நான் ரசித்த திரைப்படம் " ஒரு குப்பை கதை" செ .பாஸ்கரன்

.


இந்த வாரம் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது தமிழ் திரைப்படங்களில் இப்படியான படங்கள் இடையிடையே வந்து போவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இந்தவாரம்தான் பார்த்தேன். ஒரு குப்பை கதை இதுதான் அந்தப் படத்தினுடைய தலைப்பு. தலைப்பை பார்த்துவிட்டு படத்தை பார்க்காமலேயே விட்டுவிடுவோம் என்று கூட எனக்கு எண்ணத் தோன்றியது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் எப்படி என் கண்ணில் இருந்து தப்பி போனது என்பது தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்த குப்பை கதையைத்தான் பார்ப்போமே என்று பார்க்க தொடங்கினேன்.

இந்த திரைப்படத்தை காளி ரங்கசாமி தனது முதலாவது திரைப்படமாக இயக்கியிருக்கிறார். இதனுடைய கதாநாயகனாக தினேஷ். தினேஷ் நாங்கள் டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பார்த்திருக்கிறோம் அவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வருகின்றார். உண்மையிலேயே அந்த கதைக்கு நாயகனாக தான் அவர் இருக்கின்றார். அதேபோல் மனிஷா யாதவ் அற்புதமான நடிப்பு மிக அருமையாக தன்னுடைய பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றார். ஒரு இளம்பெண் தன்னுடைய எதிர்காலத்தை பற்றி, தன்னுடைய கணவனை பற்றி எப்படி எப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டிருப்பார். அவளுக்கு கணவன் எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு கற்பனை இருந்துகொண்டிருக்கும். அதே போல் கதாநாயகனாக வருகின்ற இவனோ சேறும் சகதியும் உள்ள ஒரு இடத்திலே ஒரு குடிசையிலே வாழ்கின்றார், அவனுடைய மனக்கவலை எல்லாம் அவருக்கு யாரும் பெண் கொடுக்கின்றார்கள் இல்லை என்பதுதான். அவன் செய்கின்ற வேலை நகர சபையிலே குப்பை அள்ளுதல் , இதனால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை திருமணம் நடைபெறாமல் கவலையாக இருக்கின்றது. பின்பு தூரத்திலிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை பார்க்கின்றார்கள் பெண்ணுக்கும் அவனை பிடித்து விடுகின்றது திருமணத்திற்கு சம்மதிக்கிறார் தன்னுடைய வேலை என்னவென்று அவர் கூறவில்லை அவர்கள் கேட்கவில்லை ஆனால் திருமணத்திற்கு முன்பாக தனது மாமனாரிடம் அவன் கூறுகின்றான் தான் குப்பை அள்ழுகின்ற வேலையை செய்வதாக. அவரும் தன்னுடைய மகளிடம் இப்போது கூற வேண்டாம் தான் பக்குவமாக எடுத்து கூறுகின்றேன் என்று குறிப்பிடுகின்றார். திருமணம் நடைபெறுகின்றது.


பன்முக ஆற்றல் மிகுந்த கலைஞர் நடராஜசிவம்




எனது சிறுவயதில் அமரர் நடராஜசிவத்தின் விளம்பர அறிவிப்பைக் கேட்டு நாங்கள் எல்லாம் பிரமித்த நாட்களில்தான் எனக்கு அவர் முதன் முதல் அறிமுகம் ஆனார். அக்காலத்தில் எமது வகுப்பிலும் மாணவர்கள் அவர் சொல்வதைப் போல விளம்பரங்களைக் கூறி மகிழ்வார்கள். வர்த்தக அறிவித்தலுடன் மாத்திரமன்றி ‘செய்திகள் வாசிப்பவர் நடராஜசிவம்’ என்ற செய்திக்குரிய குரல் வசீகரமானது.
அவரிடம் பயின்ற பலர் இன்று சிறந்த அறிவிப்பாளர்களாக உள்ளனர். அவரது நடை என் நெஞ்சில் நின்றாடுகிறது. அந்தப் பார்வைகள் கண்களில் வந்து திரிகின்றன. நான் அவருடன் பணியாற்றியதில்லை. ஆனால் ரூபவாஹினியில் பணியாற்றிய காலங்களில் வானொலி நிலையத்துக்கு அலுவலாகப் போனால் குசலம் விசாரித்துக் கதைப்பார்.
என்னை அவருக்கு அறிமுகம் செய்தவர் அமரர் கே எஸ் பாலச்சந்திரன். வானொலி, ரூபவாஹினி இடைவளவில் வைத்து புதிதாக ரூபவாஹினிக்கு வந்துள்ளார் என அறிமுகம் செய்தார். அதற்குப் பின் என்னைக் காணும்போது தலையாட்டலும் சிலவேளை ஒரு பார்வையுமாகக் கடந்து செல்வார்.
அவரது முதற் சந்திப்பே என்னை அவருடன் இணைய வைத்தது.
ரூபவாஹினிக்கு நான் போன போது நான் தயாரித்த முதலாவது நிகழச்சிக்கு அப்துல் ஹமீத் குரல் வழங்கியிருந்தார். அச்சியல் தொடர்பான அந்த விவரண நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு ரூபவாஹினி வாசலுக்கு வந்து என்னை அழைத்துப் பாராட்டினார். அதற்கான பின்னணி இசை வி.நரசிம்மனுடையது. ‘அதனை எங்கு எடுத்தீர் ? ‘ என்று கேட்டார். அது குரல் பதிவு செய்ய முன் ஒத்திகை பார்த்த நேரம் ஹமீத் தாம் கொண்டுவருவதாகச் சொல்லிக் கொண்டு வந்தார் என்றேன்.
இசை அழகாக இருப்பது பற்றியும் பாராட்டி ஊக்குவித்தமையும்தான் அவரோடு ஏற்பட்ட முதல் அறிமுகம். அதற்குப் பிறகு காணும் போது ‘என்ன புதிய புரொடக்சன்’ என்று இடையிடையே கேட்பது மட்டுமே.

அகழ்வு - (கன்பரா யோகன்)


இலக்கியவாதிகள் செய்வது ஒரு வகையில் அகழ்வாராய்ச்சிதான் என்று ஒரு நன்கு அறியப்பட்ட ஒரு சொல்லாடல் இருக்கிறது.
மண்ணைக் கிண்டி தடயங்களைத்தேடி ஒரு வரலாற்றின், சமூகத்தின் அடையாளங்களை தொல்லியலாளர்கள் தேடியெடுப்பது போல இலக்கியவாதிகள் மன ஆழத்தில்  புதைந்து போயுள்ள நினைவுகளைக் கிண்டி எடுத்து  மனிதர்களை, நிகழ்வுகளை, இடங்களை மீண்டும் படைப்புகளில்  கொண்டுவந்து விடுகிறார்கள்.  அதனால்தான்  பல எழுத்தாளர்களுக்கு துல்லியமான நினைவாற்றல் படைப்புகளுக்கு பக்க பலமாயுள்ளது.

அண்மையில் பள்ளிக்கால நண்பர்கள்  குழுவொன்று  WhatsApp தொடர்புகளை ஏற்படுத்தியதில் எனக்கும் பழைய நினைவுகளை கிளறி எடுக்கும் வேலைக்கு நிறைய தேவையிருந்தது. கடந்த கொரோன காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பொழுதுகளில் இதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருந்தன.
மனதின் ஆழத்தில் பல நினைவுகள் இருந்தாலும்  நீர்க்குமிழிகள் போன்று அவற்றுள் ஒரு சில மட்டுமே அவ்வப்போது மேலெழுந்து பெரிதாகி வருகின்றன. இன்னும் பல நினைவுகள் ஆழத்திலேயே அமிழ்ந்து போய் விட்டன

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மெல்பேணிலுள்ள  பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தெய்வீகனுடன்  நான் வாழ்ந்த நவாலிக் கிராமத்தைப்பற்றியும் அவர்  வாழ்ந்த  மானிப்பாய்க் கிராமத்தை பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தபோதும் இதே அகழ்வு வேலையை செய்திருந்தோம்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 6 - வைராக்கியம் - சுந்தரதாஸ்

.



வைராக்கியம் தமிழ்த்திரையில் எம்ஜிஆர், சிவாஜி ,ஜெமினி மூவரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுடன் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்ந்தவர் இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன். ஏராளமான படங்களில் நடித்து ஒன்றிரண்டு படங்களையும் இயக்கிய இவருக்கு 1970 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இன்றி இருந்த இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் சந்தர்ப்பம் வைராக்கியம் படம் மூலம் கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தை பாலன் பிக்சர்ஸ் அதிபர் கே ஆர் பாலன் வழங்கினார், காரணம் பாலனும் எஸ் எஸ் ஆர் ரும் திராவிட முன்னேற்ற கழக அங்கத்தவர்கள் ஆவார்கள்.

இரட்டை கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக ஜெமினி நடித்தார் இவர்களுடன் நாகேஷ் படத்தில் பிரதான வேடத்தில் தோன்றினார். ஆலம், எஸ் எஸ் ஆரை முதன்மைப்படுத்திய படம் தயாரானது . ஊரில் கழைக்கூத்தாடியாக கயிற்றில் ஆடி வித்தைகள் செய்து பிழைப்பவன் முருகன் . வெகுளியான இவன் பிரபலம் அடைய வேண்டும் என்றும் பத்திரிகைகளில் தன் பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார், பொலிஸாரினால் எச்சரிக்கப்படுகிறான் . அவனுடைய தங்கை செல்வந்தரான ரங்கநாதனின் மகனை காதலிக்கிறாள், இக்காதலை முருகனும் ரங்கநாதநும் எதிர்க்கிறார்கள், இந்நிலையில் ஓர் இரவு ரங்கநாதன் படுகொலை செய்யப்படுகிறார்,கொலையை தானே செய்ததாக முருகன் கூற பொலிசார் அவன் ஒரு வெகுளி என நினைத்து அதனை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் முருகன் ஒரு வைராக்கியத்துடன் இயங்கியது பின்னரே தெரிய வருகிறது.


என் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை!

.

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், கவிப் பேரரசு வைரமுத்து தமது தமிழாற்றுப் படையில் இன்று உணர்ச்சிகர கவிதையை வாசித்து சிறப்பு செய்தார். அதில், கவிதை மட்டுமின்றி, கண்ணதாசனின் அரசியல் குறித்தும் பல விஷயங்களை பாசத்தோடு பகிர்ந்து கொண்டார் வைரமுத்து. 

இதோ நீங்களும், கவியரசர் பற்றிய கவிப் பேரரசின் வார்த்தைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு. இனி வைரமுத்துவின் வார்த்தைகள்: கவியரசர் கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. காலத்தின் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான், அது மொத்தம் விளங்கும். இந்த கட்டுரை அதன் ஒரு விரலையேனும் விலக்குமா பார்ப்போம்!

அறம் சார்ந்த சட்டங்களுக்குள் அவர் ஆணியடித்துக் கொண்டவர் அல்லர். அவர் பள்ளி இறுதியை தாண்டாதவரே. ஆனால் கல்லூரிகளெல்லாம், அவரை ஓடி ஓடி உரையாற்ற அழைத்தன. இந்தியாவின் சராசரி ஆயுளைவிட குறைவாக வாழ்ந்து 54 வயதில் உடல் மரணமுற்றவர்தான். 
ஆனால் 50 ஆண்டுகளாக ஆண்டவர் போன்ற பெரும் பிம்பம் அவருக்கு வாய்த்தது. எப்படி இது? மொழியே முதல் காரணம். தமிழில் இடையறாத மரபில் கவிஞனின் கற்பனை இழையோடிக் கிடக்கும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில், 4 சொற்களில் காவிரியின் 800 கி.மீ பயணத்தை எளிமையாக சொல்வார். இதே உத்தியை, பாசமலர் படத்தில் கண்ணதாசன் கையாளுகிறார்.

தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளை பெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள், பால் மணம் கண்டாள்.. என்று எழுதி 10 மாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார். 1960களில் தமிழக கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. எனவே இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே என்று ஐயமுற்ற பாவலன், "பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்" என்று விளக்க உரை கொடுக்கிறார். 

பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 1- கோசாணம்

.
கொங்கு ‘தேன்’வாசிக்கும் முன்...

திரைப்பட நடிகர், ஓவியர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் என பன்முக அவதாரமானவர் பன்முகக் கலைஞர் சிவகுமார். வசீகரிக்கும் யதார்த்தமான பேச்சு, எழுத்து, அதில் அவர் கையாளும் கொங்கு மண் மொழி லாவகம் பற்றி தன் வாழ்க்கை அனுபவங்களை அந்த மண்ணின் மொழியில் நமக்குச் சொல்கிறார்.
‘இது ராஜபாட்டை அல்ல’, ‘கம்பன் என் காதலன்’, ‘சிவகுமார் டைரி (1945-1975))’, ‘தமிழ் சினிமாவில் தமிழ், கங்காரு காலனி...’ என வரும் இவர் நூல்களும், இவர் சொற்பொழிவாற்றியிருக்கும் கம்ப ராமாயண, மகாபாரத இதிகாசங்களின் குறுந்தகடுகள், அதில் அப்பாத்திரங்களாகவே மாறி அவர் கதை சொல்லும் பாணி எல்லாவற்றுக்கும் மக்களிடம் வந்த பாராட்டுகளைச் சொல்லில் அடக்க முடியாது.
தற்போது ‘திருக்குறள் கதைகள்-100’ எழுதி மக்கள் முன் அரங்கேற்றம் செய்ய துடித்துக் கொண்டிருக்கும் இந்த மூத்த இளைஞர், கிடைத்த இந்த கரோனா இடைவெளியில் நம் 'இந்து தமிழ்திசை' இணையதள வாசகர்களுக்காக இந்த கொங்கு ‘தேன்’ எனும் அனுபவத் தொடர் காவியத்தைத் தர இசைந்துள்ளார்.

சிவலிங்கம் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


“தாயில் சிறந்த கோயிலும் இல்லைஎன்பது எமது மூத்தோர் வாக்கு. நாம் பிறந்ததில் இருந்து என்பது பெரியவராகும் வரை எமக்காக அன்னை பட்ட துன்பங்கள் தியாகங்கள் பல. இத்தகைய தாயை போற்றுவதற்காக வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி அதை Mothers Day எனக் கொண்டாடுவது மேற்கத்திய பண்பாடு. நாகரீக மேற்கத்திய நாகரீகத்தில் பெண்ணுக்கு முதல் இடம் கொடுப்பது ஒரு சம்பிரதாயம் ‘Ladies first’ ஒரு பெண்ணை ஆண், படிகளால் இறங்கும்போதோ அல்லது ஏறும் போதோ அவளை முன்னே விட்டு அவன் பிள்ளை போகவேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் உள்ளார்ந்த அர்த்தம் அவள் மெல்லியளாள். அவளை அவன் காப்பாற்ற வேண்டும் என்பதே.
ஆனால் பண்டைய சமுதாயம் உருவாகிய காலத்தில் தாயே குளுவின் தலைவியாக இருந்தாள். தாயாய் தலைவியாய் இருந்து பரிவாரத்தை நடத்தினாள். சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் தகப்பன் என்ற சொல் அர்த்தமற்றது. கணவன் மனைவி என்ற கட்டுக்கோப்பெல்லாம் அறியாத காலம். புதியதோர் உயிர் உருவாவதில் ஆணின் பங்கை அறியாத காலம். பெண் என்பவனோ புதியதோர் உயிரை தனக்குள் உருவாக்கி வளர்த்து உலகுக்கு அளிப்பவள். அன்றைய மக்கள் அதைக் கண்டு வியந்தார்கள். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனித சமுதாயம் மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். நோய் நொடியாலும் இயற்கையின் பாதிப்பாலும் அழிந்த காலம் அது. அதனால் மனித சமுதாயம் பல குழந்தைகளை வேண்டி நின்ற காலம் அது. பெரிய கூட்டமாக வாழ்வதே அவர்களின் பெலமாக கருதப்பட்டது. அதனால் குழந்தை பெற்றெடுக்கும் தாய் உயர் நிலையில் மதிக்கப்பட்டாள். அதனால் பராக்கிரமசாரியாக இருந்து, குளுக்களை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றியவள் தலைவியானாள். இது மனிதன் மனிதனாக வாளத் தொடங்குவதற்கு முற்பட்ட நிலை.

நடராஜ சிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது - கானா பிரபா


இரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.

வானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.
ஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும்
விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.

பெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் 
எமக்கெல்லாம் விளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.
கோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது. 

பண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.

அவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று


தினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்


காற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை  நடராஜசிவம்
என்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.




'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 01: -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-


லகு இறையின் படைப்பு.
காணப்படும் உலகைக் கொண்டு,
காணப்படா இறைவனைக் காண முயல்வது கற்றோர் வழமை.
காணப்படா இறைவனைக் காணப்புகுந்தார்,
தத்தம் ஆன்ம அனுபவத்திற்கேற்பவும், அறிவு விரிவிற்கேற்பவும்,
எல்லைப்படா இறைவனை எல்லைப்படுத்த முயன்று,
அவன் வடிவு இஃது எனவும்,
அவன் நாமம் இஃது எனவும்,
அவனை அடையும் வழி இஃது எனவும்,
தத்தம் தரிசனத்திற்கேற்ப புதிய புதிய நெறிகளைச் சமைத்தனர்.
அந்நெறிகள் ஒவ்வொன்றும் அவர்களைப் பின்பற்றுவோரால்,
புதிய சமயங்களாய் உலகில் பதிவாக்கப்பட்டன.
இவ்வுலகில் சமயங்கள் பல்கிப் பெருகியதற்காம் காரணம் இதுவேயாம்.
🦢 🦢 🦢 🦢

கண்ணதாசனைக் கொண்டாடுவோம் இணையப் பெருவெளியில் ஆத்மார்த்தமானதொரு படைப்பு - கானா பிரபா


ஆஸ்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் வழங்கிய கவியரசு கண்ணதாசனின் 93 ஆவதுபிறந்த நாள் பெரு நிகழ்வு இணைய வான் பரப்பில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி வெகு சிறப்பாகஅரங்கேறியது

கலைமாமணி இசைக்கவி இரமணன் அவர்கள் கண்ணதாசன் பாடல்களில் வாழும் 
இலக்கியச் சிறப்பு, கவி நயம், வாழ்வியல் தத்துவங்கள் இவற்றையெல்லாம் தெள்ளு தமிழில் பேசி, தேமதுரக் குரலில் பாடி வெகு அழகானதொரு பிறந்த நாள் பரிசைப் படைத்தார்.

இந்த நிகழ்வை ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு அனகன் பாபு, மற்றும் செயலாளர் திரு கர்ணன் ஆகியோத் திறம்பட ஒருங்கமைத்து Facebook மற்றும் YouTube ஆகியதளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தனர். சிட்னியில் வாழும் வானொலி ஊடகர் திரு கானா பிரபாநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊடக அனுசரணையாளர்களாக தமிழகத்தின் முன்னணி நாளேடு தினமலர் நாளிதழ் சமா காலத்தில் தம்தளத்தில் நேரஞ்சல் செய்ததோடு, புதியுகம் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் இணைந்து கொண்டனர்.

கடந்த 9 வருடங்களாகக் கலைக்கும் தமிழினதுக்கும் தன் செயற்பாட்டைக் காட்டும் இயக்கமாகவிளங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னி சித்திரைத் திருவிழா என்றபண்பாட்டுத் திருவிழாவை வருடம் தோறும் நாள் முழுக்காக் கொண்டாடி மகிழும் அதே வேளை இனியஇலக்கியச் சந்திப்பு, தமிழிசை நாட்டிய விழா போன்ற நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. 

தமிழரது பண்பாட்டு அடையாளமாம் தைப்பொங்கல் விழாவை நியூ சவுத்வேல் மாநிலப் பாராளுமன்றிலும்தலை நகர் கான்பராவில் விளங்கும் தேசியப் பாராளுமன்றிலும் விழா எடுத்து நம் பண்பாட்டுப்பெருமையை சக சமூகத்தினருக்கும் பறை சாற்றும் அமைப்பு,
மனித நேயப் பணிகளாக கஜா புயல்,சென்னை வெள்ள அனர்த்தம், ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ அனர்த்தம் உள்ளிட்ட பல இடர்களுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டித் துயர் துடைப்பு நிவாரணப்பணிகளை வழங்கியிருப்பது அதன் இன்னோர் முகம்.
கொரோனா காலத்தில் நம் தமிழக கிராமியக் கலைஞர்களுக்கான நல ஆதாரத்தை வேண்டி பாடகர்கள்ஆண்டனி தாசன், செந்தில், ராஜலட்சுமி ஜோடியோடு இணைந்து இணையவழி நிதி சேகரிப்பை நடத்திஅந்தப் பணத்தை உடன் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில் இணைய வழி வான் பரப்பில் சிறந்ததோர் படைப்பை வழங்க 
இசைக்கவி இரமணன் அவர்கள் மிகச் கச்சிதமான தேர்வாகத் தோன்றி, இணைந்த இரசிகர்களைமகிழ்ச்சியிலும், நெகிழ்விலுமாகக் கண்ணதாசன் பாடல்களின் அடியாழம் வரை சிலாகித்துப் பேசிஅருமையானதொரு படையலை வழங்கிச் சிறப்பித்தார்.
இன்னும் வேண்டும் என்று கேட்ட இரசிகர்களுக்கான கேள்வி நேரத்திலும் பன்முகப்பட்ட கேள்விகளுக்குமுகம் கொடுத்து இரமணன் அவர்கள் பொருத்தமான பதில்களோடு நிறைவாக்கியதுகுறிப்பிடத்தக்கதொரு விடயம்.


நிகழ்வின் காணொளிய பார்க்க



அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 20 – துத்திரி/துத்தேரி - சரவண பிரபு ராமமூர்த்தி


துத்திரி/துத்தேரி - ஊதுகருவி
துத்திரி ட்ரம்பட்டை ஒத்த வடிவம் கொண்ட பழந்தமிழர் இசைக்கருவி ஆகும். முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போலநீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது துத்திரி. வாய்வைத்து ஊதும் பகுதி முதல் புனல் வடிவ முடிவு பகுதி வரை சிறிது சிறிதாக சுற்றளவில் பெருகிக்கொண்டே செல்கிறது துத்திரி. ஊதுவதற்கு ஒற்றைத் துளையுள்ளது.

துத்திரியை சில பகுதிகளில் துத்தேரி என்று அழைக்கிறார்கள். துத்திரி பற்றிய குறிப்புகள் திருமுறைகளில் காணப்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்த பூரிகை மற்றும் வாங்காவின் வடிவமைப்பை ஒத்தது துத்திரி. சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. இக்கருவியில் இருந்தே நவீன இசைக்கருவிகளான் ட்ரம்பட் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது கோசை நகரான் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு சிவகுமார் அவர்களின் கருத்து. இந்த இசைக்கருவியின் ஒசை தனித்துவமாக இருப்பதாலும் மற்ற இசைக்கருவிகளுடன் சேர்ந்து இயைந்து போகாத தன்மையினாலும் துத்தேரி தமிழ்நாட்டில் ஒரு வசைச் சொல்லாக மாறிப்  போனது. இக்கருவியை பற்றிப் விசாரிக்க முற்பட்ட சேலத்து நண்பர் பெயரைக்  கேட்டவுடன் பதில் கூறாமலே தொலைபேசியை துண்டித்துவிட்டார். ஆனால் துத்திரி அப்படி ஒன்றும் தவறான சொல் அல்ல, பழம்பெருமையும் இனிமையான ஒசையுமுடைய ஒரு தொல் தமிழர் இசைக்கருவியாகும்.

துத்திரி இசை கருவியானது நாள்தோறும் கரூர் அருள்மிகு பசுபதீச்சரர் கோயிலில் இரவு பூசையின் பொழுது இசைக்கப்படுகிறது. இந்த மரபு இன்றும் தொடர்கிறது. காரைக்குடி, சேலம் பகுதிகளில் துத்திரி மிகுதியாக நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் இசைக்கப்படுகிறது. காரைக்குடியில் தை மாதம் நடைபெறும்  நகரத்தார் பழனி தைப்பூச காவடி ஊர்வலத்திற்கு முன்பாக துத்திரி இசைக்கப்பட்டு செல்கிறது. இந்த துத்திரி இசைக்கருவிகள் மிகப்பழமையானவை. பழனி ஆயக்குடி சமிந்தார்கள் செட்டியார்களின் காவடி ஊர்வலத்திற்காக சுமார் 400 ஆண்டுகள் முன்பு செய்து கொடுத்தது என்கிறார்கள் நகரத்தார் சமூக மக்கள்.

துணுக்காய் பிரதேச மருதங்குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்




முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் விவசாயக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த நீர்த்தேக்கமான மருதங்குளம் எதிர்காலத்தில் பாரிய குளமாக புனரமைக்கப்பட வேண்டும். அதன் நீர்விநியோக வீச்சு அதிகரிக்கப்பட வேண்டும். அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட வருடத்தில் இரண்டு போகம் பயிர் செய்ய இடமளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள விவசாயிகளிடம் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக பின்தங்கியதும் போக்குவரத்து வசதிகளோ அடிப்படை வசதிகளோ இல்லாததுமான துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட புத்துவெட்டுவான் என்ற விவசாயக் கிராமமும் ஒன்றாகும்.
இங்குள்ள நீர்த்தேக்கமான மருதங்குளமே இவர்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. மேற்படி குளத்தின் கீழ் வருடத்தில் 300 ஏக்கர் காலபோகம் செய்கை பண்ணப்படுவதுடன் மீதமாக உள்ள நீரை வைத்து அண்ணளவாக 75 ஏக்கர் சிறுபோகம் செய்கை பண்ணப்பட்டு வருகிறது.
கடந்த வருட இறுதியில் பெய்த பெருமழையினால் குளத்தின் வான் பகுதியில் ஏற்பட்ட நீர்க்கசிவின் காரணமாக வானின் ஒரு பகுதி உடைப்பெடுத்து குளத்து நீர் வெளியேறியது. இருந்த போதும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகளின் அயராத முயற்சியினால் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறிப்பிட்டளவு சிறுபோக செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தகவல் தருகையில் காலபோக பயிரச் செய்கையைக் காப்பாற்ற வேண்டிய தேவை காரணமாக 04 அடி அளவில் தண்ணீரை குளத்தில் தேக்கி வைப்பதை தீர்மானமாகக் கொண்டு தற்காலிக ஏற்பாடாக மண்மூடைகள் அடுக்கப்பட்டு நீர் மறிக்கப்பட்டு காலபோக செய்கை எவ்வித பாதிப்புமின்றி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்யபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

'போரினை விரும்பேல்' - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்


சியக் கண்டம் போர்ப் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.

எப்படி கொரோனாக் காலத்தில் எல்லார் கவனமும் அதிலாக, நீதிமன்றால் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் 'நைஸாக' இலங்கையில் விடுவிக்கப்பட்டாரோ, அப்படித்தான் சீனாவும் இந்திய எல்லைப் பகுதியில் 'நைஸாக' தன் காரியம் சாதிக்கிறது. எல்லார் கவனமும் தன்னிடமிருந்து பரவிய நோயிலாக, சீனா, தன் கால்களை அகல விரிக்கத் துடிக்கிறது.

இதற்கு அடிப்படையான இந்திய, சீனா முரண்பாடு பல தசாப்த வரலாறு கொண்டது.

எனினும், உலகமே பொது எதிரியாகிய கண்ணுக்குத் தெரியாத வில்லனை அகற்றப் போராடிக் கொண்டுள்ள நிலையில் இப்பொழுது வெடித்துள்ள விரிசலானது, மனுக்குலத்தின் சாபம் எனப்படத் தக்கது.

இந்திய - சீனப் படை அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்றும், பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்றும் அறிக்கைகள் விடப்பட்டாலும், 'ராணுவ வாகனங்களின் அசாதாரண போக்கைப் பார்க்கும்போது எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது' என்று கலங்கி விழிக்கும் லடாக் கிராமவாசிகளின் கூற்று, உண்மையை உரத்துச் சொல்கிறது.