புண்ணிய பூமி புட்டபர்த்தி


.

புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்

உலகெங்கிலும் பரவியுள்ள கோடிக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் புட்டபர்த்தி, 1926-ல் பகவான் சத்ய சாய் பாபா அவதரித்தபோது மிகச் சிறிய, யாரும் அறியாத கிராமமாக விளங்கியது.

சாய் பாபாவின் அவதார பூமியாகையால் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம்.

1950-ல் அவரது 24-வது அவதார தினத்தில் புட்டபர்த்தி யில் பிரசாந்தி நிலையம் தொடங்கப்பட்டது. பிரசாந்தி நிலையம் என்பதற்கு உயர்ந்த மன அமைதியின் உறைவிடம் என்று பொருள்.

பாபாவின் பிறந்த தினமான நவம்பர் 23-ல் புட்டபர்த்தியில் பல லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள்.

இங்கு சுப்பிரமணியர் கோயில், காயத்ரி கோயில், ஹனுமன் கோயில், எல்லா மதங்களின் ஒற்றுமையைக் குறிக்கும் 50 அடி உயர சர்வ தர்ம தூண் ஆகியவையும் உள்ளன.

சாய் பாபாவின் தாத்தா கொண்டம ராஜு என்பவர் புட்டபர்த்தியில் சத்யபாமாவுக்கு கோயில் கட்டியுள்ளார். அது சத்யாம்மா கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூர் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு சத்யாம்மா கோயிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

சாய் பாபா பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலும், சித்ராவதி நதிக் கரையில் பாபா சிறுவனாக இருந்தபோது அதிக நேரம் செலவழித்த கல்ப விருட்சமும், மலைப் பகுதியில் உள்ள தியான மரமும் பார்க்க வேண்டியவைகளாகும்.

சத்ய சாய் பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சைதன்ய ஜோதி அருங்காட்சியகம், இசைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம் ஆகியவையும் புட்டபர்த்தியில் அமைந்துள்ளன.

புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் அமைந்துள்ள பகுதி நகர்ப்புறத்துக்கு ஈடாக வளர்ந்திருந்தாலும், நகரத்துக்கு வெளியே இன்னமும் கிராமிய வாழ்க்கை முறையைக் காண முடியும்.

நன்றி தினமணி