மறதி - அ. முத்துலிங்கம்


.
கதவு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் செல்லவேண்டும் என்றால் கதவை திறக்க வேண்டும். கதவை திறக்கவேண்டும் என்றால் திறப்பை துவாரத்தினுள்  நுழைக்கவேண்டும். அதற்கு முதலில் திறப்பை கண்டுபிடிக்கவேண்டும். அது மனைவியின் கைப்பையில் கிடந்தது.  மனைவியின் அதே கைப்பையில் வேறு 256 பொருட்களும் வசித்தன. மனைவி கைப்பையை வாசலில் கவிழ்த்து கொட்டி திறப்பைத் தேடத் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் பிடிக்கும். தானாகவே பூட்டிக்கொள்ளும் அந்தக் கதவுக்கு முன்னே நாங்கள் நின்றோம். திறப்பை எடுத்து பையிலே வைக்கவில்லை என்பது பின்னர் ஞாபகத்தில் வந்தது. இது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான்.

என்னுடைய நண்பர் ஒருவர் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தன்னுடைய விமானத்துக்காக காத்திருந்தார். மறுபடியும் விமானம் மூன்று மணி நேரம் தாமதமாகும் என அறிவிப்பு வந்தது. அவருடைய மடிக்கணினி மின்கலன் கடைசி நிலையை எட்டியிருந்தது. விமான நிலைய மின்வாயில் வயரைப் பொருத்தி கணினிக்கு மின்னேற்றினார். திடீரென்று அறிவிப்பு வர தன் கைப்பையை தூக்கிக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டு விமானத்தில் ஏறிவிட்டார். விமானம் பறக்கத் தொடங்கிய பின்னர்தான் அவருக்கு கம்புயூட்டரை விமான நிலையத்தில் விட்டுவிட்டு புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது.


தன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டார். அவர்களால் தொலைந்த கணினியைப் பற்றி நிச்சயமாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. தொலைந்த பொருட்களைப் பாதுகாக்கும் அறைக்கு வந்து அவரையே பொருளை அடையாளம் காணச் சொன்னார்கள். நண்பர் ஒருமாதம்கழித்து மறுபடியும் சான் பிரான்சிஸ்கோவுக்கு பணி நிமித்தம் சென்றபோது விமான நிலைய அதிகாரிகளைப் போய்ச் சந்தித்தார். ஓர் ஊழியர் அவரை தொலைந்த பொருட்கள் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். தொலைந்த பொருட்கள் எல்;லாம் பட்டியலிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கம்புயூட்டர்களுக்கு தனிப் பகுதி. நூற்றுக்கணக்கான கம்புயூட்டர்கள் உரிமையாளர்களால் மீட்கப்படாமல் கிடந்தன. ஒவ்வொன்றாகத் தேடி நண்பர் அவருக்குச் சொந்தமான கணினியை அடையாளம் கண்டார்.  கடவுச் சொல்லை பாவித்து அதைத் திறந்து தன்னுடையதுதான் என்பதையும் உறுதிசெய்துகொண்டார்.

ஊழியர் ஒரு நாளைக்கு 3 – 4 கம்புயூட்டர்கள் வருவதாகச் சொன்னார். நூற்றுக்கு மேல் கம்புயூட்டர்கள் மீட்கப்படாமல் கிடந்தன. ஒரு வருடம் தாண்டியும் அவற்றைத் தேடி சொந்தக்காரர்கள் வரவில்லை. நண்பர் தன்னுடைய கம்புயூட்டரை பெற்றுக்கொண்டு திரும்பும்போது யோசித்தார். தன்னைப்போல இந்த உலகத்தில் இத்தனை மறதிப் பேர்வழிகள் இருப்பது அவருக்கு அளித்த ஆச்சரியத்திலும் பார்க்க ஆறுதலே கூடுதலாக இருந்தது. பலருக்கு எந்த விமான நிலையத்தில் தொலைந்தது என்பதுகூட மறந்துவிட்டது. தன்னுடைய மறதி அப்படி ஒன்றும் மோசமானதில்லை என்று நினைத்தபோது நண்பரை பேருவகை பெருகி மூடியது.

கதை இத்துடன் முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் இந்த நண்பர் ரொறொன்ரோவில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய மடிக்கணினியை பார்த்தேன். ‘இதுதானா தொலைந்தது?’ என்றேன். ‘இதுதான். ஆனால் இனிமேல் தொலையாது. இதை யாரும் திருடவும் முடியாது’ என்றார். சம்பவத்துக்கு பிறகு ஒரு நிரலியை கம்புயூட்டரில் ஏற்றியிருக்கிறார். கம்புயூட்டர் கையை விட்டு போனதும் நண்பர் கைபேசி மூலமாகவோ இன்னொரு கணினி மூலமாகவோ அவர் பூட்டியிருக்கும் ரகஸ்ய நிரலியை செயல்பட வைப்பார். அது கம்புயூட்டர் இருக்கும் இடத்தை வரைபட சிக்னல்களாக அனுப்பத்தொடங்கும். அத்துடன் கம்புயூட்டரை யாராவது இயக்கினால் அவரையும் ரகஸ்யமாகப் படம் பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கும். கம்புயூட்டரை வேகமாக மீட்டுவிடலாம்.

’இது மறதிக்கு நல்ல மருந்து அல்லவா?’ என்றேன். ‘இல்லை, இல்லை. இனிமேல் கவலையே இல்லாமல் மறக்கலாம். எத்தனை பெரிய வசதி’ என்றார்.

No comments: