உலகச் செய்திகள்இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா

சிரியாவில் சிவில் யுத்தம் முதற் தடவையாக ஐ.நா. அறிவிப்பு

சர்வதேச தலையீட்டுக்கு மத்தியிலும் மியன்மாரில் அதிகளவான வன்முறைகள் 
 மத்திய ஈராக்கில் இன்று(13/6/2012) இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதலில் சுமார் 42 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா
இந்தியாவை சுற்றி ஒரு வலைபின்னும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் ஹம்பாந்தோட்ட துறை முகத்தில் கால்பதித்துள்ள சீனா தற்போது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் நுழைகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் உடைக்கும் வகையில் சீனா இதைச்  செய்து வருகின்றது. என இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற தளபதி வி.கே. சிங் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய இராணுவ தலைமை தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். இவர் போபாலில் உள்ள வர்க்கத்துல்லா  பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. மாணவராக உள்ளார். பணியில் இருந்த  2010 ஆண்டே தன்னை இந்தப் பல்கலைக்கழகத்தில்  உள்ள பாதுகாப்புத்துறைப் பிரிவில்  பதிவு செய்து கொண்ட வி.கே.சிங் ஓய்வுக்குப் பின் தற்போது ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தன் ஆராய்ச்சிக்காக இமயமலை பகுதியில் உள்ள வக்கன் காரிடார் என்ற மலைப் பகுதியை எடுத்துக் கொண்டுள்ளார்.
சாலை அமைப்பு : இந்நிலையில் தன் ஆராய்ச்சி குறித்து பத்திரிகைகளுக்கு வி.கே.சிங் அளித்துள்ள பேட்டியில், மிகுந்த அதிர்ச்சியளிக்கும்  தகவல் அம்பலமாகியுள்ளது. அவர்  கூறியுள்ளதாவது; வக்கன் காரிடார் பகுதி என்பது இமயமலைத் தொடரின் ஒரு பகுதி. பூகோள ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைப் பகுதியை சீனா குடைந்து வருகிறது.  இந்த மலையைக் குடைந்து சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சீனா  ஆப்கானிஸ்தான் இடையே நேரடிப் போக்குவரத்து  வசதி இல்லை.  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறி வரும் நிலையில் அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தீவிரமாக உள்ளது. இதற்காகவே மலையைக் குடைந்து சாலை அமைத்து வருகிறது. 220 கி.மீ. தூரமும், 64 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சாலை பாதி தூரம் சுரங்கப் பாதையாகவே இருக்கப் போகிறது.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாகவே செல்கிறது. இந்த சாலை மட்டும் அமைத்து முடித்து விட்டால் ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பெரிதாக இருக்கும்.
பாகிஸ்தான் ஆதரவு : சீனாவின் இந்த சாலை அமைக்கும் திட்டத்திற்கு பாகிஸ்தான் முழு ஆதரவை வழங்கி வருகின்றது. தலிபான்களை ஒடுக்குவதற்கான அமெரிக்காவும் , இந்தியாவும் கைகோர்த்து  ஆப்கானிஸ்தானில் செயற்பட்டு முடிந்த நிலையில் தற்போது  சீனாவுடன் கைகோர்த்து மீண்டும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட  பாகிஸ்தான் பார்க்கிறது. வக்கன் மலைத் தொடர்ப் பகுதியில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் மிக அதிகமாகவே உள்ளன. இது வெளியுலகத்திற்கு  பெரிதாக தெரியாமல் உள்ளது. உண்மையில் பாகிஸ்தானோடு  கூட்டுச் சதி நோக்கத்துடன்  சேர்ந்து இந்த சாலை அமைக்கும் பணியை ரகசியமாகவே சீனா செய்து வருகிறது.
குவாடர் துறைமுகம் : பூகோள ரீதியாக இந்தியாவைச் சுற்றி வளைத்து  வலைபோல ஒன்றை பின்னும் திட்டத்தில் சீனா இருந்து வருகிறது. தெற்கு  இலங்கையில் ஹம்பந்தோட்ட துறைமுகத்தை சீனா பிடித்து விட்டது. அங்கு வலுவாக காலூன்றியும் விட்டது. மாலைதீவிலும் கூட சீனாவின் நடவடிக்கைகள் அதிகமாகவே உள்ளன. மியான்மரில் ஹாங்கி என்ற  துறைமுகத்தையும் சீனாவே கைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு வடக்கே உள்ள குவாடர்  துறைமுகத்தையும் சீனாதான் கடந்த ஐந்தாண்டுகளாக நிர்வகித்து வருகின்றது. இப்போது வடக்கே ஆப்கானிஸ்தானிலும்  தனது பிடியை உறுதிப்படுத்த சீனா  துடித்து வருகிறது.
மூடப்பட்ட கணவாய் : சீனாவிலிருந்து ஆப்கானிஸ்தான் போவதற்கு நேரடியாகவே எந்த வசதியும் தற்போது இல்லை. முன்னர் வக்ஜித் கணவாய் என்ற ஒன்று இருந்தது. அதன் வழியாகவே இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன. 1949 மாசேதுங் வருகைக்குப் பிறகு அந்தக் கணவாயும் மூடப்பட்டு விட்டது. அந்தக் கணவாயும் கூட வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே திறந்திருக்கும். மீதி நாட்களில் மூடியபடியே இருக்கும். எனவே வளர்ந்து வரும் சர்வதேச  சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவத்தை சீனா பயன்படுத்த விரும்புகிறது.
முதலீடு அதிகரிப்பு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இடை மறிப்பதால் இந்தியாவிலிருந்தும் கூட ஆப்கானிஸ்தானிற்கு நேரடியாக சென்று விட முடியாது. மும்பையில் இருந்து  ஈரான் வழியாக அங்குள்ள சப்பகார் துறைமுகம் போய் அங்கிருந்து  தான் ஆப்கானிஸ்தான் சென்றடைய வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. தலிபான்கள் வீழ்த்தப்பட்ட  பிறகு ஆப்கானிஸ்தானில்  இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான  கோடி ரூபாய் முதலீடுகளை ஆப்கானிஸ்தானில் மத்திய அரசு செய்துள்ளது. எனவே சீனாவின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகமானால் அது இந்தியாவை நிச்சயம் பாதிக்கும்.
ஆதாரம் சேகரிப்பு : இந்தியாவுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் ஒரு வித  அச்சுறுத்தலை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்ற சீனாவின் நோக்கம் வக்கன் காரிடார் மலைக்குகை சாலைத் திட்டத்தின் மூலம் நிறைவேறப் போகிறது. இது குறித்து  மேலும் பல ஆதாரங்களை என் ஆராய்ச்சிப் படிப்புக்காக சேகரித்து வருகிறேன். தொழில் நுட்ப ரீதியாக இனியும் கிடைக்கவுள்ள பல தகவல்கள் மூலம் இந்த இரகசிய சாலைத் திட்டம் குறித்து மேலும் விரிவாக தெரிய வரும். இவ்வாறு வி.கே.சிங் கூறியுள்ளார்.
இன்னொரு அதிசயம் : 1962 இல் நடந்த போரில் இந்தியாவிடம் இருந்து அக்ஷய்சிங் என்ற பகுதியை சீனா கைப்பற்றியது. அந்த இடத்தில் தான் காரகோரம் என்ற புகழ்  பெற்ற நெடுஞ்சாலையை சீனா கட்டி முடித்தது. இதேபோல பீஜிங் நகரில் இருந்து கரடுமுரடான மலைகள் வழியாக திபெத்திற்கு ரயில் பாதையையும் அமைத்தது. மிகப் பெரிய அறிவியல் தொழில் நுட்ப  அதிசயமாக அந்தத் திட்டம் கருதப்படுகின்றது. இப்போதும் இமயமலையில் உள்ள பாமியன் மலைத் தொடரில் உள்ள வக்கன் காரிடார் மலையைக் குடைந்து அமைக்கும் சாலை மட்டும் நிறைவேற்றப்பட்டால் அது அறிவியல் அதிசயமாகவே கருதப்படும். பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப் புறமாக இந்த வக்கன் காரிடார் விளங்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி தினக்குரல்


சிரியாவில் சிவில் யுத்தம் முதற் தடவையாக ஐ.நா. அறிவிப்பு 

Wednesday, 13 June 2012
டமாஸ்கஸ்:   சிரியாவில் சிவில் யுத்தம் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை முதற்தடவையாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் பாரிய நகரங்கள் அரச கட்டுப்பாட்டில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அமைதி காக்கும் படையின் தலைமை அதிகாரி ஹோவ் லட்சௌஸ் முதற் தடவையாக இக் குற்றச்சாட்டினை  முன்வைத்துள்ளார். ஹபா நகருக்கு செல்லமுற்பட்ட ஐ.நா. கண்காணிப்பாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே லட்சௌஸ் இவ்வாறான குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதேவேளை சிரிய அரசாங்கத்துக்கு ரஷ்யா தாக்குதல் ஹெலிகொப்டர்களை விநியோகிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது சிரிய நிலைவரத்தினை மேலும் மோசமாக்குவதாகவும் ஹிலாரி கூறியுள்ளார். சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கும்  தம்மால் விநியோகிக்கப்படும் ஆயுதங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டினை ரஷ்யா தக்கவைத்து வருகின்றது.
ஹபா நகருக்கு அருகாமையில் ஐ.நா. குழுவினர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக லட்சௌஸ் கூறியுள்ளார். சிரியாவில் சிவில் யுத்தம் ஒன்று நடைபெறுகின்றதா என்பது  தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த லட்சௌஸ், ஆம் நான் நினைக்கின்றேன் அவ்வாறு கூறிக் கொள்ளலாம் என சிறு குழு ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்துள்ளார். ஹபா வில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்காவும் ஐ.நா.வும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
 நன்றி தினக்குரல்


 சர்வதேச தலையீட்டுக்கு மத்தியிலும் மியன்மாரில் அதிகளவான வன்முறைகள்
யங்கூன்:   மியன்மாரில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பல எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை, இனப் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேசம் அழுத்தம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கலகங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் அதிகளவு பாதிக்கப்பட்ட மேற்கு ராகினே பிராந்தியத்தில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மார் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலே கடந்த வருடமே அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்முறைகளின் போது 25 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். எனினும் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம் அல்லது பௌத்த மதத்தினரா அல்லது அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.
கடந்த 5 நாள் வன்முறைகளில் 41 பொது மக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 3 ஆம் திகதியன்று பௌத்த மத குழுவொன்றினால் 10 முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்தே ராகினே பிராந்தியத்தில் வன்முறைகள் வெடித்துள்ளன.
அரச அதிகாரிகள் குறிப்பிட்ட இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் அச்சம் கொண்டுள்ளன.
பிராந்திய தலைநகர் சிட்வியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியான துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளமையையடுத்து கடுமையான பாதுகாப்பு அப்பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  நன்றி தினக்குரல்


ஈராக்கில் குண்டுவெடிப்பு: 42 பேர் பலி 

13/6/2012


 மத்திய ஈராக்கில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதலில் சுமார் 42 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹில்லா நகரில் 2 கார் குண்டுகள் வெடித்ததில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

பாக்தாத்தில் நடைபெற்ற தாக்குதலில் 12 பலியாகி இருப்பதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 நன்றி வீரகேசரி


No comments: