நெருப்பின் கனல் -கவிதை - செ.பாஸ்கரன்

.

 
அவள் விழியோரங்களில் கண்ணீர்த் துளி
நெஞ்சு விம்மி தணியும் சோகம்
ஆண்துணை இல்லாதவள் என்று
அழைக்கும் குரல்கள் அவளை அச்சமூட்டியது
நட்பின் போர்வையில் புகுந்து கொண்டு
நடிக்கும் ஆண்களின் அரக்கத்தனம்
அவளை ஆத்திர மூட்டியது
அவளின் விசும்பும் ஒலிகளுக்குள்
வெட்டருவாள்போல் விழுகின்ற வார்தைகள்
அவன் நட்புடன்
செவிமடுத்துக் கொண்டிருந்தான்
இவனாவது நண்பனாய் இருக்கிறானே என்ற
நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.
தேனீர்க்கோப்பையை அவனுக்காய் நீட்டினாள்
தளிர் விரல்கள் நர்த்தனமாடின
வாங்கும் தருணத்தில்
அவள் விரல்களையும் தீண்டிக்கொண்டான்
தற்செயல் என்று அவள் சிரித்தாள்
தனக்கான அங்கீகாரம் என அவன் நினைத்தான்
பேசிக் கொண்டிருந்தவளின் சின்ன விரல்களை
பற்றிக்கொண்டவன் பார்வையில்
நட்பிற்கு பதிலாய் காமம் தெரிந்தது
அவள் தலைகவிழ்ந்தாள்
நட்பின் விழுமியங்களும் கவிழ்ந்து கொண்டது
இப்போது அவள் விழிகளில்
தெரிவது கண்ணீரல்ல
நெருப்பின் கனல் ,
அவள் நிமிர்ந்து கொண்டாள்.

No comments: