இலங்கைச் செய்திகள்

.
வடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம்: அமெரிக்கா 


இந்துக் கோவில் இடிப்பு

வலி வடக்கில் மீள்குடியேறியவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் மக்கள் வேறிடங்களில் தஞ்சம்

5000 முன்னாள் புலி உறுப்பினர்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்க அனுமதி நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

 இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் கவலை

அவுஸ்திரேலியா செல்வதற்கு கதிர்காமம் விடுதியில் தங்கிருந்த ஐவர் கைது

வவுனியா சிறைக் கைதிகளில் 27 பேர் மஹர சிறை வைத்தியசாலையில் அனுமதி
  
நிமல் ரூபனின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்: ஜயலத்
  
முத ல் தடவையாக ஒரே நாளில் வடக்கில் 11 இலங்கை வங்கிக் கிளைகள் திறப்பு !
  
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் திருடர்கள் கைவரிசை
 

 வடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம்: அமெரிக்கா

 02/07/2012

 வடக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசு தொடர்ந்தும் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா குற்றஞ் சுமத்தியுள்ளது. இந்நிலைமையினை மாற்றுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் அமைதியை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு பாரியதொரு பொறுப்பு தற்போதும் உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 
நன்றி வீரகேசரி  



 இந்துக் கோவில் இடிப்பு
kovil_1ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ்  விசாலமான புத்தர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.
சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற்பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ள பகுதிகளில் சிறு புத்தர் சிலை அமைத்து அவர்களுடைய வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பின்னர் பொதுமக்களுடைய இடங்களைச் சுவீகரித்து இவ்வாறான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுவந்தது.
ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோவிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தகோயில் அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பௌத்த பேரினவாதத்தின் மிதமிஞ்சிய செயலாகவே கருதப்படவேண்டும் என்று மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
முற்றுமுழுதாக குறித்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் மிகவும் விசாலமாக அமைக்கப்பட்டுவரும் இப்பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். முன்னர் அமைந்திருந்த குறித்த இந்து ஆலயத்தினை மீண்டும் பழைய இடத்தில் முன்பிருந்த விதமாக அமைக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

kovil_2
kovil_3
kovil_4














































நன்றி தினக்குரல்



 வலி வடக்கில் மீள்குடியேறியவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் மக்கள் வேறிடங்களில் தஞ்சம்


யாழ்.நகர் நிருபர்

யாழ் வலிகாமம் வடக்கு வலித்தூண்டல் பகுதியில் இராணுவத்தினால் அமைத்து பெரும் விளம்பரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியால் மீள்குடியேறிய மக்களுக்கு கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளது.
இதனால் இவ்வீடுகளில் வசிப்பதற்கு அஞ்சும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் தரப்பாள்களுக்குள்ளும் ஓலைக் குடிசைகளுக்குள்ளும் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வீடுகள் உரிய தரநிர்ணயத்திற்கு உட்படுத்தப்பட்டு அமைக்கப்படாமையினாலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக  இருந்து கடந்த வருடம் இறுதிப் பகுதியில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேறிய வலித்தூண்டல் பகுதி மக்களுக்கு இராணுவம் வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் 11 வீடுகள் மீள்குடியேறிய மக்களுடைய நன்மைக்காக நிர்மாணிக்கப்படுவது போல் வெளிக் காட்டிக் கொண்ட இராணுவம் மிக விரைவாக இவ்வீடுகளைக் கட்டி முடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தப் பகுதியில் இராணுவத்தால் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்திருந்தார்.
அரசாங்கத்தினால் பெரும் பிரசார நடவடிக்கைகளை நோக்காகக் கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த வீடுகள் கையளிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு முன்னரே இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த வீடுகளுடன் அமைத்துக் கொடுக்கப்பட்ட மலசல கூடங்களுக்கான குழிகள் தகரத்தினாலான கம்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தகரம் துருப்பிடித்துள்ளமையால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலான மலசல கூடங்கள் மக்கள் பயன்படுத்தாமலேயே விட்டுள்ளனர்.
சுமார் 50 குடும்பங்களைக் கொண்ட வலித்தூண்டல் பகுதியில் 11 பயனாளிகளை மட்டும் தெரிவு செய்து வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதால் அப்பகுதியிலுள்ள ஏனைய மக்கள் இராணுவத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னும் காரணத்தினால் வேறு நிறுவனங்களினால் வழங்கப்படும் வீட்டுத் திட்டங்களும் இல்லாது போகும் நிலை தோன்றியுள்ளது.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கவனமெடுத்து மீள்குடியேறிய மக்களுக்கு பாதுகாப்பான சுகாதார வசதி கொண்ட வீடுகளை அமைத்துக் கொடுக்க ஆவன செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 நன்றி தினக்குரல்


 5000 முன்னாள் புலி உறுப்பினர்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்க அனுமதி நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
  Monday, 02 July 2012

Namal_Rajapaksaபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட 5000 இளைஞர், யுவதிகள் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் தொழில் நடவடிக்கைகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
அந்த வார பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இந்த விடயம் தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி அவர்களின் சேவைகளை பிரதேசத்தின் விவசாய துறையை விருத்தி செய்வதற்காக பெற்றுக்கொள்ளவுள்ளோம்.
இதற்காக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 3000 ஏக்கரை பயன்படுத்தி விசேட விவசாய பண்ணைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதோடு அவர்களின் கல்வி மற்றும் தொழில் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மாதம் 15000 முதல் 20000 ரூபா வரை சம்பளம் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன்.
 நன்றி தினக்குரல்



 இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியம் கவலை

eu_logo_ஸ்ரீ லங்கா மிரர் மற்றும் லங்கா நியூஸ் இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. ஜனநாயக சமூகத்தில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமானதென்பதுடன், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களின்றி ஊடகவியலாளர்கள் தங்களது நியாயமான பணியை முன்னெடுக்க முடியுமாக இருக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான ஊடகத்துறை மீது அச்சுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவித நடவடிக்கையோ அல்லது கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தராதரங்களுக்கு முரணானதெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்றி தினக்குரல்

 அவுஸ்திரேலியா செல்வதற்கு கதிர்காமம் விடுதியில் தங்கிருந்த ஐவர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் கதிர்காமத்தில் யாத்திரிகள் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் சனிக்கிழமை முற்பகல்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து கதிர்காமம் பொலிஸார் இந்த முற்றுகையை மேற்கொண்டனர். இதன்போது உடப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த 23 முதல் 54 வயது வரையானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் வரை கதிர்காமம் யாத்திரிகர்கள் விடுதியில் தங்குமாறு ஒருவரினால் இவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இத் திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
 நன்றி தினக்குரல்

 
வவுனியா சிறைக் கைதிகளில் 27 பேர் மஹர சிறை வைத்தியசாலையில் அனுமதி 
3/7/2012
  வவுனியா சிறைச் சாலையில் இருந்து அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 27 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது மஹர சிறைச் சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கைதிகளின் உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளினால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 3 சிறைக் காவலர்களையும் முப்படையினரும் இணைந்து மீட்டு எடுத்ததன் பின்னர் வவுனியா சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் அனுராதபுரம் சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிந்ததே. அவ்வாறு அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 30 பேரும் தற்போது மஹர சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டிருப்பவர்களில் 3 பேர் உடல் நிலை மோசமான நிலையில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏனைய 27 கைதிகளும் மகர சிறைச்சாலை வைத்திய சாலையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டவர்கள் தாக்குதல்களுக்குள்ளாகி கைகால்களில் முறிவுக் காயங்களுடன் கிழிந்த, இரத்தம் தோய்ந்த உடைகளுடனும் சிலர் சீரான உடையில்லாமலும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்திய கவனிப்போ அல்லது உணவு வசதியோ அற்ற நிலையிலேயே அவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கைதிகளின் நிலைமை குறித்து மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுக்கும் உறவினர்கள் தெரிவித்திருப்பதை அடுத்து அவர்களும் இக் கைதிகளின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கைதிகளின் நலன்களைப் பேணும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கைதிகளின் நிலைமையை அறிவதற்கும் அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற வைத்திய வசதிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலை கம்பஹா பிரதேசமாகிய முழுமையான சிங்களப் பிரதேசத்தில் அமைந்திருப்பதனால் இக் கைதிகளின் உறவினர்கள் அங்கு செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தமது பிள்ளைகளின் உண்மையான நிலைப் பாட்டை அறிந்து கொள்ள முடியாமலும் இவர்களை நேரில் சென்று பார்ப்பதற்கு யாருடைய உதவியை நாடுவது என்று தெரியாத நிலையிலும் கவலையடைந்துள்ளார்கள்.

இதற்கிடையில் இக் கைதிகளின் நிலைமை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தம்முடன் இணைந்து செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுடன் கூடி இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 நன்றி வீரகேசரி



நிமல் ரூபனின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்: ஜயலத் 
4/7/2012
 வவுனியா சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் உயிரிழந்த நிமல் ரூபனின் உயிருக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே முழு பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் நோக்கத்திற்காக இலங்கையிலுள்ள சிறைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்கள் உண்மையிலேயே அரசியல் கைதிகளாவர். இந்தக் கைதிகள் குறித்து இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொய் வாக்குறுதிகளை மாத்திரம் தாராளமாக வழங்கி வருகின்றது. இவ்வாறு பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கம் ஏமாற்றி வருகின்ற நிலையில், அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்தனர்.

இந்தப் பொறுப்பில்லாத அரசாங்கத்தின் கைதிகள் குறித்தான கவனயீன, ஏனோதானோ என்ற நடவடிக்கையே இச் சம்பவத்திற்குக் காரணமாகும். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் எந்தவொரு கைதிக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் தயார் என்பது தற்போது நிரூபணமாகிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களாக செயற்பட்ட கருணா அம்மான் என்ற தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளதோடு, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியையும் வழங்கியுள்ளது. அத்துடன் சர்வதேச பொலிஸாரால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு மறைவிடமான சொகுசு வாழ்க்கையை அரசாங்கம் தனது நிழலில் வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்காதோருக்கு தேசத்துரோகி என்ற பெயர் சூட்டப்படுகிறது.

அரசியல் நோக்கத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரம் உள்ளது.

அவருக்கு நெருக்கமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கிய பலர் கொலைக் குற்றவாளிகளே. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக மஹிந்த ராஜபக்ஷ இருந்த போது அரசியல் கைதிகளை விடுதலை செய்க என்று உள்நாட்டிலல்லாமல் வெளிநாடுகளிலும் குரல் எழுப்பியிருந்தார். இன்று அவர் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி.

எனினும் அவர் அன்று கடைப்பிடித்த அதே கொள்கையில் இன்றும் இருக்க வேண்டும்.

நிமல் ரூபனின் கொலை மற்றும் வவுனியா சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பின்றிய விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதே போன்று குற்றவாளிகள் எவராகவிருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

மேலும் இக் கைதிகள் குறித்து கவனம் செலுத்துமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைப் பிரதிநிதியிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி வீரகேசரி



முத ல் தடவையாக ஒரே நாளில் வடக்கில் 11 இலங்கை வங்கிக் கிளைகள் திறப்பு ! 
4/7/2012
  இலங்கை வங்கி,ஒரே நாளில் வடமாகாணத்தில் 11 வங்கிக் கிளைகளை இன்று திறக்கிறது.

யாழ். பல்கலைக்கழகம், சிறுப்பிட்டி, கரணவாய், புன்னாலைக்கட்டுவன், மந்திகை, கல்வியங்காடு, மருதங்கேணி, கிளிநொச்சி செயலகம், புதுக்குடியிருப்பு, ஓமந்தை, ஆகிய பகுதிகளிலேயே இந்த வங்கிக் கிளைகள் திறக்கப்படுகின்றன.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு வங்கிகள் படையெடுத்து வரும் நிலையில், ஒரே நாளில் அதிகளவு, இலங்கை அரச வங்கிக் கிளைகள் திறக்கப்படுவது இதுவே முதல்தடவை.
நன்றி வீரகேசரி

 வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் திருடர்கள் கைவரிசை
அமெரிக்காவிலிருந்து 22 வருடங்களின் பின்னர் உறவினர்களைப் பார்க்க வந்த குடும்பஸ்தர் ஒருவர் நகை, பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கலாக சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியானவற்றைப் பேருந்து பயணத்தின்போது திருடரிடம் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையுடன் வீட்டைச் சென்றடைந்தார்.
இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி அதிகாலையில் முறிகண்டி ஆலயச்  சூழலில் நிகழ்ந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைச் சேர்ந்த மயில்வாகனம் சத்தியசீலன் (வயது 48) என்னும் குடும்பஸ்தரே தனது உடமைகளைப் பேருந்தில் பறிகொடுத்தவராவார்.
22 வருடகாலம் அமெரிக்காவில் பணிபுரிந்த இவர் தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். அங்கிருந்து பேருந்தில் வடமராட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். முறிகண்டியை வந்த அந்த பேருந்து நிறுத்தப்பட்டதும் இவர் தன்னுடன் எடுத்துவந்த பைகளில் ஒன்றை ஆசன இருக்கையில் வைத்துவிட்டு ஆலய தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் பயணத்தை ஆரம்பித்தபோது அங்கு ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா உடமைகள் கொண்ட பை காணாமற்போயிருந்தது.
இது தொடர்பில் பஸ்ஸின் சாரதிக்குத் தெரிவிக்கப்பட்டு பேருந்தினுள் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித பயனும் கிடைக்கவில்லை.
22 வருட காலத்தின் பின்னர் தனது ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவரின் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சியில் இருந்த உறவினர்கள் வெறுங்கையுடன் வந்து சேர்ந்த அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
 நன்றி தினக்குரல்

No comments: