இன்றைய நாள் (நாட்குறிப்புகள்)- 2012-06-28


அ .முத்துலிங்கம் 
இன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள்.

முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். மீன்களைச் சாப்பிடும். நீர்நிலைகளில் காத்திருந்து தண்ணீர் குடிக்கவரும்  விலங்குகளை தாக்கி அவற்றை நீரிலே மூழ்கவைத்து கொன்று பின்னர் உண்ணும். எலும்புகளைக் கரைக்கும் திரவம் வயிற்றிலே உண்டாகி செரிப்பதற்கு உதவும். சில முதலைகள் கூழாங்கற்களை விழுங்கி செரிப்பதை துரிதப்படுத்துவதும் உண்டு.


பெண்முதலை ஆற்றின் கரையிலே முட்டையிட்டு காவல்காக்கும். 80 நாட்களில் முட்டை பொரித்து 30 – 40 குஞ்சுகள் வெளிப்படும். இவற்றை தாய் உட்கார்ந்து பொரிக்கவைப்பதில்லை. அவை சூரிய வெப்பத்தில் தானாகவே பொரிக்கும். முதலைக்குஞ்சு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது சூரியனின் வெப்பம்தான். வெப்பத்துக்கு தகுந்தபடி சிலவேளை எல்லா முட்டைகளும் ஆணாக பொரிக்கும் அல்லது எல்லாமே பெண்ணாகப் பொரிக்கும். தாய் முதலை குஞ்சுகளை வாயில் கவ்விச் சென்று நீரில் விடும். பின்னர் தாயும் தகப்பனுமாக அவற்றை பாதுகாக்கும். இரண்டு வாரத்தில் தாமே இரையை தேட குஞ்சுகள் கற்று தாயை பிரிந்துபோய்விடும்.

இந்த இடம் வந்தபோது எனக்கொரு சந்தேகம் வந்தது. ஐங்குறுநூறில் ஓரம்போகியாருடைய  பாடல் ஒன்று வருகிறது. ‘தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையோடு’ என்று. தன் பிள்ளைகளை தானே தின்னும் முதலையின் நாட்டைச் சேர்ந்தவன் என்பதாக பொருள் தரும் பாடல். முதலை அதனுடைய பிள்ளையை தின்னுமா என்பதுதான் கேள்வி? முட்டையிட்டு 80 நாள்வரை காவல்காத்து, குஞ்சுகளை சேமமாக ஆற்றுக்கு இட்டுச்சென்று அதன் பின்னரும் பாதுகாப்பு கொடுக்கும் முதலை தன் குஞ்சை சாப்பிடுமா?  விலங்கியல் பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் ’ஆபத்தான சமயத்தில் முதலைக் குஞ்சுகள் தாயிடம் ஓடிவரும், தாய் வாயை திறந்ததும் உள்ளே ஒளிந்துகொள்ளும். ஆபத்து அகன்றதும் மீண்டும் வெளியேவரும்’ என்று. இதைப் பார்த்த ஒரு புலவர் தாய் முதலை குஞ்சை தின்கிறது என்று நினைத்து அப்படி பாடியிருக்கலாம் என்று இப்போது  தோன்றுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் என் அறை நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருந்த வீட்டின் எண் 18 ¾. நண்பர் சொல்வார் பின்னக் கணக்கு தெரிந்தால்தான் எங்கள் வீட்டு விலாசத்தை கண்டுபிடிக்கலாம் என்று. 18ம் நம்பர் வீட்டில், நாலு பிரிவுகளில் நாங்கள் மூன்றாவது பிரிவில் ஓர் அறையில் குடியிருந்தோம். நாலு வருடங்கள் அவருடன் வாழ்ந்திருக்கிறேன். சாதுவான மனிதர்தான் ஆனால் இரவில் வேறு ஒருவராக மாறிவிடுவார். அவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி என்பதால் கதவை திறந்து அதே வீட்டு எண்ணின் வேறு ஒரு பிரிவுக்குள் அவர் நுழைந்துவிடுவார். நான் இரவில் கதவைப் பூட்டி திறப்பை தண்ணீர் நிரப்பிய ஒரு பாத்திரத்துக்குள் போட்டு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால்  கடுமையான விபத்துகளிலிருந்து தப்பினார்.. இவர் குடித்தால் அழுவார். சிலர் சிரிப்பார்கள், சிலர் திட்டுவார்கள், சிலர் தூங்குவார்கள். ஆனால் இவர் அழுவார். ஒருமுறை தன்னுடைய தகப்பன் இறந்த விவரத்தை இவர் கூறினார். டியத்தலாவ என்னும் இடத்தில் தகப்பன் வேலை பார்த்தார். வழக்கம்போல காலையில் அவர் ஆற்றிலே குளிக்கப் போனார் ஆனால்  திரும்பவில்லை. முதலை அவர் காலைப் பிடித்து சுழற்றி இழுத்துக்கொண்டு போனதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். எங்கேயோ உடலை மறைத்துவைத்து பல நாட்கள் உண்டிருக்கும். சடலம் கிடைக்கவே இல்லை. அப்பொழுது நண்பர் தனக்கு ஆறு வயது என்று சொன்னார். முழங்கால் அளவு தண்ணீரில் நின்றபோது தன் தகப்பனுக்கு  இப்படி நடந்துவிட்டது என்று 19 வருடம் கழிந்த பின்னரும் சொல்லிச் சொல்லி அழுவார். எப்பொழுது அவர் குடித்தாலும் இது நடக்கும். முதலையிடம் தகப்பனை பறிகொடுத்த ஒருவரை எத்தனை பேருக்கு தெரியும்?

’இன்றைய நாள்’ என்று தலைப்பு போட்டு நான் இன்று எழுதத் தொடங்கியதற்கு காரணம் வேறு. நான் கணினியிலே முதலையைப் பற்றி படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பூச்சி ஊர்ந்து ஊர்ந்து வந்து நான் படிக்கும் வார்த்தையின் மேல் நின்றது. வார்த்தையை மறைத்ததால் அது என்ன வார்த்தை என்று தெரியவில்லை. நான் இது என்ன என்று தொட்டதும் அது செத்துப் போனது. ஆனால் திரையிலே பூச்சியின் உடல் இல்லை. நான் படித்த வார்த்தையின்மேலே உடல் கிடந்தது. எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. யாரோ மினக்கெட்டு ஒரு வைரஸ் உண்டாக்கி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு பூச்சி ஊர்ந்து வரும். நீங்கள் தொட்டதும் இறந்துபோகும். இறந்துபோனது வெறும் கற்பனைப்பூச்சிதான்.

நான் கம்புயூட்டரை முதலில் இருந்து இயக்கி மறுபடியும் அதே கட்டுரையை படித்தேன். இம்முறை ஒரு பூச்சியும் வரவில்லை. அது வேறு ஏதோ கம்புயூட்டரை தேடி போய்விட்டது. யாரோ ஒருவர் இப்படி ஒரு பூச்சியை உருவாக்கி கம்புயூட்டர் கம்புயூட்டராக ஏவிக்கொண்டிருந்தார். இன்றைய தினம் அவருக்கு என்னால் ஒரு சின்ன மகிழ்ச்சியை கொடுக்க முடிந்திருக்கிறது.

இலங்கை மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. ‘புள்ளியளவில் ஒரு பூச்சி’ என்று ஆரம்பமாகும். கவி ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் தேவையில்லாமல் ஒரு புள்ளி கிடக்கிறது. கவி அதைத் தொட்டுப் பார்த்தபோது அது புள்ளி இல்லை பூச்சி என்பது தெரிகிறது. தொட்டதும் பூச்சி இறந்துவிட்டது. கவிக்கு துக்கம் ஆற்றமுடியவில்லை. ஒரு பாவமும் அறியாத பூச்சி இப்படி இறந்துவிட்டதே என அரற்றுகிறார். இரண்டு எதிரெதிர் கண்ணாடிகளில் பிம்பம் முடிவற்று பிரதிபலிப்பதுபோல முடிவில்லாத துயரம் அவரை பற்றிக்கொள்கிறது.

இன்றைய நாள் ஐங்குறுநூறில் ஆரம்பித்து மகாகவியின் கவிதையில் வந்து நின்றது. நாள் முடிந்தாலும் என் மனது முடியவில்லை. எதற்காக இந்த மனிதர் பூச்சியை உண்டாக்கினார். எதற்காக என் கணினியை நோக்கி அதை ஏவி விட்டார். கற்பனை பூச்சி என்றாலும் அது இறந்தது என் மனதை பிசைகிறது.. முதலையை பற்றி படித்த என்னை பூச்சி நோக்கி திருப்பிவிட்டதால் என் நாளே மாறிவிட்டது. இந்த மனிதருக்கு இதில் ஒரு மகிழ்ச்சி. இவர் தன் பிள்ளையை தானே தின்னும் முதலையினிலும் பார்க்க கொடிய நெஞ்சுள்ளவராக இருப்பாரோ

No comments: