அவுஸ்ரேலிய செய்திகள்


வியாழன், டிசம்பர் 16, 2010

கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்பு



இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அவுத்திரேலியாவின் கிறிஸ்மசு தீவுக்கு அருகில் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் குறைந்தது 28 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


42 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.







நேற்று புதன்கிழமை காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது. படகில் பயணித்தவர்கள் பெரும்பாலானோர் ஈராக் மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்து நடந்த சமயம் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பதை உறுதியாகத் தெரியவில்லை என ஆத்திரேலியப் பிரதமர் யூலியா கில்லார்ட் தெரிவித்தார். 100 பேர் வரையில் பயணித்திருக்கலாம் என குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார்.

கடல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஆத்திரேலிய சுங்க அதிகாரிகளையும் மீறி எப்படி இப்படகு கிறிஸ்துமஸ் தீவின் கரையை எட்டியது என்பது இப்போது கெள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலையில் அகதிகளின் கூக்குரலைக் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தினர். படகு துண்டு துண்டாக சிதறியதைத் தாம் கண்ணால் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அகதிகள் பலர் தமக்குக் கிடைத்த படகின் துண்டுகளைக் கைப்பற்றியபடி கடலில் தத்தளித்தனர். கடும் காலநிலை காரணமாக இப்படகு தமது அதிகாரிகளின் கண்ணுக்குத் தெரியவில்லை என பிரதமர் கூறினார்.

கிறிஸ்துமஸ் தீவில் கிட்டத்தட்ட 3,000 அகதிகள் தமது அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அங்கு இடைக்காலமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் பேர்த் நகரிலிருந்து 2600கிமீ வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500கிமீ தெற்காகவும் அமைந்துள்ளது.

No comments: