இலங்கைச் செய்திகள்

.
கிருஷ்ணாவின் இன்றைய வடபகுதி விஜயத்தின் போது...(பட இணைப்பு)

மூன்று சட்டமூலங்களை வாபஸ் பெற்றது அரசாங்கம்

இந்தியா திரும்பினார் அமைச்சர் கிருஷ்ணா

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சியில்; அமைச்சரவை அங்கீகாரம்

புங்கிரிய தோட்ட மோதலில் 6 பேர் காயம் 4 வீடுகள், 2 கடைகள் சேதம்; பஸ் நொருக்கப்பட்டது துவக்குச் சூட்டில் தோட்ட இளைஞன் காயம்



உலகவங்கி விடுத்துள்ள அபாய எச்சரிக்கை


ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வழக்கிலிருந்து விடுபாட்டை வழங்குகிறது அமெரிக்கா

கிருஷ்ணாவின் இன்றைய வடபகுதி விஜயத்தின் போது...(பட இணைப்பு) - 18/01/2012

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று வட பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இதற்கமைய கிளிநொச்சியில் இன்று காலை மாவட்ட வைத்தியசாலைக்கான உபகரணங்களைக் கையளித்ததுடன் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட சிவபாத கலையகத்தைத் திறந்து வைத்தார்.

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை இதன்போது உரியவர்களிடம் கையளித்துள்ளார்.

இந்நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா மற்றும் ஏனைய அதிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.















நன்றி வீரகேசரி

 மூன்று சட்டமூலங்களை வாபஸ் பெற்றது அரசாங்கம்


19/1/2012

அரசாங்கம் மூன்று சட்டமூலங்களை நேற்று புதன்கிழமை வாபஸ் பெற்றுக் கொண்டது. மூன்று சட்ட மூலங்களையும் அரசாங்கம் முழுமையாகவே வாபஸ் பெற்றுக் கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊழியர் ஓய்வூதிய நன்மைகள், கடல் கடந்த ஊழியர்கள் ஓய்வூதிய நன்மைகள், ஓய்வூதியங்கள் ஆகிய மூன்று சட்டமூலங்களே அரசாங்கத்தினால் நேற்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டவை.

இதேவேளை உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தம் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி வீரகேசரி


இந்தியா திரும்பினார் அமைச்சர் கிருஷ்ணா


19/1/2012

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்தியா திரும்பினார் என எமது கட்டுநாயக்க விமான நிலையச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இந்திய விசேட விமானத்தின் மூலம் அவர் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் ,எதிர்க்கட்சியினர் உட்படப் பலரைச் சந்தித்தார்.

அத்துடன் இலங்கையுடன் ஐந்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்
Wednesday, 18 January 2012

கடத்தல் மற்றும் காணாமல் போதலுக்கு எதிராகவும் வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அகற்றி, அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்நகரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கொழும்பிலிருந்து சென்ற 750 க்கும் மேற்பட்டோர் வன்னியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

யாழ்நகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த பெருமளவானோர் பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை

"கடத்தல், காணாமல் போதல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்புகளின் ஒன்றியம்' ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து 15 பஸ்களில் 750 க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றனர்.

திங்கள் இரவு அநுராதபுரத்தில் தங்கிவிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து யாழ்நகர் நோக்கி புறப்பட்ட நேரம் முதல் இவர்களது வாகனத்தொடரணி படையினராலும் பொலிஸாராலும் வழிமறிக்கப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் நீண்ட நேரம் தாமதப்படுத்தப்பட்டது.

மதவாச்சியைத் தாண்டி புனாவையில் காலை 9 மணியளவில் 15 பஸ்களையும் படையினரும் விசேட அதிடிரப்படையினரும் பொலிஸாரும் சுற்றி வளைத்து நீண்ட நேரம் தடுத்து வைத்தனர். பஸ்ஸிலிருந்த ஜே.வி.பி. மாற்றுக் குழு எம்.பி.யான அஜித்குமாரவும் ஏனையோரும் பாதுகாப்புத் தரப்புடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடவே அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

ஒருவாறு இவர்கள் ஓமந்தையை நண்பகலளவில் சென்றடைந்த போது இடையில் 18 தடவைகள் வழிமறிக்கப்பட்டு தாமதப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் சுமார் இருமணிநேரம் தடுத்து நிறுத்திய பின் யாழ்.செல்ல அனுமதித்தனர். இதையடுத்து படையினர் புளியங்குளம் சந்தியில் மறித்து அவ் வீதி திருத்தப்படுவதால் முல்லைதீவு நோக்கி செல்லுமாறு கூறி பஸ்களை திருப்பிவிட்டனர். இதையடுத்து அப்பாதையூடாக செல்லும் போது வீதி திருத்துவோர் இந்தப் பாதை ஊடாக யாழ்.செல்வதற்கு நீண்டநேரம் எடுக்குமென கூறவே 15 பஸ்களும் மீண்டும்புளியங்குளச் சந்திக்கு வந்தபோது அங்கு ஏ9 வீதியில் சுமார் ஒரு மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். தங்களை யாழ் செல்ல அனுமதிக்குமாறு கடத்தப்பட்ட லலித் மற்றும் குகன் உட்பட ஏனையோர்களையும் காணாமல் போனவர்கள் குறித்தும் உரிய பதிலை வழங்குமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் பிற்பகல் 3 மணியளவில் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் பின் யாழ்.செல்ல இரவு ஆகிவிடும் என்பதால் யாழ். பயணத்தைக் கைவிட்டு அனைத்து பஸ்களும் மீண்டும் வவுனியா திரும்பின.

வவுனியாவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நடந்தவை பற்றி விளக்கமளிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்கள் ஓமந்தைக்கு வந்த போது மாலை 4 மணியளவில் ஓமந்தையில் தடுத்து நிறுத்தப்பட்டனர் மாலை 6 மணி வரை அங்கிருந்து வவுனியா வர அனுமதிக்கப்படவில்லை.

யாழ்.நகர் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே படையினர் திட்டமிட்டு தங்களை 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுத்து நிறுத்தி தாங்கள் யாழ்.நகர் செல்ல முடியாதவாறு தடுத்ததாகவும் பின்னர் வவுனியா வருவதற்கும் தடை விதித்து நீண்ட நேரம் ஓமந்தையில் தடுத்து நிறுத்தியதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

நன்றி தினக்குரல்


யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சியில்; அமைச்சரவை அங்கீகாரம்
Friday, 20 January 2012

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த மேற்படி யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இதன்படி யாழ். பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தைக் கிளிநொச்சியில் புதிதாக அமைப்பதற்கும், அங்கிருந்த விவசாய பீடத்தை மீள அமைப்பதற்கும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பீடங்களையும் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கவும் அவற்றுக்கான கட்டிடத் தொகுதிகளை மீளப்பெற்றுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்களை புனரமைப்பதற்காக 393.29 மில்லியன் ரூபாவை திரட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.

அடுத்த மூன்று வடங்களுக்குள் இதன் மறுசீரமைப்புப் பணிகளை பூர்த்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்


புங்கிரிய தோட்ட மோதலில் 6 பேர் காயம் 4 வீடுகள், 2 கடைகள் சேதம்; பஸ் நொருக்கப்பட்டது துவக்குச் சூட்டில் தோட்ட இளைஞன் காயம்
Wednesday, 18 January 2012

இரத்தினபுரி, காவத்தை புங்கிரிய தோட்டத்தினுள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கோஷ்டியொன்று புகுந்து தாக்கியதையடுத்து இடம்பெற்ற மோதல்களில் ஆறு பேர் படுகாயமடைந்ததுடன் நான்கு வீடுகளும் இரு கடைகளும் சேதமாக்கப்பட்டதுடன் பஸ் ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.


பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தோட்ட இளைஞனொருவன் படுகாயமடைந்த அதேநேரம், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டில் பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுமுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

பொங்களுக்கு மறு நாளான திங்கட்கிழமை மாலை தோட்ட இளைஞர்கள் சிலர் மது அருந்தி விட்டு சத்தமிட்டு உள்ளனர். எல்லைப் பகுதியில் இவர்கள் சத்தமிட்ட போது அங்கு வந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர், இங்கு சத்தமிடாதீர்கள் உங்கள் பகுதிக்குச் சென்று சத்தமிடுங்களென எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கிடையே நடந்த கைகலப்பில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அன்றிரவு 8 மணியளவில் 50 க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் ஒன்று திரண்டு வந்து தோட்டத்தினுள் நுழைந்து இரு கடைகளை அடித்து நொருக்கியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய தோட்ட இளைஞர்கள் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்குச் சொந்தமான பஸ்ஸை அடித்து நொருக்கியுள்ளனர்.

இதன் போது பெரும்பான்மை இனத்தவர்களது நான்கு வீடுகளும் தாக்கிச் சேதமாக்கப்பட்ட அதேநேரம், தோட்டத் தொழிலாளி ஒருவரது வீட்டினுள் நுழைந்தவர்கள் அங்கிருந்து பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த நிலையில் நிலைமை மோசமடையவே அங்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதனால், தோட்டத் தொழிலாளியொருவர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து இ.தொ.கா. இயக்குநர் ராஜமணி, மாவட்டப் பிரதிநிதி ஆர்.மகேந்திரன், தொழிற்சங்கப் பிரதிநிதியான அழகர் சாமி ஆகியோர் பொலிஸாருக்குத் தகவல் அனுப்பியதுடன் அங்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் காவலில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பதற்றத்தைத் தடுக்க சர்வமத தலைவர்களின் தலைமையில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இரத்தினபுரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸார் காவலிலீடுபட்டுள்ளனர்.

அங்குள்ள மக்கள் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர். மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை. காவத்தை பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நன்றி தினக்குரல்

உலகவங்கி விடுத்துள்ள அபாய எச்சரிக்கை
Friday, 20 January 2012

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான பொருளாதார மீட்சியானது தாமதமடைந்து வருவதுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் மேற்குலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகள் இலங்கையின் ஏற்றுமதித் தொகையை குறைத்துவிடுவதற்கான நிலைமை காணப்படும் அதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்திலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படும் அதேசமயம் சுற்றுலாத்துறையிலும் தாக்கம் ஏற்படுமென சர்வதேச நிதி அமைப்புகளில் ஒன்றான உலக வங்கி எச்சரித்திருக்கின்றது. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்குமெனவும் 2011 இல் 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருந்த நிலையில் இந்த எதிர்வு கூறல்களுக்கு முரண்பாடான விதத்தில் உலக வங்கியின் உத்தேச கணிப்பீடு அமைந்திருக்கிறது. 2012 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது நிகர தேசிய உற்பத்தியில் 6.8 சதவீதமாகவும் 2013 இல் 7.7 சதவீதமாகவுமே இருக்குமென்பது உலக வங்கி யின் கணிப்பீடாகக் காணப்படுகிறது.


சர்வதேச பொருளாதார எதிர்பார்ப்புகள் தொடர்பான தனது புதிய அறிக்கையில் உலக வங்கி இந்த விபரத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. சர்வதேச ரீதியான பொருளாதாரப் பின்னடைவுகள் தெற்காசியாவிலும் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் வர்த்தக ஏற்றுமதியானது 2011 இன் முதலாவது அரையாண்டுப் பகுதியில் மிகவும் வலுவான முறையில் வளர்ச்சி கண்ட போதிலும் இரண்டாவது அரையாண்டுப் பகுதியில் சடுதியாகவே வீழ்ச்சி கண்டுள்ளது. யூரோ வலய நெருக்கடியானது ஏற்றுமதித்துறையை பலவீனமாக்கும் நிலைமைக்கு கொண்டு செல்வதுடன் தொழிலாளர்கள் அனுப்பும் பணமும் மூலதன உட்பாய்ச்சலும் கணிசமான அளவுக்குக் குறைவடையும் நிலைமை காணப்படுகின்றது என்று உலக வங்கி கூறுகிறது. இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி பின்னடைவைச் சந்திக்கும் அறிகுறி தோன்றியிருப்பதை இந்த சர்வதேச நிதியமைப்பு அறிவித்திருக்கிறது. அத்துடன் சுற்றுலாத்துறைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுமென அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

அத்துடன் முக்கிய விடயமொன்றையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் அனுப்பும் பணம் இலங்கையைப் பொறுத்தவரை அந்நியச் செலாவணியில் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், அந்த நாடுகள் வெளிநாடுகளிலிருந்து ஆட்களை தொழிலுக்கு அமர்த்துவது குறைவடைந்து செல்லும் போக்கு காணப்படுவது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சர்வதேச பொருளாதாரமானது மேலும் பலவீனமடையும் சாத்தியமே காணப்படுவதாக உலகவங்கி மாத்திரமன்றி பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றனர். இலங்கை போன்ற நாடுகள் முக்கியமான தேவைப்பாடாகக் காணப்படும் சமூக மற்றும் உள்சார்கட்டமைப்பு செயல்திட்டங்களுக்கே அதிக தொகையை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதால் வருவாயைத் திரட்டிக்கொள்ளும் ஏனைய வழிவகைகளைத் தேட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அமெரிக்கா, மற்றம் ஐரோப்பிய சந்தைகளில் தற்போது பெற்றுவரும் அனுபவமானது பொருளாதாரப் பின்னடைவு மேலும் நீடித்து செல்லும் அறிகுறியையே சுட்டி நிற்கிறது. இதனால் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வளங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி, சமபங்கீடு, நவீனமயமாக்கல் போன்றவற்றுக்கான இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பயணம் சுமார் ஆறு தசாப்தங்களைக் கடந்து விட்ட நிலையிலும் இடை வழியில் பல்வேறு விதமான முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன.மூன்று தசாப்தகால யுத்தமும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளும் பொருளாதாரத்துறையில் முக்கியமான செல்வாக்கைச் செலுத்தின. அதிகளவு முதலீடுகளும் மீள்கட்டுமானத் திட்டங்களும் 2013 இல் இவ் வலுவான பொருளாதார, வளர்ச்சிக்கு பங்களிப்புச் செலுத்த வேண்டும். இவை உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதுடன் சாத்தியமான பெறுபேற்றையும் தருவதாக அமைய வேண்டும் என்று உலகவங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. பல்தேசிய நிதி நிறுவனமான உலகவங்கியின் முன்னெச்சரிக்கையை கவனத்திற் கொண்டு கொள்கைத் திட்டமிடல் பிரிவு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பான விளைவுகளைக் கொடுக்கும் என்பது எதிர்பார்ப்பு.

நன்றி தினக்குரல்



ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வழக்கிலிருந்து விடுபாட்டை வழங்குகிறது அமெரிக்கா
Monday, 16 January 2012

amerikaஅமெரிக்க நீதிமன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக புலிகள் சார்பு புலம் பெயர்ந்த தமிழரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலிருந்து விடுபாட்டு சிறப்புரிமையை ஜனாதிபதிக்கு அமெரிக்கா வழங்குகிறது.


வெளிநாட்டின் பதவியிலிருக்கும் அரச தலைவராக ஜனாதிபதி ராஜபக்ஷ இருப்பதாக கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு விடுபாட்டு சிபார்சு மனுவை அமெரிக்கா தாக்கல் செய்திருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹெஸ்க்ஜு கோவின் கடிதத்தை அடுத்து அமெரிக்காவின் உதவி சட்டமா அதிபர் ரொனி வெஸ்ட் நீதிமன்றில் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளார்.

சட்ட மனு விலிருந்து ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுபாட்டை அளிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் இலங்கை உத்தியோக பூர்வமாக கோரிக்கை விருத்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத்திணைக் களத்தின் சட்ட ஆலோசகர் நீதித் திணைக்களத்துக்கு அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை தொடர்பான அமர்வுகளை நிராகரிப்பதற்கான முக்கியத்துவத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதாக இராஜாங்கத் திணைக்கள சட்ட ஆலோசகர் உதவி சட்ட மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருக்கும் அரசாங்கத் தலைவருக்கு விடுபாட்டை அளிப்பதற்கான முழுமையான அதிகாரத்தை அமெரிக்க அரசின் நிறைவேற்றுக்கிளையான அமெரிக்க நீதிமன்றம் கொண்டிருப்பதாக உதவி சட்டமா அதிபரின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. வழமையான சர்வதேசச் சட்டம், வெளியுறவுக் கொள்கை அமுலாக்கம், சர்வதேச உறவுகளின் செயற்பாடு ஆகியவற்றின் பரிசீலனைகளின் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கத்தின் நிறைவேற்றுக் கிளையிடமிருந்து மேற்கொள்ளப்படும் தீர்மானமானது இந்த விடயத்தில் அமெரிக்காவின் நலன்களுடன் தொடர்புபட்டதால் பதவியிலிருக்கும் போது இந்த வழக்கிலிருந்தும் ஜனாதிபதி ராஜபக்ஷ விடுபாட்டு உரிமையைக் கொண்டிருப்பதை அங்கீகரிக்கின்றது என்று நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

தீர்மானமானது கட்டுப்படுத்தப்படுவதாகவும் நீதித்துறை மீளாய்வுக்கு உட்படவில்லை என்றும் உதவி சட்ட மா அதிபரின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை காசிப்பிள்ளை மனோ கரனும் ஏனைய இருவரும் தாக்கல் செய்திருந்தனர். மூன்று மனுதாரர்களின் சார்பாக 30 பில்லியன் டொலர் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று சம்பவங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டிருந்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர்.

நன்றி தினக்குரல்





















No comments: