சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லியின் கோரிக்கை

.
சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்.நவீன துட்டகைமுனுவென அழைக்கப்படும் மகிந்த ராஜபக்ச அவர்களே, நீங்கள் உண்மையிலேயே அந்த பெருமையை உங்கள் வசம் அணிந்துகொள்ளவேண்டுமெனில், வாழ்வில் சகலதையும் இழந்து அல்லல்படும் தமிழ்மக்களுக்கு வாழ வழி அமைத்துக்கொடுங்கள். இனியொரு இன்னல் இல்லாத தேசமாக இலங்கையை மாற்றிக்கொள்ளுங்கள்.


இவ்வாறு கிளிண்டன் மற்றும் ஒபாமா அரசுகளுக்கு தெற்காசிய விவகாரங்கள் மற்றும் குடிவரவு விடயங்களில் ஆலோசனை வழங்குபவரும் ஆசிய - அமெரிக்க நீதி அமைப்புக்களின் தலைவரும் சட்டத்தரணியுமான ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் அமெரிக்கா சென்ற மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதியிடம் தனது உரையில் நேரடியாக இந்த கோரிக்கையை விடுத்தார். அவர் அங்கு ஆற்றிய உரை வருமாறு-

மதிப்புக்குரிய சிறிலங்கா ஜனாதிபதி அவர்களே!

நான் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டவன். பத்து வயதில் கொழும்புக்கு வந்தேன். எனது மனைவி சாந்தியின் தந்தையார் சிறிலங்கா படைத்துறையில் கப்டனாக பதவி வகித்தவர். 1975 ஆம் ஆண்டு நான் சிறிலங்காவை விட்டு வெளியேறி வந்தேன்.

நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலப்பகுதியில் நான் அனுபவித்த சுகங்கள், கண்டு களித்த சௌபாக்கியங்கள் எண்ணிலடங்காதவை. அவை அனைத்துமே இழந்து விட்ட மண்ணாக எனது மக்கள் வலியையும் துக்கத்தையும் மரணத்துயரையும் அனுபவித்துக்கொண்டிருப்பதையே நான் வெளிநாடு வந்த நாள் முதல் கண்டுகொண்டிருக்கிறேன்.

வயல்வெளிகளை நனைப்பதற்கு பாய்ந்து வந்த மகாவலி நீர் இரத்த கலந்த நதியாக மாறியது. எனது மூதாதையர் பிறந்து வாழ்ந்து வளர்ந்த மண் நரக பூமியாக மாறியது.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே!

இன்று நீங்கள் போரை வென்ற பெருவீரனாக வலம் வருகிறீர்கள். உங்களை எல்லோரும் நவீன துட்டகைமுனு என்று அழைக்கிறார்கள். சிறுவர்கள் எதிர்காலத்தில் உங்களை வரலாறாக படிக்கப்போகிறார்கள். ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் துட்டகைமுனு சார்ந்த மக்களில் ஒருவர். நான் அவன் சமர் புரிந்த எல்லாள மன்னன் சார்ந்த மக்களில் ஒருவன். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் நடந்த சமரில் துட்டகைமுனு வெற்றி பெற்றான் என்பது ஒரு செய்தி.

மற்றைய செய்தி யாதென்று உங்களுக்கு தெரிந்திருக்கும். தான் போரில் வென்ற எல்லாள மன்னனுக்கு சமாதி எழுப்பிய துட்டகைமுனு, அந்த நினைவாலயப்பகுதியை கடந்து செல்பவர்கள், ஒரு கணம் அந்த இடத்தில் தரித்து அதற்கு வணக்கம் செலுத்தி செல்லவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தான்.

இன்று இந்த துட்டகைமுனுவுக்கு உங்களை ஒப்பிட்டு உருவகிக்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே அந்த பெருமையான பெயரை உங்களில் பதித்துக்கொள்ளவேண்டுமெனில் நாட்டை கட்டியெழுப்புங்கள். 56 ஆம் ஆண்டில் இடம்பெற்றது போன்ற கசப்பான சம்பவங்கள் இனியும் இடம்பெறுவதற்கு அனுமதியாதீர்கள். தமிழ் இளையவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கபடுவதை தடுக்காதீர்கள். தமிழ் மக்களை தாங்கள் நாட்டின் இரண்டாம் தர பிரஜைகள் என்று எண்ணும் வகையில் நடத்திவிடாதீர்கள்.

ஒரு விடயத்தை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் மக்களுக்கு அவர்களது மொழி கடவுளுக்கு சமனானது.

அவர்கள் இன்று எதுவுமற்றவர்களாக பசி பட்டினியுடன் வாழ இடம் கோரி நிற்கிறார்கள். அது அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நம்பிக்கையையும் அதிகாரத்தையும் பெற்ற தலைவராக இன்று நீங்கள் பதவியில் உள்ளீர்கள். நீங்கள் கேட்பதை இன்று எவரும் மறுக்கமுடியாது. அவ்வளவு சக்தி படைத்தவராக நீங்கள் உள்ளீர்கள்.

வெறுப்பினை வெறுப்பினால் களைய முடியாது. அன்பினால் மட்டுமே களையமுடியும் என்ற புத்த பெருமானின் வாக்குக்கு இணங்க ஆட்சி நடத்தி நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தி தமிழ்மக்களின் மனங்களை வெற்றி கொள்ளுங்கள்.

இங்கிருந்து நாடு திரும்பும் முன்னர் எனக்கு சில உறுதிமொழிகளை தந்துவிட்டு செல்லுங்கள்.

நான் பிறந்த மண்ணில் - நாளை பாடசாலை செல்லும் பத்துவயது சிறுவனின் வெள்ளை மேலாடையில் ஜம்பு பழத்தின் சிவப்பு சாறை தவிர வேறு எந்த கறையும் இருக்கக்கூடாது.

காலை காகங்கள் பலாப்பழத்தை கொத்துவதை தவிர வேறெதையும் கொத்துவதற்கு தங்களது வாயை திறக்கக்கூடாது.

பழமரங்களில் பழங்களை தவிர வேறெதுவும் தொங்கக்கூடாது.
என்றார்.

நன்றி பூராயம்

1 comment:

kirrukan said...

[quote]ஆசிய - அமெரிக்க நீதி அமைப்புக்களின் தலைவரும் சட்டத்தரணியுமான ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்[/quote]
அப்ப ஒபாமாவின் சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லி சொல்லுகிறார் மகிந்தா செய்தது சரி என்று.ஆசியாவின் நீதித்துறை ஆலோசகர் துட்டகேமுனு வின் நீதி நல்ல நீதி அதை சர்வதேசம் எங்கும் அமேரிக்கா மூலம் பரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார் போலும்அதுசரி யாழ்ப்பாணத்தில ஜம்பு அதிகமாக இருக்கோ ,நாவல் பழம் அதிகமாக இருக்கோ?இல்லை அண்ணே ஜம்பு பழம் அதிகம் சாப்பிட்டிருக்கிறார் போலகிடக்குது