இலங்கைச் செய்திகள்

.
 அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது 

மாத்தளனில் மீள்குடியேறிய மக்களின் அவலம்

யாழ். புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி

பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்தும் அதேவேளை இனப் பிளவுகளுக்கும் பாலம் போட வேண்டும்

மட்டக்களப்பில் படுதோல்வியடைந்த தமிழரசுக்கட்சி

காணிப் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு முக்கிய உத்தரவு

இன்றைய கிழக்கு மாகாணத் தேர்தலின் பின்னரான இந்திய வகிபாகம் என்ன?: பாஸ்கரா

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து 16 மைல் தொலைவில் படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.கைது செய்யப்பட்டோர் வவுனியா,யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிட்ட கடற்படைப் பேச்சாளர் அவர்களில்
8 சிறுவர்களும் 3 பெண்களும் அடங்குவதாகத் தெரிவித்தார். 


நன்றி வீரகேசரி

மாத்தளனில் மீள்குடியேறிய மக்களின் அவலம்முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அம்பலவன் பொக்கணை, ஆனந்தபுரம் கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நிர்க்கதியான நிலையில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சொந்தக் காணிகளில் கொட்டில், தறப்பாள் வீடுகளை அமைத்துக் குடியிருந்தால் மட்டுமே தற்காலிக வீடுகளைத் தருவோம் என தொண்டுநிறுவனங்கள் இந்த மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்ற ஆனந்தபுரம் கிருஷ்ணன்கோயில் சூழலிலும் அம்பலவன் பொக்கணை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதுமாத்தளன், மாத்தளன், பொக்கணை ஆகிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் பொதுமக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்து இப்பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையே இப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தியுள்ளனர்.

ஆனால் இந்த மக்களுக்குரிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக அம்பலவன் பொக்கணைப் பகுதியிலுள்ள குடிநீர்க்கிணறுகள் கூட இதுவரையும் சுத்தம் செய்யப்படவில்லை.

இக்கிணறுகள் இரும்புப் பொருட்கள் போடப்பட்டு மணலால் தூர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் சுத்தம் செய்ய முடியவில்லை.
இதனால் இம்மக்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணைப்பாலைப் பகுதிக்குச் சென்று குடிநீரைப் பெறவேண்டிய அவல நிலையிலுள்ளனர்.

(அஸ்வின்)
நன்றி வீரகேசரியாழ். புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி
By Priyarasa
2012-09-12
யாழ்ப்பாணம் புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கடந்தாண்டு யாழ்ப்பாணத்தில்; புற்று நோய் வைத்தியசாலை அமைக்கவென தென்னிலங்கை தெய்வேந்திர முனையில் இருந்து வடக்கின் பருத்தித்துறை முனை வரையான நடைபாதைப் பயணத்தின் மூலம் ரூபா ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை சேகரிப்பதற்காக ரயல் என்ற அமைப்புpன் ஏற்பாட்டில் நிதி சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணம் சேகரிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையிலும் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்;கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாததுடன் குறிப்பி;ட்ட நிதியும் உரியவர்களின் கைகளைச் சென்றடையவில்லையென்ற தகவலும் பரவலாகக் கசியத் தொடங்கியது.

இந்நிலையில் வலி. வடக்குப் பிரதேச சபை கடந்த மாதம் இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் தீர்மானத்தை நிறைவேற்றி வட மாகாண சுகாதாரத்திணைக்களப் பணிப்பாளர், செயலாளர் மற்றும் சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தீர்மானத்தின் பிரதி அனுப்பப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15 ஆம் திகதி புற்று நோய் வைத்தியசாலைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடப்படவுள்ளதாக வலி. வடக்குப் பிரதேச சபைக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் தினைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி
பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்தும் அதேவேளை இனப் பிளவுகளுக்கும் பாலம் போட வேண்டும்
-   ஆர்.ஹரிஹரன்.
 (பகுதி – 1)
முகவுரை
Hariharan19 மே,2009 ல் ஸ்ரீலங்கா இராணுவம் 25 நீண்ட வருடங்களாக ஒரு தேசிய சோதனையாக  வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினரது கைகளில் அகப்பட்டு தத்தளித்த பிரச்சினையை முடித்து வைத்த பிறகு ஏற்பட்டுள்ள மீள் எழுச்சியில் ஸ்ரீலங்கா தன்னை அகத்தூய்மைப்படுத்தி வருகிறது. 1983லிருந்தே ஸ்ரீலங்கா, எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதிராக மூன்று கட்டப் போரை முன்னெடுத்த போதிலும், அவை ஒரு இக்கட்டான நிலையையே அதற்கு ஏற்படுத்தியிருந்தது.
இறுதி வெற்றி 2006 நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது கட்ட ஈழப்போரிலேயே பெறப்பட்டது. அந்த வெற்றி மிகப்பெரிய விலை கொடுத்தே பெறப்பட்டது – 24,000 படைவீரர்கள், 27000 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள், மற்றும் சுமார் 80,000 பொதுமக்கள் ஆகியோரின் உயிர்களை பலிகொடுத்து. மில்லியன் ரூபாக்கள் பெறுமதியான உட்கட்டமைப்புகள், பொருட்கள், மற்றும் குடியிருப்புகள் என்பன இதன்போது அழிக்கப்பட்டன.
உலக அளவில் ஸ்ரீலங்காவின் வெற்றி எப்படி ஒரு உறுதியான தேசியவாத தலைமை, வலுவான, சர்வதேச வலையமைப்பை கொண்ட ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினரை உறுதியாகத் தோற்கடிக்க முடியும் என்பதை எடுத்து விளக்குவதாக இருந்தது. ஒரு ஆற்றல்மிக்க இராணுவத் தலைமை, சோர்வுற்ற நிலையிலிருந்த இராணுவத்தை, வெற்றி பெறும் சக்தியாக மாற்றி, எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 16,000 சது.கிலோ மீற்றருக்கும் மேலான பரப்பளவு கொண்ட பிரதேசங்களை திரும்ப கைப்பற்றமுடியும் என்பது இதன்மூலம் நிரூபணமானது. எல்.ரீ.ரீ.ஈ யினர் ஜூலை 2001ல் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது வியத்தகு தாக்குதல் நடத்தி  17 விமானங்களை தகர்த்ததின் மூலம் பாதிக்கப்பட்டிருந்த சிங்கள சமூகத்தின் இனப் பெருமை திரும்பவும் மீட்கப்பட்டது. மேலும் இந்த வெற்றி சிங்கள பேரின வாதத்தின் வெற்றிப் பெருமிதத்தின் எல்லைமீறிய உயர்ச்சி மற்றும் அடிப்படைவாத பௌத்த சக்திகள் அரசியலில் தங்கள் இடத்தை மீள்பரப்பு செய்யவும் இடமளித்தது. இது வெளிப்படுத்துவது, சிறுபான்மை இனத்தவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்காக உலகம் கூறும் பரிந்துரைகள் என்பனவற்றை ஸ்ரீலங்கா பாதிக்கப்படத் தக்க விதமாகவே பார்க்கிறது என்பதையே.
நாடானது போரினால் சீரழிந்த வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் மிகப் பாரிய கட்டமைப்புகளையும்  மற்றும் புனர்வாழ்வு திட்டங்களையும் மேற்கொண்டிருந்த போதிலும், ஊடக சுதந்திரம் உட்பட்ட அடிப்படை சுதந்திரங்களை ஒடுக்குவதற்கும் மற்றும் மனித உரிமைகளை மொத்தமாக மீறல் செய்வதற்கும் அச்சுறுத்தல் மற்றும் சட்ட அனுகூலங்களை, இரகசியமாகவும் பரகசியமாகவும தவறாக பயன்படுத்தல் போன்றவை நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அமைச்சர்களும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் தொடர்ந்தும் பொறுப்புக்கூறும் தன்மையற்று நடந்துகொள்கிறார்கள். ஊழல் எங்கும் பரவியுள்ள நோயாக மாறிவிட்டது. சிவில் சமூகங்களையும் மற்றும் எதிர்கட்சியையும் பொறுத்தமட்டில் இந்த வரைவிலக்கணங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது, அல்லது அவைகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது எனக் கருத வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின் சில சாதகமான நடவடிக்கைகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தை நிர்வகித்தல் மற்றும் சுற்றுலாத்துறை வர்த்தகத்தை சீராக்குதல் போன்றவைகளுக்கு ஊறு விளைவிக்கின்றன.
தொடரான யுத்த முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை வற்றச் செய்துள்ளதுடன், வளர்ச்சியையும் கட்டுப்படுத்தியுள்ளன .300,000 மேலான வடமாகாண மக்கள் தங்கள் சொந்தங்கள், வாழ்வாதாரங்கள், வீடு,காணி போன்ற சகலதையும் இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பில்லியன் கணக்கிலான ரூபா மதிப்பிலான உட்கட்டமைப்புகள், பொதுச் சேவை வசதிகள், மற்றும் வீடமைப்புகள் யாவும் அநேகமாக திரும்பத் திரும்ப அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன. 90,000 மேற்பட்ட பெண்கள் விதவைகளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
மூன்று வருட சமாதான காலத்தில் ஸ்ரீலங்காவின் செயல்பாடுகள் ஒரு கலவையான வெற்றி என்றே கூறவேண்டும். புனர்வாழ்வு முயற்சிகள் ஒரு பகுதியளவே வெற்றியடைந்துள்ளன, ஏனெனில் அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறுபான்மை தமிழர்களின் அபிலாஷைகளின் உணர்வு என்பன குறைவாகவே உள்ளன. போருக்கான மூல காரணம் - சிறுபான்மை தமிழர்களிடம் காணப்படும் சமத்துவமற்ற உணர்வு - இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. வெளிப்படையாக காட்சிதரும் பெருந்தொகையான படைவீரர்களின் இருப்பு, குடிமக்களின் நாளாந்த வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. இந்த வகையான விவகாரங்கள் தொடருமானால், தமிழ் ஈழம்தான் முக்கியம் என மீண்டும் ஒருமுறை அணி திரண்டு கோரிக்கை எழுப்பும் நிலை தோன்றும்.
இவை அனைத்துக்கும் மையமாக இருப்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள். இராணுவ வெற்றியின் தலைமை சிற்பியான இவர்,முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களை தேர்தலில் தோற்கடித்து தேசிய ரீதியாக தத்துப்பிள்ளையாக மாறிய பின்னர், யாராலும் சவால் விடுக்க முடியாத தேசிய தலைவராக உருவெடுத்துள்ளார். 2010ல் ராஜபக்ஸ தனது இரண்டாவது ஆறு ஆண்டு பதவிக் காலத்துக்கான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு தான் பெற்றிருந்த புகழை கணிசமானளவு பயன்படுத்தினார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்(யு.பி.எப்.ஏ) தலைவராக  இருந்தவேளை முன்னோடியில்லாத வகையில் 2011 பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும்படியாக தன்னை வலுப்படுத்திக் கொண்டார். பாராளுமன்றத்தில் தனக்கிருந்த இந்த மகத்தான வலிமையை பயன்படுத்தி அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு தடவைகள் மட்டுமே என்று கட்டுப்படுத்தியிருந்த  முன்னைய திருத்தத்தை அகற்றும் வகையில் 18வது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது இரண்டு சகோதரர்களான பசில் மற்றும் கோத்தபாயா என்பவர்களை தேசிய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பனவற்றில் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்திக் கொண்டு  பாராளுமன்றத்தை வெறும் இரப்பர் முத்திரையாக மட்டும் பாவித்து நாட்டை ஆள்கிறார். தனது கூட்டணியில் உள்ள 17 கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்து அவர்கள் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக வுடன் சேரும் எண்ணத்தை தோன்றவிடாமல் முன்னெச்சரிக்கையாக தடுத்து வருகிறார். அவர் ஏற்கனவே சிங்கள இடதுசாரி கட்சியான ஜேவிபியின் அங்கத்தவர்களை தனது கூடாரத்துக்குள் கவர்ந்து இழுத்து அதனையும் நடுநிiயாக்கியுள்ளார். அதன்படி அவர் இப்பொழுது யாராலும் வெல்ல முடியாத, அதிகாரத்தை மத்தியில் கொண்டுள்ளவராக விளங்குகிறார். ,உண்மையில் இன்று நாட்டில் நாளுக்கு நாள் வெளிப்படையாக காண்பிக்கப்படும் விவகாரங்கள் மூலம் இது தெளிவாகிறது. எனவே இந்தியா - ஸ்ரீலங்கா எதிர்கால உறவுகளை கணிப்பிடும்போது, அவரது அரசியல் மற்றும் ஆட்சி நடத்தும் பாணி என்பனவற்றை நன்கு விளங்கிக் கொள்வது அவசியம்.
2010ம் ஆண்டு முதல் ராஜபக்ஸ தனது இரண்டாவது பதவிக் காலத்தில் உள்ளார். 2005ம் ஆண்டு ஐதேக வை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்காவை மிகச் சிறிய பெரும்பான்மை மூலம் தோற்கடித்து அவர் ஜனாதிபதியாக தெரிவானார். எல்.ரீ.ரீ.ஈ க்கு நன்றி சொல்லும் விதமாக அதன் தயவுடன், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடந்த தேர்தல்களை பகிஷ்கரிக்கும் செயல்பாடுகள் காரணமாக விக்கிரமசிங்காவுக்கு தமிழ் வாக்குகள் கிடைப்பதில் இழப்பு உண்டானது, இந்த புறக்கணிப்பை நடத்தும்படி ராஜபக்ஸவின் நண்பர்கள் எல்.ரீ.ரீ.ஈ க்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
ராஜபக்ஸ தனது தேர்தல் பிரச்சாரங்களில், விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது எற்படுத்தப்பட்ட 2002 சமாதான நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் வளர்ந்திருந்த மாயத் தோற்றத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். திறமையற்ற சமாதான நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவுகட்டி எல்.ரீ.ரீ.ஈயினரை ஒரு வழிக்கு கொண்டுவருவதாக அவர் சபதம் ஏற்றிருந்தார். அவருக்கு முன்பு பதவியிலிருந்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ அரசுக்கு எதிராக விடுக்கும் சவால்கள் யாவற்றையும், சுயாட்சி கோரிப் போராடும் தமிழ் இனத்தவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதினார்கள். எனவே அவர்களது அணுகுமுறை இராணுவ நடவடிக்கை மற்றும் தமிழ் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை சமமாக பகிர்ந்தளிக்கும் பரந்த விடயத்துக்கு தீர்வுகாண்பதை இலக்காக கொண்டு நடத்தப்படும் சமாதான பேச்சு வார்த்தைகள் ஆகிய இடையே அலைந்தது.
போருக்கு பின்னர், ராஜபக்ஸ தான் பெற்றிருந்த மகத்தான புகழை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வதற்காக, தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான ஜனாதிபதி தேர்தலை, ஒரு வருடம் முன்பாகவே 2010 ல் நடத்தினார். இதற்கிடையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட அவரது எதிராளியான ஜெனரல் சரத் பொன்சேகாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெற்றன. தேர்தல் சமயத்தில், வாக்களிப்பு முடிவடைவந்து கொண்டிருக்கும்போதே ,அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள், சேவையில் உள்ளபோதே அரசியலில் ஈடுபட்டமை, அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தமை, மற்றும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை போன்ற பல வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன. இதனால் ஜெனரல் தனது பதவித் தரங்களை இழந்ததோடு அவருக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அவர் ஆட்சி நடத்தும் விதத்தை யாரும் விமர்சிப்பதை அவர் சகித்துக் கொள்ளமாட்டார் என்பதையும்கூட அவர் வெளிக்காண்பித்துள்ளார். அவரை ஊடகங்களில் விமர்சித்த சிலர் காணாமல் போனார்கள், அரசாங்கத்துக்கு எதிராக மிகவும் முக்கியமான  நிலைப்பாட்டை எடுத்திருந்த உயர்ந்த தகுதிகளை கொண்ட சண்டே லீடர்  ஆசிரியர், லசந்த விக்ரமதுங்க ஜனவரி 2009 ல் சுட்டுக் கொல்லப்பட்டார். பொதுசனத் தொடர்பு அமைச்சராக உள்ள மேர்வின் சில்வா அரசியல் எதிரிகள் மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாகினிக் கூட்டுத்தானத்தின் செய்தி பணிப்பாளர் ரி.எம்.ஜி சந்திரசேகரவை 2007 டிசம்பரில்  தாக்கியது உட்பட பல ஊடகவியலாளர்கள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தி மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருந்தார்.ஏப்ரல்  2012ல் ஜெனிவாவில் உள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் (யு.என்.எச்.ஆர்.சி) கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டதற்காக சில ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் பணியாளர்கள் ஆகியோரின் எலும்புகளை உடைப்பேன் என்று சில்வா பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இராணுவ வெற்றியினால் தூண்டப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்களின் எழுச்சியினால், கிறீஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தும் இடங்களுக்கு எதிராக பௌத்த தீவிரவாதிகள் நடத்திவரும் பிரச்சாரங்களில் ஒரு நிலையான அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்துக் கோவில்களை அகற்றப்போவதாக அச்சுறுத்தல்களும் விடப்பட்டுள்ளன. ஆளும் கூட்டணியில் ஒரு அங்கமாகவுள்ள பௌத்த வலதுசாரிக் கட்சியான ஜாதிக ஹெல உருமய, இந்த பிரசாரங்களுக்கு தலைமை ஏற்றுள்ளது. ஜாதிக ஹெல உருமய முன்னணி வகிக்க மே மாதத்தில் பிக்குகள் தலைமையிலான சிங்களக் கும்பலொன்று தம்புள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகையில் அதன்மீது தாக்குதல்கள் நடத்தியது, மற்றும் இதேபோன்ற மற்றொரு தாக்குதல் ஜூன் மாதம் தெகிவளையிலுள்ள மதரசா ஒன்றிலும் நடைபெற்றுள்ளது. இப்படியான விடயங்களை நிருவாகம் மிகவும் எச்சரிக்கையாகவே கையாளுகிறது.
ராஜபக்ஸவின் அரசாங்கம் அளவுக்கதிகமான பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டுள்ளது. வலதுசாரி சமயவாத சக்திகளின் தீய செயல்களுக்கு துணை செய்வதை வாக்கு வங்கி அரசியல் என தட்டிக்கழித்துவிட முடியாது. அநேகமாக இந்த வலது சாரிகளின் அச்சுறுத்தல்களை மென்மையான அணுகு முறைகளுடன் கையாளும்  போக்கு, விளக்குவது மத அடிப்படைவாதிகளின் செயல்களைக் காட்டிலும் ஜனாதியின் அரசியல் சுயநலத்தையே. தென்பகுதி சிங்களவர்களின் ஆதரவு அடித்தளத்தை கூடியளவு உயர்த்த எண்ணுவதுதான் அவரது நோக்கமாக இருந்தால் வரும் வருடங்களில் அரசியலில் மத பேரினவாதம் நடத்தப்போகும் இன்னும் அதிக விளையாட்டுகளை ஒருவர் எதிர்பார்க்கலாம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாணியிலுள்ள ஒரு முக்கிய அம்சம், நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதில் வெளியாரின் தலையீடுகளை எதிர்க்கும் அவரது உறுதியான நிலைப்பாடுதான். ஸ்ரீலங்கா தனது பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் வளர்க்கப்படும் தீர்வுகளிலேயே தங்கியிருக்கும் என அவர் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். அப்படியான நிலைப்பாடு, தென்பகுதி பழமைவாத சிங்களவர்களின் வாக்குகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு விண்ணப்பம் என்று அவருக்கு நன்கு தெரியும்.
மூலோபாயத்தின் உட்பொருள்
நான்காம் கட்ட ஈழப்போர் வெளிக்காட்டுவது, ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள், நிலத்தை தளமாக கொண்ட வலுவான பன்முகத்தன்மை கொண்ட இராணுவ ஆதிக்க சக்திகளாக பட்டம் பெற்றவர்கள்,பெரிய அளவான படைகளை பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தி ,சிக்கலான நடவடிக்கைகளை திட்டமிட்டு நிறைவேற்றுதில் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் தங்கள் இராணுவ திறமைகளை வரும் வருடங்களில் தொடர்ந்தும் தீட்டி வருவார்களானால், நிச்சயம் அவர்கள்தான் ஒரு முதல்தர படையாக இருப்பார்கள். இராணுவம் சுமார் 200,000 பேர்களை கொண்டு 13 பிரிவுகளாகவும் மற்றும் சில சுயேச்சையான படையணிகளாகவும் வலுவாக அமைக்கப்பட்டது. இந்தப் பிரிவுகள் ஓரளவு சிறியதாகும், இந்திய தரைப் படைப் பிரிவுகளை காட்டிலும் குறைந்தளவு ஆதரவு ஆயுதங்களை கொண்டவை.
ஆயுதப்படைகள், ராஜபக்ஸவின் தலைமையையும் , மற்றும் தாங்கள் வெற்றி பெறுவதற்காக அரசாங்க இயந்திரங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்களுக்கு வழங்கிய ஆதரவையும் உணர்ச்சி பொங்க எண்ணுகிறார்கள். ஜெனரல் சரத் பொன்சேகாலை பழிவாங்கும் தன்மையுடன் கையாண்ட ராஜபக்ஸவின் செயல் சில அதிகார தரத்திலுள்ள இராணுவத்தினரிடையே அமைதியின்மையை ஏற்படுத்தினாலும் பின்னர் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியான லெப்.ஜெனரல்  ஜெகத் ஜெயசூரியா இராணுவ தளபதியாக பொறுப்பேற்றதும், ஜெனரல் பொன்கோவுக்கு ஆதரவான பணியாளர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டனர். இப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தன்னால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதிகளின்  தனிப்பட்ட விசுவாசத்தை தொடர்ந்தும் சோதிக்க வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது இராணுவ தளபதி மற்றும் மூத்த அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக வந்ததே இதற்கு சான்று.
இதன்படி இராணுவ படையினர், நாட்டில் மேலதிக அதிகார மையமாக எழக்கூடிய முக்கியத்துவம் பெறக்கூடிய வகையில் நுட்பமான அரசியல் மயமாக்கலுக்கு ஆளாகியுள்ளனர். அத்தகைய அதிகார மையத்தின் கீழுள்ள இலட்சிய தளபதிகள் ,ஜனநாயக கோளத்துக்கு வெளியில் அரசியலில் ஈடுபாடு கொள்வதால் சில நிலையற்ற தருணங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் காரணிகளாக மாறிவிடுகிறார்கள்.எதிர்காலத்தில் படைவீரர்களின் பங்கு, ஜனாதிபதி தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அவர்களை எப்படி பயன்படுத்தப் போகிறார்  என்பதிலேயே பெருமளவு தங்கியுள்ளது. எவ்வளவு அதிகம் அவர்கள் அவரது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கிறார்களோ அவ்வளவு அதிகம் அவர்கள் அரசியல் மயமாக்கப்படுவார்கள்.
இந்த செயல்பாடு ஏற்கனவே வடமாகாணத்தில் நடைபெறுவதாக தோன்றுகிறது, போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகிவிட்ட போதிலும் இராணுவத்தின் 13 பிரிவுகளில் 9 பிரிவினர்கள் இன்னமும் வட மாகாணத்திலேயே நிலை கொண்டுள்ளார்கள். இது 9.97 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு பிரதேசத்தில் 150,000 படைவீரர்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளார்கள். அதாவது 25 வருடங்களாக நடைபெற்று வந்த போரின் கொடுமையிலிருந்து மீண்டுவர பாடுபடும் குழந்தைகள் பெண்கள் உட்பட்ட, ஒவ்வொரு ஆறு பொதுமக்களுக்கும் ஒரு இராணுவ வீரன் என்கிற அடிப்படையில்.அது ஒரு தவறான செய்தியை குறிப்பாக இன நல்லிணக்க நடவடிக்கைகள் இன்னும் முற்றாக ஆரம்பிக்க படவில்லை என்கிற செய்தியை அனுப்புகிறது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர், இத்தகைய பெருந்தொகையான இராணுவம் நிலை கொண்டிருப்பதை நியாயப்படுத்தி மூன்று காரணங்களை தெரிவிக்கின்றனர், படையினரை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தி உள்ளமை, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளில் உதவுதல்,மற்றும் நாட்டின் எந்த இடத்திலும் பிரசன்னமாக இருக்கும் உரிமை இராணுவத்துக்கு உள்ளது என்பனவே இந்தக் காரணங்கள்.
ஸ்ரீலங்கா யுத்தத்தை முன்னெடுத்த வழி தொடர்பாக தெற்காசியாவுக்கு, பொதுவாக குறிப்பிடுவதானால் இந்தியாவிற்கு சில மூலோபாயக் கருத்துகள் உள்ளன. எல்.ரீ.ரீ.ஈ யை அழித்தொழித்த யுத்தம்,ஏனைய போராளிக் குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. அது அந்தப் பிராந்தியத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் முக்கியத்துவத்தை ஒரு உறுதியற்ற சக்தியாக முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்ரீலங்காவின் வெற்றி தெற்காசியா முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களுடன் முடிவில்லா போர்;களைப் புரிந்து அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை வழங்க வேண்டும்.
மற்றொரு கேள்வி ஸ்ரீலங்காவுக்கு இவ்வளவு பெரிய இராணுவம் அவசியமா என்பதுதான். தமிழர் போர்க்குணம் அதன் எழுச்சியின்போது, பெருமளவு கைவிடுகை, சட்டவிரோத ஆயுதப்பரவல், குடிமக்கள் களத்தில் இராணுவ புலனாய்வுக்கான வேலைவாய்ப்புகள், மற்றும் சுடுகலன்களை பயன்படுத்தி குற்றவியல் செயல்களை புரிதல் உட்பட்ட செய்கைகளினால் சமூகத்தை ஒரு போராளித் தன்மையானதாக மாற்றியிருந்தது. இதற்கு ஒரு முடிவு வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
(தொடரும்) நன்றி தேனீ  

மட்டக்களப்பில் படுதோல்வியடைந்த தமிழரசுக்கட்சி
அஸ்வின் மித்ரா
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களை களமிறக்கிய போதும் ஆக இரண்டே, இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளனர். ஏனைய 04 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டு போட்டியிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட துரைரெட்ணம் (நுPசுடுகு) அமைப்பினையும், ஜனா மற்றும் பிரசன்னா இருவரும் (வுநுடுழு) அமைப்பினையும், வெள்ளிமலை தமிழர் விடுதலைக் கூட்டணியினையும் பிரதி நிதித்துவப்படுத்தி நிற்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 06 பேரில் துரைராஜசிங்கம், நடராஜா ஆகிய இருவர் மாத்திரமே தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர்.
அதிலும் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு விருப்புவாக்கு அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இரண்டாம் நிலையில் இருக்கும் துரைராஜசிங்கம் பெற்றுக் கொண்ட 27717 விருப்புவாக்குகளும் அவருக்கு மட்டும் உரித்தானவை அல்ல.
அவர் தனியாகப் பெற்றுக் கொண்டவை 17903 விருப்பு வாக்குகள் மட்டுமேயாகும். மேலதிகமாகக் கிடைத்த வாக்குகள் அனைத்தும் துரைரெட்ணத்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளினூடாக இரண்டாம் பட்சமாகப் புள்ளடியிடப்பட்டு துரைராஜசிங்கத்தைச் சேர்ந்தவையாகும்.
கல்குடா தொகுதியின் தேர்தல் பெறுபேறுகளை வைத்து பார்க்கும் போது யோகேஸ்வரன் எம்.பியின் செல்வாக்கு கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது வெட்ட வெளிச்சமாகிறது. காரணம் யோகேஸ்வரன் எம்.பியால் பரிந்துரைக்கப்பட்டு தமிழரசுக் கட்சியால் களமிறக்கப்பட்ட கதிரவெளியைச் சேர்ந்த சிவநேசன் மற்றும் சந்திவெளியைச் சேர்ந்த சேயோன் ஆகிய இருவரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இவர்களுடைய தோல்வி யோகேஸ்வரன் எம்.பியின் வீழ்ந்து வரும் செல்வாக்கின் எதிரொலியாகவே பார்க்கப்படுகின்றது.
அடுத்ததாகப் பார்க்கும் போது பாhரளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் பரிந்துரை செய்து கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினர்களுள் நடராசா தவிர்ந்த மூன்று உறுப்பினர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர். ஈச்சந்தீவு யோகானந்தராசா, களுதாவளையைச் சேர்ந்த குணம், பழுகாமம் ஏ.சு.மகேந்திரன் ஆகிய மூவருமே இவ்வாறு தோல்வியடைந்தவர்களாவர். அரியநேந்திரன் இவர்களுக்கு ஆதரவாக மேற்கொண்டு வந்த பலமான பிரச்சாரங்களையும் தாண்டித் தாக்கம் செலுத்தியுள்ள இந்தத் தோல்வியானது அரியநேந்திரனது செல்வாக்கினையும் அசைத்துக் காட்டியிருப்பது புலனாகின்றது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மாற்றுக் கூட்டணி கட்சிகளினுடைய வெற்றியும், தமிழரசுக் கட்சியினரது இழப்புக்களும் ஆழமாக ஆராயப்படுமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மாற்றுக் கட்சிகள் “இளநீர் குடிக்க, தமிழரசுக் கட்சி குரும்பை சுமந்த” கதையாகி நிற்கின்றது. இதுவே யதார்த்தமுமாகும். நன்றி தேனீ 

காணிப் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு முக்கிய உத்தரவு
பி.பி.சி
slarmyலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கான, மீள்குடியேற்றத்தின்போது ஏற்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைகளில், காணிகளில் முதலில் குடியிருந்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து, தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அசோகா பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..
அரச காணிகளில் நீண்டகாலமாக யாரேனும் குடியிருந்திருப்பார்களேயாளால், அவர்கள் தொடர்பான முழு விபரங்களையும் திரட்டியபின்னர், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அதிகாரி ஆகியோருடன் இணைந்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் குறியுள்ளார்.
அதன் அடிப்படையில் பொருத்தமான வகையில் அந்தக் காணிகளை அவர்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
போரினால் இடம் பெயர்ந்து, சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுபவர்கள் வவுனியா மாவட்டத்தில் எதிர்நோக்கியுள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அவர் வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இனம் காணப்பட்ட வவனியா மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள் குறித்து நேரடியாக அறிந்து தீர்வு காண்பதற்காகவே இன்றைய விஜயத்தைத் தான் மேற்கொண்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய வயல்கள் மற்றும் தோட்டக்காணிகளில் பாதுகாப்புப் படையினர் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் முறையிட்டிருக்கின்றார்களே என காணி அமைச்சின் செயலாளரிடம் கேட்டதற்கு, இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கனவே, அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட காணிப்பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்து பேச சுமுகமாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அசோகா பீரீஸ் தெரிவித்தார்.
சில வேளைகளில் இத்தகைய காணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய நேரிடலாம் என்றும் இருந்தாலும் முன்னர் குடியிருந்த மக்களுக்கே முதல் உரிமை கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான இடங்களில் இராணுவத்தினருக்குத் தேவையான நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலைமை இருக்குமானால், காணி உரிமையாளர்களாகிய குடும்பங்களுக்கு வேறிடத்தில் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். நன்றி தேனீ


இன்றைய கிழக்கு மாகாணத் தேர்தலின் பின்னரான இந்திய வகிபாகம் என்ன?: பாஸ்கரா
By General
2012-09-13
நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின் இந்தியாவின் பங்கு எவ்விதத்தில் அமையவுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கடந்த பல தசாப்த காலமாக வடக்கு, கிழக்கு மாகாணத் தீர்வு விடயங்களுக்காக இந்தியா தனது ஆதிக்கத்தை ஆங்காங்கே செலுத்தி வந்தமை தெரிந்ததே. கடந்த முறை தேர்தலில் கூட தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக வருவதற்கு மறைமுக இந்தியத் தலையீடு இருந்ததைத் தட்டி கழிக்க முடியாது. அதுமட்டுமன்றி ராஜிவ்காந்தி,ஜயவர்த்தனா கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் வடக்கு, கிழக்கு இணைந்த மானிலம் என்பது தெட்டத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இந்திய இராணுவ ஆதரவுடன் வடக்கு, கிழக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழப் பிரகடனம் செய்து இலங்கையில் இருந்து வெளியேறியது போன்ற எல்லா நிழ்வுகளிலும் இந்தியத் தலையீடு இருந்ததை மறுதலிக்க முடியாது.

காலப்போக்கில் இலங்கை அரசு வடக்கு, கிழக்கை தனி மாநிலமாக்கிய போது கூட இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்ததைக் காணகூடியதாகவுள்ளது.

மேற்கத்தேய நாடுகளின் பிரசன்ன அரசியலில் தீர்வு முயற்சிகளின் போது கூட இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழ்க் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த கூட்டணி ஆட்சி அமைக்காது அரசு சார்ந்த கூட்டணி அமைவானது இந்தியாவின் இலங்கை சார்ந்த கொள்கை முன்னெடுப்பில் பாரிய முட்டுக்கட்டையாயும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் பாரிய பின்னடைவும் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனைக் கருத்திற் கொண்டு இந்தியா சில தீர்க்கமான முடிவு எடுப்பது காலத்தின் தேவையாகும்.
 நன்றி வீரகேசரி

No comments: