இலங்கைச் செய்திகள்

கனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்

   ஜனாதிபதியின்  லண்டன் உரை நிறுத்தத்தின் பின்னணியில்  பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு

பொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்

இலங்கை தனக்குத் தானே உதவ முடியுமா

ஜே.வி.பி.யின் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பலர் படுகாயம்;! இனந்தெரியாத ஆயுததாரிகள் கைவரிசை! _























கனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல் 



8/6/2012

கிளிநொச்சி பரந்தன் கமரிக்குடாவில் தனிமையில் இருந்த வேளை குழுவொன்றினால் வெட்டிக் கொல்லப்பட்ட கனேடிய பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திர ராஜாவின் கொலையின் பின்னணியில் இளம் பெண் ஒருவரே இருந்து செயற்பட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மகேந்திரராஜாவின் 22 ஏக்கர் காணியைப் பராமரித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஞானசேகரம் என்பவரைத் திருமணம் செய்திருந்த ஞானசேகரம் ஆரணி (32) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு இந்தக் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது பற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது,

கனடிய பிரஜையாகிய மகேந்திரராஜா கனடாவில் இருந்து தமது சொந்த ஊருக்குத் திரும்பி தனது காணியை திருத்தி பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு தச்சு வேலை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற கண்டாவளையைச் சேர்ந்த அருளம்பலம் அகிலன் (24) என்பவருடன் முகம் தெரியாத வகையில் காதலிப்பது போன்று இந்தப் பெண் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டிருந்தாராம்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வந்ததாகவும் தனக்கு எவருமே உறவினர்கள் இல்லையெனத் தெரிவித்து தொலைபேசியூடாக மிகவும் பாசமாகப் பேசி இந்தப் பெண் அகிலனுடன் சுமித்ரா என்ற பெயரில் நெருக்கத்தை வளர்த்து அவருக்கு அன்பளிப்பு வழங்கியதன் பின்னர் தனக்கு 50 ஆயிரம் ரூபா பணம் தேவையென கேட்டு வங்கிக் கணக்கொன்றில் அந்தப் பணத்தை வைப்பிலிடவும் செய்துள்ளார். இத்தகைய உறவின் போது கமித்ரா அனுப்பியதாகக் கூறி இந்தப் பெண்ணே அகிலனின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

இத்தகைய உறவின் போது தன்னை மகேந்திரராஜா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் எனவே அதனைத் தடுத்து நிறுத்துவதுடன் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் ஒரு நாள் மகேந்திர ராஜா 30 லட்சம் ரூபா பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்துள்ளதாகவும் அவரைத் தாக்கினால் அந்தப் பணத்தையும் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்து அகிலனைத் தூண்டி விட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. நேரடியாக இந்தச் சம்பவத்தில் அகிலனை ஈடுபட வேண்டாம் என ஆலோசனை கூறியிருந்த இந்தப் பெண் வேறு யாரையாவது கொண்டு இந்த காரியத்தை நிறைவேற்றுமாறும் கேட்டிருந்தாராம்.

இதனையடுத்தே அகிலன் தன்னுடன் தச்சு வேலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற அப்பாவு ஆனந்தராசா (26), பாலா எனப்படும் கல்லுச்சாமி பாலச்சந்திரன் (23), அபேசிங்க முதியான்சலாகே மைக்கல் திலிப் குமார ஆகியோருடன் இறந்தவராகிய மகேந்திர ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியுள்ளார். அவரைத் தாக்கிய போது எதிர்பாபராத விதமாக அவர் கடும் எதிர்ப்பைக் காட்டியதையடுத்தே அவரை வெட்டிக் கொன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மே மாதம் 3 ஆம் திகதி இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மே மாதம் 22 அம் திகதி அகிலன் உட்பட அவரது சகாக்களையும் சேர்ந்து 4 பேரை பொலிசார் கைது செய்து விசாரணைகள் நடத்தியுள்ளனர். விசாரணைகளையடுத்து 23 ஆம் திகதி ஞானசேகரம் ஆரணி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்பே சுமித்ரா என்ற பெயரில் முகத்தைக் காட்டாமல் திரைமறைவில் இருந்து ஆரணியே செயற்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரையில் இவர்களைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார். 6 ஆம் திகதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கில் பல திருப்பங்களைக் கொண்ட தகவல்கள் வெளிவந்திருந்தன.

மகேந்திரராஜா கொலைச் சம்பவத்தில் முதலாவது சந்தேக நபராகக் கருதப்படுகின்ற இந்தப் பெண் தனது பிரதேசத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரையும் தொலைபேசி ஊடாக இனிமையாகப் பேசி அவருடன் காதல் கொண்டிருப்பது போன்று பாசாங்கு செய்து அந்த அரச ஊழியரிடமிருந்தும் 55 ஆயிரம் ரூபா பணத்தை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடச் செய்து பண மோசடி செய்துள்ள விபரமும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 
நன்றி வீரகேசரி


 ஜனாதிபதியின் லண்டன் உரை நிறுத்தத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு 
லண்டன் மான்ஷன் மாளிகையில் கடந்த ஜூன் 06 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதியின் உரை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதற்கு லண்டன்
புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் அழுத்தமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலிகள் சார்பு அமைப்பாகிய லண்டன் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் சென் கந்தையா எனப்படும்  அதன் அமைப்பாளர் பொது நலவாயத்தின் பிரிட்டிஷ் வர்த்தக சபைக்கு தெரிவித்த எதிர்ப்பும் கொடுத்த அழுத்தமும் காரணமாகவே ஜீன் 06 ஆம் திகதி நடைபெறவிருந்த முற்பகல் கூட்டத் தொடரை பிரிட்டிஷ் வர்த்தக சபை இரத்துச் செய்ததாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இலங்கையில் சமாதானம் மற்றும் நீதிக்கான அமைப்பு எனப்படும் புலிகளுக்கு ஆதரவான அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பிரேட் காட்டரும் இலங்கை ஜனாதிபதி பிரிட்டிஷ் வர்த்தக சபையில் உரையாற்றுவதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததாக  குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென் கந்தையா மற்றும் பிரேட் காட்டர் மற்றும் லண்டனில் பிரமுகர்களாகவுள்ள புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அழுத்தத்துக்கும் பயந்தே பிரிட்டிஷ் வர்த்தக சபை ஜனாதிபதியின் உரையை இரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் எவ்வாறாயினும் குறிப்பாக அவருடைய உரையை மட்டும் இரத்துச் செய்வதற்குத் தயங்கிய வர்த்தக சபை ஜூன் 06 ஆம் திகதிக்கான முற்பகல் கூட்டத்தையே நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கிவிட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பிற்பகல் கூட்டம் அன்று 2 மணிக்கு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வர்த்தக சபையால் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முற்பகல் கூட்டத் தொடர் பாதுகாப்பை முன்னிட்டு நீக்கப்பட்டதாக மட்டும் பிரிட்டிஷ் வர்த்தக சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்புக் காரணம் பற்றிய லண்டன் ஸ்கொட்லான்ட் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்; பிரிட்டிஷ் வர்த்தக சபையால் லண்டன் மான்ஷன் மாளிகையில்  ஜூன் 06 ஆம் திகதி நடத்தப்படவிருந்த கூட்ட நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு பூரண பாதுகாப்பை வழங்குவதாக ஸ்கொட்லன்ட் பொலிஸ் தரப்பு அறிவித்திருந்ததாகவும் குறித்த முற்பகல் கூட்டத் தொடரை இரத்தச் செய்யும் படி ஸ்கொட்லன்ட் பொலிஸ் கோரவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த முற்பகல் கூட்டத் தொடரை இரத்துச் செய்யத் தீர்மானித்தது. பிரிட்டிஷ் வர்த்தக சபையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் இலங்கை ஜனாதிபதியின் உரையை இரத்துச் செய்யும் வகையில் முற்பகல் கூட்டத் தொடரை பிரிட்டிஷ் வர்த்தக சபை லண்டனிலுள்ள புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆதரவு அமைப்புகளுக்கும் பயந்தோ அல்லது ஆதரவாகவோ இரத்துச் செய்தது என்பது நிரூபக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் மூலம்
திவயின
10/06/2012
நன்றி தினக்குரல் 



பொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்
ஆணைப் பெண்ணாக்க முடியாததைத் தவிர வேறு எதனையும் செய்யக்கூடிய சர்வவல்லமை வாய்ந்தது என்று தற்போதைய அரசியலமைப்பின் கர்த்தாவான மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மார்தட்டிக்கொண்ட அரசியலமைப்பிலுள்ள நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தவருமான சரத் பொன்சேகாவிடமிருந்து உரத்த குரல் வெளிப்பட்டிருக்கிறது. சிறைவாசத்தின் பின்னர் முதன்முறையாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிடுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கும் பொன்சேகா, நாட்டின் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டவராக மாற்ற வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் .
சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கப்பதற்கும் மட்டுமே பாராளுமன்றத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அச்சத்தை எதிர்கொண்டால் சட்டமா அதிபரின் உதவியுடன் குற்றச்சாட்டுக்களைத் தயாரித்து எவரையும் சிறையில் தள்ளிவிடுவதற்கு ஏற்புடையதாக தற்போதைய முறைமை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பொன்சேகா, அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் மூலம் பொது, பொலிஸ், தேர்தல், நீதி, ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுக்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய ஆட்சிக்கு வலுச் சேர்க்கும் முக்கிய நோக்கத்துடனேயே இச்சட்டமூலத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாட்டின் சட்ட ஆட்சி வலுப்பெற வேண்டுமானால் இந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் "தேசப்பற்று' என்ற வார்த்தையை தனது இனத்தை மேம்படுத்த அவர் பயன்படுத்தியிருந்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்கிற்கும் பொன்சேகா சமாந்தரம் வரைந்துள்ளதையும் காணமுடிகிறது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக பெரும்பான்மை இனவாதத்தை அரசாங்கம் வெளிப்படையாக ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பல்லவி கடந்த மூன்று தசாப்தங்களாக தென்னிலங்கையில் பாடப்பட்டுவரும் நிலையில் பொன்சேகா இப்போது தெரிவித்திருப்பது பெரும்பாலானவர்களுக்கு "ஆறின கஞ்சியா'கவே இருக்கும் என்பதில் வியப்பில்லை.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக இடதுசாரிகளையும் தன்னுடன் அணிதிரட்டி 1994 இல் ஆட்சி பீடமேறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க இரு தடவைகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் அதனை நீக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளை தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் இந்த ஜனாதிபதி நிறைவேற்றதிகார முறைமையை ஒழிக்கவேண்டும் என்பதில் இப்போது முழுமையான விருப்பத்தை கொண்டிருப்பதாகத் தென்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் இந்த விவகாரம் சூடுபிடிப்பதும் பின்னர் அமுங்கிப்போவதும் பல வருடங்களாக பார்க்கப்பட்ட காட்சிகள். ஆனால், நாட்டில் ஊழல், மோசடி தலைவிரித்தாடுவதாகவும் சகலதுறைகளையும் இது மோசமாக அரித்து நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும் அதனால் இந்த அரசாங்கத்தை பதவி கவிழ்க்க பொது எதிரணிக் கூட்டணியை அமைப்பதே தனது தற்போதைய இலக்கு என்று பொன்சேகா கூறியிருப்பது யதார்த்தபூர்வமான விடயமாகத் தென்படுகிறது. ஜனநாயகக் கட்டமைப்புக்குள் இதற்கான அவரின் முயற்சிக்கு இடம் இருப்பதுடன் எதிரணியின் ஆதரவையும் அவர் திரட்டிக் கொள்ள முடியுமென எதிர்பார்க்க முடியும்.
ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய தீர்வு பற்றி பொன்சேகாவிடமிருந்து தீர்க்கமான யோசனை எதுவும் காணப்படாத தன்மையே அவரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்திருக்கும் பொன்சேகா தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் இதர சமூகங்கள் பரஸ்பரம் தொடர்பாடல்களை மேற்கொண்டு தங்களுக்கிடையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஊக்குவிப்பை வழங்க வேண்டுமென்று கருத்து தெரிவித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பான தனது கருத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டதாகத் தென்படுகிறது. யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் கனடிய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றில் இந்நாட்டில் தமிழ் மக்கள் வாழ முடியும். ஆனால், பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களுக்குள்ள அதேவிதமான உரிமைகளைக் கோரும் பாத்தியதை அவர்களுக்கு இல்லையெனக் கூறியிருந்தமை கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஆயினும் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க வட, கிழக்கிலுள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அச்சமயம் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தனர்.
இப்போது சிறை வாழ்க்கை முடிந்து விடுதலையான நிலையில் பொன்சேகா பெரும்பான்மை இனவாதத்துக்கு அரசு தீனி போடுவதாக குற்றம்சாட்டியிருப்பது சிங்கள கடும் போக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் அவரே கூறியிருந்ததுபோன்று சிறைவாழ்வு அனுபவம் அவரை புடம்போட்டு மெருகுபடுத்தியிருக்கக்கூடும். ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு இலங்கையின் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தும் திட்டங்கள், கருத்துகளையொத்ததாகவே பொன்சேகாவினதும் கருத்துகள் காணப்படுகிறது. உன்னதமான அரசியல் கலாசாரத்தை நாட்டில் தோற்றுவிக்க பொது எதிரணிக் கூட்டணியை ஏற்படுத்திப் பாடுபடப்போவதான அவரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதை காலமே தீர்மானிக்கும்.
நன்றி தினக்குரல்  




