வானொலி மாமாவின் குறளில் குறம்பு 39 – எங்கே பாயிரம்




ஞானா:        அப்பா…..அப்பா…. உங்களை ஒண்டு கேக்கவேணும். தயவுசெய்து பதில்  சொல்லுவியளே?

அப்பா:        ஞானா, நீவந்து ஒண்டெண்டு சொல்லிக் கொண்டு ஒன்பது கேப்பாய். உன்ரை கேள்வியளுக்கு மறுமொழி சொல்லி நான் களைச்சுப்போனன். அங்கை அம்மா வாறா, அவவிட்டையே உன்ரை கேள்வியளைக் கேள்பிள்ளை.

சுந்தரி:      ஏனப்பா அவள் பிள்ளையைத் தட்டிக் கழிக்கிறியள். நாலும் தெரிஞ்ச மனிசன என்டுதானே உங்களைக் கேள்விகேக்க வாறது…. நீ என்ன கேக்கப்போறாய், கேள் தெரிஞ்சால் நான் சொல்லிறன் ஞானா.

ஞானா:    அதுவந்தம்h, பாயிரம் என்டால் என்ன எண்டு கேக்கத்தான் வந்தனான். ஆனால் அப்பாவுக்கு கருத்து எங்கையோ போட்டுது. பேச மனமில்லை.

சுந்தரி:        பாயிரம் எண்டால் ஞானா புத்தகங்களிலை உள்ள முன்னுரை. பழைய காலத்திலை இந்த முன்னுரையைத்தான் பாயிரம் எண்டு சொல்லியிருக்கினம்.

ஞானா:        அப்பிடி எண்டால் அம்மா, திருக்கறளுக்குப் பாயிரம் இருக்கே அம்மா?

அப்பா:  
      சுந்தரி, எப்பிடி இருக்கு விளையாட்டு, இனிச் சொல்லுமன் உந்தக் கேள்விக்குப்  பதிலை. பிறகு அடுத்த கேள்விக்கும் பதிலை ஆயித்தப் படுத்தும்.

ஞானா:        அப்பா, விளங்காதைக் கேட்டால் ஏன் வில்லங்கத்துக்கு நிக்கிறியள்.

அப்பா:        பிள்ளை ஞானா, உன்னட்டை இருக்கிற புத்தகத்திலை, முதல் திறந்தவுடனை என்ன போட்டிருக்கு, ஒருக்கால் பாத்துச் செல்லு பாப்பம்.

ஞானா:        அறத்துப்பால், பாயிர இயல், கடவள் வாழ்த்து எண்டு போட்டிருக்கு.

சுந்தரி:        ஞானா, திருக்குறளிலை மூன்று பால்கள் இருக்குது எண்டு உனக்குத் தெரியும்தானே.

ஞானா        ஓம் அம்மா, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். அது தெரியும்.

சுந்தரி:
        இந்த முப்பாலிலை, அறத்துப்பாலைத் தெடங்கேக்கை பாயிர இயலையும் தொடங்கிருக்கிறார் திருவள்ளுவர்.

ஞானா: 
       அபிடிஎண்டால் அம்மா முதலாவது அதிகாரம் கடவள் வாழ்த்து எண்டு இருக்கு.  பிறகு பாயிரம் எங்கை சொல்லப் போறார். பாயிர இயல் எண்டு சும்மா பேருக்குப்  புத்தகத்திலை போட்டிருக்கோ?

சந்தரி:        எனக்கும் குழப்பமாய்த்தான் இருக்குது ஞானா. அப்பா! என்ன இண்டைக்கு மௌன விரதமே? வாயத் திறந்து இதுக்கு ஒரு மறுமொழியைச் சொல்லுங்கேவன்.

அப்பா:        சுந்தரி, உதுக்கு வந்து, தனித்தனித் திருக்குறள்களைப் பற்றிச் சிந்திக்க முந்தி திருக்குறள் நூலின் அமைப் பற்றிச் சிந்திக்க வேணும் எண்டு சொல்லிறன்.  அதாவது வந்து இந்தக் காலத்து முன்னுரையளைப் போலை ஒரோவீச்சிலை திருவள்ளுவர் பாயிரம் பாடேல்லை.

ஞானா:        அப்பா, ஒரு நு}லுக்குப் பாயிரம் கட்டாயம் இருக்க வேணும் எண்டு சொல்லி எங்கையோ வாசிச்ச ஞாபகம் எனக்கு. ஆனால் திருவள்ளுவர் ஒரு விதிவிலக்காய் பாயிரம் பாடாமல் முதலாம் அதிகாரம் கடவுள் வாழ்த்து எண்டு நூலை ஆரம்பிச்சிருக்கிறார் எண்டு நான் நினைக்கிறன்.

அப்பா:        நீ என்னத்தையும் நினைக்கலாம் ஞானா. ஆனால் உண்மை அதுவல்ல. அதுக்குத்தான் சொல்லிறன் திருக்குறளின் அமைப்பை முதலிலை அறிய வேணுமெண்டு.

சுந்தரி:        அதையுந்தான் விளக்கமாய்ச் சொல்லுங்கோவன் அப்பா.

அப்பா:        இப்ப பாரும் சுந்தரி, திருக்குறளின் மூன்று பெரும்பிரிவுகள் எங்களுக்குத் தெரியும்.

ஞானா:        அது முந்தியே சொன்துதானே அப்பா. அறத்துப்பால். பொருட்பால், காமத்துப்பால்.

அப்பா:        உண்மைதான் ஞானா. இந்த மூன்று பால்களும்  ஒன்பது இயல்களாகப் பிரிக்கப் பட்டிருக்கு. முதலாவது அறத்துப்பால்:
               
                    1. பாயிரவியல்
                    2. இல்லறவியல்
                    3. துறவறவியல்
                    4. ஊழியல்


        எண்டு நாலு இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கு. இரண்டாவதான பொருட்பால்:

                    1. அரசியல்
                    2. அங்கவியல்
                    3. ஒழிபியல்


        எண்டு மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கு. இறுதியான காமத்துப்பால்:

                    1. களவியல்
                    2. கற்பியல்


        எண்டு இரண்டு இயல்காளகப் பிரிக்கப்பட்டிருக்கு. இந்த ஒன்பது இயல்களும் சேர்ந்ததுதான் முப்பால்களைக் கொண்ட திருக்குறள். இதிலே முதலாவது இயலதான் பாயிரவியல். இந்தப் பாயிரவியலிலை நாலு அதிகாரங்கள் உண்டு.

                    1. கடவள் வாழ்த்து
                    2. வான்சிறப்பு
                    3. நீத்தார் பொருமை
                    4. அறன்வலியுறத்தல்


        இந்த நாலு அதிகாரங்களும் சேர்ந்ததுதான் திருக்குறளுக்குப் பாயிரம்.
        நீ சொன்னியே ஞானா, ஒரு நு}லுக்குப் பாயிரம் கட்டாயம் இருக்க வேணும் எண்டு வாசிச்சிருக்கிறாய் எண்டு அது உண்மைதான்.   ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே! எண்டு பழைய சான்றோர் சொல்லியிருக்கினம் எண்டு நானும் படிச்சிருக்கிறன். அதாவது ஆயிரம் வகையாய் நு}ல் எழுதினாலும், பாயிரம் இல்லாட்டில் அதுநூலில்லை எண்டதுதான் இதின்ரை கருத்து. இது தெரியாமல் வள்ளுவப் பெருந்தகை நூல் செய்யேல்லை ஞானா.

ஞானா:        நீங்கள் சும்மா சொன்னாப்போலை நம்ப முடியுமே அப்பா. ஆதாரங்காட்டினால்தான் நான் நம்புவன்.

அப்பா:        சுந்தரி, பாத்தீரே இவள் பிள்ளையின்ரை குறும்பை. இப்ப எனக்குச் சுடச்சுட ஒருபால் கோப்பி கொண்டுவந்து தந்தால் குடிச்சுப் போட்டு இவளுக்குப் பதில்   சொல்லிறனோ இல்லையோ பாரும்?


(இசை)
           




No comments: