கண்ணதாசன் பேட்டி - தீபம் இலக்கிய மாத இதழுக்காக!


.
அரசியல்சினிமாஇலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி.

அவரைக் கண்டு பிடிக்க முடியாதுகண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.

முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பேட்டிக்கு வந்திருப்பது பற்றிக் கூறினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வரும்படி கூறினார்.

மறுநாள் நான் சென்ற போது கண்ணதாசன் வீட்டில் இல்லை. இருங்கள். வந்து விடுவார்என்றார்கள். நான் காத்திருந்தேன்அவர் வந்து விட்டார். சிறிது நேரத்தில் புறப்பட்டு அவரது அலுவகம் சென்றோம். அங்கே வேறொரு பத்திரிகையைச் சேர்ந்தவர்அவரிடம் எழுதி வாங்குவதற்காகக் காத்திருந்தார்.

சிறிது நேரம் தன் இளமை நினைவுகளையும்தனது பத்திரிகை அரசியல் அனுபவங்களையும் பற்றிக் கவிஞர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பிறகுஅந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து எழுதிக் கொள்ளுங்கள்’ என்று கட்டுரையை ‘டிக்டேட்’ செய்ய ஆரம்பித்தார். தட்டுத் தடங்கலின்றி வார்த்தைகள் சரஞ்சரமாக வெளிவந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருபது நிமிஷத்தில் கட்டுரை முடிந்து விட்டது. எழுதியதை வாங்கி ஒரு முறை படித்துப் பார்த்தார். அடித்தல் திருத்தலுக்கான அவசியமின்றிக் கொடுத்து விட்டார்.

நான் கேட்டேன்.

நீங்கள் கைப்பட எழுதுவதில்லையா?’


கதையோ கட்டுரையோ நான் கைப்பட எழுதி இருபது வருஷங்களுக்கு மேலாகி விட்டது. கவிதை மட்டுமே கைப்பட எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது அதையும் சொல்லியே எழுதச் செய்கிறேன். இப்பொழுது நான் எழுதுவதெல்லாம் செக்கில் போடும் கையெழுத்து மட்டும்தான்!” என்றார் சிரித்துக் கொண்டே.

கண்ணதாசனின் இலக்கிய வளர்ச்சிக்கு அவரது ஞாபக சக்தி ஒரு காரணமாகும்.

தான் எழுதியிருக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களில் ரிபிடேஷன்’ என்பது மிகக் குறைவு என்கிறார் கண்ணதாசன்.

கம்பராமாயணம் படிக்கத் தனக்கு ஆர்வமேற்பட்டதற்குக் காரணம் டி.கே.சி.தான் என்று கூறுகிறார் இவர்.

சிறு வயதில் நான் காரைக்குடிக்கு அருகிலுள்ள அமராவதி புதூர் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுதோறும் காரைக்குடியில் கம்பர் விழா நடக்கும். மாலை நேரத்தில் நான் அங்கு வந்து விடுவேன். டி.கே.சி. பேசுகிறார் என்றால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். நோட்டுப் புத்தகமும் பென்சிலுமாக முன் வரிசையில் அமர்ந்து கொள்வேன். கவிதைகளைப் பிரித்துப் பிரித்து அழகாகச் சொல்வார் டி.கே.சி. அப்படி அவர் சொல்லிக் கொண்டே வரும் போதே அனைத்தும் என் நினைவில் பதிந்துவிடும்.

ஒரு மணி நேரம் கவிஞருடன் நான் உரையாடி முடிந்தவுடன் ஒரு நல்ல இலக்கியம் படித்த திருப்தி எனக்குக் கிடைத்தது.

கவிஞர் கண்ணதாசன் நினைவில ஆயிரமாயிரம் எண்ணங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக விழித்துக்கொண்டு வெளிவரும் காலம்தமிழ் இலக்கியத்திற்கும் சுவையுள்ளதாக அமையும்.

தங்கள் இளம் பருவ வாழ்க்கைச் சூழல்களையும் எது தங்களைக் கவிஞனாக உருவாக்கியதனையும் பற்றிய விவரங்களைத் தீபம் வாசகர்களுக்குக் கூறலாமல்லவா?

ஏழ்மையான குடும்பம்எளிமையான வாழ்க்கை - அந்தச் சூழலிலும் எதிர்காலத்தைப் பற்றிய இனிமையான கனவு கிடைத்தவை குறைவாக இருந்ததால்கிடைக்க வேண்டியவை பற்றிய ஆசைகள்படித்தது குறையாக இருந்ததால்பார்க்கும் புத்தகங்களையெல்லாம் படிக்கத் தோன்றும் மனம்.

அந்தச் சிறிய கிராமத்தில் காலையிலும்மாலையிலும் பனைமரக் கூட்டங்களுக்கு நடுவில் போய் அமர்ந்திருப்பேன். தொடர்புள்ளதாகவும்இல்லாததாகவும் பலவிதச் சிந்தனைகள் வரும்.
உலகத்தில் நாம் உயர்ந்து வர வேண்டும்’ என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி தலை தூக்கி நிற்கும்.

சிறிய தவறு செய்து விட்டாலும் அதை நினைத்து வேதனைப்படும் மனது. சிறிது நன்மை செய்து விட்டாலும் மகிழ்ச்சி கொண்டாடும். சுக துக்கங்களைப் பரிபூரணமாக உணரக்கூடிய ஆற்றலே என் கவிதைகளுக்கு அஸ்திவாரம்.

பழைய எல்லா முறைகளையுமே நான் விரும்புகிறேன். ஆனால் எதையுமே ஐயந்திரிபறக் கற்றதில்லை. கம்பனைப் படித்ததிலிருந்து அறுசீர் விருத்தத்தில் எனக்கு ஆசை அதிகம். சுலபமாக எழுத ஆசிரியப்பா முறையை நான் நேசிக்கிறேன். தண்டைலையார் சதகம்,அறப்பளீஸ்வர சதகம்குமரேச சதகம் ஆகியவற்றைப் படித்ததிலிருந்து ஓசை நயமுள்ள விருத்தங்களில் நான் எழுத விரும்புகிறேன். வெண்பா யாப்பை நான் சரிவரக் கற்றதில்லை.

சங்க கால - இடைக்காலக் கவிதைகளுக்கும் இன்றைய கவிதைகளுக்கும் - உள்ளடக்கத்தில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்உருவ அமைப்பில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

சங்க கால இடைக் காலக் கவிதைகளின் உள் அடக்கத்தைத்தான் இன்று வேறு பல உருவங்களில் எல்லோரும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

புதிய உள்ளடக்கங்களும்உருவங்களும் பிறமொழித் தொடர்புகளால் நமக்குக் கிடைத்தவையே.

முற்காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடையேயுள்ள ஒரு வேறுபாடுதற்காலக் கவிதைகளில் எதார்த்தவாதம் அதிகம்முற்காலக் கவிதைகளில் சித்தாந்தம் அதிகம்.

சமூகப் பொருளாதாரம் அரசியல் பிரச்னைகளைப் பாதிக்காமல் வெறும் அருவியையும் குருவியையும் மயிலையும் மட்டுமே இன்றைய கவிஞன் பாடி வரலாமா?

எந்தப் பிரச்னையிலும் சிக்கிக் கொள்ள விரும்பாதவர்கள் அருவியையும்குருவியையும் மட்டுமே பாடிக் கொண்டிருக்கலாம்.

வருங்காலச் சந்ததிகளுக்குப் புது வழிகாட்ட சமூகப் பிரச்னைகளையும் கவிஞர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக வெறும் புரட்சிரத்தம் என்று பாடிக் கொண்டிருப்பது வளமான கவிதையிலும் வறட்சியை உண்டு பண்ணிவிடும்.

தங்களைக் காலங் கடந்து வாழச் செய்யும் பாடல்களாக எவை நாளையும் நிலைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய கவிதைத் தொகுப்புகளில் தனி மனித ஸ்துதியை நீக்கிவிட்டுமற்றவற்றைப் படித்தால் எவை காலங்கடந்து வாழுமென்பதை நீங்களே கண்டு கொள்ள முடியும்.

பாரதிபாரதிதாசன்ச.து.சு.யோகி பற்றி உங்கள் கருத்துக்களை மனம் திறந்து கூறலாமா?

பாரதி - எனக்கு ஆதர்ஸம். போலித்தனமான ஒரு சகாப்தத்தை முடித்தவனும் அவனே;புதிய சகாப்தத்தை ஆரம்பித்தவனும் அவனே.

அவன் பாடல்களின் அளவு குறைவுஅழகு அதிகம். குறைந்த அளவு பாடல்களிலேயே - அதுவும் குறைந்த வயதிலேயே கடந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் மூன்றையும் காட்டிவிட்டுப் போய் விட்டான்.

பாரதிதாசன் - வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தொடவில்லைஆனால் தொட்டவரை தோல்வியில்லை.

பாரதி அளவுக்குப் புதிய வார்த்தைகளை உருவாக்கவில்லை. ஆனால் பாரதியிடம் இல்லாத புதிய நோக்கு பாரதிதாசனிடம் அதிகம்.

ச.து.சு.யோகி - இந்த இருவர் அளவுக்குச் சமமானவர் என்பது என் கருத்து . ஆனால் சமூகப் பிரச்னைகளிலும்அன்றாட வாழ்க்கையிலும் சம்பந்தப்படாமலும் ஒதுங்கியே இருந்தால் உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரிடம் ஆழ்ந்த கருத்தோட்டம் உண்டு. பழைய கதைகளில் புதிய கண்ணோட்டம் உண்டு. செழுமையான சொற் கோலங்கள் உண்டு.

வேறு செல்வாக்கால் யார் வேண்டுமானாலும் கவியாக்கி விடப்படும் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தத் தலைமுறையில் நாம் அவர்களை ஒப்புக் கொண்டு விடுவதன் மூலம்அடுத்த தலைமுறை நமது பெருந்தன்மையைப் பாராட்டலாம் அல்லவா?

புதுக் கவிதைகள்திசும்பரக் கவிகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

புதிய மரபுகள்புதிய உத்திகள் கவிதைகளில் கொண்டு வரப்படுவது நல்லதுதான். வெளிநாட்டார் நம்மை மதிக்க வேண்டுமென்றால் நமது கருத்துக்கள் வெளிநாடு செல்ல வேண்டும்.

பழைய மரபுக் கவிதைகளை மூலச்சுவை குன்றாது மொழிபெயர்க்க முடிவதில்லை. புதுவகைக் கவிதைகள் தமிழ் மரபுக்கு லாயக்காக இல்லை என்றாலும்மொழி பெயர்ப்புக்கு யோக்கியதை உடையவையாக ஆகிவிடுகின்றன.

ஓசை நயம் சந்தம்எதுகைமோனை ஆகியவை கவிதைக்கு அழகு ஊட்டுவனவாஅல்லது இன்று சிலர் கூறுவது போல் இடையூறுகளா?

ஓசை நயம்சந்தம்எதுகை மோனைதான் கவிதைக்குத் தலை. அது இல்லாத கவிதை முண்டம்.

தலை இல்லாத உடல் யாருடையது என்று அடையாளம் காண முடியாதது போல்ஓசையும் சந்தமும் இல்லாதது கவிதையாவசனமா என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

சித்தர் பாடல்கள் கடவுளைப் பற்றிய சடங்குகளைச் சாடினாலும்அவர்கள் நாத்திகர்கள் இல்லை அல்லவாஅதுபற்றி உங்கள் அபிப்பிராயம்?

கடவுளே இல்லை என்று மறுப்பது நாத்திகவாதம். கடவுள் பெயரால் ஏனிந்தத் தொல்லை என்று கேட்பதுதான் சித்தர்கள் பாடல்கள்அவர்கள் மத விரோதிகள் அல்லமதச் சீர்திருத்தவாதிகள்.

கடவுள் இல்லையென்ற முட்டாள்தனமான வாதத்தை எந்தப் பழந்தமிழ் இலக்கியத்திலும் காண முடியாது.

மனிதனின் ஆத்மாவில் உண்டான புண்களைக் கவிதை ஆற்றிவிடுகிறது. ஏனென்றால் கவிதைக்கு உன்னத ஆதர்சமும்உயிர்த் துடிப்புள்ள உணர்ச்சியும் உண்டு என்கிறார்களே - இதை விளக்க முடியுமா?

வாழ்க்கையை உணர்ச்சி பூர்வமாகத் தொடக் கூடிய கவிதை எதையும் ஆற்றிவிடும்அது சத்துள்ள உணவு. சிலர்தான் அந்த உணவைப் பரிமாறுகிறார்கள். சிலர் அதன் சக்கையைப் பரிமாறுகிறார்கள்.

சக்கை பசியைத் தீர்க்காது. புண்ணை ஆற்றாது.

உயிர்த் துடிப்புள்ள கவிதை போரைத் தோண்டும்போரை நிறுத்தும். புண்படுத்தும்புண்ணை ஆற்றும்.

பஜனைப் பாட்டும்நலுங்குப் பாட்டும் தமிழுக்குத் தொன்மையானதுதானா?

பஜனைநலுங்கு இவையெல்லாம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவை.

தமிழுக்கு இவற்றின் மரபு கிடையாது. நலுங்கு என்பது ஆரிய நாகரிகத்தின் தமிழாக்கம்.

பஜனை என்பது மத உணர்ச்சி பெற்ற இசை வடிவம்.

தீபம் இலக்கிய மாத இதழ் பற்றித் தங்கள் கருத்தை அறியலாமா?

தீபம் இன்னும் அகல் விளக்காகவே இருக்கிறது. அது இந்த நாட்டின் தலையெழுத்து. நல்ல இலக்கியப் பத்திரிகை எதுவும் இப்படி அமைதியாகத்தான் போக வேண்டியிருக்கிறது. இந்தத் தலைமுறையில் தினத்தந்தி புத்திதான் அதிகம். அடுத்த தலைமுறை தீபத்தைத் தேடிப்படிக்கும். அதுவரை இந்தத் தரத்தையும்அழகையும் கட்டிக் காத்துஇன்றைய மீன் சந்தைக்கு ஈடு கொடுத்துத் தாக்குப் பிடிக்க வேண்டியது அவசியம்.

தீபம் சார்பில் கண்ணதாசனுக்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

ஆர்.பி.சங்கரன் (கண்ணதாசன் பேட்டிகள்

No comments: