பணக்கார சுவாமி ஸ்ரீ பத்மநாபசுவாமி! - டாக்டர் எஸ். பத்மநாபன்


.


திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதிதான் உலகில் பணத்திற்கு அதிபதியாக இதுவரை கருதப்பட்டுவந்தார். ஆனால் அண்மையில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறந்து அவற்றில் உள்ள பொருட்களைக் கணக்கெடுத்து பட்டியலிடுவதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் கணக்குப்படி அந்த பாதாள அறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பொற்குவியல்களும் நவரத்தினங்களும் கிடைத்துள்ளன.
அதனால் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியை பணத்தில் மிஞ்சிவிட்டார்
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி.


திருப்பதியில் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பொருள்தான் உள்ளன. அந்த பணக்கார பத்மநாப சுவாமி அறிதுயில் கொள்ளும் ஆலயத்தின் வரலாற்றையும், இந்த செல்வங்கள் அங்கே குவிந்த வரலாற்றுப் பின்னணியையும் நமக்குக் கூறுகிறார் தென்னகக் கோயில்களின் வரலாறுகளை எழுதிப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும் கன்னியாக்குமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் எஸ்.பத்மநாபன். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இக்கோயிலில் தங்கக் குவியல் இருந்த தகவல் இடம் பெற்றுள்ளதை கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவர் கட்டுரையில் இருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்...

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம் மிகவும் பழமையானது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் கூறுகின்ற பல புண்ணிய ஸ்தலங்களுள் அனந்தசயனமும் ஒன்று.

பெருமாளைத் தாங்கியுள்ள அனந்தன் பெயரால் ஏற்பட்ட நகர்தான் திருவனந்தபுரம். பள்ளி கொண்ட ஸ்ரீ பத்மநாப சுவாமியின் பெயரால் இந்நகரை அனந்தசயனம் என்றும் அழைத்தனர்.

ஆதிசங்கரர் ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, சுசீந்திரம் வழியாக அனந்தசயனம் வந்தடைந்ததாக ஸ்ரீ சங்கரவிஜயம் கூறுகின்றது. ராமாநுஜர் இங்கு வருகை தந்ததாகக் கூறுவர். ஆதிசங்கரர், ராமானுஜர் சிலைகள் இந்த ஆலய தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம் பாரத நாட்டின் 108 திருப்பதிகளில் ஒன்றாகவும், மலை நாட்டின் 13 வைஷ்ணவ ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. இக்கோயில் மூலவரை "ஆடகமாடத்து அறிதுயில்வோன்' என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் புகழ்ந்து கூறுகின்றது. ஆடகம் என்றால் பொன் என்பது பொருள். சிலப்பதிகார காலத்திலேயே பத்மநாப சுவாமி கோயிலில் தங்கக் குவியல் பாதுகாக்கப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக இமயமலை சென்று கல்லெடுக்கப் புறப்படும் நேரத்தில் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பிரசாதத்தை தோளிலே பூசினார் என்ற தகவல்களையும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் பதினொரு பாடல்களில் திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டருளுகின்ற ஸ்ரீ பத்நாப சுவாமியை மங்களாசாசனம் செய்துள்ளார்.

"அந்தமில் புகழனந்தபுரம்', "செறிபொழில் அனந்தபுரம்', "பொன்மதில் அனந்தபுரம்' எனப் பலவாறு திருவனந்தபுரம் நகரையும், "எம்பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்' என அங்கு அறிதுயில் செய்யும் ஸ்ரீ பத்மநாப சுவாமியையும் அவர் போற்றிப் பாடுகின்றார். நம்மாழ்வார் பத்மநாப சுவாமி கோயில் மதிலை "பொன்மதில்' என்று புகழ்ந்திருக்கிறார்.

உயரமான பகுதியில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோயில் கோட்டை மதில்களால் சூழப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறையும் உயரமான இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் போன்று இங்கும் மூலவர் சயன மூர்த்தியாக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். கட்டடக் கலையம்சங்களிலும் பூஜை முறைகளிலும் திருவட்டாறு ஆலயமும் திருவனந்தபுரம் ஆலயமும் ஒன்றுபோலவே காணப்படுகிறது.

திருவட்டாறைப் போலவே இங்கும் மூலவரின் திருவுருவச் சிலை சுடுசர்க்கரையினால் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ பத்மநாப சுவாமியின் முகப்பொலிவை தற்கு வாயிலிலும், அவரது நாபியில் எழுந்தருளியுள்ள பிரம்மனை நடுவாயிலிலும் பாதகமலத்தை வடக்கு வாயிலிலும் நின்று தரிசிக்கலாம்.

கேரள மாநிலத்திலேயே திராவிடக் கட்டடக் கலையமைப்பின் சிறப்பு அம்சமான கோபுரத்தைக் கொண்ட ஒரே கோவில் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்தான். 100 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்ட இக்கோபுரம் கி.பி. 1566-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1604-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 1565-ஆம் ஆண்டு தங்கத்தால் ஆன கொடிமரத்தை இங்கு அமைத்தனர். குலசேகரமண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் கலையம்சங்கள் மிக்க பல சிற்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும். பல அழகிய சிலைகளைக் கொண்டுள்ள பலிபீட மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் கிருஷ்ணன் கோவிலின் முன்னால் உள்ள நவகிரக மண்டபமும் கண்டு இன்புறத்தக்கவை.

திருவனந்தபுரம் அரண்மனை நூல்நிலையத்தில் கிடைத்த பத்து பாடல்கள் கொண்ட இரு ஓலைச்சுவடிகள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் இருவர் மேலும் இயற்றப்பட்ட பாடல்களாகும் என்பதையும், இப்பக்திப் பாடல்கள் கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வேணாட்டு மன்னன் ஆதித்தவர்மனால் இயற்றப்பட்டவை என்றும் திருவிதாங்கூர் தொல்பொருள் ஆராய்ச்சித் தொடரிலிருந்து அறியலாம்.

கி.பி.1749-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுவதையும் ஸ்ரீ பத்மநாப சுவாமிக்குச் சமர்ப்பணம் செய்து பெருமாளின் அடிமை என்று பொருள்பட "ஸ்ரீ பத்மநாப தாசர்' என்ற பட்டத்தையும் ஏற்றுக்கொண்டார். அதனால் திருவிதாங்கூர் மக்களுக்கு மன்னர்களிடம் ஒரு தெய்வீக அன்பும் மரியாதையும் ஏற்பட்டன. இவ்வாறு அரசியலும் சமயமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. நாட்டின் எதிரிகள் கடவுளின் எதிரிகளாகக் கருதப்பட்டனர். மார்த்தாண்ட வர்மா காலத்தில் கோவில் திரும்பவும் பழுது பார்க்கப்பட்டது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதமும் ஐப்பசி மாதமும் திருவிழா நடைபெறுகின்றது. ஐப்பசித் திருவிழாவின் கடைசி நாள் ஸ்ரீ பத்மநாப சுவாமியின் திருவுருவச் சிலையைக் கடலுக்கு எடுத்துச் சென்று நீராட்டுவர். ஆராட்டு என்றழைக்கப்படும் இத்திருவிழா ஊர்வலத்தில் யானைகளும் குதிரைப்படைகளும் புடைசூழ திருவிதாங்கூர் மன்னர் வாகனங்களுடன் சென்று கடலில் நீராடித் திரும்புவார். இந்த ஊர்வலம் கேரள மாநிலத்திலே முக்கியமானதொரு விழாவாகும். இக்கோயிலை அடுத்துள்ள மண்டபத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பழைய தலைநகராக இருந்த பத்மநாபபுரத்திலுள்ள சரஸ்வதி சிலைதான் கொண்டுசெல்லப்படும். அந்தச் சிலை கம்பரால் வணங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களுக்குப் பொதுமக்களும், உள்நாட்டு, வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்களும் வழங்கிய தங்க நாணயங்கள் உட்பட பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ பத்மநாப சுவாமிக் கோயிலுக்கே வழங்கிவரும் வழக்கம் காலம்காலமாக இருந்துவந்துள்ளது. இது தங்கப்புதையல் அல்ல, மன்னர்களுக்குக் கிடைத்த தங்கக் குவியல். இவற்றைப் பற்றிய விவரங்கள் கேரளக் கவிஞர் உள்ளூர் எஸ்.பரமேஸ்வர அய்யர் தொகுத்த "மதிலகம்' ஆவணங்களில் உள்ளன. இப்பரிசுப் பொருள்கள் யாவும் ஸ்ரீ பத்மநாப சுவாமிக்கே உரியது. கோயில் சொத்து கோயிலுக்கே உரியது. அரசுக்கு உரியதல்ல. இதை கேரள அரசும் அறிவித்துவிட்டது. திருவிதாங்கூர் மன்னரும் அறிவித்துவிட்டார்.
நன்றி தினமணி

No comments: