இதுவரையில்
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக அல்லது பாதுபாப்பற்ற சூழல் காரணமாக
இலங்கைக்குள் இடம்பெயர்ந்த, இலங்கையைவிட்டு இடம்பெயர்ந்த அல்லது
புலம்பெயர்ந்த மக்களின் எண்னிக்கையின் புள்ளிவிபரங்கள் பற்றி எவருமே
கவலைப்படுவதில்லை. யுத்தத்தால் மரணித்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை பற்றி
தமிழர் தரப்பில் ஒரு புள்ளிவிபரமும் இலங்கை அரசு தரப்பில் இன்னொரு
புள்ளிவிபரமும் இருப்பதால், இதில் எந்த புள்ளிவிபரம் சரியென்பதும்
எவருக்கும் தெரியாது. புலம்பெயர்ந்த மக்களை மரணித்தவர்கள் அல்லது காணாமல்
போனவர்கள் பட்டியலில் சேர்ப்பதில் பூரிப்பவர்களும் நம்மிடையே இருப்பதால்,
இலங்கைக்கு வெளியே உயிர் வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கையின்
புள்ளிவிபரங்கள் ஓரளவிற்கேனும் சரியாக கணக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான
கணக்கெடுப்பு, இலங்கையின் மனிதவளத்தில் எவ்வளவு வீதத்தினரை
இழந்திருக்கிறோம் என்பதை அறிவதற்கும் உதவியாக இருக்கும்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் யுத்தம் நின்றுவிட்டது. யுத்தத்தால் மரணித்தல் என்பது எல்லா தரப்பிலும் (யுத்தத்தில் ஈடுபட்டவர்கள், பொதுமக்கள், மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள்) நின்றுவிட்டது. ஆனால் யுத்தத்தை காரணங்காட்டி வளர்ச்சியடைந்த நாடுகள் நோக்கிய புலம்பெயரும் மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. இலங்கையில் இன்னமும் பாதுபாப்பற்ற சூழல் நிலவுகின்றது, அதன் காரணமாக தமிழர்கள் இலங்கையைவிட்டு வெளியேறுகிறார்கள் என்ற வகையில் அரசியல் செய்பவர்களுக்கு, தொடரும் இந்த புலப்பெயர்வு நன்கு துணைபுரிகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் (இலங்கையின் வடக்குக் கிழக்குவாழ் தமிழர்கள் மாத்திரமன்றி சிறிய தொகையிலான தென்னிலங்கை மக்களும் இதில் உள்ளடக்கம்) மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளனர். இதில் பெருமபாலானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கே படகுகள் மூலமாக சென்றுள்ளதாக தெரிகின்றது. இலங்கையில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அவுஸ்திரேலியா நோக்கிய இலங்கையர்களின் படகுப்பயணம் முதலில் தாய்லாந்து, இந்தனோசியா போன்ற நாடுகளிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கேரளாவின் கடற்கரையோரப் பகுதிகளும் இந்த பயணத்திற்கு ஏறுதுறையாக இருந்தது. (இந்தியாவின் மேற்கு கடற்கரை பிரதேசத்திலிருந்து, இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அவுஸ்திரேலியா நோக்கிய பயணம்) தாய்லாந்து, இந்தனோசியா, கேரளா போன்ற இடங்களில் கெடுபிடிகள் அதிகமாக, இப்போது இலங்கைத்தீவின் கடற்கரையோரங்கள் தாரளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான படகுகள் நீண்ட ஆழ்கடல் பயணத்துக்கு ஒவ்வாத சாதாரண மீன்பிடிப்படகுகள். இந்த பழைய இத்துப்போன படகுகளை ‘பிரயாண முகவர்கள்’ கொள்வனவு செய்து, அவற்றினை அவுஸ்திரேலியா நோக்கிய ஒருவழிப் பயணத்தில் ஈடுபடுத்துகின்றனர். மிகவும் ஆபத்து நிறைந்த இந்த படகுப்பயணத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் (சிலவேளைகளில் ஆயிரக்கணக்கானவர்களாக கூட இருக்கலாம். ஏனெனில் புறப்படுபவர்கள், வழியில் இறப்பவர்கள், கரை சேருபவர்கள், எத்தனை பேர் என்பதைக் கணக்கிட யாரிடம் பயணப்பட்டியல் இருக்கின்றது?) இறந்திருப்பதாக ஊடகச்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகளவினர்களாக காட்ட முனைபவர்கள், இவ்வாறு படகுப்பயணத்தில் இறப்பவர்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஏனெனில் இந்த இறப்பில் யாரிடம் போர்க்குற்றம் காணுவது என்பது இவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
1971 ஆண்டு ரோகண விஜேவீரா தலைமையிலான ஜே.வி.பி. கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இலங்கையைவிட்டு வெளியேறி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி புகலிடம் பெற்றதிலிருந்தே, இலங்கையர்களின் புகலிட வாழ்க்கை ஆரம்பித்தது எனலாம். எனினும் தமிழர்களின் பெயர்வே புகலிடத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது. 1977 ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் திறந்த, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளாலும் இனவாத ஒடுக்குமுறை காரணமாகவும், 1980களிருந்து பெர்லினை நோக்கி பல ஆயிரக்கணக்கான வடபகுதி தமிழ் இளைஞர்களை பயணிக்க வைத்தது. இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தவர்கள், மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள்வரை சென்று, அந்தந்த நாடுகளின் பிரஜா உரிமை பெற்று வாழும் இவர்கள், இன்று புகலிடத்தமிழர்கள் என்ற புதிய இனப்பிரிவினரை தோற்றுவித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தொடரும் இந்த புலப்பெயர்வால், இலங்கையில் குன்றிவரும் மனிதவளம் பற்றி இவர்கள் மாத்திரமன்றி, எவருமே அக்கறைப்படுவதில்லை
நன்றி: வானவில / தேனீ
No comments:
Post a Comment