மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... சிறுகதை


.
பெருமாள்முருகன்
ஊர் முழுக்கச் சாக்குருவியின் ஓலம். ஒரு மாதத்திற்குள் இது ஆறாவது சாவு. பெரியகாட்டுச் சொங்காக் கவுண்டர் கட்டுத்தரையில் தொடங்கி ஒவ்வொன்றாகப் பரவி மணக்காட்டு ராமசாமிக் கவுண்டர் காடுவரை வந்துவிட்டது. அரக்கத் தவளையின் தாவல்போலச் சாக்காடு. ராமசாமிக் கவுண்டர் பெண்டாட்டி பாவாயி வைத்த ஒப்பாரி இருளைக் கிழித்துக்கொண்டு போயிற்று. துக்கம் ஒவ்வொரு வீட்டுக் கதவின் முன்னும் நாயாய் முடங்கிப் படுத்துக்கொண்டு ஊளையிட்டது. சாக்காட்டின் அடுத்த தாவல் தம் வீட்டுக்குள்ளாக இருக்குமோ என்னும் கலக்கம் எல்லாரிடத்திலும் இருந்தது. பொழுது சாய்ந்த வேளையில் நடந்ததால் ஒரு எட்டில் போய் விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த முன்னிரவிலேயே கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு போனார்கள். பாவாயியின் விரிந்த தலையும் அழுத கண்களும் அரற்றும் வாயும் யாரையும் கலங்கச்செய்துவிடும். இடையிடையே மாரில் படார்படாரென்று அடித்துக்கொண்டு கீழே புரண்டு கதறினாள்.
கன்று ஈனி ஒரு மாதம்தானிருக்கும். காளைக்கன்று என்பதால் வயிறு முட்டப் பால் குடிக்கவிட்டு வளர்த்தார்கள். வேலைக்குத் தோதாக இந்தக் கன்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுழி சுத்தம். இன்னும் தலைகுனிந்து ஒரு புல்லைக் கடித்துப் பார்க்கவில்லை கன்று. பால் குடிக்கும் தினவில் மண்ணை ருசிக்க ஆரம்பித்துவிட்டது. மண் தின்னவிடாமல் வாய்க்கூடை போட்டுக் காடு முழுக்கக் குதித் தோடவிட்டிருந்தார்கள். பொழுது கிளம்பும் வேளையில் எகிறித் துள்ளி ஓடும் அதன் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை. துள்ளிக் குதித்தால் தான் கால் வலுவாகும். ‘கன்னுக்குட்டியா குதிரயா இது? இப்பிடிப் புழுதி கௌப்புது’ என்று கேட்டவர்களிடம் ‘ஏப்ப சாப்பயாவா எங்கன்னுக்குட்டிய வளப்பன்?’ என்றார் கவுண்டர். இப்போது அது தாயைத் தேடி வர்வர்ரென்று கத்தியவண்ணம் இருந்தது. கன்றுக்குப் போக இரண்டு நேரமும் மூன்று நான்கு படி பால் பீச்சலாம். மாடு வேலைக்கும் சளைத்ததல்ல. கன்று கொஞ்சம் பெரிதானதும் ஏரில் பூட்டினாலும் வண்டியில் கட்டினாலும் சுணங்காமல் போகும். விலையும் கொஞ்சமா? விற்றால் தாராளமாக ஒரு பவுன் வாங்கலாம். அப்புறம் பாவாயிக்கு வருத்தம் இல்லாமலா இருக்கும்? புருசனையே வாரிக்கொடுத்துவிட்டவள்போல மாய்ந்து அழுதாள். கேட்கப் போன யாரும் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. தொடங்குவதற்குள் அவளுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
வீட்டு வாசலில் கட்டில்களிலும் அங்கங்கே ஓரம்பாரம் போட்டிருந்த கற்களிலும் உட்கார்ந்திருந்த ஆம்பளைகளைப் பார்க்க இழவு வீட்டின் சாயல் முழுதாகத் தெரிந்தது. சுடரை இறக்கிவிட்டு வைத்திருந்த பத்துப் பதினைந்து லாந்தர்கள் மின்மினிகளாய் ஒளிர்ந்தன. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊருக்கு ஏதோ சாபம் என்றார்கள். ஒரு மாதத்திற்கு முன் ஊருக்குள் வந்துபோன குடுகுடுப்பைக்காரனின் ஏவலாக இருக்கும் என்றும் சொன்னார்கள். சுடுகாட்டுக்குப் போய்விட்டு நடுச்சாமத்தில் வந்து வீடுகளுக்குக் குறி சொன்ன அவன் மறுநாள் பகலில் வந்து சில வீடுகளில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னான். கையில் காசில்லாத கானல் காலம் என்பதால் யாரும் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை. அதனால் அவன் ஏதும் செய்திருக்கக் கூடும். தை மாசியில் அவன் வந்திருந்தால் தவச மூட்டையை வண்டி வைத்துத்தான் கொண்டுபோக வேண்டியிருந்திருக்கும். வெறுங்கையோடு திரும்பும் அவமானத்தில் எதை இங்கே விட்டுவிட்டுப் போனானோ?
மாடுகளுக்கு என்ன பிரச்சினை என்றாலும் கைவசம் வைத்தியம் வைத்திருக்கும் பன்னாட்டுப் பாட்டாராலேயே இதைத் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தன்னிடமிருந்த வாகடச் சுவடிகளை இரவு முழுக்க உட்கார்ந்து மண்விளக்கு வெளிச்சத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு படித்துப் பார்த்துவிட்டார். அவருக்குத் தெரிந்தவர்களிடம் போய் விசாரித்துப் பார்த்தார். சுவடி இருந்த வீடுகளில் அதைப் படிப்பதற்காகவே இரவுத் தங்கல் போட்டார். அகல் வெளிச்சத்தில் சுவடியைப் பிரித்தால்தான் அதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் பலிக்கும் என்பதால் அந்த முறை மாறாமல் எழுத்தெண்ணி வரிவரியாகப் படித்தார். இப்படிப்பட்ட நோய் என்று எதுவுமில்லை. இது காலம்வரை வராத புதுநோய் ஒன்றும் உண்டா? ஆயிரமாயிரம் வருசம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத் தெரியாததா? ‘எல்லாவற்றையும் கண்டுபிடித்து முன்பே சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்தக் குறிப்புகளைப் புரிந்துகொண்டால் போதும்’ என்பார். அவரே கைவிரித்தபின் காரணத்தை எங்கே போய்த் தேடுவது? தெய்வக் குற்றம் தவிர வேறென்ன இருக்க முடியும்?
எந்தக் காலத்திலும் காணாத கண்காட்சியாக இப்படி நடக்கிறது. சொங்காக் கவுண்டர் வீட்டு மாட்டில் சாயங்காலம் பால் பீச்சிக் கொண்டிருந்தபோது அதன் பின்னங் கால் தொடைகள் இரண்டும் வெட வெடவென்று நடுங்கின. மாடுதான் ஏதோ திருகல் செய்கிறது என்று நினைத்து அவர் அதட்டினார். ஈத்து மாட்டுக்கு இன்னுமா மடிக்கூச்சம்? ஆனால் கால்கள் நடுங்க நடுங்க அதன் வாயில் நுரை தள்ளியது. ஐந்து நிமிட நேரமாகியிருக்கும். என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் ‘ம்மா’ என்று பரிதாபமான ஒரே கத்தலிட்டுக் கீழே படாரெனச் சாய்ந்தது. உடனே கண்கள் நிலை குத்திவிட்டன. பெரிய உருவம் கீழே விழுந்த அதிர்வில் உடல் கொஞ்ச நேரம் அசைந்துகொண்டிருந்ததே தவிர, உயிர் முதலிலேயே பிரிந்துவிட்டது. மாட்டுக்கு நோய் பீடித்து ஒன்றிரண்டு நாட்கள் பண்டிதம் பார்த்துச் சலித்துக் கைவிட்டுப் போயிருந்தால் ஆசுவாசமாக இருந்திருக்கும். நின்ற நிலையில் துள்ளத் துடிக்க விழுந்து மாய்ந்ததைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சக்கிலியருக்குச் சொல்லிவிட்டதும் அவர்கள் கூட்டமாக வந்து வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போனார்கள். வடக்கயிற்றை மாட்டின் உடல் முழுக்க வரிந்து கட்டித்தான் வண்டியில் ஏற்ற வேண்டியிருந்தது. வண்டியே பெரும் பாரம் ஏற்றியதுபோல் நிறைந்திருந்தது. விட்டிருந்தால் காட்டுக்குள்ளேயே ஒரு பக்கம் போட்டு அறுத்துத் தோலுரித்துக் கறிக்கூறோடு போயிருப்பார்கள். பால்மாட்டை அது மேய்ந்து திரிந்த காட்டுக்குள்ளேயே அறுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார் கவுண்டர். மாட்டை விஷம் தீண்டியிருந்தால் உடனே தெரிந்துவிடும். நாக்கை இழுத்துப் பார்த்துப் “பூச்சி பொட்டு ஒன்னும் இல்லீங்க” என்று சக்கிலியர் குரல் கொடுத்தனர். இப்படியான அவசரச் சாவு விஷம் தீண்டுவதால்தான் வரும். நாக்கு நீலம் பாரித்துக்கிடப்பதைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். விஷம் தீண்டிய மாட்டின் தோலை மட்டும் உரித்துக்கொண்டு பெருங்குழிக்குள் போட வேண்டியதுதான்.
சேராததைத் தின்று செத்திருந்தால் குடலை வெளியே தள்ளும்போது கண்டுபிடித்துவிடலாம். பொடங்குச் சோளத்தட்டை வயிறு முட்ட மேய்ந்திருந்தால் பிழைப்பது கஷ்டம். காடு முழுக்க வெயில் அலையோடிக்கிடக்கும் வேனலில் பொடங்குச் சோளத்தட்டுக்கு எங்கே போவது? கயிற்றை அவிழ்த்து இழுத்தால்தான் கட்டுத்தரை விட்டு நகரும் மாடு அது. சிறுபூண்டில் கயிற்றைச் சிக்கவைத்துவிட்டாலும் அப்படியே நிற்கும். அது எந்த ஊருக்குப் போய் மேய்ந்துவிட்டு வந்திருக்கும்? மாட்டுக்கு எந்த நோயும் வந்த மாதிரி தெரியவில்லை. அதன் ஈரல் தளதள வென்று இருந்தது. அடுத்த நாள் காலையில் சக்கிலியர் வந்து ‘ஒன்னுமே கண்டுபுடிக்க முடியலீங்க சாமீ’ என்று சொன்னபோது துக்கம் அதிகமாயிற்று. காத்துகருப்பு அடித்திருக்கும் எனச் சமாதானம் கொண்டு அதை மறப்பதற்குமுன் அடுத்தது நடந்தது. வடமங்காட்டுச் சின்னாக் கவுண்டர் மாடு. அதுவும் அதே மாதிரிதான். செம்மாங்காடு, ஓடக்காடு, சாயுபுகாடு என்று தாவி இப்போது மணக்காட்டில் வந்து நிற்கிறது.
எப்போதும்போல நன்றாக இருக்கும் மாடு திடுமெனப் பின்னங்கால்கள் நடுங்க வாயில் நுரைத்து ஒரே கேவலோடு படாரென விழுந்து செத்துப்போகும். வாரத்திற்கு இரண்டு மாடுகள் இப்படிப் போனால் ஊரில் மாடு வைத்துப் பண்ணயம் செய்ய முடியுமா? பால்மாடுகளுக்குத்தான் இப்படி நேர்கிறது என்றதும் சிலர் உடனே சந்தைக்குக் கொண்டுபோய் விற்றார்கள். தொடர்ந்து மாடுகள் இறப்பது சுற்று வட்டாரம் எல்லாம் பரவியதால் அடிமாட்டு விலைக்குத் தான் கேட்டார்கள். நூதனமான நோய் ஏதாவது பீடித்திருந்து அந்த மாட்டை வாங்கிக்கொண்டுபோய் நோய் மற்ற ஊர்களுக்கும் பரவிவிட்டால் என்ன செய்வது என்னும் பயம் எல்லாருக்கும் இருந்தது. ஊருக்கே சாந்திசெய்யவும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றவும் பொதுப் பணத்திலிருந்து செலவுசெய்தும் சாவு நின்றபாடில்லை. இதற்கு மேலும் செய்ய ஏதுமில்லை. கோயில் திரு விழா இந்த வருசத்திலிருந்து கொண்டாடலாம் என வேறுபாடுகளை எல்லாம் மறந்து முடிவுசெய்தார்கள். மாடு செத்த வீட்டின் முன்னால் போய்த் துக்கம் கேட்டு உட்கார்ந்திருப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. மாட்டுக்கு நோய் வருவதை முன்கூட்டியே அறிய முடிந்தால் ஏதாவது செய்யலாம். ஒரு அறிகுறியும் இல்லை. வந்த நிமிசமே வாரிக்கொண்டு போகும் நோய்க்கு எந்தப் பண்டிதத்தைப் பார்ப்பது?
ராமசாமிக் கவுண்டரின் பெண்டாட்டி பாவாயியின் கதறல் தாங்க முடியாத ஊர்க்கவுண்டர், ‘எதுக்கப்பா இப்படிக் கத்துது பிள்ள? ஊருல இது ஆறாவது. உங்க ஒருத் தருக்கா துக்கம்? எப்ப வருமோ எப்பிடி வருமோன்னு ஊரே கெடந்து தவிக்குது. கத்திக் கத்தி இந்தப் பிள்ளக்கி என்னாச்சும் வந்தரப் போவுதப்பா. அங்க நிக்கற பொம்பளைங்கெல்லாம் என்ன செய்யறீங்க? ஆத்துங்கம்மா. . . வாய வாயப் பாத்துக்கிட்டு இருந்தா ஆச்சா?’ என்று சத்தம் போடார்.
‘உங்களுக்கென்ன ஆம்பளைங்க நாயம் பேசித் தீத்துக்குவீங்க. பொம்பளைங்க அழுதுதான தீக்கோனும்’ என்று வந்த பதில் கவுண்டரை முகம் சுழிக்கச் செய்தது. ‘பேச்சுக்கு மறு பேச்சுப் பேசறதுக்குக் கொறயில்ல’ என்று சீறினார். பெண்கள் பக்கம் முணுமுணுப்பு மட்டும் நிலைத்தது.
அப்போது இருளுக்குள்ளிருந்து வந்த வேட்டுக்காட்டான் நிறைந்திருந்த வாசலைப் பார்த்து, ‘இங்க எழவு ஊடாக் கெடக்குது. அங்க கும்மாளம் நடக்குது’ என்றான். திண்ணையின் ஓரத்தில் உட்கார்ந்தவனைப் பார்த்து ‘என்னடா சொல்ற?’ என்றார் ஊர்க்கவுண்டர். அவன் சக்கிலிவளவில் நடந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னான். கறி போடும் நாளில் சக்கிலிவளவு திருவிழாப் போலத்தானிருக்கும். பண்ணயத்து வேலைக்கு வருபவர்கள்கூட அவசர அவசரமாக வந்து பேருக்குக் கொஞ்ச நேரம் செய்துவிட்டு ஓடிவிடுவார்கள். இரவிலே கறிபோட்டால் கொண்டாட்டம் இன்னும் மிகுதியாகும். தீப்பந்த வெளிச்சத்தில் மாட்டை அறுத்துக் கறி வெட்டிக் கூறு பிரிக்கும் வேலை மும்மரமாக நடக்கும். சாந்து அரைத்து வைத்துக்கொண்டு பெண்கள் உட்கார்ந்திருப்பார்கள். கறியைக் கலக்கி அடுப்பில் வைத்ததும் தொடங்கும் குடி வெகுநேரம் நடக்கும். சண்டையும் சச்சரவும் வெடிக்கும். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ‘காக்காக் கூட்டமப்பா அது. ஒன்னு சேந்திருச்சுன்னா கராமுராதான். நம்பளாட்டம் திக்காலுக்கு ஒன்னாக் கெடந்தா எப்பிடி? ஒருத்தரு பேசறது இன் னொருத்தருக்குக் கேக்கோனு மின்னாக்கூடக் கூவோனும்’ என்று ஊர்க்கவுண்டர் சொல்வார்.
மூன்று வாரங்களில் ஆறாவது மாடு. ஒவ்வொன்றும் பெருத்த உடல். பால் மாடுகளுக்கான கவனிப்பில் செழித்திருந்த கறி சக்கிலிவளவு முழுவதற்கும் தாராளமாகக் கிடைத்தது. வீடு எண்ணிக் கறியைப் பிரித்தும் கொள்வார்கள். ஆள் எண்ணிக்கைக்கும் சலுகை உண்டு. தோல் மட்டும் வளவுப் பொதுவுக்குச் சேரும். சக்கிலி வளவுப் பக்கம் ஏதோ வேலையாகப் போன வெட்டுக்காட்டான் அந்த ஆரவாரத்தைக் கண்டு வந்திருந்தான். அவன் சொன்னான்.
“ஊடொன்னுக்குக் கறி ஒவ்வொரு சட்டி வரும். அத்தனயும் ஒரே நாள்ல எப்பிடித் திங்க முடியும்? நாளைக்குப் போய்ப் பாருங்க, எல்லா ஊட்டு வாசல்லயும் கறியக் கோத்துத் தொங்க உட்டுருப்பாங்க. உப்புக் கண்டம் போட்டு எடுத்து வெச்சுக்கிட்டுத் தெனமும் கறிக் கொழம்பு தான், கடிச்சிக்கக் கறியச் சுட்டு எடுத்துக்கறாங்கப்பா. கொழந்தைங்களுக்குப் பண்டமே இப்பக் கறிதான்.”
“மாப்ள, நம்மளுக்கு வவுத்துவலி, அவுங்களுக்கு ராசபோகம். அவுங்கள அப்பிடிப் படச்சிருக்கறான் ஆண்டவன்” என்ற ராமசாமியின் குரலில் பெருந்துக்கம் ஏறியிருந்தது.
“இன்னக்கிக்கூட மாடு சாவறதுக்குக் கொஞ்ச மின்னாலதான வந்து மாட்டுக்குத் தட்டள்ளிப் போட்டுட்டுப் பால்மாட்ட நல்லாக் கவனீங்க கவுண்டிச்சீன்னு சொல்லீட்டுப் போனான் கந்தன். அட சாமீ . . . அப்பேர்ப்பட்ட மாட்டக் கோத்துப் போட்டுத் திங்க எப்டீடா மனசு வந்துச்சு. . .” என்று பாவாயி கூவி ஒப்பாரி வைத்தாள்.
“இந்தச் சக்கிலியூட்டு நாயத்தக் கொஞ்சம் ஓசிக்கோனுமாட்டம் இருக்குதுங்க. கந்தன் வந்தானாமா, தட்டள்ளிப் போட்டானாமா, சொன்னானாமா, போனானாமா. எதோ கதயாட்டல்லம் இருக்குது? அவனென்ன இவுங்கூட்டுக்குப் பண்ணயம் கட்டற சக்கிலியா? ஆளுக்காரனா? அவனுக்கென்ன அக்கர மசிரு?” முத்தான் சொல்ல எல்லாருக்கும் சரியென்றே பட்டது.
“கறிக்கு ஆசப்பட்டு அவந்தான் மாட்டுக்கு என்னமோ செஞ்சிருக்கறானப்பா” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. சொங்காக் கவுண்டர் தன் மாடு செத்த அன்றைக்குச் சக்கிலி ராமன் அவர் கட்டுத்தரைக்கு வந்து போனதாய் ஞாபகப்படுத்திச் சொன்னார். தன் மாடு செத்த அன்றைக்குச் சக்கிலி குப்பன் வந்துபோன மாதிரி இருக்கிறது என்று மாரப்பன் சொன்னான். ஆறு கட்டுத்தரைகளுக்குமே ஆட்கள் வந்து போயிருந்தது தெரிந்தது. அதில் சிலர் பண்ணயம் கட்டுபவர்களாகவும் இருந்தனர். “அவுங்க எப்பவுமே கட்டுத்தரக்கி வந்து போற வங்கதானப்பா” என்று வேலப்பன் சொன்ன சொல் கூட்டத்தில் எடுபடவில்லை.
கட்டுத்தரைக்கு அவர்கள் வந்துபோன கொஞ்ச நேரத்தில்தான் எல்லா மாடுகளும் செத்திருந்தன. மாட்டுக்குச் சேராத தழையைக் கொடுத்திருக்கக்கூடும். செய்வினைப் பொருள் எதையாவது தீவனத்திற்குள் கலந்துவைத்திருக்கலாம். சில சக்கிலியருக்கு மந்திரமே தெரியும். சாமியாடும் சக்கிலியர் உண்டு. அவர்கள்தான் மாட்டுக்கு என்னவோ செய்திருக்கிறார்கள். செத்த மாட்டைக் கறி போட்டுக் கூறுபிரிக்கும் முன் ஆள் வந்து மாடு இன்ன காரணத்தால் செத்திருக்கிறது என்று சொல்லிப் போவான். இந்த மாடுகள் செத்ததற்கு மறுநாள் மெதுவாக வந்து “ஒன்னுந் தெரியலீங்க சாமீ . . .” என்று சாவகாசமாகச் சொல்கிறார்கள். ஏதோ வருசத்திற்கு ஒன்றிரண்டு மாடுகள் இப்படிக் கிடைக்கும். ஒரு மாதம், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சந்தைக்குப் போய், வயிறு காய்ந்துகிடக்கும் கன்றுக்குட்டியைப் பிடித்து வந்து கறிபோட்டால் ஒவ்வொரு வீட்டிலும் சட்டியே தின்றுவிடும். கரண்டியைப் போட்டு வழித்தெடுக்க எடுக்கச் சாறுதான் வரும். சாற்றுக்கென்ன, தண்ணீரை எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றலாம். அப்படிக் காய்ந்துகிடந்தவர்கள் தொடர்ந்து கறி தின்ன ஏற்பாடு செய்த வேலைதான் இது என்று பேச்சு வேகமாக எழுந்தது.
ஒரு மாதத்திற்கு முன்னால் ராமன் பையன் ராசு சொங்காக் கவுண்டர் காட்டுக் கிணற்றில் ஆள் இல்லாதபோது இறங்கி நீச்சல் அடித்துவிட்டான். அவனைப் பிடித்த கவுண்டர் கையையும் காலையும் கட்டிச் சாட்டை வாரால் விளாசித் தள்ளினார். செத்துத் தொலையப்போகிறான் என்று கட்டை அவிழ்த்து விட்டதும் கன்றுக்குட்டிபோலத் துள்ளி எழுந்தோடிய அவன், “டே கவுண்டா . . . என்னய அடிச்சிட்ட இல்ல. உன்னயப் பாத்துக்கறண்டா” என்று கத்திக்கொண்டே ஓடிப் போனான். அப்போது ஊரை விட்டு ஓடியவன்தான். இதுவரைக்கும் வரவில்லை. அவன் அப்பனும் அம்மாளும் வந்து அழுதார்கள். “அவந்தல ஊருக்குள்ள தெரிஞ்சா வெட்டிப் பலிபோட்டிருவன்” என்று கவுண்டர் விரட்டி அனுப்பினார். அவன் ராத்திரியில் வந்து தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டுப் போகிறான் என்றும் பேச்சு வந்தது. அவன்தான் பழிவாங்க ஏதோ கள்ளத்தனம் செய்கிறான். கவுண்டனைக் கொல்வதும் அவன் மாட்டைக் கொல்வதும் ஒன்றுதான். இத்தனை காலமாக இல்லாத புதுநோய் திடீரென்று எங்கிருந்து முளைத்து வரும்? எழுதிவைத்த ஏட்டில்கூட இல்லாத நோயை யார் உற்பத்திபண்ண முடியும்? உயிரோடு திரியும் பால்மாட்டைக் கறி தின்னக் கொல்வார்களா? நெஞ்சில் இரக்கம் உள்ளவர் செய்யும் காரியமா? உடனே அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்கத் தீர்மானமாயிற்று.
ஆள் விட்டு அழைத்து விசாரிக்க இது என்ன வெற்றிலை பாக்கு வியாபாரமா? சப்புக் கொட்டிக்கொண்டு கறிதின்னும் வாய்களின்மேல் இரண்டு போடு போட்டு இழுத்து வந்து விசாரித்தால் உண்மை வரும். ராத்திரியோடு ராத்திரியாய் வந்து போகும் கள்ளன் என்னத்தைக் கொண்டு வந்து தந்தான்? அவன் இப்போது எங்கே? எல்லாக் கேள்விக்கும் பதில் வேண்டும். முன்னிரவின் இருளில் ஊர் இளவட்டங்கள் முழுக்கச் சாவடிமுன் கூடினார்கள். எல்லார் கைகளிலும் வலுவான தடிகள். வண்டி மொளக்குச்சிகள் சிலர் கைகளிலும் போர் அடிப்பட்டறைக்குப் போடும் உருட்டுக் குச்சிகள் சிலரிடமும் பூச்சி பொட்டுகளை அடிக்கவென வீட்டுச் சுவரோரம் சாய்த்து வைத்திருந்த வேம்பங்கம்புகள் சிலரிடமும் இருந்தன. எந்தத் தடியும் கழுத்து உயரத்திற்குக் குறைவில்லை. சாவடியில் தீப்பந்தங்கள் நாலாப்புறமும் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தன. இளவட்டம் மட்டும் போவது என்று தீர்மானம். ரொம்ப நேரமாகக் கூடாது. உயிர்ச் சேதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திரும்பும்போது ஒவ்வொரு தடியின் முன்னாலும் ஒருவனாவது இருக்க வேண்டும்.
தடிகளோடு இளவட்டங்கள் கிளம்பியதும் கீழ்ப்பக்கப் பள்ளத்துச் சரிவில் இருக்கும் சக்கிலி வளவிலிருந்து அடங்கியிருக்கும் காற்றில் மிதந்துவரும் ஓலக்குரலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று சாவடி முழுக்க அமைதியாக இருந்தது. சாவடித் திண்டில் உட்கார்ந்திருந்த ஊர்க்கவுண்டரும் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அங்கங்கே மண்ணில் குழுக் குழுவாகப் பெண்களும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்கள். சிலசமயம் குசுகுசுவெனப் பேச்சு கிளம்பிக் கவுண்டரின் செருமல் கேட்டு அடங்கியது.
தடிகள் நடந்த வழிகளில் நாய்கள் இடைவிடாமல் குரைத்தன. நாற்பது வீடுகள் இருந்தாலும் எல்லாம் சின்னப் பரப்பளவுக்குள் அடங்கியிருந்தன. தூரத்திலேயே திட்டமிட்டுக் கொண்டபடி வளவைச் சுற்றி வளைத்தன தடிகள். சின்னச் சீழ்க்கையொலி எல்லாத் தடிகளும் ஒரே நேரத்தில் வளவுக்குள் இறங்க வழிகாட்டிற்று. எரிந்துகொண்டிருந்த அடுப்பின் மேல் அப்போதுதான் கொதிவரத் தொடங்கிய கறிச்சட்டியை முதலில் தடிகள் உடைத்தெறிந்தன. அடுப்புக்கு முன் உட் கார்ந்திருந்த பெண்களின் கால்களும் முதுகுகளும் அடுத்த இலக்குகளாயின. சாய்ந்த தலைமயிரைச் சுற்றிச் செருகி இழுத்து அவர்களைக் கீழே தள்ளிய தடிகள் உடல் முழுவதும் ஆக்கிரமித்தன. குழந்தைகள் ஓரிரு அடிகளில் அலறி ஓடிப்போய்க் குடிசை மூலைகளில் பயந்து பதுங்கினார்கள்.
குழந்தைகளின் அழுகையும் பெண்களின் கூக்குரலும் கேட்ட ஆண்கள் குழுவாகக் குடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தார்கள். என்ன நடக்கிறதென்று புரியவில்லை. நிழல் உருவங்களாய்த் தடிகள் வளவு முழுக்க நடமாடுவதை உணர்ந்த சிலர் வளவுக்கு வெளியே பள்ளத்து முள்ளுக்குள்ளும் இருள் செறிந்த வெள்ளாமைக் காடுகளுக்குள்ளும் ஓடிப் புகுந்தார்கள். தடிகளின் வேகத்திற்கு எதிராக எந்த ஆயுதத்தையும் சட்டெனப் பெற முடியாத இளைஞர்களில் சிலர் கைகளை உயர்த்தி உயர்த்தித் தடுத்தும் மோதியும் பார்த்தார்கள். வயசாளிகள் “அய்யா சாமீவளா . . . என்னய்யா செஞ்சம்? எதுனாலும் மாப்புக் குடுங்கய்யா. அடிச்சுக் கொல்லாதீங்கய்யா” என்று தடிகளின் கால்களைப் பற்றிக் கெஞ்சி ஒரே உதறலில் தூரப் போய் விழுந்து ஓலக்குரலிட்டுக் கத்தினார்கள்.
தடிகளின் வாய்கள் இரண்டே கேள்விகளை முன்வைத்தன. “என்னடா செஞ்சீங்க?”, “எங்கடா அவன்?” பூடகமான இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. பதிலை எதிர்பார்த்துத் தடிகள் நிற்கவும் இல்லை. ஒரு நிமிசமும் ஓய்வற்று அவை இயங்கின. முன்னால் இருக்கும் எல்லாவற்றின் மீதும் இறங்கின. அங்கங்கே கட்டியிருந்த ஒன்றிரண்டு வெள்ளாடுகளும் கன்றுக்குட்டிகளும் கால் முறிந்து கழுத்தொடிந்து கதறித் துடித்தன. மாட்டெலும்புகளைக் கடித்து ஓய்ந்திருந்த நாய்கள் அஞ்சி வளவைவிட்டு ஓடின. பூனைகள் கூரைகளுக்குள் எலிகளாய்ப் பதுங்கின. வீட்டுப் பண்டபாத்திரங்கள் நொறுங்கின. குடிசைக் கூரைகளின் மேல் ஓங்கித் தட்டிய தட்டலில் காய்ந்திருந்த ஓலைகள் நுணுகிச் சிதைந்து சிதறின. கோழிகள் கூடைகளின் மேலும் சிறு மரங்களின் மீதும் பறந்து ஏறி அபயக் குரல் கொடுத்தன.
தடிகளின் வெறி அடங்கிய பாடில்லை. கைக்குச் சிக்கிய ஆண்களின் உடல் முழுவதும் அவை தடிப்புகளாய் இறங்கின. இரத்த வீச்சம் எங்கும் எழுந்து தடிகளின் கைகள் ஓய்ந்தபோது ஓலம் மட்டுமே எழுந்தது. ஒவ்வொரு தடியின் முன்னும் கைகள் பிணைக்கப்பட்ட ஓர் உருவம். சில தடிகள் தங்கள் சாமர்த்தியம் காரணமாக இரண்டு உருவங்களை முன்னிறுத்தியிருந்தன. “அய்யோ சாமீ . . .” என்பதைத் தவிர உருவங்களின் வாய்களில் வார்த்தை எதுவும் வரவில்லை. “நடங்கடா” என்று உறுமிய தடிகள் நெட்டித் தள்ளின. வளவின் நுழைவுப் பகுதிவரை ஓடியும் நடந்தும் ஊர்ந்தும் வந்த பெண்கள் தடிகளின் உறுமலுக்குப் பயந்து அப்படியே நின்றுவிட்டனர். கைகள் பிணைக்கப்பட்ட உருவங்கள் கூனிக் குறுகி நடந்தன. சில உருவங்கள் கோவணத்தோடு இருந்தன. சில உருவங்கள் முழுமொட்டைக் கட்டை. நெட்டித் தள்ளிச் சென்ற தடிகளை முட்களுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் மறைந்திருந்த கண்கள் அச்சத்தோடு பார்த்தன. என்ன காரணம் என்று ஒருவருக்கும் புரியவில்லை.
முன்னால் தள்ளப்பட்ட உருவங்கள் கேவி அழுதன. வலி தாளாமல் துடித்த உடல்கள் தம் வாதையை அழுகையால் மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. மொட்டைக்கட்டை உருவங்கள் தம்மை மறைத்துக்கொள்ள மிகவும் முயன்று கூட்டத்தின் நடுவே நுழைந்துகொண்டன. சுற்றிலும் தடிகள் அதட்டியபடி நின்றன. சில சமயம் நீண்ட தடிகள் விலா எலும்புகளைக் குத்தின. சாவடியின் மையத்தில் உட்கார்ந்திருந்த ஊர்க்கவுண்டர் இப்போது விசாரணையைத் தொடங்கினார். “என்னடா செஞ்சீங்க?” ஒரே கேள்வி. “ஒன்னுமே செய்யலியே சாமீ . . .” என்று அழுகையினூடே குழறியது ஓர் உருவம். உடனே அதன் பின்னாலிருந்து நீண்ட தடி முதுகில் குத்தி “ஒன்னுமே செய்யலியா?” என்று உறுமியது. “எங்கடா அவன்?” இந்தக் கேள்விக்கும் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. “எவன்?” என்று திருப்பிக் கேள்வி கேட்கவும் முடியாது. “தெரியலியே சாமீ . . .” என்ற உருவத்தின் காலில் பட்டென்று தடி பாய்ந்ததும் “அய்யோ” எனக் குறுகிச் சாய்ந்தது உருவம். எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காப்பதுதான் சரியானது என்பதை உணர்ந்த சில உருவங்கள் தலைகுனிந்தபடி நின்றனவே தவிர வாய் திறக்கவில்லை. “என்னடா செஞ்சீங்க?” மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி.
வட்டத்திற்கு வெளியே நின்றிருந்த பெண் குரல் ஒன்று “இப்பிடிக் கேட்டாச் சொல்லுவானுங்களா? கையக் கால முறிச்சுப் போட்டுக் கேளுங்க” என்றது. “தாயோலி ராசு எங்கடா?” என்று ஊர்க்கவுண்டருக்கு அருகிலிருந்த ஆள் கேட்டதும் அவனுக்காகத்தான் இந்த விசாரணை என்று புரிந்துகொண்ட உருவங்கள் “அவனப் பாக்கலியே சாமீ . . .” என்று ஒருசேரக் கத்தின. “மாட்டுக்கு வெக்க என்ன மருந்துடா குடுத்தான்?” என்று கேள்வி இன்னும் கொஞ்சம் விளக்கமானதும் “இல்லியே சாமீ . . .” என்று கத்திய உருவங்கள் ஒருசேரப் படுகிடையாக மண்ணில் விழுந்தன. அவற்றின் கைகள் கூப்பி நின்றன. “ஒன்னுந் தெரியாது சாமீ . . . மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ . . .” என்று அவை இறைஞ்சத் தொடங்கின.
Nantri :Kalachuvadu

No comments: