கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) வித்யாசாகர்

.
வாணி அந்த இருட்டிலும் ஓடிச்சென்று காய்கறிகள் அரிசி மண்ணெண்ணை எல்லாம் வாங்கிவந்து சமைத்து அப்பாம்மாவிற்கு உணவு பரிமாறி, அவர்கள் உண்டபின் தானும் உண்டுவிட்டு அப்பாவின் புதிய எழுத்துக்களை எல்லாம் சேகரித்து பத்திரமாக எடுத்துவைப்பதற்காக ஒவ்வொன்றினையாய் எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜானகியம்மாள் உணவுண்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு ஒருபக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு வாசலுக்குவெளியே தெரியும் படர்ந்த இருட்டை அகலப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே உயிர்பிரியும் ஒரு வலியிருப்பதையோ இதயம் அழுந்த வலிப்பதையோ சொல்லி ஜானகிராமனை நோகடிக்க அவள் விரும்பவில்லை.

ஜீரணிக்க முடியாத சுமையை இதயத்தில் சுமந்திருந்த ஜானகிராமனுக்கு இறைவனை சபிக்கும் சிந்தனைக் கூட அற்றுப் போய் மனைவியின் பழைய நினைவுகளை எல்லாம் ஏனோ அசைப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

வாணி வீடெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். முற்றம் வாசல் கூரை என இங்குமங்குமாய் திரிந்தாள். கூரையின் மத்தியில் தொங்கும் எரியாத மின் விளக்கு மின்சாரக் கட்டணம் கூட செலுத்தியிராததை அவளுக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும்போல், வெளிச்சம் வேறு மிக சன்னமாக இருந்தது. ஒரேயொரு விளக்கே வீட்டின் நடுமரத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்க உள்பக்கம் அண்டியிருந்த இருட்டை விரட்ட இன்னொரு சிறிய விளக்கொன்றை எடுத்து திரிநீக்கி கொளுத்தினாள். அது திரி எரிந்து உடனே அணைந்து போக, ஆட்டிப்பார்த்து அதிலும் மண்ணெண்ணெயில்லை என்பதை அறிந்தாற்போல் அப்பாவைத் திரும்பிப் பார்க்கிறாள். அப்பா “வேறு மண்ணெண்ணெய் இல்லைம்மா, இந்த வீட்டில் ஒரு விளக்கு எரிவதே எங்களுக்கு சூரியன் வீட்டில் பூத்ததுக்கு சமமில்லையா” என்கிறார்.


அவள் முற்றத்துப் பக்கம் ஓடிப்போய், கல்லடுப்பிற்கு அருகிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்துப் பார்க்கிறாள். அதில் தான் காய்கறி வாங்கும்போது வாங்கிவந்திருந்த மண்ணெண்ணெயின் மிச்சம் கொஞ்சம் இருந்தது. அதை அப்படியே அந்த விளக்கில் ஊற்றி பற்றவைத்து உள்ளே கொண்டுவர, ஜானகிராமனுக்கு தனது விட்டுப்போன வெளிச்சம் மீண்டும் வீட்டினுள் வருவதுபோல் தோன்றிற்று.

பெற்றவர்களைப் பொருத்தவரை தன் வீட்டின் எரியாமல் வெளிச்சம் தரும் விளக்கு தன் பிள்ளைகளாகதான் இருக்கிறார்கள் என்ற புரிதலை உணர்ந்த மகள் வாணி. ஜானகிராமனின் சிறந்த படைப்புக்களில் முதன்மையானவள் அவள்.

அவளின் மலர்ந்த முகமும் உயிரில் ஒட்டிக்கொள்ளும் அன்பும் அவரின் நிறையப் படைப்புக்களில் தேடினால் கிடைக்கும். எழுத்தை சமூகத்திற்கு எழுதுவதைக் காட்டிலும், தான் வாழ்ந்ததன் சிறப்புகளை தன் பின் வருவோருக்குக் கற்றுக் கொடுப்பதாகவே இருந்தது அவரின் எழுத்துக்களும். அத்தகைய எழுத்திற்கு கிடைத்த வெற்றியின் முதல் பிரதியாக வாணி அவருக்குத் தெரிந்தாள்.

எரியும் அந்த சிறிய சிமினி விளக்கை கையிலேந்தி வீட்டிற்குள் வந்தவள் நான்குபுறமும் வெளிச்சம் காட்டிக் காட்டிப் பார்க்கிறாள். மின்சாரத்திற்கே பணம் கட்டாமல், மண்ணெண்ணெய் வாங்கவே பணம் இல்லாமல் இவர்களிருக்க, தொலைபேசிக்கு எங்கு பணம் கட்டியிருக்கப் போகிறார்கள் என்றெண்ணிக் கொண்டே ஒரு ஓரத்தில் இருந்த ஜானகிராமனின் பழைய மேஜையின் மீதிருந்த தொலைபேசி எடுத்து ரிசிவரைக் காதில் வைத்துப் பார்த்தால் வெறும் தூசியின் நெடிதான் மூக்கில் ஏறியது. அதை அப்படியே வைத்துவிட்டு தன் கைப் பையை எடுத்து அதிலிருந்த தனது அலைபேசியைக் கொண்டுபோய் ஜானகிராமனை கைநீட்டச் சொல்லி அவரின் கைக்குள் வைத்து மூடுகிறாள். ஏனென்றுக் கேட்டால் ஏதும் பேச வேண்டாம் இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், நான் அங்கிருந்துக் கூட இந்த எண்ணிற்கு பணம் போட்டுக் கொள்வேன், அவசரத்திற்கு என்னைத் தொடர்புக்கொள்ள இது உதவுமென்றுச் சொல்ல ஒன்றும் பேச இல்லாமல் வாங்கி தன்னருகில் வைத்துக் கொள்கிறார் ஜானகிராமன்.

உண்மையில், மகளும் அத்தனை வசதியாயில்லை. ஆனால் அவள் பிறந்தபோதே வசதியாக இல்லாவிட்டாலும் அறிவாக இருப்பாள் என்று நம்பியிருப்பார் போல் ஜானகிராமன், அதனால்தான் அவளுக்கு ‘வாணி மற்றும் அறிவுநிறைச் செல்வி’ என்று இரண்டு பெயர் வைத்திருந்தார். மாப்பிள்ளைக்கு அந்த அறிவுநிறைச் செல்வி அத்தனைப் பிடிக்காமல்போக வெறும் வாணி என்றே அழைக்கத் துவங்கி, பின்னான பல வருடங்களுக்குப் பிறகு வாணி மட்டுமே அவளின் ஒரேப் பெயராகிப் போனது.

மாப்பிள்ளை எது பேசினாலும் மிகச் சுருக்கிப் பேசும் பழக்கமுடையவர். அவரும் இப்போதைக்கு அத்தனை வசதி வாய்ப்போடு வாழ்ந்திடவில்லை. ஒருகாலத்தில் மரம் அறுத்து வாங்கிவந்து புகைப்படங்களுக்கு சட்டமறுத்து நிலைக்கண்ணாடிபோல் சுவற்றில் மாட்டித் தரும் சொந்த தொழில் செய்தவர். அன்றெல்லாம் குடும்பத்துப் புகைப்படங்கள் வீட்டின் சுவரெல்லாம் மாட்டியிருக்கையில் லாபமாக இருந்த தொழில் அது, இன்று லேமினேசன் பெருகிப் போனதும் அத்தொழில் படுக்கத் துவங்க, அதையும் விட்டுவிட்டு வேறு கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கையில் ஜானகிராமன் குடும்பத்தையும் பார்ப்பதென்பதைபெருத்த சுமையென்றுக் கருதினார். அதோடு, தன் குடும்பத்தை ஒழுங்காகப் பார்க்க முடியாவிட்டாலும்’ புத்தகம் எழுத்து சமூகமென்று அலைவது இந்த வயதில் அவசியமற்றது என்றொரு கோபமும் ஜானகிராமன் மேல் அவரின் மாப்பிள்ளைக்கு இருந்தது.
 
அதைப் புரிந்த ஜானகிராமனும் மகளுக்கு உபத்திரவம் இல்லாததுபோல் சற்று விலகியே இருந்துக்கொள்வார். இந்நிலையில் மகள் அலைபேசியை தன்னிடம் தருவது அத்தனை ஏற்புடையதாக இல்லை என்றாலும், மனைவிக்கு ஏதேனும் ஒன்றென்றால் தொடர்புக் கொள்ளவேணும் வசதியாக இருக்குமேயென்று எண்ணி வாங்கிக் கொண்டார்.

“எனக்குக் கொடுக்குறியே பிறகு உனக்கு யாரைன்னா கூப்பிடனும்னா என்னமா பண்ணுவ?”

“நான் வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்து பேசிக் கொள்வேன்பா”

“மாப்பிள்ளை எதாச்சும்....”

“அதலாம் நான் பேசிக்கிறேன்பா, இதற்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார்”

“மருமகன் உள்ளே வந்தாராம்மா?”

“இல்லைப்பா. அவசர வேலைன்னு போயிட்டாரு”

“அம்மாவைக் கூட பார்க்கலையா?”

“அவருக்கென்னங்க தெரியும், அவர் எப்பொழுதும்போல அவளை வாசலில் விட்டுட்டுப் போயிட்டாரு” ஜானகியம்மாள் சற்று எழுந்து நகர்ந்து சுவற்றில் சாய்ந்துக்கொண்டு பேசினாள்.

“ஆமாம்பா, அவருக்கு அம்மாவின் நிலைமை பற்றியெல்லாம் தெரியாது, அவர் பிரச்சனை, அவர் வேலை, அவருக்குப் பெருசு. அவருக்குன்னு உதவ யாருப்பா இருக்கா? அவர் எங்கேனும் இப்படி போய் அலைந்தால்தானே அவர் பிழைப்பு போகும்னு ஒரு வருத்தம் அவருக்குண்டுப்பா. அதுக்குமேல அவரைப் பற்றிதான் உங்களுக்கேத் தெரியுமேப்பா”

மகள் சொல்லி நிறுத்த, ஜானகிராமனுக்கு அந்த வார்த்தை வலித்தது. அவருக்குன்னு உதவ நானும் கூட இல்லாமல் போயிட்டனே என்று ஒரு பெரிய அழுத்தம் உணர்வுகளில் அழுந்த மேலிட்டது. அதையும் வெளிக்காட்டாமல் எச்சில் விழுங்கி உள்ளே புதைத்துக் கொண்டு மகளையே பார்த்தார்.

வேறென்ன செய்ய, சமுதயம் கெட்டுப் போயிருக்கிறது என்று சொல்பவருக்கு’ அந்த கேடு தன் வீட்டிலிருந்தும்தான் துவங்கி இருக்கிறதென்று’ அறிகிறார் யார்???

புத்தகம் புத்தகம் என்று அலைந்த நேரங்களை தன் குடும்பத்திற்கு ஒதுக்கி சரிவர பார்த்திருந்தால் இந்நேரம் இவரும் பெரிய ஒரு பணக்கார வரிசையில் இருந்திருக்கலாம் தான். ஆனால் எங்கு செய்தார், அதான் எல்லாவற்றையும் ஒழித்தாரே, எழுத்து எழுத்து என்று வாழ்ந்து கடைசியில் என்ன சாதித்தார்?” எனும் கேள்வி அவரைத் தொடர்ந்துப் பார்ப்போர் முகத்திலெல்லாம் அப்பட்டமாய்த் தெரியும்.

அதையெல்லாம் கடந்த ஒரு சிகரத்தின் மேல் நின்றிருக்கிறார் ஜானகிராமன் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். எத்தனை வாழ்வின் பாரமென்றாலும் அவைகளையெல்லாம் கடந்தும் மனிதரிடம் ஒரு அளப்பரிய பலம் இருந்தது. அந்த பலத்திற்குப் பெயரே நம்பிக்கை. அப்படியொரு நம்பிக்கையை தன் நாடி நரம்பெல்லாம் வைத்திருந்தார் ஜானகிராமன்.

சமுதாயம் திரும்பிப் பார்க்க கத்தி அழைப்பவருக்கு மத்தியில் எழுதிக் கூப்பிட்டவர்களும் ஏராளம் பேர் உண்டு. ஆயினும் அவர்களில்கூட நம்பியவரையே திரும்பிப் பார்த்ததிந்த சமுதாயம். ஜானகிராமனுக்கும் அப்படி ஒரு திடமான நம்பிக்கை உண்டு. என்றேனும் இவ்வுலகம் நம்மை மரியாதையோடு பார்க்குமென்று நம்பினார் அவர். அந்த நம்பிக்கை இன்று வீண்போகவில்லை. இன்று அது அவரின் ஓலைவீட்டுக் கதவை தானே வந்து தட்டியது.

-----------------+++------------------+++--------------------

தொடரும்..

No comments: