28 ஜூன் 2012
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா
ஈழத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களையும் துயரங்களையும் மூட்டையாக முதுகில் சுமந்து கொண்டு புலம் பெயர்ந்த படைப்பாளிகள் புலம் பெயர்ந்த சூழலில் தமது கடந்த கால அனுபவங்களை நின்று நிதானித்துப் புறநிலையாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படுகிறது. உலகம் இவர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பு வேறுபட்ட கலாசாரங்களுடனான இடைத்தாக்கம் என்பனவும் இங்கு இவர்களது ஆளுமையை வளர உதவி செய்கின்றன.
புலம் பெயர்ந்த
தமிழர்களின் சிந்தனையும் வாழ்வியல் தளமும் புதிய கலாசார அதிர்வுகளை
எதிர்கொள்கின்றன இந்தவகையில் ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு இல்லாத
உலகம் ஒன்று புலம்பெயர்தமிழர்களுக்கு திறந்துள்ளது. அனேகமான புலம்
பெயர்தமிழர்கள் முதலாளித்துவ கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஐரோப்பிய
கலாச்சாரத்துள் அல்லது அமெரிக்க கலாசாரத்துள் (பொதுவில் மேற்கத்தைய
கலாசாரத்துள்) வாழ்கிறார்கள். இலங்கை போன்ற அரைக்காலனித்துவ
அரைப்பிரபுத்துவ நாடுகளில் இல்லாத சனநாயகத்தைப் புலம்பெயர்ந்த நாடுகள்
கொண்டிருக்கிறன. இது முதலாளித்துவ சனநாயகம் எனப்படுகிறது. ஒரு அமைப்பு(system) பொருளாதார
ரீதியிலும் கலாசாரரீதியிலும் நன்றாக ஆழமாக வேரூன்றி இருக்கிற போது அதனை
இலகுவாக அசைக்க முடியாதென்கிற நம்பிக்கை வரும்போது வழங்கப்படுகிற
சுதந்திரம் என இதனைப்பார்க்கலாம். ஆனால்
இந்த முதலாளித்துவ அமைப்பும் கலாசாரமும் இன்றைக்கு நிலவுகிற உலகளாவிய
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதன் காரணமாக தமது வேர்கள் ஆட்டம்
காணுவதைக் கண்டு அச்சம் மொண்டு தமது உண்மையான கோர முகத்தை
வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனாலும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் நிலவுகிறதென்பதை உணரமுடியும்.
மேலைத்தேச நாடுகள்
எதிர்கொள்கிற தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை வெளிநாட்டவர்களுக்கு
எதிரான தேசிய உணர்வை ஐரோப்பியநாடுகளில் வளர்க்கிற அதே நேரம்
முதலாளித்துவத்தின் எதிர்மறையான பக்கங்களையும் கொடூரமான சுரண்டலையும்
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புலம் பெயர்
தேசத்திலேயே பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை கலை இலக்கியகர்த்தாக்கள்
இந்தத் தளத்தில் நின்றுதான் தங்கள் அனுபவங்களை மீள்வாசிப்புச்
செய்கிறார்கள்.
தனிமனித விழுமியங்கள் பற்றிய நுண்ணுணர்வு, குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம், இளம்பராயத்தினருக்கிருக்கிற உணர்வுகள் மற்றும் தெரிவுகள் பற்றிய புரிதல்கள் பல்கலாச்சாரக்கலப்புக்கள் பற்றிய புரிதல்கள், கணவனில்லாத தனித்தாய் குடும்பம் போன்ற விடையங்கள் புதிதாக வரும் படைப்பாளிகளின் படைப்புகளின் கருப்பொருளாவதைக்காண்கிறோம். இந்தப்படைப்புகளின் இலக்கிய அல்லது கலைத்தரம் வளர்ச்சிக்கு உட்படவேண்டியதெனினும் மாற்றங்கள் நிகழ்த்தொடங்கியிருக்கின்றன.
முள்ளி வாய்க்காலின் பின்பு ஒருமையான தேசியவாதம் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான ஒருமுகமான சூழ்நிலை தமிழ்ச் சமூகத்தின் புறவெளியிலும் படைப்பாளிகளின் அகவெளியிலும் அற்றுப்போகிறது. அதே நேரம் தமிழீழப்பிரதேசங்கள் எனச் சொல்லப்படுகிற பிரதேசங்களுக்கு வெளியே குறைந்தது கடந்த இருபது வருடங்களுக்கு நின்றிருந்த இலங்கை அரசின் இராணுவ அரசியல் மற்றும் சமூக கலாசார ஒடுக்குமுறைகள் முன்பை விடவும் வலிமையானதாக எமது புறவெளியினுள் வந்து நிற்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மண்விடுதலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சனநாயகமற்ற வெளி அகன்றபோது படைப்பாளிகளைக் கட்டிப்போட்டிருந்த மன இறுக்கமும் அகன்று போகிறது. எனவே தமிழீழவிடுதலைப்போராட்டம் குறித்த விமர்சனங்களைத் தாங்கிய படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக அல்லது சக பயணிகளாக இருந்தவர்களின் படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் இந்த அதிஸ்டம் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. பல விடுதலைப்புலிப்படைப்பாளிகள் போரில் மடிந்து போனார்கள் அல்லது அரசின் வதைமுகாம்களுக்குள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நடந்து முடிந்த தேசிய விடுதலைப்போராட்டத்தின் மீதான விமர்சனங்களைத்தாங்கி வருகிற எங்களை வாசிக்கத் தூண்டுகிற மொழியை கொண்டிருக்கிற படைப்புகளின் முக்கியமான ஒரு பண்பாக அங்கதம் இருப்பதைக்காண்கிறோம்.
சிறுபான்மையினத்தின் மீதான அரச ஒடுக்குமுறை இருக்கும் வரை சிறுபான்மை இனங்களின் எதிர்ப்போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ளும் ஒரு படைப்பாளி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் விமர்சனங்களைச் செய்வதற்கு அங்கதம் உதவும். ஆனால் இதே அங்கதத்தினை அரசியல் இலக்கற்ற அல்லது சமூகப்பிரக்ஞை அற்ற நையாண்டியாகவும் கையாள முடியும். அங்கதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் படைப்புகளுள் இந்த அம்சங்களையும் இனம் காண முடியும்.
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் செய்த தவறுகளைப் புரிந்து கொண்டாலும் இலங்கை அரசின் படு மோசமான அரசியல் இராணுவ கலாசார ஒடுக்கு முறையினை இன்னமும் அகவெளியிலும் புறவெளியிலும் எதிர்கொள்பவர்கள் அதனையே உயர்த்திப்பிடிக்கும் படைப்புக்களையும் கொண்டு வருகிறார்கள். அதுவே முக்கியமானதென்றும் நினைக்கிறார்கள்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் நிலவும் சமூக பொருளாதார அரசியற் சூழ்நிலைகளின் யதார்த்தம் இவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்காலின் பின்பு ஈழத்தில் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகள் நிகழ்கின்றன. இலங்கை அரசின் அரசியல் மற்றும் இராணுவப் பிரசன்னங்களை சிங்கள மேலாதிக அரசின் ஒடுக்குமுறை அம்சங்களை வெளிப்படையாக விமர்சிக்கும் எதிர்க்கும் கலை இலக்கியப் படைப்புகள் இலங்கையில் தமிழ்ச் சமுகத்தை இயக்கமடையச் செய்யும் நிலையை நோக்கி நகர முடியாது. அதற்கு தற்போது சாத்தியமுமில்லை. அந்தளவுக்கு சனநாயக வெளியொன்று இருப்பதாகவும் தெரியவில்லை. (அவ்வாறான சனநாயக வெளி ஒன்று இருக்குமென்றால் தமிழீழத்திற்கான தேவையும் இருக்காது.) தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் தொழிற்பட்ட முறைமையில் படைப்பாளிகள் இலங்கையில் தொழிற்படமுடியாது. அவ்வாறு செயற்பட விரும்புபவர்கள் அரச இராணுவப் புலனாய்வுக்குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் மக்களின் தனிப்பட்ட நுகர்வுக்கான கலை இலக்கிய வெளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வு வெளியில் பல படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கே விடுதலைப்போராட்ட காலத்தில் சகபயணிகளாக இருந்தவர்களும் புதியவர்களும் வெளிப்படுகிறார்கள். இங்கே படைப்புக்களை வெளிப்படுத்தல் தம்மை வெளிப்படுத்தல் வாசகர்களை அல்லது இரசிகர்களை நுகரத் தூண்டுதல் என்பதே பிரதானமான நோக்கமாகிறது. கலை இலக்கியத்தளத்தில் ஏற்கனவே அறியப்பட்ட அல்லது இயங்கிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளின் உள்ளார்ந்த நோக்கமாகக் கலந்துரையாடல் அனுபவங்களை இரைமீடல் விமர்சனம் செய்தல் சுய விமர்சனம் செய்தல் பரஸ்பரக் கல்வியூட்டல்
போன்றவை இருக்கின்ற போதும் அவை பிரதான நீரோட்டத்துக்குள் இறங்கிப் பரந்து
பட்ட மக்களைச் சென்றடைவதற்குச் சந்தைப்படுத்தல் என்கிற ஒரு வழிமட்டுமே
இருக்கிறது. இந்தப்படைப்பாளிகள் தங்களைச் திறந்த பொருளாதாரத்தின் சந்தைக்குள் இறக்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு
சமூகத்தினுள் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சக்திகளும் கூறுகளும்
தங்களுக்கான தங்களது கலை இலக்கியப்படைப்புக்களை உருவாக்கவும்
சந்தைப்படுத்தவும் முனையும். முனைகின்றன. தமிழ்ச்
சங்கம் கம்பன்கழகம் திருமறைக்கலாமன்றம் போன்ற அறியப்பட்ட நிறுவனங்கள்
தொடங்கி அறியப்படாத எண்ணுக்கணக்கற்ற சக்திகள் வரை தமது கலை
இலக்கியப்படைப்புக்களை வெளிக்கொண்டுவர முனையும். இங்கு
இன்னுமொரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்க வேண்டும் இலங்கையில்
தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் பெருமெடுப்பிலான கலை இலக்கிய நிகழ்வுகள்
குறித்து அனேகமாக எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நிகழ்வதனால் மட்டுமே ஒரு நிகழ்வை எதிர்த்தல் என்னும் போக்கு
ஆரோக்கியமானதல்ல ஆனால் இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம் இவற்றின் நோக்கம்
போன்றவற்றை நன்கு ஆராய்ந்த பின்பு விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில்
முன்வைக்கவேண்டும்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான சூழ்நிலையில் அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளில் இன நல்லிணக்கம் என்னும் போர்வையில் இலங்கைத் தமிழர்களின் கலைகள் என்ற அடையாளம் நீக்கப்பட்டு இலங்கைக்கலைகள் என்னும் அடையாளம் ஏற்படுத்தப்படவேண்டும் என்னும் கருத்தியல் உருவாக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் ஈழத்தமிழர்களாக இருக்க விரும்பினோம் அது இல்லை என்கிறபோது குறைந்த பட்சம் இலங்கைத்தமிழர்களாகவாவது இருப்போம் எனப் போரில் நொந்த ஈழத்தமிழர்கள் நினைக்கும் போது இந்த இன நல்லிணக்கம் என்கிற சமூக ஆக்கிரமிப்புப் போர்வை வருகிறது.
போர் ஓய்ந்து
இனங்களுக்கிடையிலான ஊடாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பரஸ்பர அங்கீகாரமும்
மரியாதையும் மிக்க கலை இலக்கிய ஊடாட்டம் இனங்களுக்கிடையில் மிகவும்
அவசியமானது.
ஆனால் ஒரு இனத்தின்
அடையாளங்களை மட்டும் அழித்து விட முனையும் போக்கின் பெயர் இன நல்லிணக்கம்
அல்ல. உண்மையான சனநாயகம் இல்லாத பல்லினச் சமூகங்கள் வாழும் நாட்டில்
சிறுபான்மை இனங்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றன. துரதிருஸ்ட வசமாக
நாங்களும் அத்தகைய இனமாகி விட்டோம்.
இதேவெளியில் இந்திய
மற்றும் மேற்குலக கலாசாரத்தின் தாக்கங்களைக் கொண்ட ஈழத்துப் பொழுது போக்கு
கலை இலக்கியக்கியங்களின் வளர்ச்சியும் அவதானிக்கப்படுகிறது.
குறும்படத்தயாரிப்புகள் இசைத் தட்டுருவாக்கங்கள் என்பன நிகழ்ந்து
வருகின்றன. இன்னும் சில வருடங்களுக்குள் இவை ஈழத்தமிழ்ச் சமூகத்தின்
நுகர்வுக்கலாசாரத்தின் ஒருபகுதியாகிவிடும். ஆனால் இவை தென் இந்திய அல்லது
மேற்கத்திய அசுரப் பொழுது போக்கு கலை இலக்கியத்தின் ஆதிக்கத்துடன் போட்டி
போடுமளவுக்கு வளர்ந்து கொள்ள முடியுமோ என்பது கேள்வி?
தொண்ணூறுகளில் உலகை
ஆக்கிரமிக்கத் தொடங்கிய இணையம் முள்ளி வாய்க்காலுக்கு பின்பு மிக வேகமாக
ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கத்தின் தவிக்க முடியாத ஒரு
பகுதியாகிவருகிறது. ஆனாலும் மேற்குலகைச் சேர்ந்த சமூகங்களளவுக்குத் தமிழ்ச்
சமூகம் இலத்திரனியல் மயப்படவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்கள்
வலைப்பூக்கள் ருவிற்றர் போன்றவை படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்தும்
களங்களாக மாறி வருகின்றன. நுகர்தல் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டவர்கள்
குழுக்களாகச் சைபர் வெளியில் இணைதல் உரையாடுதல் என்பதுடன் இந்த அசைவியக்கம்
எங்கள் சூழலில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கலின் பின்பு ஈழத்துக்கலை இலக்கிய அசைவியக்கத்திற்கு பன்முகமான ஒரு வெளி கிடைத்திருக்கிறது. இது இலங்கையின் பிற்போக்குப் பேரினவாத அரசு தந்துள்ள வெளி அல்ல பதிலாக ஒரு முகமான தமிழ்த்தேசியவாதம் மறுத்திருந்த வெளி. இந்த வெளி மண் விடுதலை என்ற ஒற்றைப்பரிமாணத்துள் மறைந்திருந்தது. ஆனால் இதே வெளியை இலங்கையின் பிற்போக்குப்பேரினவாத அரசு இன நல்லிணக்கம் என்னும் போர்வையால் மூட முயற்சிக்கிறது.
இந்தப்பன்முகமான வெளியை நாங்கள் எந்தக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது. ஏனைய
இனங்களின் முற்போக்கு சக்திகளுடனா ஊடாட்டம் எமக்குள் நிலவும்
பிற்போக்குத்தனங்களுக்கெதிரான போராட்டம் எமது விடுதலைக்கான போராட்டம் என
யாவும் இந்த வெளியிலேயேதான் நிகழ வேண்டும்.
வலிகளைத்
தாங்கிக்கொண்டும் அடக்கு முறையை எதிர்த்துப் போராடிக்கொண்டும்
சுயவிமர்சனத்துடனும் இந்த வெளியில் நாங்கள் இருத்தல் வேண்டும் இந்த வெளியை
இனிவரும் கால ஈழத்து கலை இலக்கிய அசைவியக்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெளி வெறும் அதிகார வெளி அல்ல. ஒடுக்கப்படுபவர்களுக்கான ஒளியின் வெளி…
தேவ அபிரா
No comments:
Post a Comment