இலங்கை தனக்குத் தானே உதவ முடியுமா
இலங்கையானது தனக்குத் தானே எவ்வளவு தூரத்திற்கு உதவ முடியும். இலங்கையில் அபிவிருத்தி மாற்றத்தை உள்நாட்டு தொண்டர் சேவையினாலும் சமூக பணியினாலும் மேற்கொள்ள முடியும். ஆனால், இது சிறப்பானதாக இருக்குமா அல்லது மோசமான நிலைமைக்க இட்டுச் செல்லுமா?
இவ்வாறு சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகள் கல்லூரியின் மானிடவியல் திணைக்களத்தைச்
சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டொம் வைட்ஜர் கேள்வி எழுப்புகிறார்.
பிரிட்டிஷ் பத்திரிகையான"த கார்டியன்' வைட்ஜரின் இந்த ஆய்வை பிரசுரித்திருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தன்னார்வ தொண்டர் சேவை, மானிட நேயம் என்பன அபிவிருத்தியில் வகிக்கும் பங்களிப்பு என்ற விடயம் சர்வதேச உதவி வழங்கும் சமூகத்தின் மத்தியில் அதிகளவு ஆர்வம் கொண்டதாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பாரம்பரியமாக நிதி வழங்கும் வளங்களிலிருந்து கிடைக்கும் ஆதரவு தாமதமடைவதன் விளைவாக தனியார் மன்றங்களும் தன்னார்வ தொண்டர் சேவை முன்முயற்சிகளின் நடவடிக்கைகளும் அபிவிருத்திக்கான உதவியில் பாரிய அளவுக்கு அதிகரித்துவருவதை காண முடிகிறது. அதேவேளை, வங்கி நெருக்கடியைத் தொடர்ந்து தார்மீக ரீதியாக அதிகளவு முதலீட்டிற்கான அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. வர்த்தக நடவடிக்கைகளை உள்ளீர்த்து அபிவிருத்தியை மேற்கொள்ளுமாறு கம்பனிகளுக்கு அதிகளவு அழுத்தங்கள் இந்த வங்கி நெருக்கடியினால் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனால், கேட்ஸ் பவுண்டேஷன் போன்ற பாரிய சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புத் தொடர்பாகவே இதுவரை கவனம் செலுத்தப்பட்டதாக அதிகளவு கலந்துரையாடல்கள் காணப்படுகின்றன. வளர்ந்து வரும் உலகில் உள்ளூர் தன்னார்வ தொண்டர் சேவை மற்றும் சமூகத் சேவை தொடர்பாக குறைந்தளவிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ளூர் சமூகப் பணிகள் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதேவேளை, இவற்றின் பங்களிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. கொழும்பில் நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம். உள்ளூர் தன்னார்வ தொண்டுச் சேவை மற்றும் சமூகப் பணிகள் நாட்டின் அபிவிருத்தியில் எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக கண்டறிவதில் ஈடுபட்டோம். நகருக்குள்ளும் இலங்கையின் சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த சமூகத்தின் மத்தியிலும் இந்த தொண்டு சேவை தொடர்பான முறைமைகளை ஆராய்ந்தோம். வறுமை ஒழிப்பு தொடர்பாக சமூக சேவை நடவடிக்கைகள் மற்றும் தன்னார்வ சேவையின் தாக்கங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பான புரிந்துணர்வு என்பவற்றை நாங்கள் ஏற்படுத்திக்கொண்டோம்.
"தன்னார்வ சேவையானது வீட்டில் ஆரம்பிக்கின்றது' என்று கொழும்பு டுடேயில் கூறப்படுகிறது. இலங்கையில் தன்னார்வ தொண்டர் சேவை பாரியதாக இருக்கின்றதென்ற
தொனியில் அது காணப்படுகிறது. இரண்டு வருடங்களில் உலக உதவி மன்றம் வழங்குகின்ற தொண்டு சேவைச் சுட்டியில் எட்டாவது இடத்தை இது பெற்றிருக்கிறது. எந்தவொரு வளர்ந்து வரும் நாட்டிலும் பார்க்க இலங்கை முன்னணியில் திகழ்கிறது. இதற்கான காரணங்கள் பல்தரப்பட்டவையாக உள்ளன. பௌத்தம் , இந்து மதம் , கிறிஸ்தவம் , இஸ்லாம் ஆகியவை நாட்டினது பாரம்பரியங்களின் மையங்களாக திகழ்ந்துவருகின்றன. வெவ்வேறு விதமான சமூக தொடர்பாடல்கள் எவ்விதம் பல்வேறுபட்ட விதத்தில் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக எமது ஆராய்ச்சி அமைந்திருந்தது. பாரம்பரியமாக நன்கொடை வழங்குதல் அதாவது சமூக, மத தொண்டர் சேவையூடாக வழங்குவதிலிருந்து கூட்டு சமூக பொறுப்புணர்வின் பால் நன்கொடைகள் வழங்கும் விடயங்கள் வரை நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம்.
எவ்வாறாயினும் இந்த நடைமுறைகளானவை நீண்டகாலத் தன்மையைக் கொண்டுள்ளனவா அவை எங்கு இட்டுச் செல்கின்றன என்பது இங்குள்ள வெளிப்படையான கேள்வியாகக் காணப்படுகிறது. தன்னார்வ தொண்டர் சேவை சமூகப் பணி என்பவை தொடர்பாக பலரின் வரைவிலக்கணங்கள் அபிவிருத்தியின் அளவிலேயே தங்கியிருக்கின்றது என கணிப்பிடப்படுகிறது. நாங்கள் நான்கு முக்கியமான விடயங்களில் கவனத்தைச் செலுத்தினோம்.
முதலாவதாக அரசாங்கத்திடமிருந்தும் பல சாதாரண மக்களிடமிருந்தும், சிவில் சமூக அமைப்புகளிடமிருந்தும் பாரியளவிலான சந்தேகமும் பகைமையும் காணப்பட்டன. சிவில் சமூக அமைப்புகள் எவ்வாறு தமது நிதியை திரட்டுகின்றன என்பன மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எம்மால் உள்ளூரில் பணத்தைத் திரட்ட முடியாது என்பதை நாங்கள் அறிவோம் என்று இலங்கை அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பணிப்பாளர் ஒருவர் கூறினார். ஏனென்றால் நாங்கள் புலிகளுக்கான முன்னணி அமைப்பென ஆட்கள் நினைக்கிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஆளுங்கட்சியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் ரீதியான அச்சுறுத்தலாக வெற்றிகரமான தொண்டர் சேவை நிறுவனங்கள் சமூக சேவை அமைப்புகள் மத்தியில் இந்த விடயம் பார்க்கப்படுவது அசாதாரணமான விடயமல்ல. இதன் பெறுபேறாக வெளிநாட்டு உதவியில் தங்கியிருப்பது இல்லாமல் போய்விடுகிறது. நாங்கள் கதைத்த சகல அமைப்புகளுமே இந்தப் பணம் விரைவில் இல்லாமல் போய்விடுமென எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாவதாக தாராளமாக இலங்கையர்கள் உதவுகின்ற போதிலும் சர்வதேச உதவி வழங்குவோர் வழங்குகின்ற நோக்கத்தை ஒத்ததாக இலங்கையர்களின் உதவி அமைய வில்லை. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் பல அமைப்புகளிடம் தொடர்பை மேற்கொண்டிருந்தோம். வெளிநாட்டு நிதியுதவி இழக்கப்படுவதால் ஏற்படும் வெற்றிடத்தை உள்ளூர் தன்னார் தொண்டர் சேவை நிரப்பும் சாத்தியம் இல்லையென்று தெரிவிக்கப்பட்டது. முன்னர் தமது வறிய உறவினர்களுக்கு மக்கள் உதவியளித்திருந்தனர். ஆலயங்களுக்கும் தமது பழைய பாடசாலைகளுக்கும் உதவினர். இப்போது எங்களுக்கு எதுவும் இல்லையென உள்ளூர் நிதி திரட்டுபவர் ஒருவர் கூறினார். வழமையான உதவிகளை வழங்குவோர் அல்லாமல் ஏனைய உதவிகளுக்கான வெற்றிடம் அதிகளவுக்குக் காணப்படுகிறது.
இதேவேளை, தாங்கள் இல்லாமல் போய்விடப்போவதாக அபிவிருத்தி தொடர்பான அமைப்புகள் அச்சமடைந்துள்ளன. மூன்றாவதாக நீண்டகால மாற்றத்திற்கான உதவி வழங்குவதிலும் பார்க்க உடனடி மனிதாபிமான நிவாரணத்தை வழங்கும் பாரம்பரிய போக்கை இலங்கையில் காணப்படுகிறது. தனிப்பட்டவர்கள் நேரடியாக உதவிகளை வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனியாட்கள் குடும்பங்கள் மற்றும் நலன்புரி அமைப்புகள் அதாவது அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்கு நேரடியாக உதவி வழங்குவதிலேயே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தவறான நிதி முகாமைத்துவம் அல்லது ஊழல் மோசடிக்கான அச்சம் என்பன இதற்கான காரணங்களாகக் காணப்படுகின்றன. அதேவேளை, தன்னார்வ தொண்டவர் நிறுவன நிர்வாக செலவினங்களுக்கு செலவிட வேண்டுமென்ற தயக்கமும் இதில் காணபடுகிறது. அத்துடன் மத ரீதியான நம்பிக்கைகளும் கடப்பாடுகளும் இவற்றில் பிரதி பலிக்கின்றன.
இறுதியாகக் கூறினால் உள்ளூர் தொண்டர் சேவை மற்றும் சமூகப் பணியானது அபூர்வமான முறையிலேயே ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகிறது. ஓரிரு அமைப்புகளே ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. இலங்கையின் பாரிய கம்பனிகளில் சில கூட்டாக திட்டங்களை மேற்கொண்டு அபிவிருத்தியை நாடி நிற்கின்றன. ஆயினும் தனிப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் தனியார் வர்த்தக உரிமையாளர்களின் நடவடிக்கைகள் பாரியளவு செயல்பாட்டைத் தேர்ந்தெடுப்பதாக அமைகின்றன. பாரிய தொகையை அன்பளிப்பாக வழங்கினாலும் சிறியளவிலான அல்லது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளுக்குத் தேவையான விடயங்களை அவை தவிர்த்துக் கொள்கின்றன.
இலங்கையில் அபிவிருத்திக்கான மாற்றத்தை மேற்கொள்வதற்கு உள்ளூர் தொண்டர் சேவை மற்றும் சமூகப் பணி முக்கியமானதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் நடுத்தர வருமானம் பெறும் நாடென்ற அந்தஸ்தை இலங்கை பெற்றிக்கின்றது. புதிய அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சந்தர்ப்பங்களுக்கான ஊக்குவிப்பை பாரியளவில் கொண்டிருக்கும் சாத்தியம் காணப்படுகிறது. ஆயினும், விடயங்கள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றி உள்ளூர் அபிவிருத்தித் துறையில் நிச்சயமற்ற நிலைமை இப்போதும் அதிகரித்துக் காணப்படுகிறது. அபிவிருத்திக்கான உந்து சக்தியை உள்ளூர் தொண்டர் சேவையும் சமூகப் பணியும் ஈடுசெய்ய முடியுமா அல்லது உள்ளூர் முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை உள்வாங்கும் மாற்றத்துடன் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் காணப்படுகின்றன. வறுமை ஒழிப்புக்கு இவை முக்கியமானவையாகும். அவை இடம்பெறுமா என்பதை பார்க்க வேண்டி உள்ளது.
நன்றி தினக்குரல்

ஜே.வி.பி.யின் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பலர் படுகாயம்;! இனந்தெரியாத ஆயுததாரிகள் கைவரிசை! _
16/6/2012  
அம்பாந்தோட்டை கட்டுவன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மீது இனந் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் ௭ம்.பி. யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று மாலை ஏழு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ரி. 56 ரக துப்பாக்கிகளுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ௭ட்டுப் பேரைக் கொண்ட குழுவினரே இந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் கட்டுவன அன்டிவத்த ௭னும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் சுமார் 80 பேர் வரை கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, சந்திப்பு நடைபெற்ற வீட்டு உரிமையாளரின் பாரியாரும் ஜே.வி. பி.யின் ஆதரவாளர் ஒருவருமே துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து அன்டிவத்த உள்ளிட்ட கட்டுவன பிரதேசம் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிடுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்று கட்டுவன பகுதியில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். கட்டுவன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் பல பொலிஸ் குழுக்கள் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன ௭ன்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் கூறுகையில்,

ஜே.வி. பி. யின் மக்கள் சந்திப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கடந்த காலங்களில் ௭ம்மீது அரசு சார்ந்த குண்டர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த வகையிலேயே இன்று ( நேற்று) கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற ௭மது மக்கள் சந்திப்பின் மீது ஆளும் கட்சியை சார்ந்த அரசியல்வாதிகளின் ஆதரவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கத்தின் மீதே குற்றம் சாட்டவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாதாரணமானதொரு மக்கள் சந்திப்பின் மீது ரி 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பது குறித்து கவலையடைகின்றோம்.

மனித உயிர்கள் மதிக்கப்படாத நிலையில் மிகவும் பரிதாபகரமாக இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பி. யின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற ஒருவித அச்சத்தின் காரணமாகவே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ௭மது ஆதரவாளர்களை அச்சுறுத்த விளைகின்றது ௭ன்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்க ௭ம்.பி. குறிப்பிடுகையில்,

கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு மேல் மாகாண சபை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாதோர் தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குண்டர்களை கைது செய்யுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் ௭ன்றார்.
___
நன்றி வீரகேசரி
_
___

No comments: