தமிழ் சினிமா

உச்சிதனை முகர்ந்தால்


இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை.

இலங்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஈழத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமாகப் படிந்த ஒரு வடுவை, திரைக்காவியமாக்கியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிங்கள இனவெறி இராணுவம் நடத்திய கொடூரமான காம வெறியாட்டத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, தான் கர்ப்பமுற்றிருப்பதை அறியாமலேயே தமிழ்நாட்டிற்கு தன் தாயுடன் வந்து தஞ்சமடைகிறாள். அவளையும் அவளது தாயாரையும் மானுட உணர்வுள்ள ஒரு பேராசிரியர்(சத்யராஜ்) தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக வைத்து பாதுகாக்கிறார்.அவரது மனைவி, (சங்கீதா) அந்த சிறுமியின் மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார். அவளுடையத் தாய் அந்தக் கருவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட, அது அந்தச் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் முயற்சியைக் கைவிடுகின்றனர். பேராசிரியர் குடும்பத்தில் நிலவும் அன்பில் அவர்களுக்கிடையே அழுத்தமான உறவு ஏற்படுகிறது. அந்தச் சிறுமியின் வயிற்றிற்குள் இருந்த கருவும் வளர்கிறது.

வயிற்றில் வளரும் குழந்தையுடன் வலம் வரும் சிறுமியின் தந்தை, ராணுவத்தால் கொல்லப்பட, அதை மகளிடம் சொல்லாமல் இலங்கைக்கு செல்கிறார் தாய். சத்யராஜும், சங்கீதாவும் சிறுமியை காக்கின்றனர். இந்நிலையில், சங்கீதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு கர்ப்பமாகிறார். அவரைப் பார்க்க வரும் அம்மா, சிறுமியின் கர்ப்பத்தைக் கண்டு அதிர்ந்து, சத்தம் போடுகிறார். தன்னால்தானே பிரச்சினை என்று வருந்தும் சிறுமி, யாரிடமும் சொல்லாமல், வெளியேறுகிறார். அவளை திருநங்கை ஒருவர் காப்பாற்றுகிறார். பிறகு அந்தச் சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது தெரிகிறது.
சிங்களவன் கற்பழித்து குழந்தையை மட்டுமல்ல, உயிரைக் கொல்லும் நோயையும் கொடுத்துள்ளான் என்று தெரியவர, முடிவு என்ன என்பது மனதை உருக்கும் இறுதிக்காட்சி. அதிர வைக்கும் பரிதாபத்துக்குரிய சிறுமி வேடத்தில் வரும் நீநிகா, படத்தின் நாயகி. வெடிச்சத்தம் கேட்டும், விமானம் பறப்பதைப் பார்த்தும், தன்மீது குண்டு வீசுகிறார்கள் என்று நினைத்து பயப்படும்போது, கரைய வைக்கிறார். பிஞ்சு வயிற்றில் கர்ப்பத்தைச் சுமந்துகொண்டு, வீட்டிலுள்ள செல்லப்பிராணிக்கு பெயரிட்டு கொஞ்சுவதாகட்டும், தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி ரோஜாக்களை வளர்ப்பதாகட்டும், புறாக்களுக்கு தீனி போடுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் பரிதாபத்தை அள்ளுகிறார்.

அவரது இலங்கைத்தமிழ்ப் பேச்சு, இனிக்கிறது. இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் தேடி வந்த சிறுமிக்கும், அவளது தாயாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் தம்பதியராக சத்யராஜ், சங்கீதா மனதில் நிற்கின்றனர். நீநிகாவின் கர்ப்பம் தெரிந்ததும் தானே அவளுக்கு இன்னொரு தாயாக மாறும் சங்கீதாவின் நடிப்பு யதார்த்தம்.

பொலிசாக வரும் சீமான், டாக்டர்களாக வரும் நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருள்மணி மனதில் பதிகிறார்கள். பி.கண்ணன், அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு கைகொடுத்துள்ளது. இமான் இசையில் 'உச்சிதனை முகர்ந்தால்' பாடல் இனிய மெலடி. தமிழருவி மணியனின் வசனங்களில் அனல் பறக்கிறது.

தமிழர்கள் படும் அவஸ்தையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். என்றாலும், 13 வயது சிறுமிக்கு தான் கர்ப்பமான விஷயம் தெரியாதா என்ன? சிறுமியை பரிசோதிக்கும் டாக்டர்கள், ஆரம்பத்திலேயே அவளுக்கு நோய் இருப்பதைக் கண்டறியாதது எப்படி என்பது உட்பட எழும் ஏராளமான கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உச்சிதனை முகரலாம்.


ராஜபாட்டை

சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும் என்பதை சொல்லும் கதை.

சினிமாவில் எப்படியாவது வில்லனாகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விக்ரம், அதற்காக சினிமாவில் கிடைத்த ஜிம் பாய் வேலையை செய்துகொண்டு தனது வில்லன் லட்சியத்தை நோக்கிய வாழ்க்கையை ஓட்ட, லேண்ட் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன், விக்ரமிடத்தில் தஞ்சம் அடைகிறார்.

பொது மக்களின் நிலமோ அல்லது புறம்போக்கு நிலமோ எதுவாக இருந்தாலும், தனக்கு பிடித்துவிட்டால் அதை வளைத்துப் போடும் பெண் அரசியல்வாதியிடம், விஸ்வநாதன் நடத்தி வரும் அனாதை ஆஸ்ரமம் சிக்கி சின்னாபின்னமாகிறது. நல்ல விலைபோகும் அந்த இடத்திற்காக ஒட்டு மொத்த ஆதரவற்ற சிறுவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தும் அரசியல்வாதியை எதிர்க்கும் விக்ரம், எப்படி அவரை அழித்து இடத்தை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சீயான் விக்ரம் எத்தனை திறமையான நடிகரோ, அதே அளவுக்கு தனக்கான கதைகளை அவரால் தேர்வு செய்ய இயலாதவர் என்பதை 'மஜா', 'ராவணன்', இப்போது 'ராஜாபாட்டை' என அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

முகத்தில் முதுமைக்கான சுருக்கங்களை வாங்கிக் கொண்டிருக்கும் விக்ரம், தன்னை ஒரு சினிமா ஸ்டண்ட் மேன் கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டு, வில்லன்களை வேட்டையாடும் கதையில் நடித்தால் சும்மா பிச்சுகிட்டு போகும் என எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால் கதைக்களம் எவ்வித சீரியஸ்நெஸூம் இல்லாமல் நில அபகரிப்பைப் பற்றி மிக பலகீனாமாக ஜல்லியடிக்கிறது. அது ஏதோ, தக்ஷிணா மூர்த்தி என்ற தனிப்பட்ட கிழவரின் கருணை இல்லம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதுபோல தேங்கி விடுவதால் விக்ரம் என்ற மாஸ் ஹீரோ நிஜமாகவே மொத்த படத்திலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார்.

தன்னிடம் அடைக்கலமாக அழைத்து வரும் முதியவர்( இயக்குனர் விஸ்வநாத்) தக்ஷிணா மூர்த்தியின் கருணை இல்ல நிலத்தை அக்கா(சனா) அபகரித்துக் கொள்ள, இது போன்ற அபகரிப்புகளை வாப்பா மூலம்தான் அக்கா செய்கிறார் என்பதை அறிந்து, அவரைக் கடத்தி, தனது சினிமா செட் சிபிஜ அலுவலகத்தில் வப்பாவை வைத்து பல்வேறு கெட்-அப்புகளில் வந்து அவரை சிபிஐ அதிகாரி போல விசாரித்து வீடியோ ஆதாரத்தை உருவாக்குகிறார் ஸ்டண்ட் பாய் அனல் முருகனாக நடித்திருக்கும் விக்ரம்.

ஸ்டண்ட் பாய் என்பதற்காக வில்லன்களின் அடியாட்களை பதினைந்து நிமிட இடைவெளியில் கைநரம்பு புடைக்க அடித்துக் கொண்டே இருக்கிறார். அய்யோ! இப்போ சண்டை வரப்போகுது என்று நாம் பயந்தால் நிஜமாகவே அந்தரத்தில் பாய்ந்து அடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகளில்கூட அவருக்கு குளோஸ் அப்புகளை அதிமாக வைத்து, அவருக்கு வயதாகி விட்டது என்று காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

படத்தில் விக்ரம் போட்டிருக்கும் கெட்-அப்புகள் நன்றாக பொருந்தியிருக்கும் நிலையில் அவைகளை வைத்து இரண்டாவது பாதியை ஜமாய்த்திருந்தால் குறைந்தது விக்ரம் ரசிகர்களையாவது திருப்திப் படுத்தியிருக்கலாம்.

தீக்ஷா சேத், ஒரு படத்தில் ஹீரோயினின் தோழி எவ்வளவு காட்சிகளில் வருவாரோ அதை விடவும் குறைவான காட்சிகளில் வந்துபோகிறார். பாடல்களையும் மற்ற மூன்று பேர் பகிர்ந்துகொண்டதால், அதிலும் அம்மணிக்கு வஞ்சகம்தான். மொத்தத்தில் தீக்ஷா சேத், ஊருகாய் போலத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

காமெடிக்கென்று தனி டிராக் இல்லையென்றாலும், டைரக்டர் ஆசையில் திரியும் தம்பி ராமையாவோடு விக்ரம், காமெடியையும் கவனித்துக் கொள்கிறார். திருந்தும் வில்லனாக அவினாசும், திருந்தாத வில்லனாக ப்ரதீப் ராவத்தும் தங்கள் பங்கை செய்கிறார்கள்.

அக்கா கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் படைக்கப் பட்டிருப்பதால் அதை விக்ரம் சாகடித்தால் படம் இன்னும் சொம்பையாகிவிடும் என்று நினைத்த இயக்குநர், அதை மிகப்பழைய டெக்னிக் மூலம் கொன்றுவிட்டு, இதுதாண்டா க்ளைமாக்ஸ் எனும்போது ரசிகர்கள் காசுபோச்சே என்று தியேட்டரில் கதறுகிறார்கள்.

இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸூக்கு பிறகு தனது தோழிகள் ரீமா சென், ஸ்ரேயா இருவரோடும் விக்ரம் ஆடும் குத்தாட்டம் எதற்கென்று தெரியவில்லை. அந்த பாடலின் பல்லவி முடியும்வரைகூட பார்க்க பொறுமையில்லாமல் வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

யுவன் சங்கர்ராஜா ஆக்ஷன் படத்துக்கு என்ன தேவையோ அதை பின்னணி இசையாகவும், பாடலாகவும் கொடுத்திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவும் அப்படியே. சினிமா வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் ஜிம் பாய்களுக்கும், சண்டைக் கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்கிற ஒரு வரி மெசேஜ் சொல்ல, மசாலாவை அதிகமாகத் தூவியிருக்கிறார் இயக்குநர்.

நன்றி விடுப்புNo comments: