பகவத் கீதை - மரணம் என்றால் என்ன?





ஹரே கிருஷ்ணா!


அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் இந்த இணைய ஆசிரியர் மதுர மகாதேவ் அவர்களின் மைத்துனி காலமானார். மேலும் சிலர் காலமான செய்தியினைப் படித்தேன். அதனால் இந்த வாரம் மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? இந்த கேள்விகள் குறித்து ஆராயலாம் என்று முடிவு செய்தேன். இந்த வாரக் கட்டுரையை இந்த இணைய தளத்தில் வெளியான, சமீபத்தில் காலமான அனைவரின் சார்பிலும் பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

மரணம் என்றால் என்ன? அநேகமாக நம்மில் அனைவருக்குமே "மரணம்" என்ற சொல்லைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது. சிலருக்கு தங்கள் மரணம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும், தங்களுடைய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினரின் மரணம் குறித்து பயம் ஏற்படுகிறது. ஆக மரணம் என்பது நாம் விரும்பாத ஒரு சொல். இதை யாரும் மறுக்கவே முடியாது. ஒருவர் மரணம் அடைந்த பின்பு எங்கே போகிறார்? இந்த கேள்வியை நான் சிறுவனாக இருந்த போது பிரபல மருத்துவரான என் அன்னையிடம் கேட்டேன். "அதிகப்பிரசங்கியாகப் பேசாதே!" என்று பதில் கிடைத்தது. அதனால் நானே எனது அறிவை வைத்து புரிந்து கொள்ள முற்பட்டேன். ஒருவர் இறந்த பின்பு அவர் கடவுள் ஆகி விடுவார் போலும். அதனால் தான் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்குகிறார்கள் என்று நானே முடிவு செய்தேன். இறந்த ஒருவரின் படம் முன்னால் நின்று வேண்டினால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்று கூட எனது நண்பர்கள் கூறக்கேட்ட நினைவும் இருக்கிறது.

பிறகு என்னுடைய சிறு அறிவு வளர வளர நானே புரிந்து கொண்டேன். மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பிவராத இடம் ஒன்றிக்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத கஷ்டத்தை அளிக்கிறது. ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி - அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விஷயம். ஆனால் யாரும் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று புரிந்தது. இன்னும் சற்று ஆராய்ந்தபோது இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்தவரும் ஒரு நாள் மரணிக்கிறார். கெட்டவரும் மரணிக்கிறார். இறந்த பின்பு அனைவரும் கடவுள் என்றால் ஒருவர் நல்லவராக வாழ்ந்ததற்கு அர்த்தமே கிடையாது. அனைவரும் அவரவர் விருப்பப்படி தவறாக வாழலாமே! ஒரு வேலை அப்படி நடந்தால் இந்த சமுதாயமே சீர்கெட்டு நிலைகுலைந்து விடும். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும். இதுதான் நாம் அனைவரும் புரிந்து கொண்ட உலக நெறி. அதனால் ஒருவர் இறந்த பின்பு கடவுள் ஆகிறார் என்ற பிரபலமான கூற்று தவறு என்று புரிந்தது. ஆனால் இறந்த பின்பு என்ன நடக்கிறது என்ற இந்த கேள்வி மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.

அதைப் போலவே ஒருவர் குழந்தையாக பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தார்? இறப்பு எவ்வளவு புதிரான ஒரு விஷயமோ அது போலவே பிறப்பும் ஒரு புதிரான விஷயம். சமுதாயத்தில் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு? ஒரு குழந்தை செல்வந்தருக்கு செல்வ மகனாக பிறக்கிறது. மற்றொரு குழந்தை ஏழைக் குடிசையில் மூன்று வேளை உணவு இல்லாமல் பிறக்கிறது. சில குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறது. வேறு சில குழந்தை ஆரோக்கியம் இல்லாமல் சில நேரங்களில் ஊனமாக கூட பிறக்கிறது. கஷ்டம் என்பது யாரும் விரும்பி பெரும் ஒரு விஷயம் அல்லவே. நாம் யாரும் கஷ்டத்தை விரும்பி ஏற்பது கிடையாது. ஆனாலும் கஷ்டம் எதாவது நமக்கு வந்தால், நாம் முன்பு செய்த தவறான ஒரு விஷயத்தின் பலன் என்று நமக்கு சுலபமாகப் புலப்படும். ஆனால் பிறக்கும் ஒரு குழந்தை அப்படி என்ன ஒரு பெரிய தவறு செய்திருக்க முடியும்? கேட்டேன் பலரிடம். பதில் கிடைக்கவில்லை. "உனக்கு என்றாவது பதில் கிடைத்தால் என்னிடம் கூறு" என்று பல நண்பர்கள் கூறினர். அந்த வாக்கினைக் காப்பாற்றுகிறேன் இப்பொழுது!

பிறப்பு, இறப்பு - இந்த இரு விஷயங்களுக்கும் நம்முடைய சிறு அறிவைக்கொண்டு ஆதரப்பூர்வமான பதில் தேட முடியாது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆகவே வேதத்தின் சாரமான, பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். பிறப்பு என்றால் என்ன? இறப்பு என்றால் என்ன? பதில் இதோ...
தேஹினோ' ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹான்தரப் ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
பகவத் கீதை 2.13

மொழிபெயர்ப்பு: "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"





சில வாரங்களுக்கு முன்பு நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா என்று புரிந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். மேலே இருக்கும் படத்தினை சற்று கூர்ந்து கவனியுங்கள். இந்த படத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் உடலில் ஒரு ஒளிப்பிலம்பான ஆத்மா உள்ளது. பிறகு அந்த ஆத்மா குழந்தை உடலை விட்டு சிறுவன் உடலுக்குச் செல்கிறது. பிறகு அந்த ஆத்மா சிறுவனின் உடலை விட்டு இளைஞனின் உடலுக்கு செல்கிறது. பிறகு முதியவரின் உடலுக்குச் செல்கிறது. பிறகு அந்த முதியவர் இறக்கிறார். அதற்கு பின்பு அந்த முதியவரின் உடலை விட்டு அந்த ஆத்மா வேறு ஒரு குழந்தையின் உடலுக்கு சென்று தன்னுடைய அடுத்த பிறவியை ஆரம்பிக்கிறது. ஆக மரணம் என்பது ஆத்மா ஒரு உடலை விட்டு மற்றொரு உடலிற்குச் செல்லும் ஒரு சம்பவம். அவ்வளவே! மரணம் என்பது ஒரு புதிய ஆரம்பம். ஆத்மா ஒரு உடலில் தங்கி இருக்கும் அந்த காலகட்டத்தைத் தான் நாம் பிறவி என்கிறோம். ஆத்மா ஒரு பிறவியில் மேற்கொள்ளும் நல்ல மற்றும் தீய செயல்களைப் பொருத்துதான் அந்த ஆத்மாவிற்கு அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் பிறப்பில் நாம் எற்றத்தால்வினைக் காண்கிறோம். நம் வாழ்க்கையில் நடக்கும் நிறைய துன்பங்கள் ஏன் ஏற்படுகிறது என்று இப்பொழுது நமக்கு புரியும். "நான் யாருக்கும் தீங்கு விளைவித்ததே இல்லை. இருந்தாலும் எனக்கு நிறைய கஷ்டம் வருகிறது" என்று பலர் கூறக் கேட்டு இருக்கிறோம். இதற்கான பதில் உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

"ஆத்மாவுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. ஒருமுறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற , நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை"

- பகவத் கீதை 2.20

ஆக ஆத்மாவான நமக்கு அழிவே கிடையாது. ஆத்மா நம்முடைய கண்ணுக்கு தெரியாது. அதனால் ஆத்மா கிடையவே கிடையாது என்று கூற முடியாது. X-ray எனப்படும் கதிரலை கூட கண்ணுக்குத் தெரியாது. அதனால் X-ray என்று ஒரு கதிர் இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. X-ray கண்ணுக்கு புலப்படவில்லை என்றாலும், அந்த கதிரை ஒருவருடைய உடலில் பாய்ச்சி X-ray sheet மூலம் அந்த கதிரின் இருப்பினை அறியலாம். அது போல ஆத்மா நம்முடைய கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும், ஒரு உடலில் ஆத்மா உள்ளதா இல்லையா என்று அந்த உடலின் இரு தன்மைகளை வைத்து அறியலாம் - வளர்ச்சி(growth) மற்றும் உணர்ச்சி(consciousness). இவ்வாறு ஆத்மா குறித்து நிரூபணமாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு பழைய கார்(car) ஒன்றை விட்டு புதிய கார் ஒன்றை வாங்கினால் நாம் கவலைப்படுவோமா என்ன? கிடையாது. மிகவும் மகிழ்ச்சியுறுவோம். ஆனால் மரணம் என்ற ஒரு நிகழ்வினால் ஒரு பழைய உடலை விட்டு புதிய உடலை பெரும்பொழுது மட்டும் எதற்காக துக்கப்படுகிறோம்? நாம் இந்த உடல் என்று நினைத்துக் கொண்டிருகிறோம். அதனால் மரணம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பயம் கொண்டு அழுகிறோம், துடிக்கிறோம். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார். நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்த ஒரு உண்மை புரிந்தால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு துன்பமும் வராது. ஆனால் இந்த ஒரு உண்மையை புரிந்து கொள்ள மறந்தால் வாழ்க்கையில் துன்பம் மட்டும் தான் மிஞ்சும். நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா என்ற ஒரு உண்மையை முற்றிலுமாக உணர நாம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!

அதெல்லாம் சரி. நாம் இந்த உடல் அல்ல. நாம் ஒரு ஆத்மா தான். ஆனால் இந்த ஆத்மா இப்படியே பிறந்து பிறகு இறந்து பிறகு மறுபடியும் பிறந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன? இப்படியே நாம் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தானா? - என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இது குறித்து நாம் கூடிய விரைவில் ஆராய்வோம்.

வழக்கம் போல உங்களுடைய சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்கத் தவறாதீர்கள்.

என்றும் அன்புடன்,

கனஷியாம் கோவிந்த தாஸ்

4 comments:

Anonymous said...

Ghanashayam - Thanks for the beautiful explanation. My belief is that pain is not due to death alone but also in living this life. Please write more about moralities, Chanting and other words of wisdom and currently regretting that I missed few of your Columns due to procastination.

Best Wishes
Venkat VS

Anonymous said...

தம்பி கணெஷியாம் அய்யா அவர்களே

கரந்த பால் மதி புகா

உடைந்த சங்கில் ஓசை புகா

பிரிந்த உயிர் மீண்டும் உடல் புகா புகா அதுவே !!

-- ஆத்மபோதா நிர்லிப்தாநந்தா
சாத்தர்லாண்ட்

Unknown said...

Hi Venkat,
Thanks for your comment. Yes, for almost everyone pain is both in life and death. Unless we know the secret behind the purpose of life, it is very hard to lead a meaningful and content life. Unless you know the destination, you cannot travel in the correct path. Can you? Similarly unless we know where we want to go after death, we cannot lead the life in the correct path. Please keep reading these articles as I humbly attempt to repeat the profound words of ISKCON Founder Acharya His Divine Grace AC Bhaktivedanta Swami Prabhupada regarding our spiritual lives.

Thank you very much.


Anbudan
Ghanashyam

ganesan said...

அனைத்தும் உண்மையே.மரணத்தை வெல்ல முடியும் அது மிக எளிது .மரணம் என்றால் என்ன ம+ரணம் ரணம் என்றால் வலி மிகப்பெரிய வலியே மரணம். அந்த மரணத்தை வெல்லும் இடமே புதுக்கோட்டை யில் உள்ள மெய்வழிச்சாலை அங்கு மனிதர்கள் யாரும்கொடிய மரணத்தில் இறப்பதில்லை பின்பு பிறப்பதுமில்லை அவர்கள் முக்தி அடைந்து ஜீவசமாதி ஆகிறார்கள் எனது நண்பரும் உறுதிபடுத்தி மெய்வழிச்சாலையில் இணைந்துள்ளார் நானும் செல்ல திட்டமிட்டுள்ளேன்.எம்மதமும் சாதியும் இணையலாம். உண்மையான இறைவனை உணரலாம்