உலகச் செய்திகள்

நேபாளத்தில் மலைப்பாதையிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்து பஸ் விபத்து -41 பேர் பலி; 16 பேர் காயம்

யேமன் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு:12 பேர் பலி

மத்திய அமெரிக்காவில் வெள்ளம்: மண்சரிவுகளில் சிக்கி 80 பேர் பலி

சோமாலிய தலைநகரில் கார் குண்டு தாக்குதல்

பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குவிப்பு


நேபாளத்தில் மலைப்பாதையிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்து பஸ் விபத்து -41 பேர் பலி; 16 பேர் காயம் _


10/15/2011 11:25:46 AM

கிழக்கு நோபாளத்தில் மலைப்பகுதி பாதையொன்றில் பயணித்த பஸ்ஸொன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக் குள்ளானதில் குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காத்மண்டுவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சின்டுலி மாவட்டத்தில் இடம் பெற்ற இந்த விபத்தையடுத்து பஸ்ஸில் இருந்த பயணிகள் பலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

சீரற்ற மலைப்பாதையில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து 400 மீற்றர் பள்ளத்தில் ஓடிக் கொண்டிருந்த சன்கோஸி ஆற்றில் விழுந்துள்ளது.

இதன் போது பஸ் பல பாகங்களாக உடைந்து சின்னா பின்னமாகியுள்ளது.

பஸ்ஸின் சில பாகங்கள் அருகிலுள்ள மரங்களில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
நன்றி வீரகேசரி


யேமன் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு:12 பேர் பலி
17/10/2011

யேமன் தலைநகர் சனாவில் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலெஹிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

நகர மையத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்ற போது அவர்களை நோக்கி கண்ணீர்ப் புகைப்பிரயோகத்துடன் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 8 மாத காலமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலொன்றில் அராபிய தீபகற்பத்திலுள்ள அல் கொய்தா போராளிக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் பன்னாவும் ஏனைய 6 போராளிகளும் பலியாகியுள்ளனர்.

ஷப்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே எகிப்திய பிரஜையான இப்ராஹிம் அல் பன்னாவின் மூத்த மகனும் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட மதத்தலைவரான அன்வர் அல் அவ்லாகியின் மைத்துனரும் பலியாகியுள்ளதாக பிராந்தியவாசிகள் கூறுகின்றனர்.
நன்றி வீரகேசரி
 
மத்திய அமெரிக்காவில் வெள்ளம்: மண்சரிவுகளில் சிக்கி 80 பேர் பலி


18 /10//2011 11:22:30 AM
மத்திய அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 80 ஆக உயர்ந்துள்ளது.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட எல் சல்வாடோரில் 32 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பலர் மண்சரிவுகளில் வீடுகள் புதையுண்டதால் உயிரிழந்துள்ளனர்.“

கௌதமாலாவில் 28 பேரும் ஹொண்டூரஸில் 13 பேரும் நிகரகுவாவில் 8 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்த வெள்ளத்தால் 100, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி

சோமாலிய தலைநகரில் கார் குண்டு தாக்குதல்

19/10/2011

சோமாலிய தலைநகர் மொகாடிஷாவிலுள்ள முன்னாள் வெளிநாட்டு அமைச்சு கட்டடத்தின் வெளியே கார் குண்டு தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.

கென்ய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் சோமாலிய அரசாங்க பிரதிநிதிகளுடன் அந்நகரில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கென்யாவானது அந்நாட்டு அல் ஷபாப் போராளிகளுக்கு எதிராக போராடுவதற்காக தனது படைவீரர்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.

சோமாலிய அரசாங்க இராணுவ ஜெனரல்களில் ஒருவரான யூஸூப்துமால் செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடுகையில் தனது படையினர் கென்ய படையினருடன் இணைந்து அல் ஷபாப் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அவ்மாடோவ் நகரை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

தென் சோமாலியாவின் பெரும்பாலான பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல் ஷபாப் போராளிகள் கென்ய படையினர் வாபஸ் பெறாவிட்டால் கென்யாவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கென்யாவில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்களுக்கு அல் ஷபாப் போராளிகளே காரணமென குற்றஞ்சாட்டப்படுகிறது
நன்றி வீரகேசரி


பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குவிப்பு
Tuesday, 18 October 2011

நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ ஹெலிகொப்டர்கள் சகிதம் பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஒட்டி ஏழு பழங்குடியினப் பகுதிகள் உள்ளன. அவற்றில் தான் தெற்கு, வடக்கு வஜிரிஸ்தான் பகுதிகள் உள்ளன. பாகிஸ்தான் அரசியலமைப்புப் படி ஏழு பகுதிகளும் பழங்குடியினரால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பகுதிகள். வடக்கு வஜிரிஸ்தான் தலைநகர் மிரான்ஷா நகரமாகும்.

இருநாட்டு எல்லையில் பழங்குடியினப் பகுதிகள் இருப்பதால் தலிபான்கள் மிகச் சுலபமாக பாகிஸ்தானுக்குள் நுழைகின்றனர். ஹக்கானி குழுவின் பதுங்கிடமாக வடக்கு வஜிரிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. வஜிரிஸ்தான் அருகிலுள்ள பழங்குடியினப் பகுதிகள் சிலவற்றில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் போராளிகளின் முகாம்கள் மீதான குண்டு வீச்சில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன.

இந்நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வீச்சை மேலும் அதிகரிப்பதன் மூலம் ஹக்கானி குழுவை ஒழித்துக் கட்ட முடியும் என அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தது. சமீபத்தில் இருதரப்புக்கும் ஏற்பட்ட ஹக்கானி குழு தொடர்பான விவகாரத்தில் ஹக்கானி குழு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி வாஷிங்டனில் நடந்த தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா வடக்கு வஜிரிஸ்தானில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஹக்கானி குழுவை ஒழித்தே தீர வேண்டும் என உறுதியாகத் தெரிவித்தார். வடக்கு வஜிரிஸ்தானில் அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால் பாகிஸ்தான் அதனைப் பார்த்துக் கொண்டு இருக்காது என்ற பிரதமர் கிலானியின் எச்சரிக்கையை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையிலேயே கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வடக்கு வஜிரிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வடக்கு வஜிரிஸ்தானின் குலாம் கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேட்டோ விமானங்கள் தங்கள் பகுதி மீது பறப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் குலாம் கான் பகுதி வீதியில் 900 சரக்கு லொறிகள் தேங்கி நிற்பதாக மிரான்ஷாவில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் வீடு வீடாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

வடக்கு வஜிரிஸ்தான் மக்கள் தங்கள் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் நுழையக்கூடும் என்ற பீதியில் உள்ளனர். அமெரிக்கப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் அமெரிக்க தரப்பில் இருந்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நன்றி தினக்குரல்No comments: