இனியமாலைப் பொழுதில் ஒரு இசை வேள்வி

.

                                                                             திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்


சென்ற ஞாயிற்றுக்கிழமை 18 – 04 – 2010 அன்று சிட்னி Silverwater Road Bahai Centre  மண்டபத்திலே அவுஸ்திரேலிய கம்பன் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இசைவேள்வி நிகழ்வு நடைபெற்றது. அதில் உலகப்புகழ் திரு ராஜேஸ் வைத்தியா அவர்களின் வீணைக்கச்சேரி அரங்கேறியது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் உள்ளடக்கி காலத்தால் அழியாத இலக்கியமாகக் கம்பன் காவியம் விளங்குகின்றது. கம்பன் பெயரால் இயங்கும் கம்பன் கழகம் அவுஸ்திரேலியாவில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது பெரிதும் மகிழ்வு தருவதாகும். கடந்த 4 ஆண்டுகளாக இசைவேள்வி என்ற நிகழ்வுகள் மூலம் சிறந்த இசை நிகழ்ச்சிகளை சிட்னி வாழ் கலா இரசிகர்களுக்கு அளித்து வருவது பெரிதும் போற்றுதற்குரியது.



இசைவேள்வி 2008 ல் ‘கலை மாமணி’ திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைநிகழ்ச்சி இடம் பெற்றது. இசைவேள்வி 2010ல் ‘காஞ்சி காமகோடி பீட ஆஸ்தானவித்வான் உலகப் புகழ் திரு ராஜேஷ் வைத்தியா அவர்களின் வீணை இசை நிகழ்வு அரங்கேறுவது தமிழ் இரசிகர்களுக்கு ஒரு பெரு விருந்தாகும்.

சுமார் 3 மணித்தியாலங்கட்கு மேலாக இடம் பெற்ற இந்நிகழ்ச்சியை இரசிகர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். தனக்கென வகுத்துக் கொண்ட ஒரு வித்தியாசமான பாணியில் வீணையை மீட்டினார். இலாவகமாகவும், மிகவேகமாகவும் வீணை நரம்புகளை மீட்டுவதில் இவருக்கு நிகர் இவர் என்றால் மிகையாகாது. தனது வீணை இசையால் இரசிகர்களின் மனதை முற்றும் ஆட்கொண்டார் எனலாம்.
சுலோகத்துடன் தொடங்கி ‘வாதாபி கணபதி’ என்ற ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த கீர்த்தனையுடன் கச்சேரி ஆரம்பமாகியது. அடுத்து இடம்பெற்ற ‘பண்டு ரீதி கொலோ’ என்ற தியாகராஜ கீர்த்தனையுடன் கச்சேரி மெருகேறத் தொடங்கியது. இதனையடுத்து ஸ்ரீ ராகத்தில் அமைந்த ‘எந்தரோ மஹானு பாவுலு’ என்ற தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனையில் கச்சேரி உச்சக்கட்டத்தை எட்டத்தொடங்கியது. ராஜேஷ் வைத்தியா அவர்கள் தன் வீணையிசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் எனலாம். அடுத்து கதனகுதூகலம் ராகத்தில் அமைந்த ‘ரகுவம்சஸதா’ என்ற தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனை அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. ராகம் தாளம் பல்லவி மூலம் வீணை நரம்புகளில் பல விநோதங்களை காட்டினார்.  ராஜேஷ் வைத்தியா அவர்கள் வாசித்த ராகங்களில் அநேகமானவை அபூர்வராகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இடைவேளையின் பின் பாரதி பாடல்களுடன் பல திரை இசைப் பாடல்களும் இடம் பெற்றமை அனைவருக்கும் விரும்பத்தக்கதாக அமைந்தது. காற்றினிலே வரும் கீதம், ஒரு நாள் போதுமா, துன்பம் நேர்கையில், என்ற பாடல்களும் குறையொன்றுமில்லை என்ற ராகமாலிகையும் ரசிகர்களின் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தன. அனைவரும் மெய்மறந்து அமர்ந்திருந்தனர். கச்சேரியின் இறுதியில் சம்பிரதாயப்படி தில்லானா இடம் பெற்றது.
உலகப் புகழ் ராஜேஷ் வைத்தியா அவர்கள் வீணை  நரம்புகளை மீட்டும்  வேகத்திற்கு  ஈடு கொடுத்து பக்கவாத்தியக் கலைஞர்களும் சிறப்பாக இசை வழங்கினார்கள்.  நா. மோகன்ராஜ் அவர்களின் மிருதங்க இசை, நா. சுப்பிரமணியன் அவர்களின் கடம், அத்துடன் உள்ளுர்க் கலைஞர்களில் ஜனகன் சுதந்திரராஜின் கஞ்சிரா, ஜெயராம் ஜெகதீசனின் மொர்சின்க் என்பன நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்தின எனலாம்.
இசைவேள்வி என்ற நிகழ்வுகள் மூலம் இத்தகைய உன்னத இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினருக்கு சிட்னி வாழ் ரசிகப் பெருமக்கள் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். மேலும் வெவ்வேறு  இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வார்கள் என் எதிர்பார்க்கலாம். அடுத்த நிகழ்வு இயல் துறை சார்ந்து அமைந்திருக்கும் என அறிகிறோம். கம்பன் கழகத்தைக் காப்பது தமிழ் ரசிகர்களின் கடமையாகும்.




அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வாழ்க

இசை வேள்வி வளர்க.












2 comments:

Anonymous said...

Music is very laud. I went to enjoy veena, but Rajesh played veena like rock music and gimmick. This is the main reason Rajesh is not popular in India. People know him in overseas because of his teli drama acting not because of his music.

Anonymous said...

டெலி டராமாவில வந்த கழுதை சிட்னியில் மேடை ஏறுவதாக இருந்தாலும் நாங்கள் பட்டு வேஷ்டி உடுத்து கொண்டு போவமல்ல