இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 11

.
தனக்கு ஆதரவாக இருந்த முக்குவர்களின் தலைவர்களுக்கு மட்டக்களப்பு தேசத்து வன்னிப்பற்றுக்கள் பலவற்றில் வன்னிபம் என்னும் பதவியை மாகன் வழங்கினான். பொலன்னறுவை நகரத்தை மட்டக்களப்புத் தமிழர் தாப்பாவை என்று குறிப்பிட்டனர். தாப்பாவையில் இருந்து சென்ற மாகன் மண்முனையில் மாளிகையும் அரணும் அமைத்து சுகதிரன் என்பவனிடம் வழங்கினான் என்றும் அவனுக்குப் பட்டம் சூட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டக்களப்புச் சமுதாயத்தினரின் குடிமுறைப் பாகுபாட்டையும் ஆலயங்களையும் மாகன் உருவாக்கினான் என்ற


ஐதிகம் பூர்வ சரித்திரத்தில் அழுத்தம் பெற்றுள்ளது. அங்கு வீர சைவம் அவனது காலத்திற் பரவியது என்பதும் கொக்கட்டிச்சோலைக் கோயில் வீரசைவர்களின் தலமாக மாற்றியமைக்கப்பட்டமையினையும் அந்நூலில் காணப்படும் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது.

கலிங்கமாகனது ஆட்சியின் முடிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை மகாவம்சத்தின் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. 1247ஆம் ஆண்டில் சாவகன் சந்திரபானு இலங்கை மீது படை எடுத்து வந்து இரண்டாம் பராக்கிரமபாகுவின் இராச்சியத்தைத் தாக்கினான். அவனது படைகள் அதிசூரர்களாக விளங்கினார்கள் என்றும் நச்சு அம்புகளைப் பயன்படுத்தினார்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. பராக்கிரமபாகுவின் குமாரனாகிய விஜயபாகுவும் மருமகனாகிய வீரபாகுவும் மிகுந்த பிரயத்தனங்களின் பயனாக சாவகவாகனை தோற்கடித்தார்கள். ஆயினும் சாவகன் இலங்கையின் வடபுலத்திலே தளம் அமைத்து நிலைகொண்டிருந்தான்.

மாகனுடைய ஆட்சியின் முடிவுக்கும் சந்திரபானுவின் படையெடுப்புக்கும் இடையில் ஏதோ தொடர்பிருக்க வேண்டும். சந்திரபானு வடக்கிலும் வடகிழக்கிலும் உள்ள தமிழ்ப் பிரதேசங்களை கைப்பற்றிவிட்டான். பாண்டியர்கள் அவனை வென்று அவனிடமிருந்து திறைபெற்றார்கள். காலப்போக்கில் அவன் வலிமை பெற்று மீண்டும் ஒருமுறை தென்னிலங்கை மீது படையெடுத்துச் சென்றான். புத்தர் பெருமானின் பிச்சாப் பாத்திரத்தையும் தந்தத்தையும் அவற்றோடு இலங்கா தீபத்தின் ஆட்சி அதிகாரத்தையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு சந்திரபானு, பராக்கிரமபாகுவிடம் ஆணையிட்டான். யாப்பாகூவா வரை அவன் முன்னேறியிருந்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

இருசாராருக்கும் இடையில் ஏற்பட்ட போரிலே தென்னிலங்கை இராஜகுமாரர்கள் பெருவெற்றி பெற்றுச் சாவகனது பலத்தை அழித்தார்கள் என்று மகாவம்சவம் பாராட்டுகின்றது. ஆனால், பாண்டியரின் சாசனங்கள் மூலம் இலங்கையின் வடபகுதியிலேயே சந்திரபானு ஆட்சி அதிகாரம் செலுத்தியிருந்தான் என்ற வேறு ஒரு பரிமாணம் பெறுகிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் (1253 தொடக்கம் 1271) ஜடாவர்மன் வீரபாண்டியன் ஆகியோரின் மெய்கீர்த்திகல் சாவகராஜன் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அவன் இலங்கையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அதனைத் தனது இராச்சியமாக அமைத்துக் கொண்டான் என்றும் ஒரு சமயத்தில் பாண்டியனுடைய மேலதிகாரத்தை ஒப்புக்கொண்டு திறை செலுத்தினான் என அவற்றின் மூலம் அறிய முடிகின்றது.

தனது ஆதிக்கத்தை அங்கே பலமாக நிலைநாட்டிய பின்பு திறை செலுத்த மறுத்துப் பாண்டியர்களை எதிர்க்கத் தலைப்பட்டான். அதன் காரணமாக சுந்தரபாண்டியனின் சகோதரனும் துணை அரசுனுமாகிய வீரபாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான். இதனால் ஏற்பட்ட போரிலே சந்திரபானு மடிந்தான். ஆயினும் அவனது மகன் பாண்டியனுக்குப் பணிந்து தந்தையின் இராசதானியை தனக்கு அளிக்குமாறு வேண்டினான். அவனுக்கு அரசனின் அதிகாரத்தையும் சின்னங்களையும் வீரபாண்டியன் வழங்கினான். போரின் முடிவிலே திருக்கோணமலைக்குச் சென்று அங்கே திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு ஆற்றிவிட்டு, திரிகூடகிரியிலும் கோணவரையிலும் பாண்டியரின் சின்னங்களான இணைகயல் வடிவங்களைப் பொறித்து விட்டுத் தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றான். சாவகர்கள் நாணயங்களை வழங்கினார்கள் என்று அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவருகின்றது.

வடஇலங்கையில் சாவகர் என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட நாணயங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன.பின்புறத்திலே காளையினுடைய வடிவம் காணப்படுகின்றது. வீரபாண்டியனின் படையெடுப்பின் விளைவாக வட இலங்கையிலுள்ள இராசதானிகள் மீது பாண்டியரின் மேலாதிக்கம் உறுதியாக ஏற்பட்டுவிட்டது என்பதை அறிய முடிகிறது.முதலாம் புவனேகபாகுவின் ஆட்சியில் 1271ஆம் ஆண்டளவில் காலிங்க ராயன், சோழகங்கன் எனும் இரு பாண்டியப் பிரதானிகள் இலங்கை மீது படையெடுத்து வந்தார்கள். அப்படையெடுப்பு நிகழ்ந்தபோது வடமத்திய பகுதியில் வன்னியர்கள் பலர் அரசனுக்கு எதிராக கிளர்ச்சி புரிந்தனர் என்று சொல்லப்படுகின்றது. ஆயினும் பாண்டியப் படைகளைப் புவனேகபாகுவினால் துரத்திவிட முடிந்தது. பாண்டிய சேனாதிபதிகள் வடகிழக்கிற் சென்று அங்கு பாண்டியனின் ஆதிபத்தியத்தை மேலும் வலுவடையச் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

திருகோணமலை கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சமஸ்கிருத சாசனம் ஒன்று தேவசிறி சோழகங்க என்னும் பிரதானியொருவனை வர்ணிக்கிறது. துண்டமான அச்சாசனம் கோகர்ணத்தில் அவன் புஷ்பக்கிரியை செய்தான் என்று குறிப்பிடுகிறது.முன்னர் படையெடுத்து வந்த பாண்டிய சேனாதிபதியாகிய சோழகங்க தேவனையே இச்சாசனம் குறிப்பிடுகின்றது என்று கொள்வதற்கு வலுவுடைய ஆதாரங்கள் உள்ளன.குளக்கோட்டன் பற்றிய சாசனங்கள் சில அம்சங்களிற் பாண்டியரின் மேலாதிக்கத்துடன் தொடர்புடையனவாகும்.

மடவெல என்னும் இடத்தில் உள்ள சாசனம் ஒன்று மாத்தாண்டப் பெருமாள் என்பவனுக்கும் விக்கிரமபாகு என்பவனுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையினைக் குறிப்பிடுகிறது. அது பின்வரும் விடயங்களில் சேகரிக்கப்படும் திறை பற்றி குறிப்பிடுகிறது. மாத்தாண்டப் பெருமாள் திறை சேகரிக்கப்பதற்கு பிராமணர் பலரை நியமித்தான். மார்த்தாண்ட சிங்கையாரியன் என்ற பெயரை 'யாழ்ப்பாண வைபவ மாலை' குறிப்பிடுகின்றது.

தொடரும்

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: