ஆன்மீகம்

.

மதுரகவி  ஆழ்வார்


வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள். கடந்த வாரம் நம்மாழ்வரை பற்றி பார்த்தோம், இந்த வாரம் அவர் சீடரான மதுர கவி ஆழ்வாரை பற்றி பார்ப்போம். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாருக்கோ  எல்லாம் நம்மாழ்வரே. பகவத் பக்தி கூட வந்து விடுமாம்,  ஆனால் பாகவத பக்தி  வருவது மிகவும் கடினம்.  பகவத் பக்தியை காட்டிலும் பாகவத பக்தி மிகவும் உயர்ந்தது என்று கண்ணனே தன் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் .
மதுரகவி ஆழ்வார்  கருடனின்  அவதாரம் ஆவர். மதுரகவி ஆழ்வார் திருக்கோலூர் என்னும் திவ்ய தேசத்தில் எப்போதும் பகவானையே கொண்டாடும் ஒரு பிராமண குலத்தில் அவதரித்தார்.  இவர் வேதங்கள் அனைத்தையும் தெளிவுற கற்று தேர்ந்தார். மதுர கவி ஆழ்வார் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிக்க புலமை படைத்தவர்.  
இவர் தன் கல்வியெல்லாம் முடிந்த பின் வட இந்தியாவில் உள்ள அயோத்தியில் ராமபிரானை தரிசித்த பின்னர் மாலை போதில்  தென் திசை நோக்கி வரும் போது ஒரு புதிய ஜோதியை கண்டு ஆச்சரியம் அடைந்தார்,  பின் அவர் தென் நாட்டில் உள்ள பல திவ்ய திருப்பதிகளை ( திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சசோலை, திருவில்லிபுத்தூர் )ஆகிய திவ்ய தேசங்களை தரிசித்து கொண்டு திருகுருகூர்  அடைந்தார், பின் அங்கு தவம் புரிந்து வந்த நம்மாழ்வாரிடம் கேட்ட கேள்வி, அதர்க்கு நம்மாழ்வார் அளித்த பதில் எல்லாம் சென்ற வாரம் பார்த்தோம்.

இவர் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் 11 திவ்ய பிரபந்த  பாசுரங்களை இனிய தமிழ் பாடல்களாக பாடி கொடுத்து உள்ளார்.  இது அவரது  ஆச்சரியனான  நம்மாழ்வரை மேல் உள்ள பக்தியை காட்டும் பாடல்கள் ஆகும். இவர் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த உடன் மிகவும் கலங்கி அந்த பகவானிடம் தன்னையும் ஏற்று கொள்ளும் படி வேண்டினார். அந்த பகவன் ஸ்ரீமன் நாராயணன் மதுர கவியை தேற்றி, அவரிடம்
நம்மாழ்வரை அர்ச்ச  ரூபமாக  எழுந்தருள செய்து தினம் தோறும் பூஜை செய்து காலம் தவறாமல் திருவிழாக்கள்  நடத்தி, திவ்ய பிரபந்ததை எல்லோருக்கும்  முறை படி கற்று கொடுத்து உலக மக்கள் உய்ய வழி  காட்டிய பின் தன்னை  அடைய வேண்டும் என்று பணித்தார்..
மதுர கவி ஆழ்வாரும் பகவானின் ஆணையை சிரமேற்கொண்டு  தன்  குருவான நம்மாழ்வாரின்   அர்ச்சா ரூபம் ஏற்படுத்தி பகவானின்  கட்டளைக்கு இணங்கி திவ்ய பிரபந்த பாசுரங்களை  பாகவதர்களிடையே  நாம சங்கீர்த்தனம் செய்து  பரப்பி விட்டு பல காலம் வாழ்ந்து விட்டு அந்த பகவான் திருவடி அடைந்தார்.
தன் குருவே தனக்கு எல்லாம் என்று இருந்த இவரது வாழ்க்கையில் இருந்து உண்மையான பாகவத பக்தியை நாம் காற்று கொள்ள வேண்டும். பகவானை காட்டிலும் பகவத பக்தியே உயர்ந்தது என்று எல்லோரும் உணர வேண்டும்.
அத்தகய  உயர்ந்த மதுர கவி ஆழ்வாரின் திருவடிகளே சரணம்.

என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: