அவுஸ்திரேலியா சிட்னி ‘உயர்திணை’ நடத்திய விமர்சன அரங்கு


.
சிறுகதை வடிவத்திற்கு வரைவிலக்கணம் அவசியமா?

- மாலதி முருகபூபதி -


அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் அமைந்துள்ள தூங்காபி சமூக மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற விமர்சன அரங்கு, இங்கு வாழும் இலக்கிய ரசனைமிக்க பல்வேறு  கருத்தோட்டம் கொண்டவர்களையும் ஒன்றுகூடச்செய்து ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது.
கவிஞர் அம்பி, தமிழக எழுத்தாளர் வைதீஸ்வரன், மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள எழுத்தாளர்களான முருகபூபதி, கோகிலா மகேந்திரன், ஆ.சி.கந்தராஜா, செ. பாஸ்கரன், கேதார சர்மா, ஜெயகுமரன் சந்திரசேகரம், சௌந்தரி, பாமதி, பிரவீணன் மகேந்திரராஜா, காணா. பிரபா, முன்னாள் சுடர் ஆசிரியர் பொன்னரி கனகசிங்கம், நாடகக்கலைஞர் கருணாகரன் நடராஜா, யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலையரசி சின்னையா, கம்பன் கழகம் திருநந்தகுமார், கலப்பை ஆசிரியர் கேதீஸ்வரன், தமிழக இலக்கிய ஆர்வலர் ஆறு. குமாரசெல்வம் உட்பட பல இலக்கிய வாசகர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்ச்சியை சிட்னி உயர்திணை அமைப்பு ஒழுங்குசெய்திருந்தது.






நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய பிரவீணன், “கலை, இலக்கியவாதிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடுவதன் ஊடாக தம்மைத்தாமே வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வருடந்தோறும் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா சிறந்த களம் அமைத்து வருகிறது. குறிப்பிட்ட வருடாந்த நிகழ்வின் 12 ஆவது விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியின் அவுஸ்திரேலிய சிறப்பிதழ். இச்சிறப்பிதழை இன்றைய விமர்சன அரங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.” என்றார்.
 உயர்திணை அமைப்பினை உருவாக்கியிருக்கும் அதன் அமைப்பாளர் செல்வி யசோதா பத்மநாதன் அனைவரையும் வரவேற்றுப்பேசுகையில், “ இலக்கிய உலகில் எப்பொழுதுமே தலைமுறை இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். மூத்ததலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இதுபோன்ற விமர்சன அரங்குகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது உறுதியான இலக்கியப்பாலம் அமையும். பரஸ்பரம் ஒருவரிடமிருந்து மற்றுமொருவர் கற்றுக்கொள்வதற்கும் இலகுவாக இருக்கும். கவிஞர் வைதீஸ்வரன் தமிழக இலக்கிய சூழலில் பிரசித்தமானவர். அதுபோன்று கவிஞர் அம்பி ஐயா அவர்கள் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் கல்வி, மற்றும் இலக்கிய சூழலில் நன்கறியப்பட்டவர். இவர்களுக்கு மத்தியில் எமது எழுத்தாளர்கள் பலரையும் இளம்தலைமுறை இலக்கிய ஆர்வலர்களையும் ஒன்றாக சந்திக்கின்றோம். எமது உயர்திணை அமைப்பு ஒரு விதிமுறைக்குட்பட்ட சங்கம் அல்ல. இதில் தலைவர், செயலாளர் பொருளாளர்,  நிருவாகக்குழு என்றெல்லாம் பதவிகள் இல்லை. கருத்துக்கள் சங்கமிக்க உருவாக்கப்பட்ட ஒரு கருத்துக்களமே இந்த உயர்திணை.” என்றார்.

 விமர்சன அரங்கினை தலைமையேற்று நெறிப்படுத்திய கவிஞரும் அவுஸ்திரேலியா  தமிழ் முரசு வாராந்த இணைய இதழின்  ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவருமான செ. பாஸ்கரன் தமது உரையில், ‘ ஜீவநதி அவுஸ்திரேலிய சிறப்பிதழில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புனைவு இலக்கியப்படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவற்றை எழுதியிருப்பவர்கள். அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய மாநில நகரங்களில் வசிப்பவர்கள். இவர்களின் படைப்புகளின் ஊடாக இலங்கை வாசகர்கள் மட்டுமன்றி இந்தக்கண்டத்தின் வௌ;வேறு மாநில வாசகர்களும் பல விடயங்களை தெரிந்துகொள்கின்றார்கள். வாசகர்களுக்கு ஊடகமாகத்திகழ்வது அவர்களைச்சென்றடையும் படைப்புகளே. குறித்த படைப்புகள் வாசகரிடத்தில் எத்தகைய பாதிப்பினை அல்லது செல்வாக்கினை செலுத்துகிறது என்பதை படைப்புகள் குறித்த விமர்சனங்களே தீர்மானிக்கும். அதற்கு உயர்திணை அமைப்பு களம் தந்திருக்கிறது.
சிறுகதை பற்றிப்பேசும்போது ஜீவநதியில் வெளியான கதைகளுடன் மாத்திரம் மட்டுப்படாது. ஒரு பரந்த விவாதத்தளத்தை அது ஏற்படுத்தும்.  அவ்;வாறே கவிதை, கட்டுரைகள் தொடர்பாகவும் ஆய்வுசெய்யப்படும். இந்த விமர்சன அரங்கில், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளில் மூன்று பேர் உரையாற்றுவர். அவர்களைத்தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் ஒருவர் குறி;ப்பிட்ட விமர்சனஉரைக்கு எதிர்வினையாற்றி விமர்சன அரங்கை தொடருவார். அதிலிருந்து கருத்தாடல் நிகழும். இவ்வாறு கருத்தரங்குகள், விமர்சன அரங்குகள் வடிவமைக்கப்படும்போது அங்கே ஜனநாயகத்தன்மை பேணப்படும்.” என்றார்.


‘ஜீவநதி’ அவுஸ்திரேலியா சிறப்பிதழின் வருகைக்காக முன்னின்று இயங்கிய எழுத்தாளர் லெ. முருகபூபதி உரையாற்றுகையில், “ அவுஸ்திரேலியாவுக்கென கலை, இலக்கிய சிறப்பிதழ் வெளியாவது இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளிவந்த அம்மா என்ற இதழ் அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டின் பிரபல இலக்கியச்சிற்றேடு கணையாழியும் அவுஸ்திரேலிய சிறப்பிதழை எமது வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த வரிசையில் 2000 ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்குக்காலம் இந்த கங்காருநாட்டில் சிறப்பிதழ்கள் வெளியாகியிருக்கின்றன. மெல்பனில் 2001 இல் முதலாவது எழுத்தாளர் விழா நடந்தவேளையில்  இலங்கையில் நீண்டகாலம் வெளியாகும் மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்பிதழும் கன்பராவில் 2004 விழாவில் ஞானம் சிறப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இந்த ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியின் சிறப்பிதழ் வாசகரின் கரங்களுக்கு வந்துள்ளது. இதில் முக்கியத்துவம் என்னவென்றால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஒரு கலை, இலக்கிய மாத இதழின் வெளிநாட்டு சிறப்பிதழின் வருகைதான். ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் எம்மவர்கள் ஈழத்து கலை, இலக்கிய உலகிற்கு ஆக்கபூர்வமான பங்களிப்புகளை இதுபோன்ற சிறப்பிதழ்களின் ஊடாக வழங்கமுடியும் என்பதற்கு இச்சிறப்பிதழ்கள் முன்னுதாரணமாகத்திகழும். இந்தப்பணிகளின் ஊடாக புகலிட மற்றும் தாயகப் படைப்பாளிகளும் வாசகர்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ள முடியும். ஏனைய நாடுகளிலும் இதுபோன்ற சிறப்பிதழ்கள் வெளியாக வேண்டும்.


அவுஸ்திரேலியாவில் எம்மவர்கள் அடுத்தடுத்து மெல்பனிலும் சிட்னியிலும் குறுகிய காலத்துள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதிக்கு சிறந்த அறிமுகத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்பாக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணிதரன் அவர்கள் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது பெற்றோர்களுடன் அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்த காலப்பகுதியில் இங்குள்ள ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப்பாடசலையில் மேல்வகுப்பில் கற்றவர். தாயகம் திரும்பிய பின்னரும் கல்வியைத்தொடர்ந்து அங்கு தற்போது பணியாற்றிக்கொண்டே தனது இலக்கிய ஆற்றலை வளர்த்து ஒரு கலை, இலக்கிய இதழை கடந்த சில வருடங்களாக சீராக தொடர்ந்து வெளியிட்டு வரும் அதே சமயம், தான் சிறிது காலம் வாழ்ந்த அவுஸ்திரேலியாவை மறவாமல் இங்குள்ள படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் சிறப்பிதழையும் வெளியிட்டிருப்பதானது, ஒரு இளம்தலைமுறையின் பண்புமிக்க முன்மாதிரியான செயல் என்றும் முருகபூபதி தமது உரையில் குறிப்பிட்டார்.
 ஜீவநதி சிறப்பிதழில் பிரசுரமாகியிருந்த சிறுகதைகளைப்பற்றிய தமது விமர்சன உரையை ஆறு. குமார செல்வம் நிகழ்த்தினார். அவர் தமது உரையில்”கோகிலா மகேந்திரனின் சிறுகதை தமிழகத்தவரான தனக்கு தமிழ்நாட்டில் ஒரு பஸ்ஸில் பயணிக்கும் அனுபவத்தை தருகிறது. அவர்களின் பேச்சுமொழியின் ஊடாக அவர்களின் உள்ளத்து உணர்வுகளையும் நாம் புரிந்துகொள்கின்றோம். இலக்கிய மொழியின் வெற்றியைத்தான் அதுகுறிக்கிறது.” என்றார்.


 அவரது கருத்தை உள்ளடக்கிய  சபையோரின் மாற்றுக்கருத்தை ஜெயகுமாரன் தொடக்கிவைத்தார். கவிதைகளை முன்வைத்து கோகிலா மகேந்திரன் நிகழ்த்திய உரையைத்தொடர்ந்து இ. கேதராசர்மா விமர்சன உரையை தொடங்கினார்.
கட்டுரைகள் பற்றிய இந்துமதியின் உரையினைத்தொடர்ந்து சௌந்தரி சபையோரின் கருத்துக்களை தொடக்கிவைத்தார்.
 சிறுகதையின் வரைவிலக்கணம் தொடர்பாக பேராசிரியர்ஆசி. கந்தராஜா கருத்துக்கூறுகையில், “சிறுகதை வடிவத்திற்கு வரைவிலக்கணம் அவசியமற்றது. இதனை இன்று தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றுள்ள அ.முத்துலிங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளார்.” என்றார்.
“இலக்கியப்படைப்புகளுக்கு வரைவிலக்கணம் இருப்பதனால்தான் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்களின் வேறுபாட்டையும் தர நிர்ணயத்தினையும் வாசகர்கள் தெரிந்துகொள்கிறார்கள்.” என்றார் கோகிலா மகேந்திரன்.


சிறுகதைகள் வாசகர்களுக்கு  வாழும் நம்பிக்கையை ஊட்டவேண்டும். தற்கொலைகளை நியாயப்படுத்தும் விதமாக சிறுகதைகள் அமைந்துவிடக்கூடாது என்றார் ஆறு. குமாரசெல்வம்.
“சிறுகதைத்தேர்வு அனுபவம் அதனை வெளியிடும் இதழ் ஆசிரியருக்கு நிச்சயம் இருக்கவேண்டும். ஒருவருக்கு பிடித்தமான கதை மற்றுமொருவருக்கு பிடித்தமில்லாமல் போகலாம்.” என்றார் ஜெயகுமாரன்.
 “கவிதையில் சந்தம், ஓசைநயம் என்பன முக்கியமானவை என்று சொல்லப்படுகிறது. இந்த இலக்கணங்களை மீறிய கவிதைகளும் வெளியாகின்றன.” என்றார் கேதாரசர்மா.
 “படைப்பாளிகள் வாசகரை சரியான பாதையில் வழிநடத்தவேண்டும். அதுவே தமிழ் இலக்கியத்திற்கு அவர்கள் வழங்கும் சிறந்த தொண்டு.”- என்றார் கலையரசி சின்னையா.
 “ஜீவநதியில் வெளியாகியிருக்கும் இரண்டு கட்டுரைகள் அவுஸ்திரேலியாவின் பூர்வீக வரலாற்றையும் இந்நாட்டின் ஆதிவாசிகளின் வாழ்வுக்கோலங்களையும் சித்திரித்துள்ளன. இந்த ஆக்கங்கள் ஈழத்து வாசகருக்கு இந்நாடுபற்றிய அறிமுகத்தை வழங்கும். அத்துடன் புனைவிலக்கிய பாணியில் அமைந்துள்ள நடேசன் மற்றும் சுதாகரன் எழுதியிருக்கும் படைப்புகள் இந்நாட்டின் பிரசித்தி பெற்ற கங்காரு பற்றியும் வீட்டின் செல்லப்பிராணியான பூனை பற்றியும் பேசுகின்றன. மனிதர்களைப்பற்றி பேசும் படைப்பு இலக்கியங்களுக்கு மத்தியில் இந்த இரண்டு படைப்புகளும் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை தருகின்றது. முருகபூபதி எழுதியிருக்கும் அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற கட்டுரை எமது வாசகர்களுக்கு பல புதிய தகவல்களை வழங்குகின்றது.” என்றார் இந்துமதி.


 “ அஹிம்சையும் சத்தியமும் நிச்சயம் வெல்லும் எனச்சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால் இன்றைய நடைமுறை வாழ்வில் அது சாத்தியமில்லை என்பதனால்தான் குடும்பங்களிலும் நாடுகளிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றன. பெண்ணிலைவாதிகள், பெண்களுக்கு நிகழும் கொடுமைகளினால்தான் அஹிம்சை குறித்து விமர்சிக்கின்றார்கள், விவாதிக்கின்றார்கள்.” என்றார் சௌந்தரி.
 குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிய விமர்சன அரங்கு நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவடைந்ததும் முன்மாதிரியான சிறப்பு எனலாம். இந்நிகழ்ச்சியில் இலக்கியரசனை விருந்துடன் தேநீர் விருந்தும் இடம்பெற்றது.


                           ----0----

No comments: