திருவெம்பாவைச் சிறப்பு

.

                                                                                            பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

இது மார்கழி மாதம். திருவெம்பாவைக் காலம்.

மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக்காலம். அதிகாலைவேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி,  ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம். மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பண்பாட்டுக் கோலத்தை உருவாக்கிவிட்டது. சைவர்களின் பண்பாடாக மட்டுமன்றித் தமிழர்களின் பண்பாடாகவே அது வழங்குகின்றது, தமிழர்களிடையே இலங்குகின்றது.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவாக பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும். திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.



இருபது பாடல்களும் செந்தமிழ் இலக்கியத்தின் சிகரத்தையே தொடுபவை. பக்தி உணர்விலே ஒருவித பரவசத்தைக் கொடுப்பவை. ஒவ்வொரு பாடலும் சுவையான கதையொன்றை அழகாகச் சொல்லும். நாடகம்போல நகர்ந்து செல்லும். பாடப்பாட அந்த நாடகத்தில் ஒருபாத்திரமாய் நமது இதயமும் இடம்பிடித்துக்கொள்ளும். இதயம் ஒருவகை இன்பத்தில் துள்ளும். அது பக்தியாய் மலர்ந்து இறைவனை உள்ளும்.

பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மும்மலங்களில் மூழ்கிக்கொண்டிருக்கும் பக்குவப்படாத ஆன்மாவின்மேல் அன்புகொண்டு அதனை எழுப்பி இறைவனின் அருள்பெற அழைத்துச்செல்வது என்பதே திருவெம்பாவையில் பொதிந்து கிடக்கும் தத்துவப்பொருள்.

“மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரிபாகர் அருள்
செலமுழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை” என்று திருப்பெருந்துறைப் புராணம் திருவெம்பாவைக்கு வரைவிலக்கணம் சொல்கின்றது.

திருவண்ணாமலையிலே, மார்கழி மாதத்திலே, புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுது. மலர்ந்தும் மலராத கன்னிப் பெண்கள் இறைவனைப் பாடிப்பரவுவதற்காக தோழிகளைத் துயிலெழுப்புகின்றார்கள். வீதிவழியே இறைவன் புகழைப்பாடிக்கொண்டே ஒவ்வொரு தோழியர் வீட்டுக்கும் சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். தோழியர்கூட்டம் பெருத்துவிட்டது. கடைசியாக ஒருத்தியின் வீட்டுக்கு முன்னே சென்று குரல்கொடுக்கிறார்கள்

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்”
வாள்போன்ற ஒளிபொருந்திய அகன்ற, நீண்ட அழகிய கண்களையுடைய பெண்ணே! தொடக்கமும் முடிவும் இல்லாத சோதிவடிவான சிவபெருமானைப் பற்றி நாங்கள் பாடிக்கொண்டுவருகிறோம். அதைக்கேட்டும் எழுந்துவராமல் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறாயே. உனது செவிகள் என்ன அவ்வளவு வன்மையானவையா? என்று கேட்கிறார்கள். மேலும் சொல்கிறார்கள்.

“மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.”

தேவர்களுக்கும் தேவனான சிவனின் திருவடிகளைப்பற்றி நாங்கள் வாழ்த்திப் பாடியதைக்கேட்ட நம் தோழி ஒருத்தி, பக்திப் பரவசத்தால் விம்மிவிம்மி மெய்ம்; மறந்தாள். மலர்ப்படுக்கையிலிருந்து புரண்டாள். கீழே விழுந்தாள். எதற்குமே ஆகாதவள்போல நினைவிழுந்து கிடந்தாள். எங்கள் பாட்டைக் கேட்டதும் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்த்தாயா? அந்த அளவுக்கு அவள் பக்திமிக்கவள். இறைவனிடத்திலே பாசம் மிக்கவள். ஆனால் நீயோ இன்னமும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாயே இது முறைதானா? நாங்கள் சொல்வதை ஏற்று உணர்ந்துகொள் பெண்ணே! என்று சொல்கிறார்கள்.

மலங்கள் நீங்கிப் பக்குவமடைந்தோர் இறைவனின் பெயரைக் கேட்டாலே தம்மை மறந்து இன்பத்தில் மூழ்கிவிடுவார்கள். இறைவன் புகழைப்பாடி எத்தனை முறை எழுப்பினாலும் பக்குவமடையாதவர்கள் எளிதில் எழமாட்டார்கள். மீண்டும் மீண்டும் மலங்களிலேயே அமிழ்ந்து கொண்டிருப்பார்கள். சைவசித்தாந்தத்தின் இந்தத் தத்துவப் பொருளை  இப்பாடல் மூலம் மணிவாசகப்பொருமான் அற்புதமாக நமக்கு உணர்த்துகின்றார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய். (பாடல் இல: 1)

இவ்வாறு வீடுவீடாகச் சென்று பெண்களைத் துயிலெழுப்பி அழைத்துக்கொண்டு பொய்கைக் கரைக்குச் செல்வதும், எல்லோரும் பொய்கையிலே நீராடுவதும், உள்ளம் உருக இறைவனை வாழ்த்திப் பாடுவதுமான பல்வேறு நிகழ்வுகள் அழகியதோர்  நாடகம்போல அமைந்திருப்பது திருவெம்பாவைப் பாடல்களின் சிறப்பாகும்.

கன்னிப் பெண்கள் நோன்பிருந்து, இறைவனைப் பாடிப் பரவித் தம்மைப்போலவே இறைபக்தி கொண்ட நல்ல கணவனையும், நலமான வாழ்க்கையையும் இறைவனிடம் கேட்பது திருவெம்பாவைப் பாடல்களின் வெளிப்படையான கருத்து. பக்குவப் படாத ஆன்மாக்கள் பக்குவப்பட்ட ஆன்மாக்களோடு சேரவேண்டும். மும்மலங்கள் நீங்க வேண்டும். காலங்களைக் கடந்த இறைவனின் காலடிகளைத் தேடவேண்டும்;. பேரின்பப் பெருவாழ்வை நாடவேண்டும். இறைவனோடு இரண்டறக் கூடவேண்டும் என்பதுவே திருவெம்பாவையின் உள்நின்று ஒளிர்கின்ற உயரிய தத்துவக் கருத்தாகும்.

அப்பர் சுவாமிகள் இறைவனை, இப்படியன், இன்னிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்று பாடியருளினார். அதைத்தான் மணிவாசகப் பெருமானும், இறைவனின் பெருமை எவராலும், எவற்றாலும் அளவிட முடியாதது என்பதை ஒரு மூலம் எடுத்துரைக்கின்றார்.

‘பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்’

கீழேழு உலகங்களுக்கும் கீழே, சொற்களில் அடக்கிச் சொல்லமுடியாதளவு தன்மையதாய் உள்ளவை இறைவனின் மலர்போன்ற திருவடிகள். மேலேயுள்ள பொருட்கள் எல்லாவற்றுக்கும் மேலே முடிவிடமாய் இருப்பது மலர்சூடிய அவனது திருமுடி. அவன் ஓருடல் கொண்டவனல்ல. ஒருபாதி பெண்ணுருவாய் அன்னையின் வடிவைக் கொண்டவன்.

அதுமட்டுமா?   ‘வேதமுதல் விண்ணேரு மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்’

வேதங்கள் முதலாக விண்ணகத்தோரும், மண்ணகத்தோரும் எப்படிப் புகழ்ந்தாலும் முற்றாகச் சொல்லி முடியாது. அந்தளவு அவன் பெருமை விரிந்துகொண்டே செல்லும். அவன் உயிர்களிடத்திலே கருணையுள்ள உற்ற நண்பன். தொண்டர்களின் உள்ளங்களிலே உள்ளவன். என்றெல்லாம் இறைவனின் பெருமைகளைப் பாடிச் சென்ற பெண்கள், ஆலயத்தில் தொண்டுசெய்யும் பணிப்பெண்களை எதிர்கொள்கின்றார்கள். உடனே அவர்களைப்பார்த்து,

‘கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆர் அயலார்
ஏதவனைப்பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.’ என்று கேட்கிறார்கள்.

இறைவனது ஆலயத்திலே பணிசெய்யும் பெண்களே!
ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருவமானவன் உருவமானவன், உருவத்தில் இருமையானவன், உயிர்களில் கருணையானவன், அடியாரின் உள்ளத்தில் கோயிலானவன் அப்படிப்பட்டவனை எந்த ஊரவன் என்று பாடுவது? என்ன பெயர்சொல்லிப் பாடுவது? உற்றவர் யார் என்று கொள்வது? அந்நியர் யார் என்று சொல்வது? எப்படித்தான் அவனைப் பாடுவது என்று ஆனந்த உணர்ச்சி மேலீட்டால் அங்கமெல்லாம் புல்லரிக்கக் கேட்கிறார்கள்.

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணேரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆர் அயலார்
ஏதவனைப்பாடும் பரிசேலோ ரெம்பாவாய். (பாடல் இல: 10)

தண்ணீர்க் குளத்திலே இறங்கிவிட்டால் மட்டும் போதாது. குளிக்கத் தொடங்கி விட்டால் மட்டும் போதாது. எப்படியெல்லாம் குளிக்க வேண்டும், என்னவெல்லாம் சொல்லிக் குளிக்க வேண்டும் என்பதை நீராடும் பெண்கள் வாயாரப் கூறுவதாக மணிவாசகப் பெருமான் தேனாகப் பாடியுள்ளார்.
‘காதார் குழையாடப் பைம்பூண் கனலாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.’

காதணிகள் அசைய, பசும் பொன்னால் செய்யப்பட்ட நகைகளெல்லாம் சேர்ந்தசைய, கூந்தலில் கூடிய மலர்கள் அவிழ்ந்தசைய, அந்த மலர்களில் தேனுண்ண மொய்த்திருந்த வண்டுகள் அசைய குளிர்ந்த நீரிலே அமிழ்ந்து நாம் நீராடுவோம்.

நீராடும்போதே நாம் எல்லோரும் சிற்றம்பலத்தின் சிறப்பைப் பாடுவோம். வேதங்களின் பொருளைப் பாடுவோம். அந்தப் பொருளாய் இருக்கின்ற சிவனைப் பாடுவோம். சிவனின் சோதிவடிவத்தின் சிறப்பைப் பாடுவோம். அவன் அணிந்தள்ள கொன்றை மலர் மாலையைப் பாடுவோம், அவனின் அனாதியான தன்மையைப் பாடுவோம், அந்தமற்ற உண்மையைப் பாடுவோம், நம்மையெல்லாம் நமது பக்குவ நிலைக்கு ஏற்றவகையில் வகைப்படுத்தி, நம்மை வளர்த்து எடுத்தவளான உமையம்மையின் திருவடிகளின் சிறப்பைப்பாடுவோம், (அவ்வாறெல்லாம் பாடிக்கொண்டே நீராடுவதை எண்ணிப்பார் பெண்ணே) என்று பாடிக்கொண்டே பெண்கள் எல்லோரும் நீராடுகின்றார்கள்.

காதார் குழையாடப் பைம்பூண் கனலாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய். (பாடல் இல: 14)

மலங்களிலிருந்த ஆன்மாக்கள் விடுதலையடையும்போது, திருவருட் சக்தியின் துணையினால் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கும் என்ற சைவசித்தாந்தக் கோட்பாட்டை இப்பாடல் நன்கு புரியவைக்கின்றது. அதனையே ‘பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்று மணிவாசகப் பெருமான் அழகாகக் குறிப்பிடுகின்றார்.


பாவைநோன்பிலே இருக்கும் பூவையர்கள் பொய்கையிலே நீராடி முடிந்து கரையேறுகிறார்கள். எல்லோரும் ஒன்றாகச் சேருகிறார்கள். இறைவன்புகழைப் பாடுகிறார்கள்.

‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்’

இறைவனே! எங்கள் தலைவனே! உனது கையிலிருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலம் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை நாங்கள் புதுப்பிப்பதாக நீ நினைத்துவிடுவாயோ என்று நாங்கள் அச்சப்படுகின்றோம். அதனால் எம்பெருமானே! உன்னிடம் நாங்கள் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம் கேட்பாயாக.

‘எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்குஅல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எம்கண் மற்றுஒன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்குஎம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கல்லோர் எம்பாவாய்’

உனது அடியார்களைத்தவிர வேறு எவருடைய தோள்களோடும் எங்கள் கொங்கைகள் சேரக்கூடாது அதாவது உன்னடியார்கள் அல்லாது வேறெவரும் எங்கள் கணவர்களாக வரக்கூடாது. உனக்கன்றி வேறு எவருக்கும் எங்கள் கைகள் எந்தப் பணிகளையும் செய்யக்கூடாது. இரவும் பகலும் உன்னையன்றி வேறெதையும் எற்கள் கண்கள் பார்க்கக் கூடாது. இவ்வாறெல்லாம் நடைபெற நீ எமக்கு அருள்புரிவாயென்றால், எந்தத் திசையில் சூரியன் உதித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை என்று இறைவனை நோக்கி வேண்டுகின்றார்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்குஅல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எம்கண் மற்றுஒன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்குஎம்கோன் நல்குதியேல்
எங்குஎழில்என் ஞாயிறு எமக்கல்லோர் எம்பாவாய். (பாடல் இல: 19)


இறைவன்மீது ஆன்மாக்களுக்கு இருக்கவேண்டிய பக்தியின் உறுதிப்பாடு இந்தப்பாடல்மூலம் அறிவுறுத்தப்படுகின்றது




திருவெம்பாவையின் உயிர்ப்பாடலாய் விளங்குவது அதன் இறுதிப் பாடலாகும். மெய்யடியார்கள் இறைவனின் திருவடிகளை அடைகின்ற பேரின்பத்தை அருளுமாறு அவனை வேண்டுகின்றனர். அந்த வேண்டுகோள் நிறைவேறுகின்றது. இறைவனின் திருவடிநீழலை அடைகின்ற பாக்கியம் கிடைக்கின்றது. அந்தப் பேரின்பத்தில் திளைத்திருக்கும்போது, தம்மை மறந்து இறைவனைப் போற்றுவதன்றி ஆன்மாக்களுக்கு வேறென்ன வேலை இருக்கப்போகின்றது?

‘போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்’

இறைவனே உன்னை வணங்குகின்றோம், எல்லாவற்றுக்கும் ஆதியான உனது மலர்ப்பாதங்கனைத் தந்தருள்வாயாக. எல்லாவற்றுக்கும் முடிவாகவுமுள்ள அந்தச் சிவந்த திருவடிகளை எமக்கு அருள்வாயாக.

‘போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொன்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூம்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்’

எல்லா உயிர்களும் தோற்றம்பெறுகின்ற உனது பொன்னடிகளுக்கு வணக்கம். எல்லா உயிர்களும் அனுபவிக்கும் போகங்களை அருளுகின்ற உன் மலரடிகளுக்கு வணக்கம். உல்லா உயிர்களுக்கும் முடிவாகவுள்ள உன் இணையடிகளுக்கு வணக்கம். திருமாலும், நான்முகனும் காண முடியாதவாறு மறைந்து நின்ற உன் திருவடித் தாமரைகளுக்கு வணக்கம். நாங்கள் உய்யும்வண்ணம் எங்களை ஆட்கொண்ட அருளுகின்ற உன் பொன்னடிகளுக்கு வணக்கம். வணங்கிக்கொண்டே நாம் எல்லோரும் மார்கழிநீராடுவோம்.

இந்த இறுதிப் பாடல் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்து தொழில்களையும் குறித்து இயம்புகின்றது.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொன்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூம்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். (பாடல் இல:20)



ஆன்மாக்கள் இறைவன்மீது அன்புகொண்டு, அவன் புகழைப் பாடிப் பரவிப் பணிந்து வணங்கினால் அவனருள் கிடைக்கப்பெறும். மும்மலங்கள் நீங்கப்பெறும். பிறவித்துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பேரின்பப் பெருவாழ்வாகிய வீடுபேறு கிடைக்கும் என்கின்ற சைவசித்தாந்தக் கோட்பாட்டினை இனிய பாடல்கள் மூலம் உணர்த்திநிற்பதே மணிவாசகப்பொருமானின் திருவெம்பாவை ஆகும். எனவே சிவனேசச் செல்வர்களே. திருவெம்பாவைக் காலத்தில் அதிகாலை வேளையில் திருவெம்பாவைப் பாடல்களை பக்திசிரத்தையோடு பாடிப்பரவி, இறைவனைப்பணிந்து உருகி, இவ்வுலகில் நீடித்த நல்வாழ்வும், மறுஉலகில் நிலைத்த பெருவாழ்வும் பெற்று உய்வோமாக. திருச்சிற்றம்பலம்.

No comments: