ஐரோப்பிய பாராளுமன்றத்தில் "இலங்கையின் கொலைக்களம்' பிரிட்டிஷ் பராளுமன்றத்தில் "ஏற்றுக் கொள்ளபட்ட பொய்கள்' ஒரே தினத்தில் வெளியிடப்பட்டன

Friday, 14 October 2011

channel4இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒளிநாடாவான பிரிட்டனின் சனல் 4 தயாரித்த "இலங்கையின் கொலைக்களம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை திரையிடப்பட்டுள்ள அதேசமயம் "ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' என்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒளிநாடாவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அதே தினத்தில் திரையிடப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டமையானது உள் நோக்கம் கொண்டது என்று பெல்ஜியம், லக்சம் பேர்க், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரிய சிங்க கூறியுள்ளார். இந்த ஒளிநாடா திரையிடப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக் குழு ஆகியவை அனுசரணை வழங்கியதாக தோன்றுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக முன்கூடியே தீர்மானம் எடுப்பதனையும் அவமதிப்பை ஏற்படுத்துவதையும் இந்த விடயம் நோக்கமாக கொண்டதாக உள்ளது என்று அவர் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் விடுத்துள்ளார்.

இந்த மாதிரியான நிகழ்வுகளை துரிதமாக மேற்கொள்வதும் சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பை விடுப்பதற்கும் காரணம் உள்ளது.ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரும் போது மேலும் காரணம் கூறுவதற்கு அவர்களுக்கு இயலாது என்ற அச்சத்தினாலேயே அவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமது நோக்கத்துடன் கூடிய தாக்குதல்களை தொடர்கின்றனர் என்று அவர் கூறியள்ளார். இந்த திரைப்படத்தை தனிப்பட்ட உறுப்பினரின் முன் முயற்சியுடாக பாராளுமன்ற வளாகத்தைப் பயன்படுத்தி திரையிடப்பட்டதற்கு அவர் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற தலைவரான டாக்டர் ஜேசி புசீக் மற்றும் தலைவரின் அலுவகத்திற்கு அவர் இந்த உள்நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரல் பற்றி கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இது இவ்வாறு இருக்க பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போய்கள் ஒளிநாடா திரையிடப்பட்டதாக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜீவ விஜய சிங்க எம்.பி. இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டாடர் ஜேசீ நோனிஸ் உரையாடலை மேற்கொண்டனர். 28 வருட மோதலை தொடர்ந்து நல்லிணக்க, மீள்ளொருமைபாட்டு நடவடிக்கைகளை இலங்கை உறுதியாக முன்னேடுத்து இருக்கும் நிலையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்த ஒளிநாடாவை திரையிடுவது அவசியமான ஒன்று என்று டாக்டர் நோனிஸ் கூறியுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை தடைகளற்ற விதத்தில் மேம்படுத்த வேண்டும். எமது சமூகங்களுக்கிடையில் பரஸ்பர கௌரவம் புரிந்துணர்வு என்பவற்றுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இதுவும் முக்கியமானதாகும். இந்த விடயத்தின் அடிப்படையில் நேர்மையானதும் பக்கச்சர்பற்றதுமான செய்திகளை வெளியிடுவது அவசியமானதாகும். இதன் மூலமே பிளவுகளற்ற ஐக்கியத்தை உருவாக்க முடியும். மோதலினால் ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப்படுத்த உதவுவதற்கும் எமது சமூகங்கள் ஒன்று சேர்ந்து பன்முக, சகல சமூகங்களையும் ஒன்றிணைத்த சமூதாயத்தை கட்டியெழுப்ப உதவவும் இது துணை நிற்கும். அத்துடன் நீடித்த சமாதானத்தை உருவாக்கவும் இது உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அந்த உரையாடல் நிகழ்வில் கருத்து தெரிவித்த ரஜீவ விஜய சிங்க எம்.பி. சமாதானத்துக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ள தன்மையை இலங்கை நண்பர்கள் விளங்கிக் கொள்ளவேண்டிய தேவையிருப்பதாக குறிப்பிட்டார். உண்மையான தற்போதைய விடயத்தை இலங்கை தொடர்பாக பிரபல்யப்படுத்துவதற்கான தன்மை இல்லாதிருப்பதையம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரிட்னில் இந்த மாதிரியான சிறப்பு உரிமையை புலிகளின் எஞ்சியிருப்போர் அனுபவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி தினக்குரல்


No comments: