எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்


பகுதி 4

;.குறிகாட்டுவானில் கடற்படையினர் வாகன போக்குவரத்து ஒழுங்குகளையும் கார்ப்பார்க்  ஒழுங்குகளையும் பார்க்கின்றார்கள். 25 இல் இருந்து 30 கடைகள் வரை காணப்படுகின்றது. இதில் 20 கடைகள்வரை தகரத்தால் கட்டப்பட்டிருக்கும் கடைகள் பெரும்பாலான அல்லது அனைத்துக்கடைகளுமே சிங்களவர்களினால் நடாத்தப்படுகின்றன. இனிப்பு வகைகள் புளுக்கொடியல் தொதல் போன்றவைதான் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் 7 கடைகள்வரை நிரந்தரக் கட்டிடங்களால் ஆன கடைகள். இதிலும் இரண்டு கடைகள் தமிழர்களின் கடைகளாகவும் மற்றயவை சிங்களவர்களாலும் நடாத்தப்படுகின்றது. இதில் ஒரு கடை புங்குடுதீவில் பிரபல வியாபாரியாக இருந்த மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுடையது. நான் 83 க்கு முன்பிருந்த நிலையை பார்க்கிறேன். திருநாவுக்கரசு அவர்களின் ஒரு கடையும் இரண்டு மூன்று கடலைக்கடைகளுமே இருந்த இடம் இன்று இப்படி இருக்கிறது.







இதுபற்றி கேட்டபோது 6 கடைகள்வரை நிரந்தமாக உள்ளது திருநாவுக்கரசருக்கு சொந்தமானது. ஒரு கடையை அவர்கள் நடாத்துகின்றார்கள். ஏனைய கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நடத்துவதற்கு ஆட்கள் இல்லை சிங்களவர்கள் வாடகைக்கெடுத்து நடாத்துகின்றார்கள். தகரத்தால் போட்டுள்ள கடைகளும் நகரசபையால் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிந்தேன். கொழும்பு யாழ்ப்பாணம் பிரயாணம் ஆரம்பித்த பின்பு வகை தொகையின்றி சிங்கள உல்லாசப்பிரயாணிகள் வந்ததாகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய சும்மா கிடந்த இடங்களில் எல்லாம் குட்டிக் குட்டி கடைகள் முளைத்ததாகவும் இதை தடுக்கும் நடவடிக்கையாகவே நகரசபை கடைகள் போட்டு வாடகைக்கு விட்டுவிட்டு மற்றைய அனைத்துக்கடைகளைம் அகற்றிவிட்டதாகவும் அந்தப் பெரியவர் கூறினார். அதே நேரம் முன்பு உல்லாசப் பிரயாணிகள் நிறைய வந்தார்கள் இப்போது நன்றாகக் குறைந்து விட்டது அதனால் வியாபாரமும் நன்றாகப் படுத்து விட்டது இனி கோயில் திருவிழாவுக்கும் புத்தகோயில் விசேஷ தினத்துக்கும்தான் ஆட்களை எதிர் பார்க்கலாம் என்று சற்று ஆதங்கத்தோடு கூறினார். கடை போட்டுள்ளவர்கள் பலர் குடும்பமாகவே தங்கியுள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது. சிறுவர்களும் இளைஞர்களும் தெருவிலேயே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அனைவருமே தமிழ் சிங்களம் எல்லாம் கலந்த பாசையை பேசிக் கொண்டிருப்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.



படகுத்துறையில் இரண்டு மூன்று கடற்படையினர் சில பொலிசார் என்று நிறுத்தப்பட்டுள்ளார்கள். படகோட்டிகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாகவே காணப்பட்டார்கள். அனேகமான படகுகளில் தமிழ் சிங்கள மொழிகளில் பெயர் போடப்பட்டிருந்தது. பெரும்பாலான பெயர்கள் நாகபூசணி அம்மன் நாமங்கள் கொண்டவையாகவும் சில படகுகளில் சிங்கள பெயர்களும் தெரிந்தது. வழமைபோல் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றுவதும். அட்டவனை நேரத்திற்கு படகுகளை எடுக்காமல் ஆட்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதுவும் ஒரு அலட்சிய மனோபாவத்தில் மக்களை நடத்துவதும் படகோட்டிகள் மேல் சற்று கோபத்தை உண்டு பண்ணுகின்றது. நேரக்காப்பாளருக்கும் பிரயாணிகளுக்கும் நேர அட்டவனைப் பிரகாரம் படகு எடுக்காத காரணத்தால் கதைக்கப்பட்டு வாக்குவாதமாக மாறியபோது கடற்படையினர் தலையிட்டார்கள் இரண்டு படகுகள் போயிருக்க வேண்டிய நேரம் தவறிவிட்டதை அவர்களும் சுட்டிக்காட்டி படகை எடுக்கும் படி கேட்டபோது வாக்குவாதம் கடற்படை அதிகாரிக்கும் நேரக்காப்பாளருக்கும் இடையில் ஏற்பட்டுவிட்டது. ஆனால் கடற்படையினர் அவரை எச்சரித்து நாளைய கூட்டத்தில் விளக்கம் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு படகோட்டியிடம் படகை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள படகோட்டி படகை எடுத்தார் 11.10 மணிக்கு துறைமுகம் வந்த நாங்கள் 11.30 மணி 12 மணிக்கு செல்லவேண்டிய படகுகள் செல்லாது 12.10 இற்கே சென்றதால் 12 மணி பூசை நேரம் தவறிவிட்டது கவலையாக இருந்தது. படகில் செல்லும்போது உள்ளுர்வாசி ஒருவரிம் பேச்சுக் கொடுக்கும்போது. கடற்படையினர் இருக்கிறார்களே நேரக்கட்டுப்பாட்டை ஏன் கவனிப்பதில்லை என்று கேட்டேன். அவர் சிரித்தவண்ணம் கூறினார் நீங்களும் பாத்தீங்கள்தானே நேவிக்காறனோட எப்பிடிச் சத்தம்போட்டான் அந்தப் பொடியன். அவங்கள் இப்ப அடிக்கக் கிடிக்கமாட்டாங்கள் நல்ல பேரெடுக்கவேணுமெண்டு பெரியவங்கட ஓடர். தைச்சலமா கை வைச்சாங்களெண்டா எங்கட பேப்பர்காரங்கள் கிளிச்சுப்போடுவாங்கள் அதுவும் ஒருபயம் அதுதான் அப்பிடி. எங்கட ஓட்டிமாரும் சரியான மோசம் காசாச பிடிச்சு நிறயப்பேர போடவேணுமெண்டு காத்துக்கொண்டிருப்பாங்கள். உங்களுக்குப் பறுவாயில்ல நீங்க எப்பயும் ஒருக்கால் கோயிலுக்கு வந்து போறனீங்கள் நாங்கள் நித்தம் பயணம் செய்யவேணும் பள்ளிக்கு வாற வாத்திமார் ஆஸ்பத்திரி சனங்கள் எல்லாருக்கும் இதுதான். எங்கட பொடியள் எண்டு நாங்க நினைகிறம் ஆனால் அவங்கள் தாங்கள் நினைச்சதுதான் செய்வாங்கள். கொஞ்ச நாளைக்கு முன்னால சனம் வந்து கொட்டு கொட்டென்று கொட்டினதில இவங்கடபாடு கொண்டாட்டம்தான் அதுதான் இவ்வளவு படகுகள் கிடக்கு. இப்ப கிடந்து காயினம் முந்தி எங்கள கணக்கில எடுக்கவும் மாட்டினம் மாத்தயா எண்ட நோனா எண்ட எண்டு நிப்பினம். நாங்கள்தான் ஒழுங்கா பிரயாணிக்கிறனாங்கள் எண்டு அப்ப விளங்கயில்ல. நாளைக்கு படகுச் சங்கத்தின்ர கூட்டத்தில அவருக்கு ரிக்கற் கிளிச்சாலும் கிளிப்பாங்கள்” கூறி முடிக்கின்றார் அந்த உள்ளுர்வாசி. யதார்த்தாமான அவர் பேச்சு நடைமுறை என்ன என்பதை படம்பிடித்துக் காட்டியதுபோலிருந்தது.

நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்றபோது என் கண்ணில் முதலில் தட்டுப்பட்டது  ராஜகோபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகள் தான். நான் முன்பு குறிப்பிட்டதுபோல் எல்லாக் கோயில்களிலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை இங்கும் உறுதிசெய்ய முடிந்தது. நிறைய மக்கள் பூசைக்கு வந்திருந்தார்கள். அங்கு நிறைய மக்கள் இருக்கின்றார்கள் என்பதில் ஒரு திருப்தியும் இருந்தது. இடப்பெயர்வு அந்த ஊரில் குறைவாகத்தான் நடந்திருக்கின்றது. நாகபூசணி அம்மன் அற்புதமான அழகோடு காட்சி தந்தாள். கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு அன்னதான மடம் சென்றோம். அந்தக்காலத்திலிருந்தே வருகின்ற அடியார்களுக்கெல்லாம் அன்னதானம் வழங்குவது அந்தக்கோயிலின் வழமை அது இன்றும் மாறாமல் நடைபெறுகின்றது. 


அங்கிருந்து புத்தகோயிலை நோக்கி நடந்தோம் முன்பு இருந்த கடைகளை விட வீதியின் இரு மருங்கும் தட்டிக்கடைகள் போடப்பட்டுள்ளது. புத்தகோவில் தாண்டியும் அந்தக்கடைகள் காணப்படுகின்றது. பெரும்பாலும் சிங்களவர்களே அந்தக்கடைகளை நடாத்துகின்றார்கள். புத்த கோயில் அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற சிங்களவர்கள் அம்மன் கோவிலுக்கும் வந்து வணங்குகின்றார்கள். தமிழர்கள் புத்தகோவிலுக்கு சென்று வணங்குகின்றார்கள். அதையும் பார்த்துக்கொண்டு திரும்புகின்றபோது இருட்டுவதற்கு முன் போகவேண்டும் என்ற அவசரம் இருந்தது.அந்த அவசரத்தோடு வீடு திரும்பினேன்.





மறுநாள் தெல்லிப்பழை வசாவிழான் கீரிமலை போன்ற பிரதேசங்களுக்கு சென்றேன்.செல்லும் போது ஊரெளுவினூடாக சென்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தியாகி திலீபனின் வீட்டை பார்வையிட்டேன். அழகிய அந்த வீடு இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாக காணப்பட்டது.  வேலிகள் எதுவுமற்று திறந்த வெளியாக பற்றைகள் வளர்ந்து காணப்பட்டது. அதைப் பார்த்தபோது அந்த வீட்டின் முன்னால் நின்று திலீபனுடன் உரையாடிய அந்த நாள் ஞாபகங்கள் மனதில் வந்து வலியைத்தந்தது.



தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவில் சென்றபோது எந்தவிதமான இராணுவ சோதனைகளும் இருக்கவில்லை.
கோவிலில் கோபுர கட்டுமான பணி இடம் பெற்றுக் கொண்டிருந்தது.திருத்த வேலைகளும் நடைபெறுகின்றது. ஒரு கட்டடத்தில் அனாதைப் பிள்ளைகள் பராமரிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த சேவைக்கு உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் பணம் கிடைப்பதை நான் அறிந்துள்ளேன். அத்தோடு கிளிநொச்சியில் உள்ளவர்களோடு பார்க்கும் போது இங்கு எவ்வளவோ செய்யப்படுகின்றது என்பதால் அங்கு செல்லாமலே வந்து விட்டேன்.





அதைத் தாண்டி மாவிட்டபுரம் நோக்கி செல்கின்றபோது இராணுவ சோதனைநிலை காணப்பட்டது. நாங்கள் இறக்கப்பட்டு அடையாளங்கள் பார்க்கப்பட்ட பின்பு ஜம்பது மீற்ரர் நடந்து செல்லச் சொன்னார்கள். சென்ற பின்பு வாகனம் கொண்டுவரப்பட்டது மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை நோக்கி பயணித்தோம். போகின்ற பாதைகளில் பெரிய கல் வீடுகள் கூரையில்லாத வீடுகளாகவும் வீடுகளுக்குள் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்தும் தெரிந்தன. எத்தனை அழகு நிறைந்த கிராமம் எப்படிக் கிடக்கின்றது. மனிதர்களற்ற இடுகாடுகள் போல் தோற்றம் பெற்றிருந்தது. 



அங்கும் தெருவோரங்களில் இரும்பும் கையுமாக இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். எத்தனை தேரோடிய கந்தசாமி கோவில் சோபையிழந்து காணப்பட்டது. பழைய தேர்களில் முடமான தேரொன்று தகரக் கொட்டகையில் முடக்கிவைக்கப்பட்டிருந்தது. சென்ற வருடம் ஓடியதாக ஒரு தேரைக்காட்டினார்கள் சப்பரத்தைவிட சற்றுப் பெருத்தது அவ்வளவுதான். கோவிலின் உட்புறம் அழகிய சிற்பக்கலைகள் அலங்கோலக் காட்சியாக இருக்கின்றது. 



முனிவர்கள் தவமிருந்த இடம் என்று கேள்விப்பட்டதுண்டு. அந்த முனிவர்கள் இன்னும் தவக்கோலத்தில் உருக்குலையாமல் இருப்பதை பார்த்ததும் மனம் லயிக்கத்தான் செய்தது. அழகிய மரநிழல்களில் அவர்கள் அமர்ந்திருப்பது அந்தப் பகுதிக்கே ஒரு அழகைக் கொடுத்தது போல் இருந்தது.



மாவிட்ட புரத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிலம் அகழப்பட்டு சல்லிக்கற்கள் அள்ளிச் செல்லப்படுவதை கேள்விப்பட்டேன். அந்தப் பகுதியையும் பார்க்கவேண்டுமென முயற்ச்சித்தபோது அதன் பலன் நான் கண்ட காட்சிகள்.மனிதரே உட்செல்லாத அந்தப் பிதேசத்திற்குள் இராட்சத கல்வெட்டும் இயந்திரங்கள் புல்டோசர்கள் என்பன தாராளமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி தருவதாக இருந்தது. சல்லிக்கற்கள் குவியல் குவியல்களாக குவித்துவைக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று உட்செல்ல நிலம் அகளப்பட்டு பாதாளம்போல் காட்சி தருகிறது. சற்றுத்தொலைவில் கடல் தெரிகிறது. 


இவற்றை யார் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள் இராணுவ உதவியுடன் நிலத்தை அகழ்ந்து தென்னிலங்கை கொண்டு சென்றார்கள் என்று அறிய முடிந்தது. இப்போது பாராளுமன்றத்தில் கதைக்கப்பட்டு இந்த செயல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிந்தேன். அகழப்பட்ட அந்த பிரதேசத்தில் வெகுவிரைவில் கடல் வந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது. அப்படிக் கடல் வந்தால் அந்த பிரதேசமே பாழாகிவிடும். ஒரு நாட்டில் கனிமங்கள் தோண்டப் படுவதும் உபயோகிப்பதும் நடைபெறும் ஒன்றுதான். ஆனால் அதைச் செய்யும்போது அந்தப்பள்ளங்கள் நிரப்பப்படவேண்டியதும் கடலோ வெள்ளமோ தாக்காமல் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமையல்லவா. இதை உரியவர்கள் கேட்கவேண்டியதும் செய்யவேண்டியவர்கள் செய்வதும் உடன் நடக்கவேண்டும். இதற்கு எந்தச் சாக்குப் போக்கும் சொல்லக்கூடாது. இது நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது.


 இந்தக் கேள்விகளோடு கீரிமலை நோக்கி நகர்கின்றோம் வழியில் புத்தர் சிலை சினிமா படப்பிடிப்பாளர்கள் என்று பலவிடயங்களைப் பார்கின்றேன் அடுத்தவாரம் அவை பற்றி பார்ப்போம் வாசகர்களே.
இந்தக் கட்டுரையின் நான்காவது பாகம் இதுவாகும் இதன் முன்னைய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு இடப்பக்கத்தில் உள்ள மேலும் சில பக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் எனது இலங்கைப் பயணம் என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். 

2 comments:

Ramesh said...

பயணக்கதை நன்றாகப் போகின்றது. கொஞ்சம் கூட எழுதினால் அதிகம் காத்திருக்க வேண்டி இருக்காது. எழுத்துப்பிழைகள் இருக்கிறது அவசரம்போல் இருக்கிறது. இதுவரை எதையும் மறைக்காமல் தருவதுபோல கிடக்கு இனியும் இப்பிடியே வருமா?

kirrukan said...

[quote]தைச்சலமா கை வைச்சாங்களெண்டா எங்கட பேப்பர்காரங்கள் கிளிச்சுப்போடுவாங்கள்[/quote] அப்ப எங்கன்ட அவுஸ்ரேலியா மாதிரி நல்ல ஜனநாயகம் யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று சொல்லுங்.....கோ....இனி என்ன நானும் வெளிக்கிடடி யாழ்ப்பாணத்துக்கு என்று மனிசியிட்ட சொல்லி போட்டு வெளிக்கிடத்தான் இருக்கு......


[quote]அவங்கள் இப்ப அடிக்கக் கிடிக்கமாட்டாங்கள் நல்ல பேரெடுக்கவேணுமெண்டு பெரியவங்கட ஓடர்[/quote]
உதை எல்லாம் 40 வர்சத்து முதலே செய்திருந்தால் இவ்வளவு சனம் செத்திராது(தமிழ் சிங்களம் இரண்டு சனமும் தான்)