உலகச் செய்திகள்

.
கொஸ்டா கொன்கோர்டியா விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)

தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல்



ஆப்கான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி ; 8 பேர் காயம்

 கொஸ்டா கொன்கோர்டியா விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)



கவின் 18/1/2012

கொஸ்டா கொன்கோர்டியா உல்லாசக் கப்பல் விபத்தில் உயிரிழந்த மேலும் 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சுமார் 29 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 14 பேர் ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றையோர் இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, பேரு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சடலங்களைத்தேடும் பணியில் இத்தாலிய சுழியோடிகள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

கொஸ்டா கொன்கோர்டியா (Costa Concordia) இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூஸ் நிறுவனத்தின் உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும்.

இது கடந்த 13 ஆம் திகதி 4200 பேருடன் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலியின் கிகிலியோ தீவுக்கருகில் பாறை ஒன்றுடன் மோதியதில் கப்பல் சரிந்து ஒரு பகுதி மூழ்கியது.

எனினும் இதில் பயணித்த அநேகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


இதேவேளை கப்பல் சரிந்த போது அதில் சுமார் 2300 தொன் எரிபொருள் இருந்ததாகவும் அது கடலில் கசியும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




நன்றி வீரகேசரி
தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல்
19/1/2012

மியன்மாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மியன்மார் அரசு, அரசியல் கைதிகளை விடுவித்தல், அரசியல் கட்சிகளை அங்கீகரித்தல், பழங்குடியினருடனான மோதலை நிறுத்தி வைத்தல் என சமீப காலமாக பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என அரசு கருதுகிறது.

இந்நிலையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் 48 இடங்களுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதில் ஆங் சான் சூகி போட்டியிடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

முதற்கட்டமாக, அவரின் தேசிய ஜனநாயக லீக் கட்சி, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, யாங்கூன் அருகில் உள்ள காவ்மு என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடவில்லை என்றாலும் கட்சியின் மூத்த பிரமுகர் வின் டெயின் நேற்று அளித்த பேட்டியில், "கட்சியின் முதல் நபராக சூகி தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்' என்றார்.

மொத்தமுள்ள 48 இடங்களில், 40 இடங்களில் சூகியின் கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி


ஆப்கான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி ; 8 பேர் காயம்


சி.எல்.சிசில்  20/1/2012

ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரான கந்தகாரில் சர்வதேசப் படைகள் பயன்படுத்தும் ஒரு விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி வியாழன் மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுதாரி கார் ஒன்றில் வந்து விமான நிலைய எல்லையின் வாயிலில் வெடிக்க வைத்துள்ளார்.

நேட்டோ தனது பணியாளர் எவரும் இத்தாக்குதலில் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அதேவேளை ஆப்கான் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களில் இரு சிறார்களும் அடங்குவதாகக் கூறினர்.

அண்மைய தொடர் தாக்குதல்களால் சமாதான நிலை தொலைந்து விட்ட கந்தகாரானது தலிபான்களின் ஆன்மீக இல்லமாகக் கருதப்படுவதோடு ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாயின் பிறப்பிடமாகவும் உள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் இந்நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியாழன் தாக்குதலானது வெளிநாட்டுப் படைகளின் விமானத்தளத்தை இலக்கு வைத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி

No comments: