தமிழ் சினிமா


'18 வயசு' - மனநோயாளியின் காதல்

அம்மாவின் தவறான நடத்தை, அப்பாவின் தற்கொலையால் மனநிலை பாதிக்கப்படுகிறார் ஜானி. இந்த சூழ்நிலையில், ஆதரவற்ற காயத்ரி அப்பாவின் நண்பர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி ஜானியின் அப்பார்ட்மென்டுக்கே வருகிறார். ஜானியிடம் பழகும் காயத்ரி, ஒரு கட்டத்தில் காதலிக்கத் துவங்குகிறார்.

தன்னை படிக்க வைக்கும் பெரிய மனுஷன், தன்னை அடைய நினைப்பதை சகிக்க முடியாமல் ஜானியோடு ஓடிவிட முடிவு செய்கிறார். தாயின் காதலனை தாக்கி, தாயை கொன்று விட்டு ரத்தக்கறையோடு காயத்ரி முன் வந்து நிற்கிறார் ஜானி. போலீஸ் ஜானியை பிடித்துச் செல்கிறது. நிர்க்கதியற்று நிற்கிறார் காயத்ரி. ஜானியை காப்பாற்றத் துடிக்கிறார் மனநல மருத்துவர் ரோகிணி. தண்டிக்க துடிக்கிறது போலீஸ். காயத்ரியின் காதலுக்காக எதுவும் செய்ய தயாராக நிற்கிறார் ஜானி. இவற்றில் எது நடந்தது, எது நடக்கவில்லை என்பது மீதி கதை.

18 vayasu
18 vayasu

உடம்பை ஆட்டியபடி நடக்கும் மேனரிசம், தயங்கி தயங்கி பேசும் வார்த்தைகள், எதையும் நெகட்டிவாக நினைக்கத் தெரியாத மனசு, தீடீரென ஆக்ரோஷப் பாய்ச்சல் என இரண்டாவது படத்திலேயே ஆச்சரியம் காட்டுகிறார் ஜானி. ‘நாளைக் காலை 10 மணிக்கு வா போகலாம்’ என காயத்ரி சொல்ல, முதல் நாளிலிருந்தே காத்திருப்பது, காயத்ரியை ஈவ் டீசிங் செய்பவனை துரத்திச் சென்று துவைப்பது என ஒரு மனநோயாளி பெண்ணின் மனதுக்குள் செல்லும் அற்புத தருணங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். காயத்ரி அமைதியான அழகுப் பெண்.

யாருமற்ற விரக்தியை அப்படியே முகத்தில் பிரதிபலிக்கிறார். ஜானியின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொண்ட பின் தயக்கத்துடம் அவரை விரட்டியடிப்பது இயல்பான நடிப்பு. காதலுனுக்காக மகனையே புறக்கணிக்கும் கொடூர தாயாக யுவராணி மிரட்டுகிறார்.

அவர் காதலனாக நடித்திருக்கும் டாக்டர் சூரி, முகத்தில் அப்பாவி தனத்தை வைத்துக் கொண்டு தவறான மனிதராகப் பிரமாதப்படுத்துகிறார். குப்பை மேட்டில் ஜானி அவரை வதம் செய்யும் காட்சியில் கண்களில் அப்படி ஒரு மரணபயத்தை காட்டியிருக்கிறார் சூரி.

கரடுமுரடான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு அப்படியே பொருந்தியிருக்கிறார் ஜே.எஸ். ஜானியுடன் மோதும்போது உயிர் பயத்தில் அலறி அது மற்றொரு போலீசுக்கு தெரியும்போது அவமானத்தால் கூனி குறுகி யதார்த்தமாக நடித்திருக்கிறார். மற்றொரு மனநோயாளியாக சத்யேந்திரன் சிரிக்க வைக்கிறார். படத்தின் அத்தனை கேரக்டர்களும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
18 vayasu
18 vayasu

கொடூரமான காட்சிகளைகூட எல்லை மீறாமல் அதன் கனத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர். தினேஷ்-சார்லஸ் போஸ்கோ இசையில் நா.முத்துக்குமார், யுகபாரதியின் பாடல் வரிகள் சுகம். சக்தியின் ஒளிப்பதிவு சிறப்பு. மனநோயாளி ஜானியை அபார்ட்மென்ட் வாசிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? மரணத்தை எதிர்நோக்கும் மனநோயாளியை டாக்டரே சுதந்திரமாக உலவ விடுவது எப்படி? இரண்டு கொலை செய்தவரை கைது, கோர்ட், அல்லது போலீஸ் காவலில் சிகிச்சை என்று போகாமல் போலீசாரும் அவருடன் கண்ணாமூச்சி ஆடுவது ஏன்? ‘அவனுக்காக ரெண்டு புல்லட் லோட் பண்ணி வச்சிருக்கேன்’ என்று சொல்லும் போலீஸ் அதிகாரி, கிளைமாக்சில் வெறுங்கையோடு சென்று அடிவாங்குவது ஏன்? இப்படி கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
நன்றி வீரகேசரி

No comments: