஹ் ஹஹ்ஹா (அவங்கட ஆட்களுக்கும் முதலமைச்சு பதவி கிடைக்காம பார்த்துங்கிட்டாங்களாம்.) என்ன சாதனை செய்திருக்கின்றாரகள் பார்த்தீர்களா.


அடுத்த சித்திரை புதுவருடம் தமிழீழத்தில்தான் நடக்கும், அன்று சிங்களவனின் தோலை செருப்பாக அணிவோம் என்று சொல்லிக் கொண்டுதான் 70களில் யாழ்ப்பாண லோயர் மாமாக்கள் வாக்குவேட்டையாடி மொத்த தமிழனையும் ஏலம் விட்டுவிட்டு, அவர்கள் தம் பிள்ளைகளை ஐரோப்பிய வாழ்க்கைக்கு தயாராக்கினார்கள். இப்போ ரொம்ப காலம் கழித்து அதே பாணி சூடேற்றல்களுடன் நம்ம ........................ ? நாம் தமிழ் இளைஞர்கள் அல்ல. இவர்கள் சூடேற்றும் போதெல்லாம் சூடேறுவதற்கு. ஆனால் தொடர்ந்தும் இவர்களது வசப்பு வார்த்தைகளுக்கு ஆடுவதற்கு பொம்மலாட்டக்காரர்களும் அல்ல என்பதை நிருபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

நாம் இங்கு மகிந்த சகோதரர்களுடன் மல்லுக்கு நிற்கவோ, சம்பந்தன் தரப்புடன் தேன் நிலவு கழிக்கவோ சொல்லவில்லை. ஏனெனில் சிங்கள பாமர மக்களையும், தமிழ் பாமர மக்களையும் முழுக்க முழுக்க நம்பலாம். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளை நம்பினாலும், தமிழ் அரசியல்வாதிகளை ஒரு வீதமும் நம்ப முடியாது. சம்பந்தன் ஐயாவை நம்பினாலும்,  வடக்கில் பிறந்து, வளர்ந்து இப்போது சம்பந்தன் ஐயாவின் திவசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த கண்கொத்திப் பாம்புகளை நம்பவே முடியாது. ஆனால் நேற்றைய தலைப்பு செய்திகளில் கலாநிதி.ஹஸ்புல்லா அழகாக சொன்னதை ( கிழக்கில் முஸ்லீம்கள் ஐந்து வீத நிலத்திலேயே இருக்கின்றனர் ), முப்பது வருடத்துக்கு முதல் யாழ்.லோயர்கள் ரொம்ப ஆவேசமாக சொன்னார்கள்.
அந்த ஆவேசம் பல துன்பியல் சம்பவங்களுக்கு வழிவகுத்தது. அதே பாணியை இப்போது நீங்கள் கையில் எடுத்து குளிர்காய முற்படுகின்றீர்கள். அது கூடாது. அதற்கு இது தருணமுமல்ல. ஆம் சகோதரர்களே, முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி முழு சிறிலங்கா முஸ்லீம்களுக்கும் தேவை. அந்த கட்சிக்கு முதுகெலும்புள்ள தலைவர்களும் தொண்டர்களும் தேவை.
நசீர் ஹாபீஸ் என்றொருவர், அஸ்ரப் தலைவராக இருக்கும் போது கட்சியில் இணைகின்றார். அஸ்ரப் இறந்ததும் அவர் கட்சியை விட்டு ஒதுங்குகின்றார். அல்லது ஒதுக்கப்படுகின்றார். திடீரென அவர் கோடீஸ்வரர்கள் லிஸ்ரில் இணைக்கப்படுகின்றார். முஸ்லீம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் தலைமை காரியாலயம், அந்த நசீர் ஹாபீசின் பெயரில் இருக்கின்றது என சொல்லி அனைவரும் ஒதுங்கி நிற்கின்றார்கள். முந்தாநாள், திடீரென அதே நசீர் அகமட் புதிய தலைவர் ரவுப் ஹக்கீமுடன் தோன்றுகின்றார். நிறைய கசமுசாக்கள் நடக்கின்றன. செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றது. கட்சி தலைமை காரியாலயத்தை கட்சிக்கு எழுதி கொடுத்துட்டாராம் என போராளிகள் ( நம்ம முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் ) கும்மாளம் அடிக்கின்றார்கள். கிழக்கு தேர்தல் அறிவிக்கப்படுகின்றது. நம்ம சனங்கள் மேடையேறுகின்றார்கள். மேடையில் முக்கிய காட்சிப் பொருள் அந்த கோடீஸ்வரர். கிழக்கின் அடுத்த முதலமைச்சர் அவர்தானாம். இது இப்படி என்றால்.

இன்னொருவர், உணர்ச்சியின் உச்சக் கட்டத்துக்கே போய், 18 நாட்களுக்கு 18 உண்மைகளை சொல்லி வாக்கு கேட்கப் போய், ஈரோஸ் மூத்த போராளி கதைகள் எல்லாம் சொல்லி, மூக்குடைபட்டு ( இவருக்கு முதலே ஈரோஸில் சேர்ந்து, மெட்ராஸ் கோரமண்டல் ஹோட்டலில் ஈரோஸ் தலைவர் ரட்ண சபாபதிக்கு விஸ்கியும், ஊறுகாயும் வாங்கிக் கொடுத்த சோனவனுகள் இன்னும் கிழக்குல உலாத்துற கதை தம்பிக்கு தெரியாது போல கெடக்கு ) இருந்த பிரதி அமைச்சர் பதவியையும் பறிகொடுத்து........இதுதான் இன்றைய முஸ்லீம் காங்கிரசின் நிலை. வீ டோன்ட் வோன்ட் கொமடியன்ஸ். வீ  ஆர் லுக்கிங் போர் ஒன் ஹேண்ட்சம் கைட் போர் அவர் கொம்மியுனிற்றி லீடர்சிப்.
யார் சிறிலங்கா முஸ்லீம் மக்களுக்கு தலைவர் என்பதைவிட, யார் அதிகூடிய பதவியைப் பெறலாம், யார் அதிகூடிய பணத்தை உழைக்கலாம், யார் அதிக காலம் ஆளும் அரசுகளுடன் ஒட்டி உறவாடலாம் என்பதாகவே இருக்கின்றதே தவிர, சிறிலங்கா வாழ் மொத்த முஸ்லீம் மக்களைப் பற்றியும் யாரும்,  கிஞ்சித்தும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இன்று சிறிலங்காவில் உள்ள மொத்த முஸ்லீம் மக்களில், மூன்றில் ஒரு பகுதியினர் வடகிழக்கிலும், மூன்றில் இரண்டு பகுதியினர் தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வடகிழக்கில் வாழ்பவர்கள். நெருக்கமாக செறிந்து வாழ்வதாலும், தென்மேற்கில் வாழ்பவர்கள். ஆங்காங்கே தொட்டம், தொட்டமாக வாழ்வதாலும், சிறிலங்கா முஸ்லீம்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும், வடகிழக்கு முஸ்லீம்கள்தான் குரல்கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத சடங்கை யாரோ பெயர் தெரியாத பலர் எழுதிவிட்டுச் சென்றுவிட்டனர்.


அன்றிலிருந்து, இன்றுவரை வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லீம் சமூகத்துக்கு அல்லது முஸ்லீம்களின் முன்னேற்றத்துக்கு பாதகமாக எது நடந்தாலும் காத்தான்குடியில் ஜூம்ஆத் தொழுகையின் பின் ஒரு ஆர்ப்பாட்டம், ஓட்டமாவடியில் ஒரு கடையடைப்பு என்ற ஒரு பத்திரிகைச் சிறு செய்தியுடன் முடிந்து விடுகின்றதே தவிர இதுவரையும், எப்போதும் நடந்த பிரச்சனைகளுக்கு, அல்லது தொடங்கிய தடங்கல்களுக்கு எங்கும், எப்போதும் முடிவுகள் காணப்படவில்லை. அதற்காக ஒரு கட்சி தேவை. அது முஸ்லீம் காங்கரஸ் கட்சியாக இருக்க வேண்டும்.


சிங்கம் மூர்க்கமாய் தாக்கினால், சின்ன முயல் கூட எதிர்த்து நிற்குமாம். தலைவர்களே எங்களை முயல்கள் ஆக்கி விடாதீர்கள். நாங்கள் கழுதைகளாகவே இருந்து கொள்கின்றோம். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, பறவாயில்லை நாங்கள் பொதிகளை சுமக்கின்றோம். பொதிகளை எக்கச் சக்கமாக எங்கள் முதுகில் மட்டும் ஏற்றி நாங்கள் தந்த புள்ளடிகளுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள். அப்புறம் நாங்கள் முயல்கள் எல்லாம் சேர்ந்து.............

shabdeensl@ymail.com
27-09-2012
நன்றி தேனீ

No comments: